நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

மாண்புமிகு விவசாயிகள் : லண்ட்பெர்க் பண்ணை அமெரிக்காவின் இயற்கை நெற்களஞ்சியம்!

லண்ட்பெர்க் குடும்பத்தினர்
பிரீமியம் ஸ்டோரி
News
லண்ட்பெர்க் குடும்பத்தினர்

ஜெர்மன் விஞ்ஞானியான பேரன் லீபெக். 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தப் பிரகஸ்பதிதான் இயற்கை விவசாயத்தின் முதல் வில்லன்.

யற்கை விவசாயம் என்பது ரசாயன உரம், வேதியியல் பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் இருப்பது மட்டுமல்ல; இயற்கையின் மொழியைப் புரிந்து அதன் தன்மைக்கேற்ப விவசாயம் செய்வதும்தான்!

முதல் உலகப்போருக்கும், இரண்டாம் உலகப்போருக்கும் இடையே உலகம், ஒரு பொருளாதார பெருமந்தத்தைச் சந்தித்தது. 1929-ம் ஆண்டில் அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவில் ஆரம்பித்த இந்தப் பொருளாதாரப் பேரிடர், அடுத்த பத்தாண்டுகளுக்கு நீடித்தது. ஐக்கிய அமெரிக்காவில் தொடங்கி ஐரோப்பியக் கண்டம் முழுவதுமே இந்தப் பொருளாதார முடக்கம் பாதித்தது. அனைத்துத் துறைகளுமே வீழ்ச்சியைச் சந்தித்தன. எங்கும் பசியும் வேலையின்மையும் சூழ்ந்திருந்தன. ஒருபக்கம் உணவு உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட, இன்னொருபுறம் வேளாண் விளைபொருள்களுக்கான விலை சுமார் 60% சதவிகிதம் வரை சரிந்துபோனது.

மாண்புமிகு விவசாயிகள் : லண்ட்பெர்க் பண்ணை அமெரிக்காவின் இயற்கை நெற்களஞ்சியம்!

அந்தக் கொடுந்துயர் காலகட்டத்தில்தான், அல்பர்ட் லண்ட்பெர்க்கும் அவரின் மனைவி பிரான்ஸிஸும் பிழைப்பதற்கு வழியின்றி சொந்த ஊரிலிருந்து கிளம்ப முடிவெடுத்தனர். அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அங்கே சோளம், கோதுமை பயிரிட்டுக் கொண்டு அமைதியாக வாழ்ந்தார்கள். இந்நிலையில், பொருளாதாரப் பெருமந்தம் மற்றும் தொடர்ந்து அங்கு வீசிய புழுதிப்புயல் மற்றொரு காரணம். இனி நெப்ராஸ்காவில் விவசாயம் செய்யவே முடியாது என்ற அவல நிலை உருவானது. 1937-ம் ஆண்டில் ஒரு டிராக்டர், ஒரு டிரக், மனைவி பிரான்ஸிஸ் மற்றும் நான்கு மகன்களுடன் கலிஃபோர்னியாவை நோக்கிக் கிளம்பினார் அல்பர்ட். அங்கே ரிச்வாலே என்ற ஊரில் குடியேறினார்கள்.

வளம் மட்டும் போதாது... திறமையும் வேண்டும்

‘நல்ல வளமான நிலம். பழ மரங்கள், பயறு வகைகள், தானியங்கள் எல்லாம் செழிப்பாக விளையும்’ என்று விற்பனையாளர்கள் ஓர் இடத்தைக் காட்டினார்கள். அதை நம்பி அங்கே 40 ஏக்கர் நிலம் வாங்கினார். ஊர்க்காரர்கள் எல்லாம் ‘இந்த நிலத்தையா வாங்கினீர்கள்? ஏமாந்துவிட்டீர்கள். இது எதற்கும் உதவாது’ என்று அழுத்தமாகச் சொன்னார்கள். அல்பர்ட் பதறவில்லை. தன் மகன்களை அழைத்துக்கொண்டு நிலத்துக்குச் சென்றார். மண்ணை அள்ளி அனைவரது கைகளிலும் கொடுத்தார். ‘இங்கே முளைத்திருக்கும் இந்தக் களைச் செடிகளைப் பாருங்கள். இவை வளமான நிலத்தில் மட்டுமே முளைக்கும். ஒரு நிலம் வளமாக இருந்தால் மட்டும் போதாது. விவசாயியும் திறமையானவனாக இருக்க வேண்டும். அப்போதுதான் விவசாயம் செழிக்கும்!’ என்றார்.

மாண்புமிகு விவசாயிகள் : லண்ட்பெர்க் பண்ணை அமெரிக்காவின் இயற்கை நெற்களஞ்சியம்!

தந்தையின் அந்த உபதேசம் மகன்களின் மனதில் ஆழமாகப் பதிந்தது. ‘எல்லாமே ரசாயனம்’ என்று அக்கம் பக்கத்திலுள்ள விவசாயிகள் பாதை மாறியிருந்த சூழலில், ‘இயற்கையே சரணம்’ என்று அல்பர்ட் லண்ட்பெர்க் தனது வேளாண் பணிகளைத் தொடங் கினார். அந்தக் காலத்திலேயே அல்பர்ட், ஆர்கானிக் விவசாயத்தில் ஏன் உறுதியாக இருந்தார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, வரலாற்றுப் பின்னணி இங்கே தேவைப்படுகிறது.

மண்ணுக்கு இயற்கை உரங்களே தேவையில்லை. அதற்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டா சியம், கால்சியம் போன்றவற்றைச் சில வேதி உப்புகளுடன் சிறிது ஜிப்சம் (சுண்ணாம்பு) கலந்து வயல்களில் பயிர்களுக்குத் தூவினால் போதும். நல்ல விளைச்சல் கிட்டும் என்று நிரூபித்தார் ஜெர்மன் விஞ்ஞானியான பேரன் லீபெக். 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த பிரகஸ்பதிதான் இயற்கை விவசாயத்தின் முதல் வில்லன். அந்த வேதி உப்புகளெல்லாம் வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டவை. அவையே வயல்களுக்கும் போதும் என்றார் பேரன். ஆகவே, அன்னாரை வெடிமருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டவராகக் கொண்டாடின.

மண்ணை மலடாக்கிய வெடி உப்புகள்

முதல் உலகப்போர் காலகட்டத்தில் விளைச்சல் அதிகமாகவே இருந்தது. அதனால் பூச்சிகளின் தாக்குதல்களும் அதிகமாகின. பயிர்களில் உயிர்க்கொல்லி மருந்துகளைத் தெளித்தார்கள். அவை பூச்சிக்கொல்லிகளாக வயல்களுக்குள் நுழைய ஆரம்பித்தன. இயற்கை விவசாயம் சீரழிந்து போனது. முதல் உலகப் போர்க் காலத்திலேயே உலகமெங்கும் மண் மலடாகும் சூழல் உருவாகிவிட்டது.

மாண்புமிகு விவசாயிகள் : லண்ட்பெர்க் பண்ணை அமெரிக்காவின் இயற்கை நெற்களஞ்சியம்!

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜெர்மனியின் ரசாயன விஞ்ஞான நுட்பங்களை எல்லாம் கபளீகரம் செய்திருந்த அமெரிக்க வேதியியல் நிறுவனங்கள் போருக்கான வெடிகுண்டுகள் தயாரித்து விற்பனை செய்ததில் லாபத்தில் கொழித்தன. போரில் ஜெர்மனியைச் சீர்குலைத்த பிறகும், அந்த நிறுவனங்களிடம் டன் டன்னாக வெடி உப்புகள் கிடந்தன. அவற்றையெல்லாம் ரசாயன உரங்களாக மாற்றினார்கள். ‘இவை உரமல்ல, பசுமையின் வரம்’ என்று பொய் சொல்லி விளைநிலங்களில் கொட்டினார்கள். அமெரிக்க மண் அசுத்தமானது.

கலிஃபோர்னியாவின் முதல் ‘ஆர்கானிக் அரிசி’

விளைநிலங்களெங்கும் வேதியியல் சாத்தான்கள் படையெடுத்துக் கொண்டிருந்த அந்தச் சூழலில்தான் இயற்கை நெல் சாகுபடியைக் கையில் எடுத்திருந்தார் அல்பர்ட் லண்ட்பெர்க். அவரது நிலத்தைச் சுற்றியிருந்தவர்கள் அறுவடைக்குப் பிறகு, தாவரக் கழிவுகளை எரித்துக்கொண்டிருந்தார்கள். அல்பர்ட் அதைக்கூடச் செய்யவில்லை. ‘அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு’ என்ற முன்னோர்களின் பாரம்பர்ய வழியை மட்டுமே பின்பற்றி வந்தார். நெல்லை அறுவடை செய்து, நாற்றைக் கால்நடைகளுக் கான உணவாக அளித்துவிட்டு, அடிப் பகுதியைப் பிடுங்கி நிலத்திலேயே போட்டு மக்கச் செய்தார். அவை மண்ணுக்குத் தேவையான நைட்ரஜன் மற்றும் தாதுசத்து களைத் தந்தன.

விளைவித்த நெல்லைப் பாதுகாப்பாக வைக்கக் கிட்டங்கி தேவை அல்லவா? அதைக் கட்டத் தேவையான இரும்போ, பிற உலோகங்களோ எதுவுமே அல்பர்டுக்குக் கிடைக்கவில்லை. உலகப்போர் சமயம் என்பதால் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு. கையில் கிடைத்த துண்டு தகரத்தைக்கூடச் சேகரித்தார். கழிவுப் பொருள்களைக் கொண்டே உயரமான கிட்டங்கி ஒன்றை அமைத்தார். நெல் மூட்டைகளைப் பாது காத்தார். இருந்ததைக் கொண்டு தனக்குத் தேவையான விவசாயக் கருவிகளைத் தானே உருவாக்கிக்கொண்டார்.

நெல் அரிசியாக்கப்பட்டது. கலிஃபோர்னி யாவின் முதல் ‘ஆர்கானிக் அரிசி’ என்ற பெருமையுடன் லிண்ட்பெர்க் குடும்பத்தினர் விளைவித்தவை சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

லண்ட்பெர்க் குடும்பத்தினர்
லண்ட்பெர்க் குடும்பத்தினர்

அல்பர்ட் தன் நான்கு மகன்களையும் (வெண்டெல், எல்டென், ஹார்லன், ஹோமர்) நன்றாகப் படிக்க வைத்தார். ஹார்லனும் ஹோமரும் விவசாயக் கல்வி பயின்றார்கள். எல்டென் சிவில் இன்ஜினீயர் ஆனார். வெண்டெல் தொழிற்கல்வி படித்தார். அல்பர்ட் நால்வருக்குமே சிறிதளவு நிலத்தைப் பிரித்துக் கொடுத்தார். அவரவர் நிலங்களில் இயற்கை முறையில் நெல், ஓட்ஸ், மூலிகை, பீன்ஸ் என ஏதோ ஒன்றைச் சுழற்சி முறையில் விளைவித்து அனுபவங்களைச் சேகரித்துக் கொண்டனர்.

1969-ம் ஆண்டில் Chico-San என்ற நிறுவனத்தினர், லிண்ட்பெர்க் பண்ணையில் இயற்கை முறையில் அரிசி விளைவிக்கப் படுவதை அறிந்து அவர்களைத் தேடி வந்தனர். ‘எங்களுக்கு ஆர்கானிக் ப்ரௌன் ரைஸ் விளைவித்துத் தர முடியுமா?’ என்று கேட்டனர். அதற்கு முன்பும் அவர்கள் ஏராளமான விவசாயிகளிடம் கேட்டிருந்தனர். யாரும் சரிவரவில்லை. ‘ஏதாவது, ஒரு வேதி உரத்தை உபயோகித்தே தீருவோம்’ என்று அடம்பிடித்தார்கள். ஆனால், லண்ட்பெர்க் சகோதரர்கள், 100% இயற்கை வழியில் நெல்லை விளைவித்துத் தருகிறோம் என்று சந்தோஷமாக ஒப்புக்கொண்டனர். 76 ஏக்கர் பரப்பளவில் முற்றிலும் இயற்கை முறையில் ‘பழுப்பு அரிசி’ நெல்லைச் சோதனை முறையில் வெற்றிகரமாகப் பயிரிட்டார்கள். அந்த நெல்லை அரிசியாக்கச் சொந்தமாக ஆலை ஒன்றையும் கட்டிக்கொண்டார்கள். Chico-San நிறுவனத்தினருக்கு லண்ட்பெர்க் பண்ணையில் விளைந்த இயற்கைப் பழுப்பு அரிசியில் பரிபூரண திருப்தி. அந்த நிறுவனத்தினர் அதில் Rice Cake தயாரித்து சந்தைக்குக் கொண்டு வந்தனர். அமெரிக்கா வின் முதல் Organic Brown Rice Cake அதுவே.

மூலைமுடுக்கெல்லாம் பரப்பிய ஹிப்பிகள்

1970-களில் லண்ட்பெர்க் சகோதரர்கள் பழைய வேன் ஒன்றை வாங்கினார்கள். அதில் நிறைய ஆர்கானிக் அரிசி மூட்டைகளை நிரப்பினார்கள். Lundberg Rice - California என்று வேனில் எழுதிக்கொண்டு கிளம்பினார்கள். கலிஃபோர்னியா தொடங்கி வாஷிங்டன் வரை பயணம் செய்தார்கள். அப்போது அமெரிக்கா வெங்கும் ஹிப்பி கலாசாரம் உச்சத்திலிருந்தது. இலக்கற்றுத் திரிந்த ஹிப்பிகள், இயற்கை அரிசியை விரும்பி வாங்கினர். அவர்கள் மூலமாக அமெரிக்காவின் பல பகுதிகளில் லண்ட்பெர்க் அரிசியின் புகழ் பரவியது.

அதே சமயத்தில் லண்ட்பெர்க் சகோதரர்கள், இயற்கை நெல் சாகுபடிக்கு மாற விரும்பும் கலிஃபோர்னிய விவசாயிகளுக்கு உதவினர். அவர்களை ஊக்குவித்து, பயிற்சிகள் கொடுத்தனர். அவர்கள் விளைவித்தவற்றை வாங்கவும் செய்தனர். 1973-ம் ஆண்டில் ‘California Certified Organic Farmers’ என்ற அமைப்பு உருவானது. அவர்கள் விளைவித்த அரிசியெல்லாம் லண்ட்பெர்க் பிராண்டின் கீழ் சந்தையை வந்தடைந்தன.

1980-களில் லண்ட்பெர்க் சகோதரர்கள் இயற்கை முறையில் விளைவித்த அரிசி, காட்டு அரிசி, அர்போரியோ ரக அரிசி, பாசுமதி அரிசி, ஜாஸ்மின் அரிசி, சிவப்பு அரிசி போன்றவற்றைச் சந்தைக்குக் கொண்டு வந்தனர். தவிர, அரிசி கொண்டு தயாரிக்கப்படும் மாவு, பொரி, கேக் போன்ற பல்வேறு பொருள்களையும் ‘Lundberg Family Farms’ என்ற பிராண்டின் கீழ் சந்தைக்குக் கொண்டு வந்தனர். அவை அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் விரும்பி வாங்கும் பொருள்களாக மாறின.

அன்று 40 ஏக்கர்... இன்று 14,000 ஏக்கர்

1990-களில் லண்ட்பெர்க் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையினர் தங்கள் பாரம்பர்யப் பெருமை உணர்ந்து விவசாயத்தில் அடியெடுத்து வைத்தனர். எல்டென்கின் மகனான கிராண்ட் லண்ட்பெர்க் முழுநேர விவசாயியாகப் பண்ணையில் உழைக்கத் தொடங்கினார். அவரே லண்ட்பெர்க் பண்ணையின் தற்போதைய நிர்வாக இயக்குநர். லண்ட்பெர்க் பரம்பரையின் நான்காவது தலைமுறையினரும் இப்போது வந்துவிட்டனர். அல்பர்ட் லண்ட்பெர்க் வெறும் 40 ஏக்கரில் ஆரம்பித்த இயற்கை விவசாயம், இப்போது 14,000 ஏக்கர் சாம்ராஜ்ஜியமாக அமெரிக்காவை ஆண்டுகொண்டிருக்கிறது. அதில் 5,000 ஏக்கர் லண்ட்பெர்க் குடும்பத்தினருக்குச் சொந்த மானது. 9,000 ஏக்கரில் ஒப்பந்த அடிப்படையில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். இன்றைக்கும் அமெரிக்காவின் நம்பர் 1 ஆர்கானிக் அரிசி லண்ட்பெர்க் பண்ணையில் விளைவதே. அவர்களது பிற ஆர்கானிக் தயாரிப்புகளும் சந்தையில் முன்னணியில் இருக்கின்றன.

மாண்புமிகு விவசாயிகள் : லண்ட்பெர்க் பண்ணை அமெரிக்காவின் இயற்கை நெற்களஞ்சியம்!

லண்ட்பெர்க் பண்ணையின் தேவைக்கான மின்சாரம் முழுவதும் அங்கே அமைக்கப் பட்டுள்ள காற்றாலைகளிலிருந்தே பெறப்படுகின்றன. பண்ணையின் கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் நுட்பத்தில் 99.7 சதவிகித வெற்றியை 2008-ம் ஆண்டிலேயே லண்ட்பெர்க் பண்ணை பெற்றது. அடுத்ததாகப் பண்ணையில் பல இடங்களில் சூரிய ஒளி மூலம் ஆற்றலைச் சேமித்து, அவர்களது நெல் ஆலையை இயக்கும் நோக்கத்துடன் பணி செய்துகொண்டிருக் கின்றனர்.

பசுமைப் புரட்சியின் சுழலில் சிக்கி, மனம் வெதும்பி, திருந்தி இயற்கைப் பாதைக்குத் திரும்பிய பலர் உண்டு. ஆனால், ஒருபோதும் ரசாயன சாத்தான்களின் பிடியில் சிக்காமல், இயற்கை விவசாயத்தை மட்டுமே நம்பி ஆர்கானிக் அரிசி ராஜ்ஜியத்தை உருவாக்கிய அல்பர்ட் லிண்ட்பெர்கும் அவரின் வாரிசுகளும் அமெரிக்காவின் இயற்கை விவசாய முன்னோடிகள்!

சரித்திரம் தொடரும்

வாத்து முட்டைத் திருவிழா!

மாண்புமிகு விவசாயிகள் : லண்ட்பெர்க் பண்ணை அமெரிக்காவின் இயற்கை நெற்களஞ்சியம்!
மாண்புமிகு விவசாயிகள் : லண்ட்பெர்க் பண்ணை அமெரிக்காவின் இயற்கை நெற்களஞ்சியம்!

வ்வோர் அறுவடைக்கு முன்பும், லண்ட்பெர்க் பண்ணையில் சூழலியல் ஆய்வாளர்கள், பறவை நேசர்கள் எல்லாம் ஒன்று கூடுகிறார்கள். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் எங்கெங்கே வாத்துகள் மற்றும் பறவைகள் முட்டையிட்டிருக்கின்றன என்று தேடித் திரிகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான முட்டைகளைப் பத்திரமாகச் சேகரித்துப் பாதுகாக்கிறார்கள். அவை நல்ல முறையில் குஞ்சு பொரிக்க வைக்கப்படுகின்றன. இந்த முட்டை சேகரிப்பு நிகழ்வு என்பது லண்ட்பெர்க் பண்ணையில் ஒரு திருவிழா போலவே கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு முட்டையும் கவனமாகச் சேகரிக்கப்பட்ட பிறகே, கதிர் அறுக்கும் எந்திரங்கள் களத்தில் இறக்கப்படுகின்றன.