பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியாயின. மருத்துவம், இன்ஜினீயரிங், தொழில்நுட்பம் என துறைகள் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க விவரங்களைத் தேடி வருகின்றனர். அந்த வகையில் வேளாண்மையும் அதிகம் விரும்பப்படுகிற, தேடுகிற துறையாக இருந்து வருகிறது. அதுவும் உணவு சார்ந்து இயங்குகிற துறை என்பதால் மாணவர்களின் கவனம் வேளாண்மைப் படிப்புகள் பக்கமும் திரும்பியுள்ளது.

வேளாண்மை படித்தால் என்ன வேலைக்கு செல்ல முடியும், எங்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட சந்தேகங்கள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் துறைத் தலைவருமான பா.வெங்கடாசலத்திடம் கேட்டோம்.
அவர்கூறுகையில், ``வேளாண்மையில் 4 வருட படிப்பான பி.எஸ்ஸி வேளாண்மைதான் மேஜர் கோர்ஸ். தமிழக வேளாண் பல்கலைகழகத்தில் 6,000 இடங்கள் உள்ளன. தமிழக வேளாண் பல்கலைக்கழகத்துக்கு கீழ் 18 அரசுக் கல்லூரிகளும், 28 தனியார் கல்லூரிகளும் வேளாண்மைப் படிப்புகளை வழங்கி வருகின்றன. 28 தனியார் கல்லூரிகளிலும் பி.எஸ்ஸி அக்ரி மற்றும் பி.எஸ்ஸி தோட்டக்கலை படிப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அரசுக் கல்லூரிகளில் பி.டெக் இன்ஜினீயரிங், ஃபுட் புராசசிங், பாரஸ்ட் என 14 படிப்புகள் வழங்கப்படுகின்றன.
வேளாண்மை பட்டப்படிப்பை முடித்துவிட்டு வங்கி மற்றும் விவசாய அதிகாரிகள் பதவிக்கான பணிகளில் சேரலாம். இது இல்லாமல் போட்டித்தேர்வுகளுக்கு அதிகம் செல்லலாம். காரணம் இங்கு பலதரப்பட்ட தகவல்கள் சொல்லிக் கொடுப்பதால் அது போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றியடைவதற்கு உதவியாக இருக்கும். இதுதவிர பட்ட மேற்படிப்புக்கு செல்வார்கள். தனியார் உணவு உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் சார்ந்த உணவு பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லலாம்.

குரூப் 1, குரூப் 2 என எல்லா போட்டித் தேர்வுகளும் எழுதலாம். அக்ரி படிக்கும்போதே சிவில் சர்வீஸ் எழுதலாம் என நினைக்கிறார்காள். ஆனால் அது அப்படி இல்லை. முதலில் தங்கள் படிப்பை முடித்துவிட்டு அடுத்து சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுத வேண்டும். ஆனால் எங்களிடம் வரும் பெற்றோர் அனைவரும் இந்த கல்லுரியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறீர்களா என்றுதான் கேட்கிறார்கள்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதவேண்டும் என்றால் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். முதலில் கல்லூரியில் மாணவர்கள் படித்து நல்ல மதிப்பெண் எடுத்த பிறகு, போட்டி தேர்வுகளுக்கு தயாராகலாம். ஆனால் சில பெற்றோர் மற்றும் மாணவர்கள் தங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் கல்வி ஆண்டிலேயே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கிறேன் என அதையும் இதையும் சேர்த்து படிப்பதால் எதிலும் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் சோர்ந்து விடுகிறார்கள்.
வேளாண் முடித்த மாணவர்கள் சுயதொழில் செய்ய பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சுயதொழிலுக்கு வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. சுய தொழிலுக்கு அனுபவம் தேவை. அதனால் முதலில் வேலைக்கு சென்றுவிட்டு பிறகு சுயதொழில் ஆரம்பிப்பவர்களும் இருக்கிறார்கள்.
வேளாண்மை படிக்க நினைப்பவர்கள் வேளாண் பல்கலைக்கழகம் அறிவிக்கும் சமயத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கட்ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் அதாவது பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் தனியார் கல்லூரிகளின் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சீட்களை பெறலாம். மேனேஜ்மென்ட் கோட்டாவில் இரண்டரை லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை கேட்பார்கள். அந்தந்த வருடத்தின் டிமாண்டை பொறுத்து இந்தத் தொகை மாறுபடும். மேனேஜ்மென்ட கோட்டாவில் சேருபவர்களும் கட்டாயம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருக்க வேண்டும். அடுத்து பல்கலைக்கழகமே இண்டஸ்ட்ரியல் கோட்டா, என்ஆர்ஐ கோட்டா என்று இரண்டு பிரிவுகளில் பணம் கட்டி சேரக்கூடிய முறையை வைத்திருக்கிறது. இதற்கு 8 லட்சம் ஆகும். மெரிட்டில் சீட் கிடைக்காது என்று நினைப்பவர்கள் இதில் முன்கூட்டியே பணத்தை கட்டி சேரலாம்.

இதுதவிர நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் சார்பில் வேளாண்மை சம்பந்தப்பட்ட படிப்புகளை வழங்குகின்றன. வேலூர் வி.ஐ.டி, எஸ்.ஆர்.எம், காருண்யா போன்றவை வழங்குகின்றன. இங்கும் சேரலாம். அதேபோல பொறியியல் கல்லூரிகளிலும் அக்ரிகல்ச்சுரல் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. வேளாண்மை சம்பந்தமான இயந்திரப் படிப்புகளை படிப்பவர்கள் இந்த படிப்பில் சேரலாம். இது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும்.
வேளாண்மை, தோட்டக்கலை, வனத்துறை, உணவு பதப்படுத்துதல் என்று வேளாண்மையின் கீழ் பல துறைகள் இயங்கி வருகின்றன. எல்லாமே வளமான வாய்ப்புள்ள துறைகள்தான். ஆனால், அதில் நாம் என்னவாக இருக்க போகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கேற்றவாறு தங்களை தயார்ப்படுத்திக் கொண்டு படிக்கலாம்" என்று ஆலோசனை வழங்கினார்.