நாட்டு நடப்பு
Published:Updated:

மகோகனிக்கு ரூ. 7,000, மலைவேம்புக்கு ரூ. 9,500; வளமான வருமானம் தரும் ஒட்டுப்பலகை மரங்கள்!

ஒட்டுப்பலகைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒட்டுப்பலகைகள்

மரம் வளர்த்தால் பணம் விளையும்-5

நவீனகால வளர்ச்சியின் காரணமாக, மரங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியா வைப் பொறுத்தவரை 1980-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் நமக்குத் தேவையான மரங்களைக் காடுகளிலிருந்துதான் பெற்றுக் கொண்டிருந்தோம். இயற்கைக் காடுகள் அழியாமல் பாதுகாக்க, வனச்சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, வனங்களுக்கு வெளியே வேளாண் காடுகளை உருவாக்கி, அவற்றில் மரங்களை உற்பத்தி செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.

அந்த வகையில் வேளாண் காடுகள் திட்டத்தின் மூலம் தடிமரம், ஒட்டுப்பலகை, காகிதக்கூழ், எரிசக்தி, எண்ணெய் வித்து எனப் பயன்பாட்டின் அடிப்படையில் பல வகையான மரங்கள் வளர்ப்பது குறித்து இந்தத் தொடரில் ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். கடந்த அத்தியாயத்தில் கட்டில், நாற்காலி, மேஜை, பீரோ, ஜன்னல், கதவுகள் உள்ளிட்டவை செய்யத் தடிமரங்களாகப் பயனளிக்கக்கூடிய தேக்கு, மகோகனி, குமிழ், சிசு மரங்கள் சாகுபடி மற்றும் வணிகம் குறித்து விரிவாகப் பார்த்தோம். இன்றைக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் தேவை எழுந்துள்ள பிளைவுட் எனச் சொல்லப்படும் ஒட்டுப்பலகை சார்ந்த மரங்கள் குறித்து இந்த அத்தியாயத்தில் பார்க்கப் போகிறோம்.

மகோகனி
மகோகனி

பிளைவுட் உற்பத்தி தொழிலில், அதிக அடர்த்தியுள்ள ஒட்டுப் பலகை, குறைந்த அடர்த்தியுள்ள ஒட்டுப் பலகை, நடுத்தர அடர்த்தியுள்ள ஒட்டுப் பலகை, துகள் பலகை எனப் பல பிரிவுகள் உள்ளன. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒட்டுப்பலகை சார்ந்த மரங்களுக்குப் பல வகைகளிலும் விரிவான சந்தை வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா முழுவதும் ஒட்டுப்பலகை மரம் சார்ந்து சுமார் 3,500 தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 2,000 நிறுவனங்கள் பெரு நிறுவனங்களாக உள்ளன. நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள் பட்டியலில் 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒட்டுப் பலகை தொழில் சார்ந்து 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே ஆண்டுக்கு 10 லட்சம் டன் ஒட்டுப்பலகை மரங்கள் தேவைப்படுகின்றன. 2024-ம் ஆண்டில் இது 15 லட்சம் டன்னாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதுள்ள சட்டத்தின்படி இதில் 1 சத விகிதம்கூட இயற்கைக் காடுகளிலிருந்து பெற முடியாது என்ற நிலை இருப்பதால், ஒட்டுப்பலகை மரங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், அடுத்த 2 ஆண்டுகளில் ஒட்டுப்பலகை சார்ந்து பல புதிய தொழில் நிறுவனங்கள் வரவுள்ளதால், இம்மரத்துக் கான தேவை மேலும் அதிகரிக்கும். எனவே, இனிவரும் ஆண்டுகளில், ஒட்டுப்பலகை சார்ந்த வேளாண் காடுகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

சவுக்கு
சவுக்கு

ஒட்டுப்பலகை என்று சொன்னாலே, வட இந்திய மாநிலங்களில் தைலம் மற்றும் பாப்புலர் வகை மரங்களைத்தான் தொன்று தொட்டு பயன்படுத்தி வந்தனர். கேரளாவில் ரப்பர் மரங்களை, பிளைவுட்டுக்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்திலும் ஒட்டுப்பலகைக்குத் தைல மரங்கள்தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதற்கு மாற்றாக, வேறு மரங்களையும் பயன்படுத்த, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, எங்களுடைய மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மலைவேம்பு, சந்தன வேம்பு, சில்வர் ஓக், மகோகனி உள்ளிட்ட மரங்கள் ஒட்டுப்பலகைக்கு உகந்த மரங்களாகும்.

வனக்கல்லூரி
வனக்கல்லூரி

மலைவேம்பில்... எம்.டி.பி-1, எம்.டி.பி-2, எம்.டி.பி-3 எனப் பல உயர் ரகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இவற்றைக் குறுகிய காலத்தில் அறுவடை செய்து கொள்ளலாம். ஏற்கெனவே கூறியது போல மரத்தை வயதுக்கு ஏற்ப வெட்டாமல் சுற்றளவுக்குத் தகுந்த வகையில் வெட்டலாம். மரம் 16 அங்குலம் என்ற சுற்றளவை எட்டி விட்டாலே அறுவடை செய்துகொள்ளலாம். சராசரியாக 3.5 – 5 ஆண்டுகளுக்குள் மலைவேம்பு மரம் 16 அங்குலம் சுற்றளவை எட்டிவிடும். சில இடங்களில் 1.5 ஆண்டிலேயே 16 அங்குலத்தை எட்டியுள்ளது. ஆனாலும், 3.5 - 5 ஆண்டுகளில் வெட்டினால்தான் நல்ல நிறம், அடர்த்தி கிடைக்கும். வளைவு தன்மையும் நன்றாக இருக்கும். ஒட்டுப்பலகை சார்ந்த தொழிற்சாலைகளில் தற்போது தைல மரத்துக்கு மாற்றாக 20 - 30 சதவிகிதம் மலைவேம்பு பயன்படுத்தப்படுகிறது. சந்தன வேம்பையும் ஒட்டுப்பலகைக்குப் பயன்படுத்துகின்றனர். மலைவேம்பைவிட சந்தன வேம்பில் நிறம் மற்றும் அடர்த்தி அதிகமாக இருக்கும்.

சமீபத்தில் ஒரு நிறுவனம் சவுக்கு மரத்தை ஒட்டுப்பலகைக்குப் பயன்படுத்தியுள்ளது. அதில் சின்னச் சின்ன தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளன. அதற்கு உண்டான ஆய்வையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

ஒட்டுப்பலகைகள்
ஒட்டுப்பலகைகள்

விவசாயிகளைப் பொறுத்தவரை அதிக உற்பத்தி, அதிக வருமானம் ஆகியவற்றைத்தான் பார்ப்பார்கள். அதுவே தொழில் நிறுவனங்கள் நிறம், அடர்த்தி, எப்படி இருக்கிறது, ஒரு டன் போட்டால் எத்தனை அட்டைகள் கிடைக்கும் என்று பலவற்றைப் பார்ப்பார்கள். தமிழ்நாட்டில் சமீபகாலமாக, துகள் பலகை உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. மரத்தை கூழ் ஆக்கி பலகை செய்யும் ஆலை களும் வரவுள்ளன. அதனால்தான் ஒட்டுப் பலகை சார்ந்த வேளாண் காடுகளை மிகப் பெரிய வரப்பிரசாதம் என்கிறேன்.

சிறு, நடுத்தர, பெரு விவசாயிகள் அனைவருமே இதில் இறங்கலாம். சிறு விவசாயிகள் இந்த ஒட்டுப்பலகை மரங்களைத் தங்களது வரப்பு ஓரத்தில் நடலாம். 6 அடி இடைவெளியில் வரிசையாக வைக்கலாம். வரப்பு ஓரத்தில் நட்ட மலைவேம்பு குறுகிய காலத்தில் நல்ல மகசூலை கொடுக்கும். அதேபோல சந்தனவேம்பு, மதகிரிவேம்பு, வெள்ளைக் கடம்பு ஆகியவற்றை வரப்பு ஓரத்திலேயே நட்டுக்கொள்ளலாம். மலைவேம்பு இலைகளை ஆடு, மாடு நன்கு சாப்பிடும். மரங்களைக் கவாத்துச் செய்யும்போது கழிக்கப்படும் இலைகள், மாடுகளுக்குப் பசுந்தீவனமாகப் பயன்படும். மலைவேம்பு மட்டுமல்லாமல், வெள்ளைக் கடம்பு, மதகிரி, சந்தனவேம்பு இலைகளையும் கூட, விவசாயிகள், தங்களுடைய கால்நடை களுக்குத் தீவனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மரத்துண்டுகள்
மரத்துண்டுகள்

நடுத்தர மற்றும் பெரு விவசாயிகள்... தங்களுடைய நிலத்தில் முதன்மைப் பயிராக ஒட்டுப்பலகை மரங்களைச் சாகுபடி செய்து, தோப்பை உருவாக்கலாம். 12 அடி இடைவெளி விட்டு கன்று நட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு சற்று அதிக இடைவெளி விடுவதால் மரத்தின் தடிமன் நன்கு பெருகும். 2 ஆண்டுகளுக்கு ஊடுபயிர்களும் சாகுபடி செய்துகொள்ள முடியும். அடுத்த 3 ஆண்டு களுக்குப் பிறகு, கவாத்து செய்தால் மீண்டும் ஊடுபயிர்கள் சாகுபடி செய்யலாம். 4-ம் ஆண்டில்தான் ஊடுபயிர் செய்வது கடினமாக இருக்கும். அதற்கும்கூட நிழலை தாங்கும் புல், பயிர் வகைளை மாற்றாகப் பயிரிடுகின்றனர்.

12 அடி இடைவெளி போதுமானது என்றாலும்கூட, மரத்துக்கு மரம் 15 - 20 அடி இடைவெளி விட்டால், பல வகைகளிலும் கூடுதல் பலன் கிடைக்கும். உழவு ஓட்ட எளிதாக இருக்கும். ஊடுபயிர் சாகுபடிக்கும் வசதியாக இருக்கும். முதன்மைப் பயிரான மர ஒட்டுப்பலகை மரங்களில் அதிக மகசூல் பெறலாம்.

ஒட்டுப்பலகைகள்
ஒட்டுப்பலகைகள்


மலைவேம்பு, சந்தனவேம்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது. அதனால் தொழில்நுட்பத்தில் வேறுபாடு இருக்காது. வெள்ளைக்கடம்புக்கும் இதே தொழில்நுட்பம்தான். இவை அனைத்துமே நடுத்தர அடர்த்தி ரகம். ஒரு கனஅடிக்கு 500 - 650 கிலோ கிடைக்கும். நல்ல வேகமாக வளரக்கூடியவை. குறைந்த பட்சம் ஒரு மரம் 200- 250 கிலோ கிடைக்கும் பட்சத்தில் 4 மரங்களிலேயே ஒரு டன் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 50 டன் மகசூல் கிடைக்கும். மகோகனி மரத்துக்கு டன்னுக்குக் குறைந்த பட்சம் ரூ.7,000 விலை கிடைக்கும். மலை வேம்பு உள்ளிட்ட மற்ற மரங்களுக்கும் டன்னுக்கு ரூ.7,000 - ரூ.9,500 விலை கிடைக் கிறது. தொழிற்சாலைக்கு ஏற்ற வகையில் விலையில் மாற்றம் இருக்கும். தைலம் மரத்தை பொறுத்தவரை டன்னுக்கு ரூ.5,800, ரூ.6,000 விலை கிடைக்கிறது.

ஏற்கெனவே கூறியதுபோல ஒட்டுப் பலகைக்குத் தைல மரங்கள்தான் பிரதானம். இருந்தாலும், சமீபகாலமாகத் தைலத்துக்கு மாற்றாக மேற்சொன்ன மரங்களையும் பயன்படுத்துகிறார்கள். தற்போது ஒட்டுப் பலகை உற்பத்தி தொழிலில்... மலைவேம்பு 30 சதவிகிதமும் மற்ற மரங்கள் 60 - 70 சதவிகிதமும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒட்டுப்பலகை
ஒட்டுப்பலகை

ஒட்டுப்பலகை மரத்தைப் பொறுத்தவரை... ஒரு கனஅடிக்கு 550 - 750 கிலோ எடை இருந்தால் சிறப்பானது. இந்தளவுக்கு அடர்த்தி மற்றும் சுற்றளவு கிடைக்கவில்லையென்றாலும்கூட கவலை யில்லை. ஒட்டுப்பலகைக்குப் பயன்படுத்த முடியாதவற்றை, துகள் பலகைக்குப் பயன் படுத்தலாம். 2 அங்குலத்துக்குக் குறைவாக இருந்தால்கூட எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அதற்கான விலை, சந்தை குறைவாகத்தான் இருக்கும்.

தற்போது தமிழ்நாட்டில் மலைவேம்பு சுமார் 10,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொழில் நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, முறையாகப் பராமரித்தால் இதில் தடம் பதிக்கலாம்.

- கிளைகள் படரும்

ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்...

வட இந்தியாவில் உள்ள யமுனா நதிக்கரைக்கு அருகே ஒட்டுப்பலகை சார்ந்த சுமார் 500 நிறுவனங்கள் ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன. லாரி, டிரக், ரயில் ஆகியவற்றில் தேவையான மரங்கள் வந்துகொண்டே இருக்கும். கேரள மாநிலம், பெரும்பாவூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒரே இடத்தில் இயங்குகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அப்படியல்ல. கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரையிலும் ஆங்காங்கே வெவ்வேறு இடங்களில் பிளைவுட் தொழில் சார்ந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் சில நன்மைகளும் உள்ளன. பின்னடைவுகளும் உள்ளன.

முனைவர் பார்த்திபன்
முனைவர் பார்த்திபன்

எந்தெந்த மாவட்டத்தில் பிளைவுட் தொழில் சார்ந்த நிறுவனங்கள் உள்ளனவோ அங்குள்ள விவசாயிகள் நேரடியாகச் சென்று, தங்களுடைய மரங்களை விற்பனை செய்துகொள்ளலாம். அதேசமயம். விவசாயிகள் தங்களுடயை மாவட்டத்தில் உள்ள ஓரிரு நிறுவனங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். தரத்தை பொறுத்து ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமான விலையை நிர்ணயிக்கும். அதேபோல் நிறுவனங்கள் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தும் விலை வேறுபடும்.

- முனைவர் பார்த்திபன்