நாட்டு நடப்பு
Published:Updated:

லம்பி ஸ்கின் நோய்க்கு மூலிகை மருத்துவம்... மரச் சாகுபடியில் ரூ.8 லட்சம்...

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

மதிப்புக்கூட்டலுக்கு ரூ.50 லட்சம் மானியம்...

நீங்கள் கேட்டவை

‘‘எங்கள் பண்ணையில் உள்ள மாடுகளுக்கு ‘லம்பி ஸ்கின் நோய்’ (Lumpy Skin Disease) தாக்கியுள்ளது. எதனால், இந்த நோய் ஏற்படுகிறது. இதைக் குணப்படுத்த மூலிகை மருந்துகளைக் கொடுக்கும்படி கால்நடை பராமரிப்புத் துறையினர் சொல்கிறார்கள். அதைக் கொடுக்கலாமா?’’

ரா.இந்திரன், படப்பை, காஞ்சிபுரம் மாவட்டம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில் தஞ்சாவூரில் இயங்கி வரும் மரபுசார் மூலிகை மருத்துவ ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் முனைவர் புண்ணியமூர்த்தி பதில் சொல்கிறார்.

‘‘அண்மையில் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் உள்ள கால்நடை பராமரிப்புத் துறைக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி ‘லம்பி ஸ்கின் நோய்’ என்றழைக்கப்படும் பெரியம்மைக்கு நம் சித்த மருத்துவத்தில் உருவாக்கப்பட்டுள்ள மருந்துகளைக் கொடுக்கும்படி அறிவுறுத்தியிருப்பதோடு... 12 மொழிகளில் அதன் செய்முறைகளையும் வெளி யிட்டுள்ளார்கள். நம் முன்னோர்களால் உருவாக் கப்பட்ட தமிழ்மண்ணின் இந்த மகத்தான மருத்துவம் என் மூலம் மத்திய அரசின் கவனத் துக்குச் சென்றது. அதன் பலன்தான், தமிழ்நாட்டில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறையினரும் மூலிகை மருத்துவம் செய்யத் தொடங்கியுள்ளனர். இது மகிழ்ச்சியான செய்தி.

மாடுகள்
மாடுகள்

பெரியம்மை என்பது ஈ, கொசு போன்ற கடிக்கும் மற்றும் ரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோயாகும். இதனால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு காய்ச்சல், உடல் முழுவதும் சிறிய கட்டிகள், கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள் மூலமாக, நல்ல ஆரோக்கியமான மாடுகளுக்கும் இந்நோய் பரவுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் உள்ள பகுதிகளிலிருந்து புதியதாக மாடுகளை வாங்கி வருவதன் மூலமாகவும் பரவுகிறது.

கடுமையான காய்ச்சல், உடல் சோர்வு, தீவனம் உண்ணாமை, கண்ணில் நீர் வடிதல், தாடை வீக்கம், உடலின் அனைத்துப் பகுதி களிலும் தோல்களில் கொப்புளங்கள், கட்டிகள் மற்றும் முடிச்சுகள் போன்ற அறிகுறிகள் காணப்படும். சில சமயங்களில் கொப்புளங்கள், கட்டிகள் பெரிதாகி உடைந்து புண்களாக மாறி, அவற்றிலிருந்து ரத்தம் மற்றும் சீழ் வடியும். இப்புண்களில் புழுக்கள் உண்டாகி பெரும் உபாதையை ஏற்படுத்தும்.

இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு மடி மற்றும் காம்புகளில் வீக்கம் ஏற்பட்டு, சில சமயம் அது மடி நோயாகவும் மாறக்கூடும். கறவை மாடுகளின் பால் உற்பத்தி வெகுவாகக் குறையும். கன்றுகளில் நோயின் வீரியம் அதிக மாகக் காணப்படும், குறிப்பாக, நலிந்த மற்றும் குடற்புழுவால் பாதிக்கப்பட்ட கன்றுக்குட்டி களுக்கு, இந்தப் பெரியம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால், அவை இறந்துபோவதற்கான வாய்ப்பு உள்ளது. பெரியம்மை நோய் பாதிப்பிலிருந்து மாடுகளைக் குணப்படுத்த மூலிகை மருந்துவ சிகிச்சை பெரிதும் கை கொடுக்கும்.

வாய் வழியாக மூலிகை மருந்து ஒருமுறை கொடுக்கத் தேவைப்படும் அளவு வருமாறு: 10 வெற்றிலை, 10 கிராம் மிளகு, 10 கிராம் உப்பு, தேவையான அளவு வெல்லம் ஆகிய வற்றை ஒவ்வொரு முறையும் புதியதாக அரைத்து, சிறிது சிறிதாக நாக்கில் தடவிக் கொடுக்க வேண்டும்.

முதல்நாள் 3 மணி நேரத்துக்கு ஒருமுறையும், இரண்டாம் நாளிலிருந்து தினமும் 3 முறை வீதமும் தொடர்ந்து 2 வாரங்கள் கொடுக்க வேண்டும். தோல் காயத்துக்கான வெளிப் பூச்சு மூலிகை மருந்தாக... குப்பைமேனி இலை, அம்மான் பச்சரிசி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை ஆகியவற்றை தலா 1 கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு, இதனுடன் 20 கிராம் மஞ்சள் தூள், பூண்டு (10 பல்) சேர்த்து அரைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண் ணெயில் கலந்து கொதிக்க வைத்து ஆற வைக்க வேண்டும்.

புறாபாண்டி
புறாபாண்டி



இந்த மருந்து எண்ணெயைப் பருத்தித் துணியில் தொட்டு, காயங்கள் மீது அடிக்கடி ஒத்தடம் தர வேண்டும். கண்டிப்பாகத் தேய்க்கக் கூடாது. மாடுகளுக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கொசுக்கள், ஈக்கள் இல்லாதவாறு கொட்டகை மற்றும் சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளை மற்ற மாடுகளிடமிருந்து தனிமைப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் இந்நோயைக் கட்டுப் படுத்தலாம்.

மேலும், மாடுகளுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்பட்டாலும், வெற்றிலை, மிளகு, உப்பு என்ற மாமருந்தை முதலுதவியாகக் கொடுக்கலாம் என்பது கூடுதல் தகவல். நம் முன்னோர்கள் சொல்லி வைத்துச் சென்ற மூலிகை மருத்துவத்தின் பயன், நம் மண்ணைத் தாண்டியும் பலன் கொடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, குஜராத்தில் உள்ள விவசாயிகள் நம் மருத்துவத்தைத் தீவிரமாகப் பின்பற்றி, பயன்பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.’’

தொடர்புக்கு, முனைவர் புண்ணியமூர்த்தி,

செல்போன்: 98424 55833.

புண்ணியமூர்த்தி, பாலசுப்பிரமணியன்
புண்ணியமூர்த்தி, பாலசுப்பிரமணியன்

‘‘ஒரு ஏக்கரில் மகோகனி, ஒரு ஏக்கரில் வேங்கை சாகுபடி செய்ய விரும்புகிறோம். இதற்குச் சாகுபடி செலவு எவ்வளவு ஆகும்? எவ்வளவு வருமானம் கிடைக்கும்?’’

@நித்யா தனபால், ஈரோடு.

மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மரச் சாகுபடி துறை யின் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், முனைவர் பாலசுப்பிரமணியன் பதில் சொல்கிறார்.

‘‘மகோகனி, வேங்கை இரண்டு மரங்களுக்கும் சாகுபடி முறை ஒன்றுதான். 15*15 அடி இடைவெளியில் நடவு செய்யும்போது, ஏக்கருக்கு 160 கன்றுகள் தேவைப்படும். 3 ஆண்டுகள் வரையிலும் தக்காளி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை ஊடுபயிர்களாக சாகுபடி செய்யலாம். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால் தண்ணீரைச் சிக்கனப் படுத்தலாம். 12 - 18 ஆண்டுகளில் வளர்ந்து, இந்த மரங்கள் பலன் கொடுக்கத் தொடங்கும். நிலத்தின் மண் வகை, மேலாண்மை... உள்ளிட்டவைதான் அறுவடை செய்யும் வயதை நிர்ணயம் செய்கிறது. உயர் மதிப்பு கொண்ட இந்த மரங்களைக் கவனமாக வளர்க்க வேண்டும்.

 மரங்கள்
மரங்கள்

தரையிலிருந்து 15 அடி வரை கிளைகள் இல்லாமல், முடிச்சுகள் இல்லாமல் வளர்க்க வேண்டும். நாம் கட்டிப் பிடிக்கும் அளவுக்கு மரம் அடர்த்தியாக வளர்ந்திருக்க வேண்டும். இதை அளவு முறையில் சொல்ல வேண்டும் என்றால் தரைப்பகுதியில் இதன் அடிப்பாகம் 15 இன்ச் சுற்றளவு இருக்க வேண்டும். இதற்குக் குறைவான அளவு என்றால், சந்தையில் அந்த மரத்தை வாங்க மாட்டார்கள். தரமான மகோகனி மரம், டன் ஒன்றுக்கு 10,000 ரூபாய் கிடைக்கும். இதே வேங்கை மரம் என்றால் டன் 15,000 ரூபாய் விலைபோகும். ஒரு ஏக்கரில் குறைந்தபட்சம் 80 - 100 டன் கிடைக்கிறது. 100 டன் என்று வைத்துக் கொண்டால் டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் என்றாலும் ஏக்கருக்கு, 10,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். கன்று, இடுபொருள்... என அனைத்து செலவுகளும் சேர்த்து ஏக்கருக்கு 2,00,000 செலவாகியிருக்கும். மீதி 8,00,000 ரூபாய் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த லாபம் கிடைக்க மரங்களைத் தொடர்ந்து கண்காணித்து மரமேலாண்மை செய்வதும் அவசியம்.’’

செல்போன்: 94435 05845.

இ-மெயில்: balafcri@gmail.com

மரங்கள்
மரங்கள்

‘‘தேங்காயை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய விரும்புகிறோம். இதற்கு மானியம் கிடைக்குமா?’’

ம.ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை.

“தமிழ்நாட்டில் தென்னை சாகுபடி சிறப்பாக நடைபெற, தென்னை வளர்ச்சி வாரியம் மூலம், பல திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. இதில் மதிப்புக்கூட்டலும் அடக்கம். தகுதி உள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்குகிறார்கள்.’’

தொடர்புக்கு,
தமிழ்நாடு மண்டல அலுவலகம், தென்னை வளர்ச்சி வாரியம், 47, டாக்டர் ராமசாமி ரோடு, கே.கே.நகர், சென்னை - 600 078. தொலைபேசி: 044 23662684, 23663685