மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

அரை ஏக்கர்... ரூ.1,42,000... மஞ்சள் சாகுபடியில் மகிழ்ச்சியான வருமானம்!

மஞ்சள் வயலில் சந்தனகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
மஞ்சள் வயலில் சந்தனகுமார்

மகசூல்

படிச்சோம் விதைச்சோம்

‘‘பசுமை விகடனாலதான், எனக்கு இயற்கை விவசாயத்து மேல நம்பிக்கை வந்துச்சு. அதுமட்டுமல்ல, இதுல இடம்பெறக்கூடிய வெற்றி விவசாயிகள் தான் எனக்கு வழிகாட்டிகளா இருந்துகிட்டு இருக்காங்க’’ நெகிழ்ச்சியோடு பேசுகிறார் சந்தனகுமார்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது கோவிலாண்டனூர் கிராமம். இங்கு வசித்து வரும் விவசாயி சந்தனகுமார் இயற்கை முறையில் மஞ்சள் விளைவித்துப் பொங்கல் தருணத்தில் விற்பனை செய்ததன் மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.

ஒரு பகல்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். பெரும்பகுதி அறுவடை முடிந்திருந்த நிலையில், இவருடைய தோட்டத்தில் மிச்சமிருந்த மஞ்சள் செடிகளின் இலைகள், குற்றால சாரல் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்ற சந்தனகுமார், ‘‘பண்டிகை சார்ந்த விளைபொருள்களை நம்ம விவசாயிகள் குறைவான பரப்புல சாகுபடி செஞ்சா... நிறைவான லாபம் நிச்சயம் கிடைக்கும். குறிப்பா, மஞ்சள் சாகுபடி ரொம்ப நல்லா கை கொடுக்கும். இதுக்கு நானே உதராணம். அரை ஏக்கர்ல இதைப் பயிர் பண்ணி, பொங்கல் தருணத்துல மஞ்சள் குலைகளா (கொத்துகள்) விற்பனை செஞ்சது மூலமா, எனக்கு 1,42,000 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு’’ என்றவர் தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

மஞ்சள் கொத்து
மஞ்சள் கொத்து

‘‘விவசாயம்தான் எங்க பூர்வீகத் தொழில். நான் 5-ம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்கப்புறம் அப்பாவுக்கு உதவியா விவசாய வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சேன். எனக்கு நல்லா விவரம் தெரிய ஆரம்பிச்ச பிறகு, முழுமையா நானே விவசாயத்தைக் கவனிக்க ஆரம்பிச்சேன். எங்க ஊர்ல உள்ள மத்த விவசாயிகள் மாதிரி நானும் பல வருஷமா ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு வந்தேன். அதிகப்படியான ரசாயன உரங்கள் பயன்படுத்தினதால நாளடைவுல மண்ணு நல்லா இறுகிப் போச்சு. நிலத்துல நுண்ணுயிரிகளே இல்லாததுனால, படிப்படியா மகசூல் குறைய ஆரம்பிச்சுது.

‘விளைச்சல் குறைய ஆரம்பிக்குதுன்னா உரம் இன்னும் அதிகமா போடணும்’னு அக்கம் பக்கத்து விவசாயிங்க சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரி அடுத்தடுத்த சாகுபடியில ரசாயன உரங்களோட அளவை அதிகப்படுத்திப் பார்த்தேன். ஆனா, எந்த முன்னேற்றமும் இல்ல. ரசாயன உரங்கள் அதிகமா பயன்படுத்தினதுனாலதான் மண்ணோட வளம் குன்றிப் போய், மகசூல் குறைஞ்சு போச்சுங்கற யதார்த்த உண்மை கூட அப்ப எனக்குத் தெரியாது.

இந்தச் சூழ்நிலையில்தான் மூணு வருஷத்துக்கு முன்னாடி, பக்கத்து ஊரைச் சேர்ந்த விவசாயியும் பசுமை விகடனோட தீவிர வாசகருமான அருண், என்னோட காய்கறித் தோட்டத்துக்கு வந்தார். ‘என்னப்பா... உன்னோட தோட்டத்துக்குள்ள நுழைஞ்சாலே பூச்சிக்கொல்லி நாத்தம்தான் அடிக்குது. மண்ணு இறுகி செங்கல்கட்டி மாதிரி இருக்கு. ரசாயன உரங்களை அதிகமா போட்டதுனால தான், மண்ணு வளமிழந்து கிடக்கு. இதைச் சரி பண்ணணும்னா, உடனடியா நீ இயற்கை விவசாயத்துக்கு மாறணும்’னு சொன்னார். அதைப் பத்தி தெரிஞ்சுக்க, மறுநாள் அவரோட தோட்டத்துக்குப் போனேன்.

நாலு பிளாஸ்டிக் டிரம்கள் இருந்துச்சு. அதுல ஒரு டிரம்மை திறந்து காட்டி குச்சியால் கலக்கினார். பழக்கூழ் வாசனை வீசுச்சு. ‘இதுதான் ஜீவாமிர்தம். பயிர் வளர்ச்சி ஊக்கியா இதைத்தான் பயன்படுத்துறேன்’னு அவர் சொன்னார். ‘பூச்சி, நோய்த் தாக்குதலுக்கு என்ன மாதிரியான மருந்து தெளிப்பீங்க’னு கேட்டேன். மூலிகைக் கரைசல், இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசல், அக்னி அஸ்திரம் தெளிக்குறதா சொன்னார். அதுக்குப் பிறகு தன்னோட தோட்டத்து மண்ணைக் கையில அள்ளிக் காட்டினார். அதுல நாலஞ்சு மண்புழுக்கள் நெளிஞ்சது. ‘உயிர்ச்சத்து உள்ள நல்ல வளமான மண்ணுல தான் மண்புழுக்கள் உருவாகும். இயற்கை விவசாயத்துக்கு மாறினா உன்னோட நிலமும் நல்லா வளமா மாறிடும்’னு சொன்னதோடு, பசுமை விகடனை என் கையில கொடுத்து, இதை முழுமையா படிச்சுப் பாருங்கனு சொன்னார்.

மஞ்சள் வயல்
மஞ்சள் வயல்

அதைப் படிச்ச பிறகுதான் இயற்கை விவசாயத்து மேல எனக்கு நம்பிக்கையும் ஆர்வமும் ஏற்பட்டுச்சு. இயற்கை விவசாயத் துக்கு மாறணும்னு முடிவெடுத்து, முதல் கட்டமா பலதானிய விதைப்பு செஞ்சு, மண்ணை வளப்படுத்தினேன். அடியுரமா... ஆட்டு எரு, மாட்டு எரு, இலைதழைகள் போட்டு உழவு ஓட்டுட்டி தலா 25 சென்ட்ல கத்திரி, தக்காளி, வெண்டை, அவரை சாகுபடி செஞ்சேன். இயற்கையில விளைய வச்சதுன்னு பார்த்தாலே சொல்லுற மாதிரி காய்கள் நல்லா செழிப்பாவும் திரட்சியாவும் இருந்துச்சு. கனிசமான மகசூலும் கிடைச்சது’’ என்று சொன்னவர் மஞ்சள் சாகுபடி குறித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

ஒவ்வொரு வருஷமும் பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் சாகுபடி செய்யுறது வழக்கம். ரெண்டு வருஷமா இயற்கை முறையில மஞ்சள் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன். இது மொத்தம் 2 ஏக்கர் நிலம். அரை ஏக்கர்ல மட்டும் மஞ்சள் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். பொங்கல் பண்டிகை க்கு மக்கள் எல்லாரும் கண்டிப்பா மஞ்சள் கிழங்கு வாங்குவாங்க. இதுல எந்த ஒரு மாற்றமும் கிடையாது. அதனால உத்தரவாதமான சந்தை வாய்ப்பு இருக்கு. நியாயமான விலையும் கிடைக்கும். அதனால நிச்சயம் லாபம் பார்த்துடலாம்ங்கற முழு நம்பிக்கையோட இதைப் பயிர் பண்றதை வழக்கமா வச்சிருக்கேன். இந்த வருஷம் பயிர் பண்ணின மஞ்சள் இப்ப அறுவடை முடியுற நிலையில இருக்கு’’ என்று சொன்னவர், இதன் விற்பனை மற்றும் வருமானம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

‘‘அரை ஏக்கர்ல 10,000 மஞ்சள் குலைகள் (கொத்துகள்) கிடைச்சது. அதுல, வளர்ச்சியில்லாத குலைகள், சேதாரமான குலைகள்னு 500 குலைகள் விற்பனைக்கு ஏற்ற தரத்தோட இல்லை. கிழங்குகள் நல்லா பெருத் திருக்கணும். இலைகளும் நல்லா நீளமா இருக்கணும். அப்படி இருக்கிற குலை களைதான் விற்பனை செய்ய முடியும். 9,500 குலைகள் நல்ல தரமானதா விற்பனைக்குத் தேறிச்சு. ஒரு குலை குறைஞ்சபட்சம் 10 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 25 வரைக்கும் விலை போச்சு. ஒரு குலைக்குச் சராசரியா 15 ரூபாய் வீதம் மொத்தம் 1,42,500 வருமானமா கிடைச்சது.

வருமான அட்டவணை
வருமான அட்டவணை

இதுல உழவு, எரு, விதைக்கிழங்கு, நடவு, இடுபொருள், அறுவடைனு மொத்தம் 32,500 வரை செலவு போக, 1,10,000 லாபமா கிடைச்சது. இதே மஞ்சள் குலைகளை வியாபாரிகள்கிட்ட விற்பனை செய்யாம, நாமளே நேரடியா விற்பனை செஞ்சா இன்னும் கூடுதலா லாபம் கிடைக்கும். அறுவடை செய்றப்ப உதிரக்கூடிய கிழங்குகளை எடுத்து சேமிச்சு வச்சுக்கிட்டோம்னா, விதைக்குப் பயன்படுத்திக்கலாம்.

இதனால, ஒவ்வொரு வருஷமும் விதைக்காகத் தனியா செலவு செய்ய வேண்டியது இருக்காது. ஒவ்வொரு விவசாயியும், பொங்கல் பண்டிகை சமயத்துல மஞ்சள் குலை விற்பனையை இலக்கா வச்சு, குறைந்தபட்சம் 20 - 30 சென்ட்ல மஞ்சள் சாகுபடி செஞ்சு கணிசமான லாபம் பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

தொடர்புக்கு, சந்தனகுமார்,

செல்போன்: 76391 58696.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

50 சென்ட் பரப்பில் மஞ்சள் சாகுபடி செய்ய, விவசாயி சந்தனகுமார் சொல்லும் செயல்முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

மஞ்சள் சாகுபடி செய்ய களிமண்ணைத் தவிர மற்ற அனைத்து வகை மண்ணும் ஏற்றது. வண்டல் மண், செம்மண்ணில் கூடுதல் மகசூல் கிடைக்கும். உணவுக்கான மஞ்சளுக்காக அறுவடை செய்வதாக இருந்தால் வைகாசிப் பட்டம் ஏற்றது. பொங்கல் பண்டிகையின்போது அறுவடை செய்து குலையாக விற்பனை செய்வதாக இருந்தால் ஆடிப்பட்டம் ஏற்றது. தேர்வு செய்த நிலத்தில் 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவின்போது, 3 டன் எருவை நிலம் முழுவதும் பரவலாகப் போட்டு, உழவு செய்ய வேண்டும். பின்னர், நிலத்தில் பாத்திகள் அமைக்க வேண்டும். நடவு செய்வதற்கு முன்னர், விதை மஞ்சளுடன் உமி, மணல் கலந்து தண்ணீர்த் தெளித்து ஒருநாள் முழுவதும் வைத்திருக்க வேண்டும். இதனால், விதை மஞ்சளில் வேர்கள் வெளிப்படும். நடவுக்கு முன்னர் பஞ்சகவ்யாவில் விதை நேர்த்தி செய்து நட்டால் நல்லது. இதனால், மஞ்சளை அதிகம் தாக்கும் வேர் அழுகல் நோயிலிருந்து பாதுகாக்கலாம்.

மஞ்சள் வயலில் சந்தனகுமார்
மஞ்சள் வயலில் சந்தனகுமார்

செடிக்குச் செடி முக்கால் அடி... வரிசைக்கு வரிசை முக்கால் அடி இடைவெளியில் விதை மஞ்சளை விதைப்புச் செய்ய வேண்டும். விதையின் முளைப்புப் பகுதி மேல்நோக்கி இருக்கும்படி நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 20 நாள்களுக்குப் பிறகு இலைகள் வெளியே தென்படும். 30 மற்றும் 60-ம் நாள் களை எடுக்க வேண்டும். பின்னர், களைகள் தென்படுவதைப் பொறுத்து களை எடுக்கலாம். விதைப்பு செய்த 20-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். 10 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி வீதம் பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இலைப்புள்ளி நோய், பச்சைப்புழு, வாடல், வேர் அழுகல் ஆகியவைதான் மஞ்சள் பயிர்களைத் தாக்கும் முக்கிய நோய்கள்.

இவற்றைக் கட்டுப்படுத்த 45-ம் நாளிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி வீதம் வேப்பங்கொட்டைக் கரைசல் கலந்து தெளிக்கலாம். மழைக் காலங்களில் பாத்திகளில் அதிகம் தண்ணீர் தேங்காமல் அவ்வப்போது வடித்து வந்தாலே வேர் அழுகல் நோயை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். விதைப்பு செய்ததிலிருந்து 6-ம் மாதம் மஞ்சள் கிழங்குகள் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்குத் தயாராகிவிடும்.

ஆனால், உணவு மஞ்சளுக்கான அறுவடையை 10-ம் மாதத்தில்தான் செய்ய வேண்டும். 10-ம் மாதத்தில் தாள்களில் உள்ள பச்சையம் குறைந்து வெளிர் நிறத்தில் நெற்கதிர்களைப்போல தலைசாய்த்து மடியத் தொடங்கும். அந்த நேரத்தில், மஞ்சள் கிழங்குகளைத் தோண்டி எடுக்கலாம். தண்டுகளை அகற்றிய பிறகு, கிழங்குகளைத் தோண்டுவது நல்லது. கிழங்குகளைக் குவியலாக்கி, வேக வைத்து, இயந்திரத்தின் மூலம் பாலிஷ் செய்து மஞ்சளை சேகரித்து வைக்கலாம். உணவுக்காக மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகள், பக்குவமாகச் சேமித்தால், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்.

மஞ்சள் வயலில் சந்தனகுமார்
மஞ்சள் வயலில் சந்தனகுமார்

எல்லை தாண்டும்
தென்காசி மஞ்சள் கிழங்கு

“இது செம்மண் பூமி. இங்க விளையுற மஞ்சளுக்கு வரவேற்பு அதிகம். எங்க மாவட்டத்துல விளைவிக்கப்படுற மஞ்சள், வெளி மாவட்டங்களுக்கும் டெல்லி, மும்பை, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகுது. அங்கெல்லாம் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகள்ல பொங்கல் சமயத்துல மஞ்சள் கிழங்கு குலைகள் விற்பனை செய்யப்படுது’’ என்கிறார் சந்தனகுமார்.

பொங்கல் சீர்வரிசை

“புதுசா கல்யாணம் ஆகிப் போன பொண்ணோட தலைப் பொங்கலுக்குச் சீர் வரிசை கொடுக்க, பெற்றோர் வாங்கக்கூடிய முதல் பொருள் மஞ்சள் குலை. இதுக்காக நிறைய பெற்றோர்கள் நேரடியா என்னோட தோட்டத்துக்கே வந்து மஞ்சள் குலை வாங்கிக்கிட்டுப் போவாங்க. தூர்ப்பகுதியில அதிக மஞ்சள் பிடிச்சிருக்குற குலைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கிட்டுப் போவாங்க. மஞ்சள் குலைகளோட தூர்கள்ல உள்ள வேர்களைச் செதுக்க மாட்டோம். அதுல செம்மண்ணும் ஒட்டியிருக்கிற மாதிரி கொடுப்போம். இதனால, 3 நாள்கள் வரை குலை வாடாம இருக்கும்’’ என்கிறார் சந்தனகுமார்.

மஞ்சள் கீறுதல்

‘‘பொங்கல் பண்டிகை அன்னைக்கு, புதுப்பானையில மஞ்சள்கிழங்குக் குலையை (கொத்துகள்) சுற்றிக்கட்டி அடுப்புல வச்சுப் பொங்கலிடுறது மக்களோட பொதுவான வழக்கம். மறுநாள், காலையில வீட்ல உள்ள பெரியவங்க, அந்த மஞ்சள் கிழங்கை கீறி வீட்ல உள்ள சிறு வயசு ஆண்கள், பெண்கள், குழந்தைகளோட நெத்தியில பூசி ஆசி வழங்குவாங்க. இது ‘மஞ்சள் கீறுதல்’ங்கற பேர்ல மங்கலச் சடங்கா இன்னைக்கும் பல கிராமங்கள்ல கடைப்பிடிக்கப்பட்டு இருக்கு” என்கிறார் சந்தனகுமார்.