கால்நடை
நாட்டு நடப்பு
Published:Updated:

பால் ரூ.48,000... கன்றுக்குட்டி ரூ.15,000... பாரம்பர்யம் பேசும் பர்கூர் நாட்டு மாடுகள்!

பர்கூர் நாட்டு மாடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பர்கூர் நாட்டு மாடுகள்!

கால்நடை

பசுமைப் புரட்சியால் நம் நாட்டின் பாரம்பர்ய விவசாயத்தில் பலவிதமான பின்னடைவுகள் ஏற்பட்டதுபோல் வெண்மைப் புரட்சியால் கால்நடை வளர்ப்பிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கலப்பின சீமை மாடுகள் வளர்ப்பில் நம் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். உழவுக்கும் உரத்துக்கும், சத்தான பாலுக்கும்... காலம் கால மாகத் துணை நின்ற நாட்டு மாடுகள் கைவிடப் பட்டன. அதன் விளைவுகளை நம் விவசாயிகள் தற்போதுதான் உணரத் தொடங்கியுள்ளார்கள். நாட்டு மாடுகளின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தின் நாட்டு மாடுகளான காங்கேயம், புலிக்குளம், உம்பளச்சேரி, ஆலம்பாடி, பர்கூர் மாடுகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. தமிழக அரசும் கூட, இதில் கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின மாடுகளைப் பெருக்க ஆராய்ச்சி நிலையங்கள் அமைத்து பரவலாக்கி வருகிறது. அந்த வகையில் காங்கேயம் மாடுகளுக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலும், புலிக்குளம் இன மாடுகளுக்கு சிவகங்கை மாவட்டம் மானா மதுரையிலும், பர்கூர் மாடுகளுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலையிலும், ஆலம்பாடி மாடுகளுக்கு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்திலும் ஆராய்ச்சி நிலையங்கள் செயல்பட்டும் அமைக்கப்பட்டும் வருகின்றன.

ஆராய்ச்சி மையம்
ஆராய்ச்சி மையம்

தமிழ்நாட்டில் நாட்டின மாடுகளுக்காக அமைக்கப்பட்ட முதல் கால்நடை ஆராய்ச்சி மையம், பர்கூர் மாட்டின கால்நடை ஆராய்ச்சி மையமாகும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்த மையம், ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து 36 கி.மீ தொலைவில் இருக்கும் பர்கூர் மலையில் உள்ள துருசனாம்பாளையத்தில் அமைந்துள்ளது.

இதன் செயல்பாடுகள் குறித்து பொங்கல் சிறப்பிதழில் பதிவு செய்வதற்காக, ஒரு பகல் பொழுதில் இம்மையத்துக்குச் சென்றோம். சுற்றிலும் கருநீல மேகங்கள் சூழ்ந்த மலைகள், இம்மையத் தின் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே அறுவடை முடிந்த கேழ்வரகு வயல்கள், அறுவடைக் குத் தயாராக நிற்கும் மக்காச்சோள வயல்கள், ஓடைகளில் சலசலத்து ஓடும் தண்ணீர், வாட்டி யெடுக்கும் குளிர் எனப் பர்கூர் மலை நம்மை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அவற்றை ரசித்தபடியே பர்கூர் மாட்டின கால்நடை ஆராய்ச்சி மையத்துக்குள் அடியெடுத்து வைத்தோம்.

பர்கூர் மாடுகள்
பர்கூர் மாடுகள்
பர்கூர் மலை
பர்கூர் மலை

மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்ற இம்மையத்தின் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர் பி.கணபதி, பர்கூர் மாடு களின் சிறப்புகள் குறித்துப் பேசத் தொடங்கினார். “தென்னிந்திய மாட்டின் இனங்களிலேயே சிவப்பு நிறத்தில் காணப்படும் ஒரே மாட்டினம் பர்கூர் மாடுகள்தான். செந்நிறம் மற்றும் பழுப்பு நிறம்... அதில் உடல் முழுவதும் வெள்ளைத் திட்டுகள், வரிகள் மற்றும் புள்ளிகள் (White Patches) இருக்கும். இதுதான் பர்கூர் மாட்டின் முக்கிய அடையாளம். அதனால் இது ‘செம்மறை மாடு’ என்றும் அழைக்கப் படுகிறது. கால் குளம்புகளும், கொம்புகளும், மூக்கும்கூட செந்நிறத்தில் காணப்படுவது இம்மாடுகளின் கூடுதல் சிறப்பு. செங்குத்து மலையிலும் ஏறி மேயும் திறன், வன விலங்கு களிடமிருந்து தப்பித்து ஓடுவதற்கான திறன் என மான்களை ஒத்த கால்களைக் கொண்டவை.

ஆராய்ச்சி மையத்தில் கணபதி
ஆராய்ச்சி மையத்தில் கணபதி


1935-ல் மெட்ராஸ் மாகாணத்தின் வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் துணை இயக்குநராக இருந்த ‘லிட்டல் வுட்’ என்ற ஆங்கிலேயர் எழுதிய ‘தென்னிந்திய மாட்டினங்கள்’ (Livestock of South India) என்ற நூலில் இந்த மாடுகள் பற்றி முதன்முறையாகப் பதிவு செய்தார். தேசிய கால்நடை மரபணு வள அமைப்பால் (National Bureau of Animal Genetic Resources) அங்கீகரிக்கப்பட்ட நாட்டின மாடுகளில் பர்கூர் மாடும் ஒன்று. பர்கூர் மலை சுமார் 1,000 மீட்டர் உயரமும் 34,000 ஹெக்டேர் பரப்பளவும், 32 கிராமங்களும் கொண்டவை. இங்கு லிங்காயத்துகள் மற்றும் சோளகர் இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மேய்ச்சல் முறையில்தான் இம்மாடுகள் அதிகம் வளர்க்கப்பட்டு வருகின்றன. இம்மாடுகளைத் தொடர்ந்து வளர்த்து வருவதற்கு லிங்காயத்து மக்களிடையே சொல்லப்பட்டு வரும் கதை சுவாராஸ்யமானது.

லிட்டில் வுட்
லிட்டில் வுட்
புத்தகம்
புத்தகம்

ஒரு காலத்தில் மலைகளில் வேட்டையாடுவதை மட்டுமே இப்பகுதி மக்கள் பிரதானமான தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கின்றனர். 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாதேஸ்வரன் என்ற துறவி இப்பகுதி மக்களைச் சந்தித்து ‘காட்டில் விலங்குகளை வேட்டையாடாதீர்கள், கொல்லாதீர்கள்’ என்று போதித்திருக்கிறார். ‘அப்படியென்றால் உணவுக்கு நாங்கள் என்ன செய்வது?’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘இந்த மாடுகளை வளர்த்து உங்கள் தேவைகளைப் போக்கிக் கொள்ளுங்கள்’ என்று பர்கூர் மாடுகளைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அப்போதிருந்து இந்த மாடுகளை வளர்த்து வருவதாகவும், ‘இது கடவுள் கொடுத்த மாடு’ என்றும் சொல் கிறார்கள். லிங்காயத்துகளிலேயே வேட்டை யாடும் சமூகமாக இருந்த ‘பேடகம்பா’ என்ற சமூகத்தினர்தான், இதை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர்.

பட்டியில் பர்கூர் மாடுகள்
பட்டியில் பர்கூர் மாடுகள்

பர்கூர் மலைக்கிராமங்கள், மாதேஸ்வரன் மலை மற்றும் சேலம் மாவட்டம், கொளத்தூரையொட்டிய பகுதிகளில் இந்த மாடுகள் ‘பட்டி’ முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. பொதுவாக, இம்மண்ணின் நாட்டின மாடுகள் அதிக பால் கொடுக்காது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், ஒரு காலத்தில் சீமை மாடுகளுக்கு நிகராக நம்முடைய பாரம்பர்ய மாடுகளும் பால் கொடுத்திருக்கின்றன.

1900-ல் பதிவு செய்யப்பட்ட ஒரு குறிப்பில் ஹெச்.எஃப் மாடு மற்றும் காங்கேயம் மாட்டின் கறவைத்திறன் 600 - 1,000 லிட்டர் (இது 10 மாதங்களுக்கான அளவு) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஹெச்.எஃப் மாட்டின் கறவைத்திறன் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. ஆனால், நம் நாட்டு மாடுகளின் கறவைத்திறன் அதே அளவில்தான் இருந்து வருகின்றன. காரணம், நம்முடைய மாடுகள் நன்றாக உழவு ஓட்டுமா, பாரம் இழுக்குமா, ஜல்லிக்கட்டில் விளையாடுமா எனப் பார்த்துதான் மாடுகளைத் தேர்வு செய்து வந்திருக்கிறோம். ஆனால், நன்றாகப் பால் கொடுக்கும் மாடுகளைத் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிட்டோம்.

ஆராய்ச்சி மையத்தில் பர்கூர் மாடுகள்
ஆராய்ச்சி மையத்தில் பர்கூர் மாடுகள்

மாடுகள் வளர்ப்பு என்றாலே பால் உற்பத்தியை முதன்மை நோக்கமாகப் பார்க்கப்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையில், நன்றாகப் பால் கொடுக்கும் மாடுகளைத் தேர்ந்தெடுத்து வளர்த்து வந்திருந்தால், இன்று நம் நாட்டு மாடுகளும் பால் கறவையில் பெரும் பங்களித்திருக்கும்” என்றவர், இம்மையத்தின் செயல்பாடுகள் பற்றிப் பேசினார்.

“2015-ம் ஆண்டு இந்த ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டது. இங்கு பர்கூர் நாட்டினத் தைச் சேர்ந்த 170 மாடுகள் தற்போது வளர்க்கப் பட்டு வருகின்றன. மொத்தம் 3 இடங்களில் 59 ஏக்கர் பரப்பளவில் பண்ணைகள் அமைந்துள்ளன. பர்கூர் மலையைப் பொறுத்தவரை... சுற்றுலா இடம் என்று எதுவுமில்லை. இந்த மையம்தான் சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு வந்து யார் வேண்டுமென்றாலும் அனுமதி பெற்று பண்ணையைப் பார்வையிடலாம். 2012-ல் மேற்கொண்ட 19-வது கால்நடை கணக்கெடுப் பின்படி இந்த மையம் தொடங்குவதற்கு முன்பு 14,154 பர்கூர் மாடுகள் இருந்தன. 2019-ல் எடுக்கப்பட்ட 20-வது கணக்கெடுப் பின்படி இப்போது 42,300 மாடுகள் என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளன. இருந்தாலும் சமவெளிப் பகுதியை இந்த மாடுகள் சென்று சேரவில்லை.

தீவனத் தயாரிப்பில்
தீவனத் தயாரிப்பில்

150 - 200 கிலோ எடை கொண்ட இந்த மாடுகளுக்குத் தினமும் 15 - 20 கிலோ தீவனம் போதுமானது. ஆனால், அதேசமயம் கலப்பின சீமை மாடு களுக்குக் குறைந்தபட்சம் 25 - 40 கிலோ வரை தீவனம் தேவைப்படும். கலப்பின மாடுகளுக்கு அதிகமாகச் செலவு செய்துவிட்டு குறைந்த லாபம்தான் எடுக்க முடிகிறது. இந்தப் பகுதியில் பால் விற்பனை மூலமும், பாலை விற்பனை செய்ய முடியாதவர்கள் தயிராக்கி கடைந்து நெய்யாகவும், கன்றுக்குட்டிகளின் விற்பனை மூலமும் வருமானம் பார்த்து வருகின்றனர். அதேசமயம் சாம்பிராணி, சாணத்தில் கலைப்பொருள்கள் தயாரித்தும் வருமானம் பார்க்கலாம். அதற்கான பயிற்சியும் கொடுக்கிறோம். எத்தகைய வறட்சியான நிலையிலும் இந்த மாடுகள் தாக்குப்பிடித்து வளரும். அதேபோல எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கும்.

பர்கூர் மாடுகள்
பர்கூர் மாடுகள்

வைகாசி மாசத்தில் பயிர் வைத்ததும் மலையையொட்டிய பகுதியில் உள்ள பட்டி மாடுகளில் கொண்டு சென்று விட்டு விடுவார்கள். தை மாசத்தில் திரும்பவும் ஓட்டி வந்துவிடுவார்கள் அப்போது இங்கு அறுவடையான ராகித் தாள்களும், அவரைப் பொட்டும், வைக்கோலும் பெரும் விருந்தாக அமையும். ஜூன் மாதம் பயிர் வைக்கும்வரை இங்கே சுற்றுப்புறங்களில்தான் மேயும். பயிர் வைக்கப்பட்ட பிறகு, அடர் வனங்களை யொட்டிய கிராமங்களுக்கு மேய்ச்சலுக்குச் சென்றுவிடும். பர்கூரில் நடைபெறும் பொங்கல் விழாவின்போது மாடுகளுக்கு அவரவர் பட்டி மற்றும் வீடுகளில் மாடுகளுக்குப் பூஜை செய்து மந்தையில் விடுவார்கள்” எனத் தெரிவித்தார்.

பர்கூர் மாடுகளுக்குத் தீவனம்
பர்கூர் மாடுகளுக்குத் தீவனம்

அவரிடம் இருந்து விடை பெற்று கிளம்பிய நாம், பர்கூர் இன மாடுகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வரும் வேலாம்பட்டி கிராமத்துக்குச் சென்றோம். பர்கூர் மலையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் பர்கூர் மாடுகளை ‘பட்டி’ முறையில் வளர்த்து வருகின்றனர். இது குறித்து இவர்களிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது தமிழும் கன்னடமும் கலந்து பேசினர்.

பட்டியில் பொம்மன்
பட்டியில் பொம்மன்

இப்பகுதியைச் சேர்ந்த பொம்மன் “எனக்கு 2 ஏக்கர் நிலமிருக்கு. எங்களோட சாப்பாட்டுக்காக, அதுல ஆரியம் (கேழ்வரகு) பயிர் பண்றேன். 50 மாடுகள வளர்த்துக்கிட்டு வர்றேன். இந்த மாடுகள் எங்களோட முக்கிய மான சொத்து. ஒவ்வொரு வருஷமும் ஆடி மாசம்தான் எங்களுக்கு சிறப்பான மாசம். ஏன்னா, அப்பதான் அந்தியூர் திருவிழா சந்தை நடக்கும்.

காளை மாடுகளையும் கன்னுக்குட்டி களையும் விற்பனைக்கு அனுப்புவோம். 10 - 15 மாசங்களான 10-க்கும் மேற்பட்ட கன்னுக்குட்டிகளை விற்பனைக்குக் கொண்டு போவேன். ஒவ்வொரு கன்னுக்குட்டியும் 12,000 - 15,000 ரூபாய்க்கு விலை போகும். 1 லட்சத்துல இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதை வெச்சுதான் அந்த வருஷம் நல்லது, கெட்டதைப் பாத்துக் கிறோம். எங்க சமூகத்துல ஆம்பிளைங்கதான் வரதட்சணை கொடுத்துட்டுப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டு போகணும். அப்படிப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி அனுப்பும்போது பொண்ணு வீட்டு சீருன்னு நாங்க கொடுக்கிறது இந்த நாட்டு மாடுகளைத் தான். அப்பன் வீட்டுல கொடுத்த மாடுன்னு இதை அவ்வளவு சீக்கிரத்துல விக்காம பாத்துப்பாங்க. மாடுகளோட எண்ணிக்கை யையும் பெருக்கிப்பாங்க” என்றார்.

லிங்காயத் மணமக்கள்
லிங்காயத் மணமக்கள்

இதே ஊரைச் சேர்ந்த அழகுமரியிடம் நாம் பேசியபோது, “என்கிட்ட 65 மாடுகள் இருக்கு. சுத்தியிருக்கிற மலைகள்ல 20 கி.மீ போய் மேஞ்சிட்டு வந்திடும். இதை ‘பாங்காடு’ போறதுனு சொல்வோம். மாடுகளுக்குப் பல நேரங்கள் செரிமானப் பிரச்னை வந்திடும். அதுக்கு வேலிபருத்தி ஒரு கைப்புடி, 10 மிளகு, 5 பூண்டு பல்... இந்த மூணையும் நல்லா அரைச்சு வெந்நீர்ல கரைச்சு குடிப்பாட்டி விடுவோம். அரை நாள்ல சரியாயிடும். புலி, சிறுத்தை, நரி மாதிரியான காட்டு விலங்குகள், எங்க மாடுகள அடிக்கடி தாக்கும். அனுபவமுள்ள புலி தாக்குனா மாடு இறந்துடும்.

பட்டியில் அழகுமரி
பட்டியில் அழகுமரி

ஆனா, புதுசா வேட்டைக்குப் பழகுற புலி, சிறுத்தைக தாக்கும்போது குற்றுயிரும் கொலையுயிருமாக மாடுக தப்பிச்சு வந்திடும். அப்ப அங்கங்க காயம் இருக்கும். இதுக்குத் தேங்காய் எண்ணெயை நல்லா கொதிக்க வெச்சு, அதுல காய்ந்த மிளகாய்கள், மஞ்சளைப் போட்டு பொறிக்க விட்டு, அத மருந்தா போடுவோம். எப்படிப் பட்ட ரத்தக் காயமும் சுண்டிப் போயி, ஆறத் தொடங்கிடும். கன்னுகுட்டிகள 3 மாசம் வரைக்கும் மேய்ச்சலுக்கு அனுப்பமாட் டோம். ஆச்சந்தலையைக் கட்டி கொட்டகை யில அடைச்சிடுவோம். சாயந்திரமும் காத்தாலையும் தாய்பசுகிட்ட பால் குடிச்சுக்கும்” எனத் தெரிவித்தார்.

பட்டியில் சின்னப்பே தம்மிடி
பட்டியில் சின்னப்பே தம்மிடி

இதே ஊரைச் சேர்ந்த இன்னொரு பட்டிக்காரரான சின்னப்பே தம்மிடியிடம் நாம் பேசியபோது, ‘‘எம்பட்டியில 70 மாடுகள் இருக்கு. இதுல 10 மாடுகள்தான் என்னோடது. மத்த மாடுகளைக் கூலிக்கு மேய்ச்சுக்கிட்டு இருக்கேன். ஒரு மாட்டுக்கு, வருஷத்துக்கு 1,000 ரூபாய் கொடுத்திடுவாங்க. அந்த வகையில எனக்கு 60,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். என்னோட சொந்த மாடுகள் மூலம் கிடைக்குற கன்னுக்குடிகளை விக்கிறது மூலமா 50,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைச்சிடும். வருஷத்துக்கு மொத்தம் 1 லட்சத்துக்கு மேல வருமானம் கிடைக்குது. மாடுகளுக்கு எந்த நோய் வந்தாலும் மலை மாதேஸ்வரனுக்கு வேண்டிக்கிறது வழக்கம். அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இன்றைக்கும் எங்களுக்கு உண்டு. மாடுகள கோயிலுக்கு நேந்து விடுறதும் உண்டு” என்றார்.

பட்டியில் சிவசங்கர்
பட்டியில் சிவசங்கர்

இந்த ஊரிலிருந்து நாட்டு மாட்டு எருவை மைசூரு, கொள்ளேகால் பகுதி விவசாயிகள் வாங்கிச் செல்கிறார்கள். அதுகுறித்துப் பேசிய சிவசங்கர், “எங்க நிலத் தேவைக்குப் போக மீதியுள்ள எருவை ஒரு டிராக்டர் 2,000, ஒரு டாரஸ் லாரி 15,000 ரூபாய்னு விக்கிறோம். இது எங்களுக்குக் கூடுதல் வருமானமா இருக்கு. இந்த எரு போட்டா யூரியா, காம்ப்ளக்ஸ் எதுவும் தேவைப்படாது. அந்த அளவுக்கு சத்துள்ள உரம். பயிர்கள் கருகருன்னு நல்லா விளையும். எங்க விஷேசங் கள்ல மாடுகள் முக்கிய அங்கம் வகிக்கிது. எல்லோரும் புதுவீடு நுழையும்போது மாட்டைக் கொண்டு வந்து வீட்டுக்குள் நுழைப்பாங்க. எங்க சமூகத்துல கல்யாணம் ஆகும்போது மாட்டைக் கொண்டு வந்து நிறுத்தி வணங்கிட்டுதான் மணமகன் தாலியைக் கட்டுவாரு” எனத் தெரிவித்தார்.

புதுவீடு நுழையும் மாடு
புதுவீடு நுழையும் மாடு
நந்தி சிலை
நந்தி சிலை
வீரபத்ரன்
வீரபத்ரன்

அடுத்ததாக, பொங்கல் பண்டிகை குறித்து நம்மிடம் பேசிய வீரபத்திரன் தம்மிடி, “நாங்க வளர்த்துக்கிட்டு இருக்குறது பட்டிமாடுங்கறதால காலையிலேயே பொங்கல் வெச்சு, 10 மணிக்கெல்லாம் மாடுகள் பாங்காடு போயிடும். மஞ்சள் பூசணி, கரும்பு, வாழைப்பழம், வெல்லத் தோசை, நெய், தயிர் கொண்டு பட்டியிலேயே தளிகை போடுவோம். அப்புறம், அதை மாடுகளுக்குச் சாப்பிடக் கொடுப்போம். மாதேஸ்வரன் மலை கோயில்ல இருந்து திருநீறு, மூலிகை கலந்த தீர்த்தம் வரும். அந்தத் தீர்த்தத்தை மாடுகள் மேல தெளிச்சுவிட்டு, காடுகளுக்கு ஓட்டிடுவோம். எங்களோட எல்லா விசேஷசத்திலேயேயும் மாடுகள் இருக்கும். புது வீடு கட்டி நுழையுறதுக்கு முன்னாடி மாட்டைத்தான் முதல்ல நுழைய விடுவோம். மாடுகள் இல்லாம நாங்க எந்த விசேஷத்தையும் நடத்துறதில்ல. நாங்க மாடு களைத்தான் சாமியா (நந்தி) கும்பிடுறோம்” என்றவர் ஊருக்கு பொதுவான கோயிலை திறந்து காட்டினார். அதில் நந்தி சிலை கருவறையில் வைக்கப்பட்டிருந்தது.

நந்திக்குக் கோயில்
நந்திக்குக் கோயில்
சதிஷ்
சதிஷ்

இப்பகுதியைச் சேர்ந்த சதிஷ் என்ற இளைஞர், “இங்கவுள்ள மக்கள் பாலை விக்க மாட்டாங்க, பசுமாடுகளையும் விக்க மாட்டாங்க, காளைகளையும் காளை கன்னுக்குட்டிகளையும்தான் விப்பாங்க. வெளியிலிருந்து மாடுகள வாங்க மாட்டாங்க. கன்றுக்குட்டிகள் குடிச்சது போக மிச்ச மிருக்கும் பாலை தயிராக்கி அதுல இருந்து நெய் மட்டும்தான் தயாரிக்கிறாங்க. அதுல வீட்டுக்குப் போக மீதியை விப்பாங்க. கன்னுக்குட்டி, நெய், எரு விற்பனை மூலமா கிடைக்குற வருமானம்தான் இவங்களோட ஜீவாதாரத்துல பெரும்பங்கு வகிக்குது.

உழவு ஓட்டும் பர்கூர் மாடுகள்
உழவு ஓட்டும் பர்கூர் மாடுகள்

இப்ப எங்க தலைமுறையினர் படிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதனால, வயசான ஆட்கள் மட்டுமே இந்தப் பட்டி மாடுகள் முறையில மாட்டை வளர்த்துக்கிட்டு வர்றாங்க. அதனால, இந்தப் பட்டி மாட்டு முறை குறையுறதுக்குள்ள சமவெளிகள்லயும் இந்த மாடுகள் பரவலாகணும். அதேசமயம் இங்கவுள்ள காடுகள்ல மாடுகள மேய்க் கிறதுக்கு முழு உரிமையையும் வனத்துறை கொடுக்கணும். இப்ப பலரும் பேசுற தற்சார்பு வாழ்க்கை முறையைப் பல நூற்றாண்டுகளா எங்க மக்கள் வாழ்ந்துகிட்டு வர்றாங்க. அதுக்கு இந்த நாட்டு மாடுகள்தான் காரணமா இருந்துகிட்டு இருக்கு” என்றவரிடம், பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு விடைபெற்றோம்.



தொடர்புக்கு,

முனைவர் கணபதி,
தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர்,
பர்கூர் மாட்டின கால்நடை ஆராய்ச்சி மையம், பர்கூர், அந்தியூர் வட்டம், ஈரோடு மாவட்டம்.
செல்போன்: 90420 58592

சுபாஷ், செல்போன்: 94427 94107

சதிஷ், செல்போன்: 94880 09994

வண்டியோட்டும் பர்கூர் மாடுகள்
வண்டியோட்டும் பர்கூர் மாடுகள்

மாட்டை அடையாளம் காண்பது எப்படி?

“பிற நாட்டு மாடுகள் போலவே பர்கூர் மாடுகளையும் உழவு, பாரம் இழுத்தல், ஜல்லிக்கட்டு, பால் உற்பத்தி என எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், நன்கு வளர்ந்த பெரிய மாடுகளாக வாங்கிச் சென்றால், பழக்குவது சிரமம். அதனால் கன்றுக்குட்டியாக வாங்கிச் சென்று வளர்த்தால் எளிதாகப் பழகிவிடும். தேவையான விவசாயிகளுக்கு முன்பதிவு அடிப்படையில் இம்மையத்தில் மாடுகளை விற்போம். இதைத் தவிர, ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அந்தியூர் குருநாதர் சுவாமி திருவிழா சந்தையில் வாங்கலாம். வாரம் ஒருமுறை சனிக்கிழமை நடைபெறும் அந்தியூர் சந்தையிலும் வாங்கலாம். பர்கூரைத் தவிர பிற மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், பர்கூர் இன மாட்டின் உறைவிந்து குச்சிகளை எங்க ஆராய்ச்சி மையத்திலும், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையிலும் பெற்றுத் தங்கள் மாடுகளுக்குச் செயற்கை கருவூட்டல் செய்யலாம்.

பர்கூர் மாடுகள்
பர்கூர் மாடுகள்

சந்தையில் வாங்கும்போது தோல் பளபளப்பாகவும், கண்கள் நல்ல சுறுசுறுப்பாகவும் இருக்கும் மாடுகளைப் பார்த்து வாங்க வேண்டும். சிறு குச்சியால் மாட்டின் பின்புறத்தில் குத்தினால் அது துள்ளி எழ வேண்டும். அப்படி இருந்தால் அது சுறுசுறுப்பான மாடு, நோயில்லாத மாடு என்பதைப் புரிந்துகொள்ளலாம். மெதுவாக எழுந்தாலோ, எழாமல் இருந்தாலோ அது சாந்தமான மாடாகவும் இருக்கலாம். இல்லை நோய்வாய்ப்பட்ட மாடாகவும் இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்” என்கிறார் முனைவர் கணபதி.

சுபாஷ்
சுபாஷ்

எவ்வளவு பால் கிடைக்கும்

பால் உற்பத்தி குறித்துப் பேசிய பர்கூர் மாட்டின கால்நடை ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியர் சுபாஷ், “பர்கூர் மாடுகளின் இனப்பெருக்கத்துக்காகவும், அதைப் பரவலாக்கவும் பண்ணையில் கன்றுகள் தனியாகவும், மாடுகள் தனியாகவும் பராமரித்து வருகிறோம். அந்த வகையில் பாலுக்கெனவே தனியாகப் பராமரித்து வருகிறோம்.

ஆராய்ச்சி மையத்தில் மாடுகள் பராமரிப்பில் பெண்கள்
ஆராய்ச்சி மையத்தில் மாடுகள் பராமரிப்பில் பெண்கள்

பர்கூர் கறவை மாட்டுக்கு... கோ.4 பசுந்தீவனப்புல், மக்காச்சோளத் தட்டு சுமார் 15 கிலோ... இவற்றோடு ஒரு கிலோ அடர்தீவனம் தினமும் கொடுத்தால் ஒரு நாளைக்கு 5 - 6 லிட்டர் கறப்பதை உறுதி செய்திருக்கிறோம். விவசாயிகளிடமும் இதை வலியுறுத்தி வருகிறோம். அவர்களில ஒருசிலர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர். எங்கள் ஆய்வில் பெரிய அளவில் இந்த மாடுகளில் நோய்த்தாக்கம் ஏற்பட்டதில்லை. தடுப்பூசிகள் மட்டும் முறையாகப் போட்டு வந்தால் மாடுகளை நோய்களிலிருந்து காப்பாற்றலாம். பாலில் நெய், பால் கோவா, பனீர் உற்பத்தி செய்து விற்பனையும் செய்கிறோம். நாட்டு மாட்டுப்பாலில் மதிப்புக்கூட்ட அனுபவமுள்ள விவசாயிகளுக்குப் பயிற்சியும் அளிக்கிறோம்” என்றார்.

குமார்
குமார்

48,000 ரூபாய் வருமானம்!

பர்கூர் மலையில் உள்ள ஈரெட்டியைச் சேர்ந்த குமார், பால் உற்பத்திக்காகவே பர்கூர் மாடு வளர்த்து வருகிறார். ‘‘ஒரே ஒரு பசு மாடுதான் வெச்சுருக்கேன். காலையில 2.5 - 3 லிட்டர் பால் கறக்கும். சாயந்தரம் நேரத்துல 1.5 - 2.5 லிட்டர் பால் கறக்குது. எப்படியும் ஒரு நாளைக்கு 5 லிட்டர் பால் கிடைக்குது. மேய்ச்சல்ல மட்டுமே இருந்தா இந்த அளவுக்கு பால் கிடைக்காது. இதுக்கு முறையா தீவனம் கொடுத்து வளர்த்து வர்றதுனாலதான் இது சாத்தியமாகி இருக்கு. ஒரு வருஷத்துக்கு ஒரு மாடு மூலமா பால் மூலம் 48,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுவே 5 மாடுகள் இருந்தா ஒரு குடும்பத்துக்கான வருமானம் எளிதா கிடைச்சுடும்’’ எனத் தெரிவித்தார்.

பர்கூர் மாட்டுக் கன்றுகள்
பர்கூர் மாட்டுக் கன்றுகள்

மேய்ச்சலுக்கு அனுமதி தர வேண்டும்!

பர்கூர் மாட்டினத்துக்காகக் குரல் கொடுத்து வரும் அந்தியூரைச் சேர்ந்த சிவசேனாபதி நடராஜனிடம் பேசியபோது, “இந்த மாடுகள் சுறுசுறுப்பானவை. தம்மம்பட்டி, ராசிபுரம், ஆத்தூர் பகுதிகளில் கரும்பு வயல்களிலிருந்து கரும்பு சுமைகளை மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்ல இந்த மாடுகளைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் அந்தியூர் சந்தையில் வந்து இந்த மாடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

ஆராய்ச்சி மையத்தில் மாடுகள் பராமரிப்பில் பெண்கள்
ஆராய்ச்சி மையத்தில் மாடுகள் பராமரிப்பில் பெண்கள்
சிவசேனாபதி நடராஜன்
சிவசேனாபதி நடராஜன்

அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் இருக்கும் ‘மறை மாடு’ என்பது இந்த பர்கூர் மாடுகளின் வழித்தோன்றல்கள்தான். பன்னெடுங்காலத்துக்கு முன்பு அந்தியூர் சந்தையிலிருந்து வாங்கிட்டுபோய்தான் கன்னியாகுமரியில் பரவலாக்கம் செய்யப்பட்டது. மேய்ச்சலுக்கு விட்டால் புதர்கள், காடுகளில் நுழைந்து நன்றாக மேயும். நீர்நிலைகளில் வாலை தூக்கிக்கொண்டு திரியும். டெல்டா போன்ற மாவட்டங்களில் சேடை உழவுக்கு நன்றாகப் பயன்படுத்தலாம். கிடைப்பதை சாப்பிட்டு வேலை செய்யும் திறன் கொண்டவை. இதன் அவசியத்தை உணர்ந்து 10 ஆண்டுகளுக்கு முன்பே பர்கூர் மாடுகளின் கண்காட்சியை நடத்தி, பர்கூர் மாடுகளுக்கென ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன்படி தமிழக அரசும் ஆராய்சி மையம் அமைத்தது. தமிழக வனங்களில் பர்கூர் மாடுகளின் மேய்ச்சலுக்கு அனுமதி தர வேண்டும். அப்படிக் கொடுத்தால் மட்டுமே இந்த மாடுகளின் எண்ணிக்கையும் பெருகும். இதை சார்ந்தோரின் வாழ்வாதாரமும் பெருகும்” என்றார்.