
கல்வி
விவசாயத்தின் முக்கியத்துவத்தை, குறிப்பாக இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை இன்றைக்குப் பலரும் உணர்ந்து கொண்டுள்ளனர். பல்வேறு துறைகளில், கை நிறையச் சம்பாதித்துக்கொண்டிருந்த பலரும், இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்திருப்பதே இதற்கான பசுமையான உதாரணம். சரி, பெரியவர்களுக்கு மட்டும் இயற்கை விவசாயத்தின் அருமை தெரிந்தால் போதுமா? ‘விவசாயமே உலகத்தின் அடிப்படை, அதுவே நம் உயிர்நாடி’ என்பது நாளைய தலைமுறையினருக்கும் தெரியவேண்டும்தானே! அதைக் கனகச்சிதமாகச் செய்து வருகிறது, சென்னை, மறைமலைநகர் அருகேயுள்ள கரம்பூர் கிராமத்திலிருக்கும் ‘எலா க்ரீன் சர்வதேச இளங்கலை பள்ளிக்கூடம்’.

சர்வதேச இளங்கலை பள்ளிக்கூடங்களின் தலைமையகம் ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறது. 2018-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளியின் இயக்குநர் சமிதா அடிப்படையில் ஒரு கட்டடக்கலை நிபுணர். மரங்களை வெட்டாமல் கட்டடங்கள் கட்டுகிற அளவுக்கு இயற்கை நேசிப்பாளர். சமீபத்தில், இந்தப் பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் இயற்கை விவசாயம் தொடர்பான ஆன்லைன் கண்காட்சியொன்றை நடத்தி யிருந்தார்கள். அதுபற்றித் தெரிந்துகொள் வதற்காக அப்பள்ளியின் ஆசிரியரும் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளருமான நந்தினியிடம் பேசினோம்.

‘‘எங்கள் மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை இயற்கை விவசாயம் தொடர்பான வகுப்புகளை நடத்துகிறோம். ஒரு விதை எப்படிச் செடியாக வளர்கிறது என்பதைத் தினமும் கவனிக்க வைத்து, அதன் வளர்ச்சி நிலைகளைத் தெரிந்து கொள்ள வைக்கிறோம். மாணவர்கள் விவசாயம் செய்வதற்காகத் தனியாக நிலமும் வைத்திருக்கிறோம். வருடம்தோறும் ஒரு கருவை எடுத்துக் கொண்டு அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள் மாணவர்கள். இந்த வருடம் 5-ம் வகுப்பு மாணவர்கள் விவசாயத்தைக் கருவாக எடுத்துக்கொண்டு, விவசாயிகள் சந்திக்கின்ற பிரச்னைகள், தீர்வுகள் குறித்து ஆராய்ச்சி செய்தார்கள்.

இதற்காக, சோழவரம் கிராமத்தில் இருக்கிற ‘ஃபார்ம் குரு’ என்ற விவசாயப் பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றோம். அங்கு, ஏர் உழவில் ஆரம்பித்து விதைத்தல், நடவு செய்தல், களையெடுத்தல் என்று பல விவசாயப் பணிகளை மாணவர்களே நிலத்தில் இறங்கிச் செய்தார்கள். விவசாயிகளிடம் பேட்டி எடுத்து அவர்களுடைய வாழ்க்கை எப்படி யிருக்கிறது, விவசாயம் செய்வதில் அவர்கள் சந்திக்கின்ற பிரச்னைகள் என்னென்ன என்று தெரிந்துகொண்டார்கள்.

சில மாணவர்கள், விவசாயிகள் ஏன் ஏழ்மையாக இருக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்து முடிவுகளை ஒப்படைத்தார்கள். இன்னும் சிலர், பொம்மலாட்டம், நாடகம் நடத்தி ‘பணத்துக்காக விவசாய நிலத்தை விற்கக் கூடாது’ என்று வலியுறுத்தினார்கள். விவசாயம் தொடர்பான கண்காட்சியை நடத்திய மாணவர்கள், அந்தக் கிராம மக்களுக்காக மருத்துவ முகாமையும் நடத்தினார்கள்’’ என்றவர்,
‘‘பள்ளிக் காலத்திலேயே மாணவர்களுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்துவிட வேண்டும். அதற்கான தொடர் முயற்சியில் எங்கள் பள்ளி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மற்ற பள்ளிக்கூடங்களும் மாணவர்கள் மத்தியில் விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காக, அவர்கள் பள்ளிக்கூடத்தில் மாடித்தோட்டமாவது போட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’’ என்றார். அவரைத் தொடர்ந்து சில பெற்றோர்களிடமும் பேசினோம்.

“எங்களோட அப்பா காலத்திலேயே விவசாயத்தை விட்டுட்டு சென்னைக்கு வந்து ‘செட்’டில் ஆயிட்டோம். அதனால விவசாயக் குடும்பத்தில பிறந்து இருந்தாலும் எனக்கு விவசாயத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனா, இந்த ‘ஸ்கூல்’ல படிக்கிறதாலே என் மகனுக்கு விவசாயத்து மேல ஈடுபாடு வந்திருக்கு. அது எனக்கு ரொம்ப மனநிறைவா இருக்கு.
குறிப்பா, விவசாயத்தையும் தோட்டம் போடுறதையும் செய்முறையில சொல்லித் தர்றாங்க. என்னோட மகன் விவசாயிகளோட பொருளாதாரச் சிக்கல்களைப் பற்றி ஆராய்ச்சி செஞ்சு அதுதொடர்பான தகவல்களைக் காட்சிப்படுத்தி யிருந்தான்” என்றார் பெற்றோர்களில் ஒருவரான சரவணராஜ்.
“மதிப்பெண்கள் பின்னாடி ஓடாம வளர்ந்த பிறகு சமூகத்துக்கு உதவி செய்கிற பிள்ளைகளா வரணும்னு ஆசைப்பட்டேன். அதுக்குக் கண்டிப்பா விவசாயம்பற்றியும் விவசாயிகள் பற்றியும் தெரிஞ்சுக்கணும் இல்லையா... பள்ளிக்கூடத்துல விவசாயம் செஞ்சதோட பலன் வீட்டிலேயும் அவங்களுக்காகக் கொஞ்சம் நிலம் ஒதுக்கிக் கொடுத்திருக்கோம். அதுல அவங்க தோட்டம் போட்டு இருக்காங்க” என்கிறார், இன்னொரு பெற்றோரான பிரியதர்ஷினி.
“பள்ளிக்கூடத்துல ஒவ்வொரு மாண வருக்கும் சின்னச் சின்னதா இடம் கொடுத்து அவங்களையே காய்கறி, கீரைன்னு தோட்டம் போட வச்சிருக்காங்க. தன்னோட செடி அப்படின்னு ஒவ்வொரு மாணவரும் செடி, கொடிகளோட ‘பர்சனலா அட்டாச்’ ஆகி இருக்காங்க. என்னோட பையன் விவசாயத் தையும் விவசாயிகளையும் கொண்டாடுற மாதிரி பொன்மொழிகளை உருவாக்கி அவன் ‘ஸ்கூல்’ல நடந்த கண்காட்சியில வெச்சிருந்தான்” என்று பெருமிதப்படுகிறார் பெற்றோர்களில் ஒருவரான தியாகு என்பவர்.
விவசாயம்... அதுதானே எல்லாம்?