300 வகையான மலர்கள்... மலிவு விலையில் மலர் நாற்றுகள்... அசத்தும் தோவாளை மலர் ஆராய்ச்சி நிலையம்!

மலர்
தோவாளை என்ற பெயரை உச்சரித்தாலே, மலர்களின் வாசனை மணக்கும். கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி பயணிக்கும்போது, சுமார் 10-வது கிலோமீட்டர் தூரத்தில்... சம்பங்கி, மல்லிகை, ரோஜா, பிச்சி, முல்லை எனப் பல வகையான பூக்களின் வாசமும் ஒன்றாகச் சேர்ந்து கதம்பமாய் நம் நாசியை நாடி வரும். இதை வைத்தே ‘தோவாளை வந்துவிட்டது’ எனத் தெரிந்து கொள்ளலாம். ஆம், மலர்களின் மணம்தான் தோவாளையின் முகவரி.


தோவாளையில் அதிக அளவில் மலர்கள் சாகுபடி செய்யப்படுவதால், இங்கு பல ஆண்டுகளாக மலர்ச் சந்தை செயல்படுகிறது. இந்த மலர்ச் சந்தை தென் தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளா வரையிலும் புகழ்பெற்றது. அங்கு ஓணம் பண்டிகையின்போது பல வண்ணங்களில் பிரமாண்டமாகக் கோலமிட்டு, பூக்களால் அலங்கரிப்பது வழக்கம். அப்போது கேரள மக்களில் பெரும் பாலானோர், தோவாளை மலர்ச் சந்தையில் குவிந்து, ஏராளமான பூக்களை வாங்கிச் செல்வார்கள். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமியை அலங்கரிக்கத் தோவாளை யிலிருந்து தினமும் பூக்கள் அனுப்பப் படுகின்றன. வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில்தான் தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் மக்களின் முதன்மை பொருளாதாரமாகத் திகழும் மலர் விவசாயத்தை மேலும் மேம்படுத்தும் விதமாக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மலர் ஆரய்ச்சி நிலையம் இங்கு சேவையாற்றி வருகிறது. தமிழ்நாட்டிலேயே தோவாளையில் மட்டும்தான் மலர்களுக்கான ஆராய்ச்சி நிலையம் இருப்பதாக இப்பகுதி மக்கள் பெருமிதப்படுகிறார்கள்.
இந்நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள ஓர் காலைப்பொழுதில் இங்கு சென்றோம். 11 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நிலையத்தின் வளாகத்தில்... செம்பருத்தி, காஷ்மீர் ரோஜா, மல்லிகை, வாடாமல்லி, முல்லை என இன்னும் பல வகையான பூக்கள் பூத்துக் குலுங்கி, நம் விழிகளை வண்ணமயமாக்குகின்றன.


இந்நிலையத்தின் தலைவர் முனைவர் சுவர்ணப்பிரியாவை சந்தித்தோம். உற்சாக மாகப் பேசத் தொடங்கியவர், “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால, 2008-ம் வருஷம், இந்த ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டுச்சு. இந்தப் பகுதி விவசாயிங்க காலம் காலமா பலவிதமான மலர்களைச் சாகுபடி செஞ்சுகிட்டு இருக் காங்க. இங்கவுள்ள மண்வாகு, சீதோஷ்ண நிலைக்கு ஏத்தபடி ஆரோக்கியமா வளரக் கூடிய ரகங்கள், அதிக மகசூல் கொடுக்கக்கூடிய ரகங்கள், விற்பனைக்கு ஏத்தபடி நீண்டநேரம் தரம் இழக்காத ரகங்களை ஆராய்ச்சி செஞ்சு, இந்தப் பகுதி விவசாயிங்களுக்கு அறிமுகம் செய்யுறதுதான் இந்த ஆராய்ச்சி நிலையத் தோட முக்கிய நோக்கம். மலர் சாகுபடியில் அதிக மகசூல் எடுக்குறதுக்கான வழிமுறை களைச் சொல்லிக் கொடுக்குறோம். பூச்சி, நோய்த்தாக்குதல் ஏற்பட்டா, அதைக் கட்டுப் படுத்த ஆலோசனை சொல்றோம். எங்க ஆராய்ச்சி நிலையத்தோட வளாகத்துலயே தரமான மலர் கன்றுகளை உற்பத்தி செஞ்சு, இந்தப் பகுதி விவசாயிங்களுக்கு மலிவான விலையில கொடுக்குறோம்’’ என்று சொன்னவர், இந்நிலையத்தால் இப்பகுதி விவசாயிகள் அடைந்த முத்தாய்ப்பான பலன்களை விவரித்தார்.

‘‘கன்னியாகுமரி மாவட்டத்துல 400 ஹெக்டேர் பரப்புல பல வகையான மலர்கள் சாகுபடி செய்யப்படுது. தோவாளை மலர் ஆராய்ச்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்துல... இங்க உள்ள விவசாயிங்க ஆந்திரா சிவப்பு ரோஜாவைத்தான் அதிகமா சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தாங்க. காலையில சந்தைக்குக் கொண்டு போறதுக்காக, விடிய காலையிலயே தோட்டத்துக்குப் போய் பூ பறிப்பாங்க. ஆந்திரா சிவப்பு ரோஜாக்களைப் பறிக்குறப்ப கைகள்ல முள்ளு கீறி நிறைய காயங்கள் ஏற்பட்டு, இந்தப் பகுதி விவசாயிங்க ரொம்பவே சிரமப்பட்டாங்க. அது மட்டு மல்லாம, இன்னொரு நெருக்கடியையும் சந்திச்சாங்க. அதாவது, செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும்தான் சந்தைகள்ல பூக்களுக்கு அதிக விலை கிடைக்கும். புதன் கிழமையும், வியாழக்கிழமையும் அதிகமா பூ பூத்தால் அதை அடுத்த நாள் பறிக்கலாம்னு விட முடியாது. ஒருவேளை அப்படிப் பறிக்காம விட்டா, மறுநாள் இதழ்கள் உதிர்ந்துவிடும்.


முள் இல்லாத ரோஜா
இந்தப் பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வுனு, இந்தப் பகுதி விவசாயிங்க, ரொம்பவே ஆதங்கப்பட்டுக்கிட்டு இருந்தாங்க. இவங்களுக்காக காஷ்மீர் ரக முள்ளில்லாத ரோஜாக்களை அறிமுகம் செஞ்சோம். ஆந்திரா சிவப்பு ரோஜா நிறத்துலயே, காஷ்மீர் ரோஜா இருந்ததோட மட்டுமல்லாம, மூணு, நான்கு நாள்களுக்கு இதழ்கள் உதிராது. இந்த ரகத்தை நாங்க முறையான ஆராய்ச்சிகள் செஞ்சுப் பார்த்துட்டு, இந்தப் பகுதிகள்ல இது சிறப்பா விளையும்னு உறுதியானதும் இங்கவுள்ள விவசாயிங்ககிட்ட அறிமுகப்படுத்தினோம். ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. இதைச் சாகுபடி செய்றதுனால இப்ப நிம்மதியா இருக்காங்க. இதைப் பயிர் செய்றதுனால அதிக லாபமும் கிடைக்குது.
இதழ்கள் சீக்கிரம் உதிராத சம்பங்கி
இந்தப் பகுதி விவசாயிங்க முன்னாடி சாகுபடி செஞ்சுகிட்டு இருந்த சம்பங்கி பூக்களோட இதழ்கள் ரொம்ப மென்மையா இருக்கும். அதனால அதிக சேதாரம் ஏற்பட்டுச்சு. தடிப்பான, நல்ல பிடிமானமான இதழ்கள் கொண்ட சம்பங்கி ரகம் கிடைச்சா, உதவியா இருக்கும்னு விவசாயிங்க சொன்னாங்க.
பெங்களூருல உள்ள இந்திய தோட்டக் கலை ஆராய்ச்சி மையத்துல இருந்து, எட்டு வகையான சம்பங்கி ரகங்களைத் தேர்வு பண்ணி, தோவாளை ஆராய்ச்சி நிலையத் துக்குக் கொண்டு வந்தோம். அந்த எட்டு ரகங்கள்ல, எந்த ரகம் இந்த மண்ணுல நல்லா வருதுன்னு வளர்த்து ஆய்வு பண்ணினோம். அதுல பிரஜ்வல்ங்கிற ரகம் இந்த மண்ணுக்கு ஏத்த மாதிரியும், இந்தப் பகுதி விவசாயிங்க எதிர்பார்த்த மாதிரியும் அமைஞ்சுது.


பச்சை நிற ரோஜா
மாலை கட்டுறதுக்குப் பச்சை நிறத்துல ரோஜா கிடைச்சா நல்லா இருக்கும்னு இந்தப் பகுதி விவசாயிங்க சொன்னாங்க. அதனால இப்ப அந்த நிறத்துல ரோஜாவை அறிமுகப்படுத்தி இருக்கோம்.
மல்லிகை சாகுபடி
கன்னியாகுமரி - திருநெல்வேலி மாவட்ட எல்லையோர கிராமங்கள்ல சுமார் 700 ஹெக்டேர் பரப்புல மலர் சாகுபடி நடக்குது. அங்கவுள்ள விவசாயிங்க மல்லிகைப் பூ அதிகமா சாகுபடி செய்றாங்க. அவங்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்றோம். திண்டுக்கல்ல சமீபகாலமாகச் சம்பங்கி சாகுபடி அதிகரிச்சிருக்கு. அங்கவுள்ள விவசாயிங்களுக்கு நல்ல தரமான சம்பங்கி விதைக்கிழங்குகள் விநியோகம் செய்றோம். தொழில்நுட்ப ஆலோசானைகளும் வழங்குறோம்’’ எனத் தெரிவித்தார்.
தொடர்புக்கு,
தோவாளை மலர் ஆராய்ச்சி நிலையம்,
தொலைபேசி: 04652 285009


300 வகையான மலர்கள்...
ஆண்டுக்கு மூன்று லட்சம் கன்றுகள்
மல்லிகைக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வகையான மலர்கள், சம்பங்கியில் 8 வகைகள், ரோஜாவில் 12 வகைகள், ஹெலிக்கோனியா 4 வகைகள், அல்பீனியா 3 வகைகள், முல்லை 5 வகைகள், செம்பருத்தி 14 வகைகள், தாமரை 4 வகைகள், அல்லி 6 வகைகள், கோழிக் கொண்டை 4 வகைகள் மலர், அந்தோரியம் 7 வகைகள், அழகு செடிகள் (குரோட்டன்ஸ்) 100 வகைகள் என சுமார் 300 வகையான மலர்கள் தோவாளை மலர் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் மலர்க் கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன. 20 ரூபாய் முதல் 150 ரூபாய் விலையில் கன்றுகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. தனியார் நர்சரிகளை விட இங்கு விலைக் குறைவு, தரம் அதிகம். வேளாண் அறிவியல் நிலையத்துடன் இணைந்து மலர் சாகுபடிக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மாதம் இரண்டு பயிற்சி என ஆண்டுக்கு 24 பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.


ரோஜா நிறத்தில் அரளி... அடர் சிவப்பு நிற தாமரை...
‘‘இந்த ஆராய்ச்சி நிலையத்துல... இளஞ்சிவப்பு நிறத்துல இருக்கிற அரளிச்செடியைக் கண்டு பிடிச்சிருக்கிறோம். அடர் சிவப்பு நிறத்துல இருக்குற தாமரைப் பூ ரகம் கண்டுபிடிச்சிருக்கிறோம். வெளிர் மஞ்சள் நிறம் கலந்த தாமரைப் பூ ரகமும் கண்டுபிடிச்சிருக்கிறோம். இவையெல்லாம் இப்ப ஆய்வு நிலையில இருக்கு.
பக்கெட்டில் தாமரை சாகுபடி
தாமரைக் கொடிகள்ல இயல்பாகவே மரபணுல நடக்குற சடுதி மாற்றங்களால புதிய ரகம் கிடைக்கும். இதுமாதிரியான புதிய ரகத்தை வீடுகள்ல பிளாஸ்டிக் பக்கெட், குடுவைகள்ல வளர்க்குறதுக்கான ஆய்வுகள் செஞ்சுகிட்டு இருக்கோம்.


உலர் மலர்கள்!
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவுல உலர் மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுது. ஆனா, இந்தப் பகுதிகள்ல உலர் மலர்கள் தயாரிப்புக் கிடையாது. அதை இங்க அறிமுகம் செய்யப் போறோம். பொக்கே தயாரிக்க இதைப் பயன்படுத்தலாம். ரோஜா, சம்பங்கி என எல்லா வகையான பூக்களையும் உலர் பூக்களா தயார் செஞ்சு ஏற்றுமதி பண்ணலாம்’’ என்கிறார்கள் இந்நிலையத்தின் பேராசிரியர்கள்.


உதிரி மலர்... கொய்மலர்
“மலர்கள்ல... உதிரி மலர்கள், கொய்மலர்கள்னு இரண்டு வகைகள் இருக்கு. சின்ன காம்பு உள்ள பூக்களை உதிரி மலர்கள்னு சொல்லுவோம். மல்லிகை, பிச்சி, ரோஜா இவையெல்லாம் உதிரியாக இருக்கும். இந்தப் பூக்களை மாலையாகவும், சரமாகவும் கட்டி பயன்படுத்துவாங்க. கொய்மலர்கள் நீள காம்புடன் இருக்கும். பொக்கே தயாரிக்கவும், டெக்கரேஷன்களுக்கும் பயன்படுத்துறது கொய் மலர்கள். ஆர்க்கிட், அந்தோரியம், ஹெலிக்கோனியா, அல்பீனியா... இதெல்லாம் கொய்மலர்கள்’’ என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.


விவசாயிகளே வியாபாரிகள்
தோவாளை பகுதியில் மலர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளில் சுமார் 3,000 பேர், இதன் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களில் நிறைய பேர் சிறு குறு விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கு மல்லிகை...
வளைகுடா நாடுகளுக்கு கொய்மலர்கள்
இப்பகுதியிலிருந்து மல்லிகை அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொய்மலர்கள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


தென்னை, ரப்பரில் ஊடுபயிர்
விலையுயர்ந்த பூங்கொத்துகளில் (பொக்கே) பூக்களுக்குப் பக்கத்தில் கூடுதல் அழகு சேர்ப்பதற்காக, பில்லர் மெட்டீரியல் எனச் சொல்லப்படும் இலை தழைகள் இடம்பெறுவது வழக்கம். இதைத் தென்னை மற்றும் ரப்பர் தோட்டங்களில் ஊடுபயிராகச் சாகுபடி செய்து விவசாயிகள் உபரி வருமானம் எடுக்க வழிகாட்டி வருகிறது இந்த ஆராய்ச்சி நிலையம்.
தீர்வு கிடைக்கும்!
நம்மிடம் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த மலர் விவசாயி கணேசன், “இப்ப ஒரு ஏக்கர்ல வாடாமல்லி போட்டிருக்கிறேன். இதுக்கு முன்னாடி சம்பங்கியும் ரோஜாவும் பயிர் பண்ணியிருந்தேன். நான் சம்பங்கி போட்டிருந்தப்ப, அதுல நோய்த்தாக்குதல் ஏற்பட்டு பிசின் மாதிரி திரவம் வடிஞ்சிச்சு. அதைக் கட்டுப்படுத்த மலர் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள்தான் எனக்கு வழி சொன்னாங்க. மருந்துகளும் கொடுத்தாங்க. இந்தப் பகுதி விவசாயிங்களுக்கு மலர் சாகுபடியில எந்த ஒரு பிரச்னை ஏற்பட்டாலும். இங்க தீர்வு கிடைக்கும்’’ எனத் தெரிவித்தார்.