Published:Updated:

இயற்கை விவசாயக் கொள்கை... எப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்?

தமிழ்நாடு அரசு

இயற்கை விவசாயத்தின் அடிப்படை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்தாலே போதும். அதை அவர்கள் நிலத்துக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்வார்கள்.

Published:Updated:

இயற்கை விவசாயக் கொள்கை... எப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்?

இயற்கை விவசாயத்தின் அடிப்படை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்தாலே போதும். அதை அவர்கள் நிலத்துக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்வார்கள்.

தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்துக்கென கொள்கை உருவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான முதல் கூட்டம் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் இயற்கை விவசாயக் கொள்கைகளை ஆராய்ந்து தமிழகத்துக்கான இயற்கை விவசாயக் கொள்கையை உருவாக்குவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், வரையறுக்கப்பட்டுள்ள இக்கொள்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கொள்கை உருவாக்கத்துக்கான கருத்துகளை விவசாயப் பிரதிநிதிகளிடம் பெற்று, திருத்தங்கள் செய்து ஒரு வார காலத்துக்குள் தமிழக இயற்கை விவசாயக் கொள்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கென உருவாக்கப்படும் இயற்கை விவசாயக் கொள்கை எப்படியானதாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் ரா.செல்வத்திடம் கேட்டபோது...

அறச்சலூர் செல்வம்
அறச்சலூர் செல்வம்

``கொள்கை ஓர் இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட வேண்டும். தமிழக அரசு இயற்கை விவசாயத்துக்கு என்ன இலக்கு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பாக நாங்கள் சொல்வது, அடுத்த 30 ஆண்டுகளில் மக்கள் தொகை, பருவநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவு, பொருளாதாரம் அனைத்தையும் கருத்தில் கொண்டு நஞ்சில்லாத உணவு கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இக்கொள்கையின் இலக்காக இருக்க வேண்டும். தமிழக பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். தற்போது குறைவாக இருக்கிறது. உள்ளூர் வேலை வாய்ப்புகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். எதை இயற்கை விவசாயம் என முன்நிறுத்தப்போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. இயற்கை விவசாயத்திலேயே பல்வேறுபட்ட அணுகுமுறைகள் இருக்கின்றன. உயிர்சக்தி வேளாண்மை, சுபாஷ் பாலேக்கர் முன்னிறுத்தும் ஜீரோ பட்ஜெட் அணுகுமுறை, மசானபு புஃகோகாவுடைய அணுகுமுறை என வேறுபட்டிருக் கிறது. இயற்கை விவசாயக் கொள்கை என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அங்கக வேளாண்மை என்றில்லாமல் `உயிர்ச்சூழல் வேளாண்மை' என்பதாக இருக்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தை மட்டும் முன் நிறுத்தினால் உயிர்சக்தி விவசாயம் போன்ற வேறுபட்ட விவசாய அணுகுமுறைகளுக்கு என்ன பதில்? இயற்கை விவசாயத்தை எப்படிக் கொண்டு போய் சேர்க்கப்போகிறோம், என்ன மாதிரியான தொழில்நுட்பத்தை வளர்த்தப்போகிறோம் என்பது குறித்தெல்லாம் சரியான திட்டம் வகுக்க வேண்டும். இயற்கை விவசாயத்தைப் பற்றிய பார்வை எப்படியாக இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் எல்லாம் இருக்கிறது. செடிக்கு உணவாக உரத்தைப் போட்டு மேற்கொள்வதல்ல இயற்கை விவசாயம். மண்ணின் வளத்தை மேம்படுத்தினாலே செடி தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்துகொள்ளும் என்பதுதான் அடிப்படை. இந்தப் புரிதல் வேண்டும். விவசாயிகள் இயற்கை விவசாயத்தைப் புரிந்திருக்கிற விதம் வேளாண் துறைக்கும், வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் புரிந்திருந்தால் மட்டும்தான் அதற்கேற்ற கொள்கை வர முடியும்.

இயற்கை விவசாயக் கொள்கை... எப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்?

ஈரோடு மாவட்டம் என்றால் மஞ்சள், விழுப்புரத்துக்கு உளுந்து, திருவண்ணாமலைக்கு நிலக்கடலை என்று இடத்துக்கேற்ப ஒரு பயிரை முன் நிறுத்துவதைப் போல கொள்கை கொண்டு வரக்கூடாது. பண்ணை முழுமையாக இயற்கை விவசாயத்துக்குள் வர வேண்டும். ஒரு பயிருக்கு மட்டுமே ஆதரவு கிடைக்கும் என்கிற நிலை ஏற்பட்டால் பிரச்னைதான். விவசாய சுழற்சியின் அடிப்படையில் பார்த்தால் ஒரே பயிரை தொடர்ச்சியாக பயிர் செய்ய முடியாது. ஆனால், மூன்று முறைக்கு மேல் பயிர் செய்தால்தான் சான்று தருகிறார்கள். இந்த வேறுபட்ட சுழற்சியைப் புரிந்துகொள்வது முக்கியம். இயற்கை விவசாயம் செய்ய முன் வருகிறவர்களுக்கு ஆதரவு தருவதாய் இக்கொள்கை இருக்க வேண்டும்.

நாம் இயற்கை விவசாயத்தை கல்வியாகக் கொண்டு போயிருக்கிறோம். தமிழ்நாட்டில் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நெல் பயிரிடப்படுகிறது. எல்லாம் ஒரே நெல் ரகங்களா என்றால் அது இல்லை. நிலத்துக்கு நிலம் பயிர்களும், ரகங்களும் மாறுபடக்கூடியது. ஆற்றுப்பாசனம், ஏரிப்பாசனம், மானாவாரி என பாசனத்துக்குத் தகுந்தாற்போல் விவசாய முறையும் மாறுபடக்கூடியது. ஆகவே, பொதுவாக சாகுபடி முறை சொல்லக்கூடாது. இயற்கை விவசாயத்தின் அடிப்படை அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்தாலே போதும். அதை அவர்கள் நிலத்துக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்வார்கள். இப்படியாக இயற்கை விவசாயம் சார்ந்த புரிதலோடு இக்கொள்கை வகுக்கப்பட வேண்டும்" என்கிறார் அறச்சலூர் செல்வம்.

`விவசாயிகளின் நேரடி வருவாய்க்கான ஆதரவு அளிப்பதாய் இக்கொள்கை வகுக்கப்பட வேண்டும்" என்கிறார் தமிழ் மரபு வேளாண் கூட்டமைப்பைச் சேர்ந்த நடராஜன்.

நடராஜன்
நடராஜன்

``எங்களது தமிழ் மரபு வேளாண் கூட்டமைப்பு சார்பாக வரைவறிக்கை ஒன்றைத் தயார் செய்து கொடுத்திருக்கிறோம். இந்தியாவில் குறிப்பாக தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இயற்கை விவசாயிகளுக்கு நேரடி பண உதவி செய்கிறது. ஒரு ஏக்கருக்கு இவ்வளவு எனக் கொடுக்கிறார்கள். ஆந்திராவில் நில உடைமையாளர்கள் மட்டுமன்றி குத்தகை நிலத்தில் விவசாயம் புரிகிறவர்களுக்கும் இந்தப் பண உதவி வழங்கப்படுகிறது. பயிர்க்காப்பீடு மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கே காப்பீடு வழங்கியிருக் கிறார்கள். அவர்கள் உயிரிழந்தால் 5 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கிறார்கள். தற்கொலை செய்கிறவர்களுக்கும் இக்காப்பீடு வழங்கப்படுகிறது.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்
எஸ்.தேவராஜன்

உலகின் அனைத்து நாடுகளும் நேரடி வருவாய்க்கான ஆதரவை இயற்கை விவசாயிகளுக்குத் தருகின்றன. இந்தியாவிலேயே ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு கொள்கையைப் பின்பற்றுகின்றன. ஒடிசாவில் தானியங்கள் மற்றும் சிறு தானியங்களுக்கு நிதி உதவி அளிக்கிறார்கள். இயற்கை விவசாயத்தால் உற்பத்தி குறையாது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்துக்கு முழுமையாக மாற 3 ஆண்டுக் காலம் தேவைப்படும். அந்த இடைப்பட்ட காலத்தில் இயற்கை விவசாயிகளுக்கான மானியம் வழங்கப்பட வேண்டும். இயற்கை விவசாயிகளின் வருவாயை உறுதி செய்யும் வகையில் அரசு சார்பில் ஊதியக்குழு அமைக்கப்பட வேண்டும். காலநிலை மாற்றம் காரணமாகப் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகியிருக்கிறோம். இவற்றிலிருந்து மீள இயற்கை விவசாயம்தான் தீர்வு என்பதால் அனைவரையும் இயற்கை விவசாயத்தை நோக்கி இழுப்பதாகக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்" என்கிறார் நடராஜன்.