ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

10 சென்ட்... மாதம் ரூ.3,600... ‘சக்கரவர்த்தி’ கிருஷ்ணகிரியில் அசத்தும் கீரைகளின் அரசன்!

கீரை சாகுபடி வயல்
பிரீமியம் ஸ்டோரி
News
கீரை சாகுபடி வயல்

மகசூல்

‘கீரைகளின் அரசன்’ என்றழைக்கப்படும் சக்கரவர்த்திக் கீரையை கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட விவசாயிகள் பரவலாகச் சாகுபடி செய்து வருகிறார்கள். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தால், அது விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று இயற்கை மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சக்கரவர்த்திக் கீரையின் மகத்துவங்கள் குறித்தும், இதைச் சாகுபடி செய்யும் முறைகள் குறித்தும் விரிவாக அறிந்துகொள்வதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மாதேசனை சந்திக்கச் சென்றோம். இவர் கீரை சாகுபடியில் நீண்ட அனுபவம் பெற்றவர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப் பட்டணத்திலிருந்து பாலக்கோடு செல்லும் சாலையில் 2 கி.மீ பயணித்தால் வருகிறது கருக்கன்சாவடி. இந்த ஊருக்குள் சென்று, ‘கீரை விவசாயம் செய்ற மாதேசன் வீடு எங்க இருக்கு’ என விசாரித்தால் அனைவரும் வழி சொல்கிறார்கள்.

மாதேசனின் வீட்டை அடைந்தோம். “வாங்க... என்ன கீரை வேணும். இப்போதைக்குத் தண்டுக்கீரை, சிறுகீரை, சிவப்புத் தண்டுக்கீரைதான் இருக்கு” எனச் சொன்ன மாதேசனிடம், ‘ஐயா... நாங்க கீரை வாங்க வரலை. சக்கரவர்த்திக் கீரை பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காக வந்திருக்கோம்’ என்றவுடன் உற்சாகமானார். “அடடா... இப்பதான் நாத்து விட்டிருக்கேன். ஏற்கெனவே வெச்சதுல ஒண்ணு, ரெண்டு இருக்கு” என்றவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

சக்கரவர்த்திக் கீரையுடன் மாதேசன்
சக்கரவர்த்திக் கீரையுடன் மாதேசன்

“எங்க தாத்தா காலத்துல இருந்தே நாங்க கீரை சாகுபடி செஞ்சுட்டு வர்றோம். எங்களைக் கீரைக்கார குடும்பம்னுதான் எங்க ஊரு மக்கள் அழைப்பாங்க. சிறுகீரை, தண்டுக்கீரை, பருப்புக்கீரை, வெந்தயக் கீரை, மணத்தக்காளி, சக்கரவர்த்திக் கீரை, புதினா, கொத்தமல்லினு சாகுபடி செய்றோம். முன்னெல்லாம் எங்க குடும்பத் துல நிறைய ஆளுங்க இருந்தாங்க. அதனால, பலவிதமான கீரைகளையும் அதிகப் பரப்புல சாகுபடி செஞ்சோம். ஆனா, இப்போ குறைவான பரப்புல கீரை சாகுபடி செய்றோம். நான் எப்பவும் அரை ஏக்கரை கீரைக்குனு ஒதுக்கிடுவேன். மீதி நீலத்துல நெல் போடுவோம்” என்றவர் சக்கரவர்த்திக் கீரை பற்றிப் பேசினார்.

“எல்லாக் கீரைக்கும் கடையிலதான் விதை வாங்குறேன். இந்தச் சக்கரவர்த்திக் கீரைக்கு மட்டும் வெளியில இருந்து வாங்குறதில்ல. காலங்காலமா எங்ககிட்டே இருக்குற விதைகள பயன்படுத்திதான் விதைச்சுக்கிட்டு வர்றேன். பல வருஷங்களுக்கு முன்னாடி கால்வாய் ஓரத்துல வளர்ந்திருந்த செடியில இருந்து எடுத்த விதைகளை விதைச்சோம். அதை வெச்சே தொடர்ச்சியா சாகுபடி செஞ்சுகிட்டு வர்றோம். மற்ற கீரைகளுக்கு எல்லாம்... பாத்தி எடுத்து அதுல விதையைத் தூவி, தண்ணி விட்டு வந்தா வளர்ந்து வந்துடும். ஆனா, சக்கரவர்த்திக் கீரையை நாத்து விட்டு 21 நாள்கள் வளர்ந்த பிறகு, அதைப் பறிச்சு வேறொரு இடத்துல நடவு செய்யணும். நடவு செஞ்சு 25 நாள் கள்ல அறுவடைக்குத் தயாராயிடும். ஒருமுறை நடவு செஞ்சுட்டா, 6 மாசம் வரை அறுவடை செஞ்சுகிட்டே இருக் கலாம். அதுக்குப் பிறகு, அதை அப்படியே விட்டுட்டா, அதுல இருந்து விதைகள் எடுத்துக்கலாம். மணத்தக்காளி கீரை யையும் இதே முறையிலதான் சாகுபடி செய்யணும். நாத்து விட்டு, பிறகு பறிச்சு நடுறது சிரமம்னு நினைக்குறதுனாலேயே, நிறைய விவசாயிங்க இதைச் சாகுபடி செய்ய முன்வர்றதில்ல. இப்போ மணத்தக்காளிக்கு கிடைச்சுக்கிட்டு இருக்குற சந்தை வாய்ப்பு, இந்தச் சக்கரவர்த்திக் கீரைக்கு இன்னும் கிடைக்கல. ஆனாலும்கூட, இந்தக் கீரையை விரும்பி சாப்பிடுறவங்க இருக்க தான் செய்றாங்க. அவங்களுக்காக சாகுபடி செஞ்சுகிட்டு வர்றேன். ஒரு கட்டு 10 ரூபாய், 15 ரூபாய்னு விக்கிறேன். இதோட மகத்துவங்களைப் பத்தி தெரிஞ்சவங்களும் இதை வாங்கிட்டுப் போறாங்க” என்றார்.

கீரை சாகுபடி வயல்
கீரை சாகுபடி வயல்

மாதேசனைத் தொடர்ந்து பேசிய அவருடைய மகன் சக்திவேல். “இப்போ சக்கரவர்த்திக் கீரையிலயும்கூட வீரிய ரகங்கள் வந்துடுச்சு. அதை ஓசூர், சூளகிரி உள்ளிட்ட பகுதிகள்ல சாகுபடி செய்றாங்க. வடமாநிலங்கள்ல ‘பத்துவாக்கீரை’ங்கற பேர்ல இதைச் சாகுபடி செய்றாங்க. நாங்க நாட்டு ரகத்தை மட்டும்தான் இப்ப வரைக்கும் சாகுபடி செஞ்சுகிட்டு வர்றோம். நாட்டுச் சக்கரவர்த்திக் கீரை மேல தண்ணி தெளிச்சா ஒட்டாது. செடிக்கு மேல பவுடர் அடிச்ச மாதிரி இருக்கும். காம்போடு இலை ஒட்டி யிருக்குற பகுதியில இளஞ்சிவப்பு நிறம் இருக்கும். இலைகள்ல லேசான சொரசொரப்பு இருக்கும். இது கொஞ்சம் கசப்புத் தன்மை உடையது. ஆனா, உடம்புக்கு ரொம்ப நல்லது. கீரையா கடைஞ்சும், பொரியல் செஞ்சும் சாப்பிடலாம். இந்தப் பகுதியில டாக்டருங்க பரிந்துரைக்கிறதுல இந்தக் கீரை முதன்மையா இருக்கு. நாங்க இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர்றதாலயோ என்னமோ எங்க வீட்டுல யாருக்கும் சர்க்கரை நோய் இல்ல” என்றவர், சக்கரவர்த்திக் கீரை சாகுபடியில் கிடைக்கும் மகசூல் குறித்துப் பேசினார்.

மணத்தக்காளி கீரை
மணத்தக்காளி கீரை

“நல்லா வளர்ந்த செடியில இருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் கீரை பறிக்கலாம். 10 சென்ட் அளவுல பயிர் செஞ்சோம்னா, மாசம் 300 கட்டுகளுக்கு மேல மகசூல் கிடைக்கும். ஒரு கட்டு சராசரியா 12 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா மாசத்துக்கு 3,600 ரூபாய் வருமானம் கிடைக்கும். 6 மாதங்கள் வரைக்கும் மகசூல் கிடைக்கும். அந்த வகையில கணக்கு பார்த்தா, மொத்தம் 21,600 ரூபாய் வருமானம் கிடைக்கும். வெறும் 10 சென்ட் பரப்புல ஆறே மாதங்கள்ல 21,600 ரூபாய் வருமானம் கிடைக்குறதுங்கறது பெரிசுதான். விதை, அறுவடை, நடவு எல்லாம் நாங்களே பார்த்துக்குறோம். மத்த கீரைகளுக்கு கொடுக்கிற உரத்துல மிச்சமானதைத்தான் இதுக்கு கொடுக்கிறேன். அதனால இதுக்கு செலவு எதுவும் இல்ல. இதுவரைக்கும் எங்களுக்கு விற்பனையில எந்த ஒரு பிரச்னையும் ஏற்பட்டதில்லை. எங்க கிட்ட இவ்வளவு கீரை வேணும்னு முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் சொல்லிடுவாங்க. நாங்க அறுவடை செஞ்சு கொடுத்திடுவோம்” என்று விடைகொடுத்தார்.

சக்கரவர்த்திக் கீரை
சக்கரவர்த்திக் கீரை

ஒரு கிலோ விதை ரூ.350

சக்கரவர்த்திக் கீரை குறித்து சேலம் மாவட்டம், சந்தியூரில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தின் உதவிப் பேராசிரியர் மாலதியிடம் பேசினோம். “பத்துவாக்கீரை எனப்படும் சக்கரவர்த்திக் கீரையின் தாவரவியல் பெயர் ‘சீனபோடியம் ஆல்பம்’. இது பீட்ரூட் தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் இலைகள் வெளிர்பச்சை நிறத்துடனும் இளம் இலைகளின் கணுப்பகுதி ஊதா அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். விதைகளை நேரடியாகத் தூவி விதைக்கலாம். ஆனால், நேரடி விதைப்பு முறையில் முளைப்புத்திறன் சற்றே குறைவாக இருக்கும். நாற்றங்காலில் விதைத்து 20 நாள்களுக்கு மேல் பறித்து நடவு செய்வது சிறப்பான முறை.

கீரையில் உள்ள சத்துகளின் அளவு
கீரையில் உள்ள சத்துகளின் அளவு

நடவு வயலில் 1 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். சுமார் 35 - 40 நாள்கள் கழித்துக் கீரைகளை வேருடன் பிடுங்கியோ, காம்புகளைக் கிள்ளியோ அறுவடை செய்யலாம். வேக வைத்து பாசிப்பருப்புடன் சேர்த்து கடைந்து உண்ணலாம். ஊட்டி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தால் ஊட்டி-1 என்ற ரகம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை ஒரு கிலோ 350 ரூபாய். தற்போது மழைக்காலம் என்பதால் இருப்பு இல்லை. பிப்ரவரி மாதத்தில் தொடர்புகொண்டால் விதைகள் கிடைக்கும். இந்த ரகம் சமவெளிப் பகுதிகளில் வளரும். மலைப் பகுதிகளில் இன்னும் நன்றாக வளரும். விதைக்காக சாகுபடி செய்பவர்கள் 150 - 180 நாள்களில் பறித்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம்” என்றார்.

தொடர்புக்கு,

ஊட்டி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்

தொலைபேசி: 0423 – 2442170

மாலதி, செல்போன்: 97877 13448.

கீரை விதைகள்
கீரை விதைகள்

இப்படித்தான் சாகுபடி!

10 சென்ட் பரப்பில் சக்கரவர்த்திக் கீரை சாகுபடி செய்வதற்கான செயல்முறை குறித்து மாதேசன், பகிர்ந்தவை பாடமாக இடம் பெறுகிறது...

நாற்று உற்பத்தி

10 சதுரடி பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நிலத்தை நன்கு கொத்தி, 10 கிலோ ஆட்டு எரு தூவி விட வேண்டும். அதில் விதைகளைத் தூவி தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 21 நாள்களில் நாற்றுகள் வளர்ந்து நடவுக்குத் தயாராகிவிடும். அவற்றைப் பறித்து 10 சென்ட் சாகுபடி நிலத்தில் நடவு செய்ய வேண்டும்.

சாகுபடி நிலம்

தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் உழவு ஓட்டி அடியுரமாக... 200 கிலோ ஆட்டு எருவுடன், தலா 500 கிராம் சூடோமோனஸ், பாஸ்போ - பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம் ஆகிய உயிர் உரங்களைக் கலந்து இட வேண்டும். 1 அடி அகலம் கொண்ட பார் அமைத்து, பாரின் இரு ஓரங்களிலும் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 15-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மி.லி பஞ்சகவ்யா தெளித்துவிடலாம். 30 - 35 நாள்களில் கீரைகள் நன்கு வளர்ந்து, அறுவடைக்குத் தயாராகிவிடும். அதன் பிறகு, ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யலாம். நிலத்தில் தண்ணீர் தேங்கக் கூடாது. தொடர்ந்து 6 மாதங்களுக்கு அறுவடை செய்யலாம். கிளைகளை உடைப்பது போன்று பறிக்க வேண்டும். இதே சாகுபடி முறைதான் மணத்தக்காளி கீரைக்கும். எனவே, இரண்டு கீரை வகைகளையும் சாகுபடி செய்து வருமானம் ஈட்டலாம்.

மாலதி, வேலாயுதம்
மாலதி, வேலாயுதம்

நெய் கலந்து சாப்பிட்டால் கசப்புத் தெரியாது!

சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் பேசியபோது, “இன்றைக்குப் புரதம், ஹீமோகுளோபின், கொழுப்புச்சத்து பற்றிப் பேசும் அளவுக்கு, நுண் சத்துகள் எனப்படும் வைட்டமின்கள் குறித்து அதிகம் பேசுவதில்லை. மண்ணீரல், கல்லீரல் உள்ளிட்ட சுரப்பிகளின் சுரப்புக்குப் பெரும் பங்களிக்கிறது இந்தச் சக்கரவர்த்திக் கீரை. அதனால்தான் இதைக் ‘கீரைகளின் சக்கரவர்த்தி’ என்றழைக்கின்றனர். குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகள், வயல்களின் வரப்போரங்களில் மட்கு அதிகமாக இருக்கும். அத்தகைய மண்ணில் இயற்கையாக விளையும் கீரை இது. அதனால்தான் சென்னை போன்ற பெருநகரங்களில்கூட இந்தக் கீரைகள் கிடைப்பதில்லை. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இதன் சாகுபடி அதிகரித்து வருகிறது என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். இந்தக் கீரையின் கசப்புத்தன்மை இருக்கிறது என்கிறார்கள். கீரையுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து நெய் கலந்து சாப்பிட்டால் கசப்புத் தெரியாது. நீரிழிவு நோயாளர்களுக்குக் கசப்பும் துவர்ப்பும் அவசியம். அது இந்தக் கீரையில் நிறையவே உள்ளது. அதனால் தாராளமாகச் சாப்பிடலாம்” என்றார்.