ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

பல்கலைக்கழக விதைகளும் பல் இளிக்கின்றன! வேதனையில் வெதும்பும் விவசாயிகள்!

அம்பல மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
அம்பல மேடை

அம்பல மேடை

‘அநியாயமா இருக்கே? இதை யார்கிட்ட போய்ச் சொல்றது’ எனப் பல நேரங்களில் புலம்பும்படியான நிகழ்வுகளை நாமும் நம்முடைய சுற்றமும் நட்பும் அடிக்கடி சந்தித்தபடிதான் இருக்கிறோம். பட்டா மாறுதல், நில அளவை, பயிர்க்கடன், மானியம், சலுகைகள், கருவிகள், பாசனம் என்று நம்முடைய வேளாண்மை சார்ந்த விஷயங்களில் ஆரம்பித்துப் பல தளங்களிலும் தொல்லைகளை அனுபவித்துதான் வருகிறோம். குறிப்பாக, அரசாங்க அதிகாரிகள், விதை வியாபாரிகள், ஒப்பந்தப் பண்ணைய நிறுவனத்தினர், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் நபர்கள் என்று விதிமுறைகளை மீறி செயல்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நம் கையில் இருக்கும் மொபைல் போன்தான் ஆயுதம். ஆம்... உங்கள் பார்வையில் படும் அலட்சியங்கள், அநியாயங்கள் என்று அனைத்தையும் படம்பிடியுங்கள். அதேபோல உங்கள் கவனத்துக்கு வரும் தகவல்கள், சந்திக்கும் அனுபவங்களையும் படம் பிடியுங்கள். அவை அனைத்தையும் விளக்கத்துடன் இங்கே நீங்கள் பதிவு செய்யலாம். உங்கள் பெயர், முகவரி மற்றும் அடையாளங்கள் வெளியிடத் தேவையில்லை என்றால் அதையும் அதிலேயே குறிப்பிடுங்கள். உங்களின் பதிவுகளை ஆசிரியர் குழு பரிசீலித்து உரிய வகையில் பசுமை விகடன் இதழ், இணையதளம், பசுமை விகடன் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற இடங்களில் பதிவுசெய்யும். வாருங்கள்...

முருங்கை விதைகள்
முருங்கை விதைகள்

விவசாயத்தின் அடிப்படை ஆதாரம் விதைகள். சமீபகாலமாக விதைகளிலும் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. தரமற்ற மலட்டுத்தன்மையான போலி விதைகளின் விற்பனையால் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடி ஒரு பக்கம் என்றால், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யும் விதைகளும் மோசடிப் புகாரில் சிக்கியிருப்பதுதான் வேதனை. தரமற்ற விதைகள் பிரச்னை தொடர்பாக, மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் விவசாயிகள் போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள்.

பல் இளிக்கும் பல்கலைக்கழக விதைகள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்கிற விவசாயி, “நாங்க 30 வருஷத்துக்கு மேல விவசாயம் பண்ணிகிட்டு இருக்கோம். மூன்றரை ஏக்கர்ல முருங்கைச் சாகுபடி பண்ணிட்டு இருக்கேன். 2020-ம் வருஷம் செப்டம்பர்ல தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கிட்ட விதை வாங்கினேன்.

பி.கே.எம்-1 ரக முருங்கை விதை ஒரு கிலோ 3,000 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்து போட்டேன். பொதுவா முருங்கை 5 மாசத்துல காய்ப்புக்கு வந்து, 6-வது மாசம் காய் வைக்கணும். ஆனா, ஒரு வருஷமாகியும் காய்ப்புக்கே வரல. அதுக்கப்புறம் ஒரு தனியார் நிறுவனம்கிட்ட விதை வாங்கி, அரை ஏக்கர்ல பயிரிட்டேன். அது நல்லா வந்துருக்கு. பல்கலைக்கழகம் விக்கிற முருங்கை விதைகள்தான் பிரச்னை. எங்க குடிமங்கலம் பகுதில மட்டும் கிட்டத்தட்ட 30 ஏக்கர் பூமிக்கான விதைகள் வாங்கினோம். எதுவுமே வரல. சமீபத்துல வேற ஒரு விவசாயி பப்பாளி, பீர்க்கன் விதைகள் எல்லாம் வாங்கிப் போட்டாரு. அதுவுமே வரல. நான் பல்கலைக்கழகத்தோட விதை விற்பனை மையத்துல நேரடியா வாங்கியே இந்த நிலைமை.

வேளாண் பல்கலைக்கழக விதைகள்
வேளாண் பல்கலைக்கழக விதைகள்

அரசு இழப்பீடு கொடுக்கணும்

நான் ஒரு ஏக்கருக்கு சுமார் 1,90,000 ரூபாய் முதலீடு பண்ணிருக்கேன். இதுக்கு பதிலா, வேற நல்ல விதை ஏதாவது போட்டிருந்தா, மூன்றரை ஏக்கருக்கு 9,00,000 ரூபாய் வருமானம் வந்துருக்கும். இப்ப சுமார் 6,00,000 ரூபாய் வரைக்கும் செலவு பண்ணி நஷ்டமாகிருக்கேன். முருங்கைக்குக் களை வந்துட்டே இருக்கும். அதனால களைக்கொல்லியும் அடிக்க முடியாது. நம்மளேதான் உழவு ஓட்டி வாய்க்கா, வரப்பு கட்டியாகணும். ஆள்கள் பற்றாக்குறை, மக்காசோளம் படைப்புழுத் தாக்கம் பிரச்னைலாம் இருக்குமேனுதான் மாற்று வேளாண்மைக்காக முருங்கைக்குப் போனோம். அதுவும் இப்படி ஆகிப்போச்சு. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் உரிய இழப்பீடு கொடுக்கணும்” என்றார்.

குப்புசாமி
குப்புசாமி
வேளாண் பல்கலைக்கழக விதைகள்
வேளாண் பல்கலைக்கழக விதைகள்

தனியாரிடம் விதைகள் வாங்கி விற்கும் பல்கலைக்கழகம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் கூறுகையில், “தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமே விதைகளை உற்பத்தி செய்யறதா சொல்றாங்க. எல்லா விதை பையிலயும் இது வேளாண் பல்கலைக்கழகத்தோட தயாரிப்புனு போட்டுக்கிறாங்க. ஆனா, ஒரு தனியார் (NHRDF) நிறுவனத்துகிட்ட இருந்து 400 கிலோ விதை வாங்கிப் பல்கலைக்கழகம் வெளியே வித்துருக்கு. குறைந்தபட்சம் 400-500 விவசாயிங்க பாதிக்கப்பட்ருக்காங்க. தனியார்கிட்ட விதைகளை வாங்கி, பெரிய மோசடி பண்ணிருக்காங்க. பாதிக்கப்பட்ட விவசாயிங்க, பயிர் சாகுபடிக்கு வாங்கின கடனைக் கட்ட முடியாம தவிக்கறாங்க. ஏக்கருக்கு சுமார் 1,50,000 ரூபாய் வரைக்கும் நஷ்டம் ஆகிருக்கு. அதைக் கேட்டா, ஏக்கருக்கு 6,000 ரூபாய் தர்றோம்னு அலட்சியமா பதில் சொல்றாங்க. சென்னை தலைமைச் செயலகம், வேளாண்துறை முதன்மை செயலாளர், வேளாண் விற்பனை ஆணையர், கோவை விதைகள் துறை கூடுதல் இயக்குநர்னு எல்லாரையும் பார்த்து மனு கொடுத்துட்டோம். சொல்லி வெச்ச மாதிரி எல்லாரும் ஒரே மாதிரியான உப்புச் சப்பு இல்லாத பதிலையே கொடுக்கறாங்க. அடுத்தகட்டமா கோவை, திருப்பூர் விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தப் போறோம்” என்றார்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

ஆய்வு செய்த விஞ்ஞானிகள்

இது தொடர்பாகக் கருத்துக் கேட்பதற்காகப் பல்கலைக்கழகத்தைத் தொடர்புகொண்டோம். ஆனால், இதுதொடர்பாகப் பல்கலைக்கழகம் தரப்பில் யாரும் பேசத் தயாராக இல்லை. பெயர் சொல்ல விரும்பாத பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், ‘‘விதைகள் தொடர்பான புகார் எழுந்தவுடனே விஞ்ஞானிகள் குழு போய்ச் சம்பந்தப்பட்ட விவசாய நிலங்கள்ல ஆய்வு பண்ணினாங்க. ஆய்வு முடிவையும் அரசுக்கு அனுப்பியிருக்காங்க. இனிமே அரசுதான் முடிவு பண்ணனும்’’ என்றார்.

வயல் ஆய்வு
வயல் ஆய்வு

தனியார் விதை விற்பனைக்குத் தடை

இதுகுறித்துக் கோயம்புத்தூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வெங்கடாசலத்திடம் கேட்டோம், “புகாருக்குள்ளாகியுள்ள பல்கலைக்கழக விதைகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அந்த முடிவுகள் வருவதற்கு 90 நாள்கள்வரை ஆகும். தனியார் நிறுவனம் விற்றுள்ள விதைகளையும் ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம். முடிவுகள் விரைவில் வந்துவிடும். அந்த நிறுவன விதைகள் விற்பனைக்குத் தடை விதித்திருக்கிறோம்” என்று கூறினார்.

அலைபேசியை எடுங்க... அத்தனையும் படம் புடிங்க... அப்படியே அனுப்புங்க... வாட்ஸ் அப் எண்: 99400 22128

60 கோடி ரூபாய் நஷ்டம்

பன்னாட்டு நிறுவனம் ஒன்று பாகல், பீர்க்கன், புடல் போன்ற பந்தல் சாகுபடிக்கான விதைகளை விற்பனை செய்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த விதையும் நன்றாக இருந்ததாகச் சொல்லும் விவசாயிகள், சமீப காலங்களாக அந்த நிறுவனமும் தரமற்ற மலட்டு விதைகளை விற்பதாகப் புகார் சொல்கிறார்கள் விவசாயிகள். கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் பந்தல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு வைரஸ் தாக்குதல், விதை பிஞ்சாக இருப்பது போன்ற ஏராளமான பிரச்னைகள் எழுந்துள்ளன. இந்த நிறுவனத்தால் மட்டுமே இரண்டு மாவட்டங்களில் சுமார் 60 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள் விவசாயிகள். இந்நிலையில், தற்போது அந்த நிறுவனம் விதைகளை விற்பனைச் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.