ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

இயற்கை உரம் இலவசம்... பயனடையும் விளைநிலங்கள், வீட்டுத்தோட்டங்கள்!

கழிவுகளைப் பிரித்தெடுத்தல்
பிரீமியம் ஸ்டோரி
News
கழிவுகளைப் பிரித்தெடுத்தல்

தூள் கிளப்பும் தூத்துக்குடி மாநகராட்சி!

தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங்களில்... நாள்தோறும் உள்ளாட்சி அமைப்புகளால் சேகரிக்கப்படும் குப்பைகள், மாதக் கணக்கில் கிடங்குகளில் மலை போல் குவித்து வைக்கப்படுகிறது. அவற்றிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள். கிடங்கில் மேலும் குப்பைகளைக் குவித்து வைக்க முடியாத நிலை ஏற்படும்போது தீயிட்டுக் கொளுத்துவதால் பல கிலோமீட்டர் தூரத்துக்குப் புகை பரவி காற்று மாசடைகிறது.

ஆனால், தூத்துக்குடி மாநகராட்சியோ இதில் விதிவிலக் காகத் திகழ்கிறது. குப்பை மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படுகிறது. குப்பைகளை இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகித்து வருகிறது. இதன் அடுத்தகட்ட நகர்வாக, வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டத்துக்குப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, நன்கு சலிக்கப்பட்ட இயற்கை உரம் வழங்கும் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘முத்துரம்’ என்ற பெயரில் தூத்துக்குடி மாநகர மக்களுக்கு இது இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது. இன்னொரு ஆச்சர்ய தகவல்... மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட நான்கு இடங்களில் மியாவாகி குறுங்காடு உருவாக்கும் உன்னத முயற்சியிலும் தூத்துக் குடி மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

உரமாக மாற்றும் இடம்
உரமாக மாற்றும் இடம்

நம்மிடம் பேசிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, “தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என 4 மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலமும் 15 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்று வணிக நிறுவனங்களிடமிருந்து மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தனித்தனியாகப் பிரித்து வாங்கும் நடைமுறை 2018-ம் ஆண்டிலிருந்து பின்பற்றப்படுகிறது. தினமும் 120 முதல் 150 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகிறது.

முத்துரம்.. இது முத்துநகரின் இயற்கை உரம்

இதில் 75 முதல் 100 டன் வரை மட்கும் குப்பைகள் கிடைக்கின்றன. மட்கும் குப்பைகள்... நுண் உர செயலாக்க மையங்களுக்கும், மட்காத குப்பைகள்... சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சிமென்ட் தொழிற்சாலை களுக்கும் அனுப்பப்படுகின்றன. மாநகராட்சிப் பகுதிகளில் 11 இடங்களில் 16 நுண் உர செயலாக்க மையங்கள் இயங்கி வருகின்றன. 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உரத் தயாரிப்பில் ஈடுபடுகிறார்கள். மாதத்துக்குக் குறைந்தபட்சம் இரண்டாயிரம் டன் மட்கும் குப்பைகள் சேகரிக்கப்பட்டாலும் கூட, மொத்தத்தையும் இயற்கை உரமாக மாற்றவது தற்போது சாத்தியமில்லை. 500-800 டன் மட்கும் குப்பைகளைப் பயன்படுத்தி, தற்போது மாதம்தோறும் 50 டன் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் 100 டன் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

கழிவுகளிலிருந்து இயற்கை உரம்
கழிவுகளிலிருந்து இயற்கை உரம்



2018-ம் ஆண்டிலிருந்து இதுவரையிலும் விவசாயப் பயன்பாட்டுக்காக 2,000 டன் இயற்கை உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது நன்கு சலிக்கப்பட்ட இயற்கை உரம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இத்திட்டத்துக்கு... ‘முத்துரம்- முத்துநகரின் இயற்கை உரம்’ எனப் பெயர் வைத்துள்ளோம். மண்புழு உரத் தயாரிப்பும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

ஆய்வுக்கு அனுப்பி பரிசோதனை செய்தோம்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஶ்ரீயிடம் நாம் பேசியபோது, “மட்கும் குப்பைகளை உரமாக்கும் பணி... திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 2018-ம் ஆண்டு டிசம்பரில் இங்கு தொடங்கப்பட்டு இதுவரை யிலும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஒரு மண்டலத்துக்கு 8 நுண் உர செயலாக்க மையங்கள் அமைத்து, மட்கும் குப்பைகள் உரமாக மாற்றப்பட்டது. அந்த உரம், தர ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டுப் பரிசோதனை செய்யப்பட்டது. விவசாய விளைநிலங்களில் இதை உரமாகப் பயன்படுத்தலாம் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டதால், அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உரம் தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

‘முத்துரம்’ அறிமுகப்படுத்தும் நிகழ்வு
‘முத்துரம்’ அறிமுகப்படுத்தும் நிகழ்வு



காலை 6 முதல் மதியம் 3 மணி வரை குப்பைகள் சேகரிக்கப்படும்

மாநகராட்சிகளில் உள்ள 60 வார்டுகளிலும் தினமும் தண்ணீர் வரும் நேரம் குறித்து அந்தந்தத் தெருக்களில் உள்ள அறிவிப்புப் பலகைகளில் எழுதி வைப்பதைப் போல, குப்பை சேகரிக்கும் நேரம் குறித்தும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை குப்பை சேகரிக்கப் படுகிறது. மட்கும் குப்பை, மட்காத குப்பை எனப் பிரித்தே மக்களிடமிருந்து துப்புரவுத் தொழிலாளர்கள் குப்பைகளைப் பெறு கிறார்கள். பிரிக்கப்படாமல் குப்பையைக் கொடுத்தால், பிரித்துத் தரும்படி மீண்டும் அந்தந்த வீட்டுக்காரர்களிடம் குப்பைகள் திருப்பிக் கொடுக்கப்பட்டு, தனித்தனியாகப் பிரித்துத் தரும்படி அறிவுறுத்தி மறுநாள் பெறப்படுகிறது.

குப்பைகளைத் திறந்தவெளியில் கொட்டக் கூடாது என அறிவுறுத்தியிருக்கிறோம். பொதுமக்கள் தங்கள் வீட்டு குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்பதற்காகத்தான் ஏற்கெனவே தெருக்களில் வைக்கப்பட்டிருந்த இரும்பாலான குப்பைத் தொட்டிகளைக்கூட அகற்றிவிட்டோம். தற்போது 4 மண்டலங்களில் 16 நுண் உர செயலாக்க மையம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் தலா 15-20 தொட்டிகள் வீதம் மொத்தம் 250 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கழிவுகளைப் பிரித்தெடுத்தல்
கழிவுகளைப் பிரித்தெடுத்தல்

சேகரிக்கப்படும் மட்கும் குப்பைகள், நவீன இயந்திரம் மூலம் அரைக்கப்பட்டுத் தொட்டிகளில் நிரப்பப்படுகின்றன. 10 அடி நீளம், 4 அடி அகலம், 4 அடி உயரம் கொண்ட ஒரு தொட்டியில் 2 - 3 டன் மட்கும் குப்பைகள் நிரப்பப்பட்டு 200 லிட்டர் தண்ணீர் விட்டு நன்கு கிளறிவிடப்படுகிறது. 5 நாள்களுக்கு ஒருமுறை இவ்வாறு கிளறி விடப்படும்.

குப்பைகளை விரைவில் மட்கவைக்கும் இ.எம் கரைசல்

உரத் தயாரிப்புத் தொட்டிகளில்... மட்கும் குப்பை நிரப்பப்படும் தேதி மற்றும் உரம் தயாராகும் தேதி குறிக்கப்படும். குப்பைகள் நிரப்பப் பட்ட பிறகு 5, 10, 20 ஆகிய நாள்களில் 20 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் இ.எம் கரைசல், 1 கிலோ தூளாக்கப் பட்ட நாட்டுச்சர்க்கரை கலந்து தெளிக்கப்படும். குப்பைகள் நன்கு மட்கி 45 நாள்களுக்குப் பிறகு இயற்கை உரம் கிடைக்கும். மொத்தக் கழிவு களில் 10 சதவிகிதம் உரமாகக் கிடைக்கிறது” என்றார்.

உர செயலாக்க மையம்
உர செயலாக்க மையம்

விவசாயிகள் யாரை அணுக வேண்டும்?

மாநகர நல அலுவலர் டாக்டர் அருண் குமார், “தூத்துக்குடி மாநகராட்சியில் தயாரிக்கப்படும் இயற்கை உரத்தைப் பெற விரும்பும் விவசாயிகள், அனைத்து வேலை நாள்களிலும் மாநகராட்சிப் பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையங்களுக்கு நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் விண்ணப்பம் ஒன்றை எழுதி, அதில் தங்களுடைய புகைப்படத்தை ஒட்டி... அதனுடன் ஆதார் கார்டு நகல் இணைத்து அளிக்க வேண்டும். உரத்தின் இருப்பைப் பொறுத்தும், பதிவு முன்னுரிமையின் அடிப்படையிலும் உரம் வழங்கப்படும்.

இயற்கை உரம்
இயற்கை உரம்

தூத்துக்குடி விவசாயிகளுக்கு முன்னுரிமை

விவசாயிகள், தங்களுடைய டிராக்டர் அல்லது மினிவேன் எடுத்துச் சென்று உரத்தைப் பெற்றுச் செல்லலாம். அதிக பட்சமாக ஒரு விவசாயிக்கு 5 டன் உரம் வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டத்துக்கு உரம் தேவைப்படுவோரும் இந்த மையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

தேவையைப் பொறுத்து 1 கிலோ, 2 கிலோ, 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் சலிக்கப்பட்ட இயற்கை உரம் வழங்கப்படும். மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று சொல்லி முடித்தார்.

மியாவாகி காடுகள்
மியாவாகி காடுகள்

மியாவாகி காடுகள்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது மைல் பாலத்தின் அருகில் 2 ஏக்கரிலும், பசும்பொன் நகரில் 1 ஏக்கரிலும், திரவிய ரத்தின நகரில் 1 ஏக்கரிலும் மியாவாகி காடு உருவாக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. வேம்பு, புங்கன், பூவரசு, ஆல், அரசு உள்ளிட்ட 10 வகையான நிழல் தரும் மரங்களும், துளசி, தூதுவேளை, கண்டங்கத்தரி, நிலவேம்பு, நொச்சி, ஆடாதொடை, பிரண்டை, சோற்றுக்கற்றாழை உள்ளிட்ட 20 வகையான மூலிகைகளும், நாவல், மாதுளை, கொய்யா, சப்போட்டா, சாத்துக்குடி, பலா, மா, அத்தி, விளா, எலுமிச்சை, கொடுக்காப்புளி உள்ளிட்ட 15 வகையான பழமரங்களும், செம்பருத்தி, மல்லிகை, முல்லை, செண்டுமல்லி, கோழிப்பூ, அரளி, செவ்வந்தி, நந்தியாவெட்டை உள்ளிட்ட 15 வகையான பூச்செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சிப் பூங்காக்களில் உள்ள செடிகளுக்கும், மியாவாக்கி காடுகளுக்கும் முத்துரம் பயன்படுத்தி வருகிறார்கள்.

38 டன் இயற்கை உரம் வாங்கியிருக்கேன்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன்புரத்தைச் சேர்ந்த வாழை விவசாயி பசுபதி, “மூணு வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். வாழை சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு அடியுரமா 10 டன் எரு தேவைப்படும். தூத்துக்குடி மாநகராட்சியில இயற்கை உரம் இலவசமா கிடைக்கிறதுனால, எருவுக்கான செலவு 50 சதவிகிதம் குறைஞ்சிருக்கு. அடியுரமா 5 டன் எருவோடு 5 டன் இயற்கை உரம் போடுறேன். அது நல்லா தரமானதா இருக்குறதுனால வாழை செழிப்பா விளையுது. குலைகள்ல காய்கள் திரட்சியா இருக்கு. இதுவரைக்கும் 38 டன் வரைக்கும் இயற்கை உரம் தூத்துக்குடி மாநகராட்சியில வாங்கியிருக்கேன். உங்க பகுதியில வேற விவசாயிகள் யாருக்கும் உரம் தேவைப்பட்டுச்சுன்னா வந்து எடுத்துட்டுப் போகச் சொல்லுங்கன்னு மாநகராட்சி அதிகாரிகள் சொல்றாங்க. நானே 12 விவசாயிகளை அழைச்சுட்டுப் போயி வாங்கிக் கொடுத்திருக்கேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.

 ஜெகன் பெரியசாமி, சாருஶ்ரீ, அருண் குமார், ஸ்டாலின் பாக்கியநாதன், பசுபதி.
ஜெகன் பெரியசாமி, சாருஶ்ரீ, அருண் குமார், ஸ்டாலின் பாக்கியநாதன், பசுபதி.

‘போத்து’ நடவில் நிழல்தரும் மரங்கள்

தூத்துக்குடி மாநகராட்சியின் மேற்குமண்டல சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன், “மரத்தின் கிளைகளை வெட்டி நடவு செய்யும் முறையைத் தான் ‘போத்து நடவு’ எனச் சொல்கிறோம். மாநகராட்சிப் பகுதிகளில் மின் வயர்களுக்கு இடையூறாகச் செல்லும் மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆலம், அரசு, பூவரசு, வாதமடக்கி மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மரங்களின் கிளைகளை வெட்டி, போத்து முறையில் நடவு செய்யத் தொடங்கியுள்ளோம். தூத்துக்குடி மாநகராட்சி அமைத்துள்ள குறுங்காடுகளின் வேலி ஓரங்களிலும், மின் வயர்கள் செல்லாத பொது இடங்களிலும் போத்து முறையில் மரங்கள் வளர்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தரமான போத்துகள்

ஆலம், அரசு, பூவரசு, வாதமடக்கி மரங்களிலிருந்து, கை மணிக்கட்டு சுற்றளவுக்குப் பெருத்த, நன்கு நேராக உள்ள கிளையை 8 - 10 அடி நீளத்துக்கு வெட்டுகிறோம். அந்தக் கிளையில் உள்ள சிறு கிளைகள், இலைகளை உதிர்த்துவிட்டு, அதன் அடிப்பாகத்தைச் சற்று சரிவாக வெட்டுவோம். இதனால் அடிப்பாகத்தில் திசுக்கள், ஈரமண்ணுடன் கலந்து புதிய வேர்கள் துளிர்க்கும். கிளையின் அடிப்பகுதியில் சோற்றுக் கற்றாழையின் திரவத்தைத் தடவி குழிக்குள் ஊன்றுவோம்.

கிளையின் உச்சிப் பகுதியில் பசுஞ்சாணத்தை உருண்டை போலப் பிடித்து வைப்போம். 25 - 30 நாளில் வேர் பிடிக்கத் தொடங்கும். 45 முதல் 50-வது நாளில் இலைகள் துளிர்விடுகிறது’’ எனத் தெரிவித்தார்.