விவசாயிகள் குறைதீர் கூட்டம்...
திருவண்ணாமலை மாவட்டத்தில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், `விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்' நேற்று முந்தினம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதிலும் உள்ள விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது இயற்கை விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகி ஜாகிர் ஷா (முதலமைச்சர் பிறந்தநாளின்போது ஒட்டகத்தை பரிசாக அளித்தவர்) அந்தக் கூட்டத்தில் பேசும்போது, ``விவசாய குறைதீர் கூட்டங்களில், விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் முறையான பதில் கொடுப்பது கிடையாது. நடவடிக்கைகள் எடுப்பது கிடையாது" என்று பொதுவாக கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ், விவசாயிகள் மத்தியில் காட்டமாகப் பேசியிருக்கிறார்.

``மாடு மாதிரி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் எங்கள் அதிகாரிகள். ஏதோ ஒன்று இரண்டு விஷயம் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். பொதுவில் சொன்னால் என்ன அர்த்தம்? ஏதோ ஒன்று பேசுவோம் என்று பேசிக்கொண்டிருப்பீர்களா... நான் கோபப்படுவேன், தயவுசெய்து பேசாதீர்கள். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்... என்னுடைய அதிகாரிகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
அதிகாரிகள் கைத்தட்டல்...
திங்கள்கிழமைதோறும் நாங்கள் 3.30 மணிக்குதான் சாப்பிட போகின்றோம். சும்மா உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் 1.30-க்கு சாப்பிட்டுவிட்டு நன்றாக உட்கார்ந்திருப்பீர்கள். ஆனால், எங்கள் அதிகாரிகள் 3.30, 4.00 மணிக்குதான் சாப்பிடப்போகிறார்கள்" என்று ஆட்சியர் ஆவேசமாகப் பேசியதும், அதிகாரிகள் மத்தியில் கைத்தட்டல் எழுந்தது.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் முருகேஷ், ``இப்போ வந்து கொடுங்கள். சும்மா உட்கார்ந்துகொண்டு குற்றச்சாட்டு சொல்லாதீர்கள். நாக்கில் நரம்பு இல்லாமல் பேசாதீர்கள்! நான் உச்சக்கட்டமாகப் கோபப்படுவேன். என்னுடைய அதிகாரிகளை தேவையில்லாமல் குறை சொன்னீர்கள் என்றால் நான் கோபப்படுவேன். என்னுடைய அதிகாரிகளை தவறு செய்யும்போது நான் திட்டுவேன், அதேபோல், என் அதிகாரிகளை தேவையில்லாமல் குறை சொன்னால் நான் கோபப்படுவேன். ஜாகிர் உங்களுக்கு இதுதான் கடைசி மரியாதை, பேசாதீர்கள்.
எனக்குத் தெரியும்...
நாங்கள் சும்மா வேலையில்லாமல் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோமா. உங்களுக்காகத்தானே நாங்கள் உட்கார்ந்து இருக்கிறோம். உங்களிடம் திட்டு வாங்கத்தான் அதிகாரிகள் உட்கார்ந்து இருக்கிறார்களா? நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய அதிகாரிகள் வேலை பார்க்கிறார்கள். ஏதேனும் குறைகள் இருந்தால் என்னிடம் சுட்டிக் காட்டுங்கள். பொதுவில் தயவுசெய்து ஏதும் சொல்லாதீர்கள். சுகர் வந்து, ஆறு மாதமாக நான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எத்தனை அதிகாரிகளுக்கு சுகர், பி.பி இருக்கிறது... எத்தனை இன்ஜினீயர்கள் டென்ஷனில் இறந்திருக்கிறார்கள்... எனக்குத் தெரியும். நாக்கில் நரம்பில்லாமல் பேசிவிட்டு போவதா?

இந்த விவசாய கூட்டத்தை உங்களுக்காகத்தான் நடத்துகின்றேன். அதிகாரிகளுக்காக நான் நடத்தவில்லை. நான் மத்த கலெக்டர் மாதிரி இல்லை. நீங்கள் பொதுவாக என் எதிரே என் அதிகாரியை குறை சொன்னால் என்ன அர்த்தம்" என்று ஆவேசமாகப் பேசினார்.

மாவட்ட ஆட்சியர் இப்படி பேசலாமா?
``விவசாயிகள் தங்களுடைய குறைகளை சொல்வதற்காகதான், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டமே நடக்கிறது. அதிகாரிகள் பற்றிய குறைகளைச் சொல்லக் கூடாது என்று சொன்னால் எதற்கு இந்தக் கூட்டம். அதிகாரிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரே இவ்வாறு உணர்ச்சி வசப்பட்டு பேசினால், நாளை அதிகாரிகளின் செயல்பாடு இன்னும் மோசமாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் என்பவர் நீதி அரசரைப் போன்றவர். அதிகாரிகளும் விவசாயிகளும் அவருக்கு இரு கண்களைப் போன்று இருக்க வேண்டும். எந்த விவகாரம் ஆனாலும், நடுநிலையாக இருந்து அவர் செயல்பட வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு பேசியிருப்பது வருத்தமளிக்கிறது" என்கின்றனர் திருவண்ணாமலை விவசாயிகள்.