மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கழுதை வளர்க்கலாம் வாங்க!அழைக்கும் கால்நடை பல்கலைக்கழகம்!

மாத்தியோசி
பிரீமியம் ஸ்டோரி
News
மாத்தியோசி

மாத்தியோசி

சில மாதங்களுக்கு முன்பு ‘‘சென்னையில் கழுதை வளர்ப்புக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள்’’ என்ற வாட்ஸ் அப் தகவலை நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்தவுடன் கடந்த ஆண்டு நடந்து சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. ‘‘குஜராத்தில் ஒரு லிட்டர் கழுதை பால் ரூ.7,000-க்கு விற்கப்படுகிறது!’’ இப்படி ஒரு செய்தி வட இந்திய ஊடகங்களில் அதிகம் இடம் பெற்றது. ஒவ்வொரு பத்திரிகையும் போட்டி போட்டுக்கொண்டு செய்தி வெளியிட்டது.

இது உண்மையா? என்று அறிய, குஜராத்தில் உள்ள விவசாய நண்பர்களிடம் விசாரித்தோம். “குஜராத்தில் கழுதை வளர்ப்பு நடப்பது உண்மைதான். ஆனால், லிட்டர் 7,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்பது உண்மையல்ல. இவ்வளவு விலை கொடுத்தும் யாரும் வாங்கவும் மாட்டார்கள்’’ என்று சொன்னார்.

அடுத்த சில நாள்களில் “குஜராத்தில் ஒரு லிட்டர் கழுதைப் பால் ரூ.7,000-க்கு விற்கப்படுகிறது’’ என்ற செய்தி பொய் என்று தகவல் சரிபார்ப்பு (Fact Check) செய்து ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதுபோலத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘‘பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு இளைஞர்கள் விவசாய விளைபொருள் விற்பனையில் புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்றுகிறார்கள். இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். இணையதளத்தில் இது சம்பந்தமாக நிறைய செய்திகள் வெளி வருகின்றன. அந்தத் தகவலை தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் சொல்லுங்கள்’’ என்று பெரிய பதவியில் உள்ள நண்பர் சொன்னார்.

அடுத்த சில மாதங்களில் டெல்லி செல்லும் வாய்ப்பு வந்தது. அப்படியே பஞ்சாப் சென்று அந்த இளைஞர்களைச் சந்திக்கத் திட்ட மிட்டேன். திரைப்படங்களில் தீவரவாதிகளைத் தேடி நடிகர் விஜயகாந்த் பாகிஸ்தான் எல்லை வரை செல்வதுபோல, அந்த இளைஞர்களைத் தேடி பாகிஸ்தான் எல்லையான வாகா வரை சல்லடை போட்டுத் தேடினேன்.

மாத்தியோசி
மாத்தியோசி

கடைசியில் அந்த இளைஞர்களின் வீட்டைக் கண்டுப்பிடித்துச் சென்றால், அவர்கள் வெளிநாடு சென்று பல மாதங்கள் ஆகியிருந்தன. அப்படியென்றால், விளைபொருள் விற்பனையில் சாதனை என்ற செய்தி? ‘‘அப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார்கள். அதைச் சில செய்தி ஊடகங்கள் உண்மை என்று செய்தியை வெளியிட்டுவிட்டன. உங்களைப் போலப் பலரும் விசாரித்துவிட்டு செல்கிறார்கள்’’ என்று பக்கத்து வீட்டில் வசிக்கும் சர்தார்ஜி பரிதாபமாகப் பார்த்தபடி சொன்னார்.

ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து போலி செய்தியைக் கண்டுபிடித்தது இது முதல் முறையல்ல. இப்படிப் பல அனுபவங்கள் உண்டு. வாய்ப்புக் கிடைக்கும்போது, அந்த அறிவு கொள்முதல் சம்பவங்களையும் சொல்கிறேன். சரி, கழுதை கதைக்குச் செல்வோம்.

கழுதைப் பால் விலை குறித்து உருவான போலி செய்திகளால், கழுதை வளர்ப்புப் பயிற்சி விஷயத்தில் உஷாராக இருந்தேன். சில நாள்கள் கழித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ள விரிவாக்கத்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பா.குமாரவேல் செல்போனில் அழைத்தார்.

‘‘விஞ்ஞான முறையில் கழுதை வளர்ப்பு பயிற்சியை எங்கள் துறை மூலம் நடத்துகிறோம். அவசியம் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார். அவரிடம் வாட்ஸ் அப்பில் கழுதை வளர்ப்பு பயிற்சி பற்றி முன்பே தகவல் சுற்றியது. யார் நடத்துகிறார்கள். எப்போது நடக்கிறது... என்று எந்த விவரங்களும் அதில் இல்லாமல் இருந்தது. அதனால், மண்ணுளி பாம்பு வளர்க்க பயிற்சி, முதலை வளர்க்க பயிற்சி... என்று கேலி வாட்ஸ் அப் தகவல் போல இதுவும் போலி செய்தியாக இருக்கும் என்று நினைத்தோம் என்றேன்.

‘‘உங்களைப்போலத்தான் பலரும் கழுதை வளர்ப்பு என்றவுடன் போலி செய்தியாக இருக்கும். கேலி, கிண்டலுக்காகப் பகிர்ந்த தகவல் என்று நினைக்கிறார்கள்’’ என்று சொன்னவர் கழுதை வளர்ப்பு பற்றிப் பகிர்ந்து கொண்ட தகவல்கள் ஆச்சர்யமாகவே இருந்தது; அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல் அவை.

குமாரவேல்
குமாரவேல்

‘‘அழிந்து வரும் விலங்கினங்களில் கழுதையும் ஒன்று. தமிழ்நாட்டில் சுமார் 1,400 கழுதைகள்தான் உள்ளன. கழுதைகளின் எண்ணிக்கை குறைய முக்கியக் காரணம் நாகரிக வளர்ச்சிதான். கழுதை என்றாலே சலவைத் தொழில் செய்யும் சமூகம் மட்டுமே வளர்க்கும் ஒரு விலங்கு என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சமூக மக்கள் முன்பெல்லாம், கழுதையில்தான் துணி மூட்டைகளை எடுத்துச் சென்றார்கள். தற்போது, அந்த இடத்தை இருச்சக்கர வாகனங்கள் பிடித்துவிட்டன. ஆனாலும், வீட்டுக்கு ஒரு கழுதை இருந்தால்தான், அந்த சமூகத்தில் மதிப்பு உண்டு. இதனால், ஒரு கழுதையை வளர்த்து வருகிறார்கள்.

‘‘கழுதைப்பாலிலிருந்து தயாரிக்கும் அழகு சாதனப்பொருள்களுக்கான சந்தை இப்போதுதான் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.’’தமிழ்நாட்டில் கழுதை வளர்ப்பவர்களைத் தேடி பல பகுதிகளுக்குச் சென்றோம். இன்றும் கழுதை வளர்ப்பை ஆர்வமுடன் செய்யும் மக்கள் திண்டுக்கல் மாவட்டம், வண்ணனூர் என்ற ஊரில் உள்ளனர். திருமணத்தின்போது, சீர் வரிசையாகக் கழுதையைக் கொடுப்பதை இன்னும் பின்பற்றி வருகிறார்கள். வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கழுதை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். மலை அடிவாரப்பகுதிகளில் பொதி சுமக்கக் கழுதை வளர்ப்பவர்கள் உண்டு. ஆடு, மாடு போல, கழுதையும் மனிதர்களுடன் இணைந்து வாழ விரும்பும் பிராணி. ஆண் கழுதைகளையும் பெண் கழுதைகளையும் சேர்த்து வளர்க்கக் கூடாது. ஆண் கழுதைகளுக்குள் யார் பெரியவன் என்ற சண்டை நடக்கும். அதன் ஒரு பகுதியாகப் பெண் கழுதைகளிடம் தன் ஆண்மையைக் காட்ட அடிக்கடி இனச்சேர்க்கைக்கு அழைத்த படி இருக்கும். எனவே, பத்துப் பெண் கழுதைகள் உள்ள கூட்டத்துக்கு ஓர் ஆண் கழுதை வைத்து கொண்டால்தான், அதைப் பராமரிக்க முடியும். சிலர் ஆண் கழுதைகள் வளர்ப்பதையே இதனால் விரும்பமாட்டார்கள். இனச் சேர்க்கைக்கு மட்டும் கழுதைகளை வாடகைக்கு வரவழைப்பவர்களும் உண்டு.

தினமும் 12 மணி நேரம் மேயும் குணம் கொண்டது. ஒவ்வொரு கழுதையும் 40 கிலோ எடையைச் சுமந்துகொண்டு செல்லும் திறன்கொண்டது. கழுதை என்றாலே சுமைதாங்கி என்றுதான் தெரியும். கழுதையைப் பாலுக்காக வளர்க்கும் தேவை உருவாகி வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கழுதைப் பால் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ‘கழுதைப் பாலில் உள்ள புரதம், பசுவின் பாலில் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. தாய்ப்பால் போல சத்துகள் நிறைந்தது. குறைந்த புரதமும் கொழுப்பும் கொண்டது; விரைவில் கெட்டுப் போகாது’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டைய எகிப்து நாட்டின் அரசியான கிளியோபாட்ரா தன் அழகைப் பராமரிக்கக் கழுதைப் பாலில் குளிப்பார் என்று வரலாற்று நூல்கள் சொல்கின்றன. இந்தியாவில் கழுதை பால் குறித்து இன்னும் போதுமான அளவுக்கு ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை. இதனால் அதன் நன்மைகள் பற்றி நம் மக்களுக்கு அதிகம் தெரியாது. ஆனால், வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பா மக்கள் இதைப் பற்றி நிறைய அறிந்திருக்கிறார்கள். கழுதைப் பால் அழகு சாதனப் பொருள்களுக்கு அங்கு பெரிய அளவில் விற்பனை வாய்ப்புகள் உள்ளன. மேலும், உளவியல் மருத்துவத்தில் மது பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்குக் கழுதையின் சிறுநீரைக் கொடுத்து, அந்தப் பழக்கத்திலிருந்து மீட்டு வருகிறார்கள்.

கழுதை
கழுதை

நம் நாட்டில் பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காகக் கழுதைப் பால் கொடுப்பது நீண்ட காலமாக உள்ளது. ஆனால், கழுதைப் பாலிலிருந்து தயாரிக்கும் அழகு சாதனப் பொருள்களுக்கான சந்தை இப்போதுதான் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. கேரளாவில் கழுதைப் பாலில் செய்யப்பட்ட சோப், க்ரீம்கள்… போன்றவை தயார் செய்து விற்பனை செய்கிறார்கள். கழுதைப் பால் எவ்வளவு இருந்தாலும் எங்களுக்குக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். கழுதை நாள் ஒன்றுக்கு 300 மி.லி பால் கொடுப்பதே அதிகம். 100 மி.லி பால் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பாலுக்குத் தேவை அதிகம் இருந்தும் கழுதை வளர்ப்பைத் தொழில் ரீதியாகச் செய்பவர்களின் எண்ணிக்கை இந்திய அளவிலும் மிகக் குறைவு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருச்சியில் ஓர் இளைஞர் 20 கழுதைகளை வளர்த்து வருகிறார். சிலர் ஆரம்பகட்ட முயற்சியில் உள்ளார்கள். கழுதை வளர்ப்பு என்பது ஒரு சமூகம் மட்டும் செய்ய வேண்டிய தொழில் அல்ல. ஆடு, மாடு வளர்ப்பதும் கூட பண்டைய காலத்தில் குறிப்பிட்ட சமூகம் செய்யும் தொழில் என்ற நிலையில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் அனைத்து சமூக மக்களும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடத் தொடங் கினார்கள். இதனால்தான், நம் நாட்டில் கால்நடை வளம் அதிகரித்து வருகிறது. இதுபோல விருப்பம் உள்ளவர்கள் கழுதை வளர்ப்பில் ஈடுபட்டால் கழுதை இனமும் பெருகும். அதை வளர்ப்பவர்களுக்கும் வருமானம் கிடைக்கும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திலும் கழுதையைக் காலம் காலமாக வளர்த்து வரும் சலவைத் தொழில் செய்யும் சமூகத்தை ஊக்கப்படுத்தவே இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். மத்திய, மாநில அரசுகளின் ஆதரவுடன் இதைச் செயல் படுத்துகிறோம். கழுதை வளர்ப்பு குறித்து, அனைத்து வகையிலும் வழிகாட்ட எங்கள் துறை தயாராக உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் 044 25304000 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்’’ என்று சொல்லி முடித்தார், முனைவர் பா.குமாரவேல்.

சரி, கழுதை வளர்ப்புப் பயிற்சியில் என்ன நடந்தது என்று தானே கேட்கிறீர்கள்? அது இந்த வீடியோவில் உள்ளது; பார்த்து பயன் பெறுங்கள். வீடியோ லிங்க் https://www.facebook.com/189745421100410/videos/145374010864008