நாட்டு நடப்பு
Published:Updated:

ஜாவா அரிசியை விரட்டிய சேலம் அரிசி! - இது மரவள்ளிக் கிழங்கின் கதை!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

வ்வோர் ஆண்டும் பிப்ரவரி 6-ம் தேதி ‘மரவள்ளி தினம்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி ஆராய்ச்சி நிலையத்தில் இந்த விழா நடந்துள்ளது. சேலம் மாவட்டத்துக்கும் மரவள்ளிக் கிழங்குக்கும் (Tapioca Cassava) நிறைய தொடர்பு உண்டு. தமிழ்நாட்டில் முதன்முதலாகச் சேலம் பகுதியில்தான் மரவள்ளிக் கிழங்குச் சாகுபடி செய்யப்பட்டது. இங்கு மரவள்ளிக் கிழங்கு வந்து சேர்ந்ததுக்குப் பின்னால், சுவையான சம்பவம் உள்ளது.

மரவள்ளிக் கிழங்கு மாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் குருணை வடிவ பொருளை ‘ஜவ்வரிசி’ என்று அழைக்கிறோம். ஆனால், இதற்கும், இந்தப் பெயருக்கும் சம்பந்தமே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இது போலியான பெயர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (M.I.D.S) முன்னாள் இயக்குநர் எஸ்.நீலகண்டன் மற்றும் ஆய்வு மாணவர்கள் இணைந்து தமிழ்நாட்டுக்கு மரவள்ளிக் கிழங்கு வந்த வரலாற்றை ஆய்வறிக்கையாகப் பதிவு செய்துள்ளார்கள். இது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலகத்தில் உள்ளது. இனி, மரவள்ளிக் கிழங்கு கதைக்குள் செல்வோம்.

ஜவ்வரிசிக்கு சேகோ (Sago) என்பதுதான் உண்மையான பெயர். இந்தோனேசியா நாட்டில் உள்ள மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) என்ற ஒருவகைப் பனை மரத்தின் பதநீரைக் காய்ச்சும்போது மாவு போன்ற ஒரு பொருள் கிடைக்கிறது. இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக்கி சேகோ தயாரிக்கப்படுகிறது. இது ஜாவா தீவிலிருந்து இறக்கப்பட்டதால் அது ‘ஜாவா அரிசி’ என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் ‘ஜவ்வரிசி’ என ஆகிவிட்டது.

நாம் பாயசத்தில் பயன்படுத்தும் ஜவ்வரிசி 1940-ம் ஆண்டு வரை ஜாவா தீவிலிருந்து இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் தீவிரம் அடைந்த நேரத்தில், ஜவ்வரிசி வரத்து நின்று போனது. இதுமட்டுமல்ல, மைதா மாவும் அமெரிக்காவிலிருந்து வருவது நின்று போனது. ஆனால், சந்தையில் மைதா மாவுக்குத் தேவை அதிகம் இருந்தது. இதைக் கவனித்த சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார், கேரளாவுக்குச் சென்று மரவள்ளிக் கிழங்கு மாவை வாங்கி வந்து, நன்றாகச் சலித்து அதை மைதா மாவு என்ற பெயரில் விற்பனை செய்தார். மைதா மாவைக் காட்டிலும் மரவள்ளிக் கிழங்கு மாவு விற்பனை பன்மடங்கு பெருகியது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசியர்கள் மூலம் கேரளாவுக்கு மரவள்ளிக் கிழங்கு அறிமுகமாகியிருந்தது. அங்கு பயிரிடும் விவசாயிகள் சிலரையும் மரவள்ளிக் கிழங்கு குச்சியையும் சேலம் பகுதிக்கு வரவழைத்து, மரவள்ளிச் சாகுபடியைத் தொடங்கி வைத்தார், மாணிக்கம் செட்டியார். என்னதான், ரகசியம் காத்தாலும் ஒரு கட்டத்தில், மரவள்ளி மாவைத்தான், மைதா மாவு என்று விற்பனை செய்யப் படுகிறது என்ற உண்மை வெளியில் தெரிய தொடங்கியது.

மரவள்ளிக் கிழங்கு
மரவள்ளிக் கிழங்கு

ஆனாலும், மரவள்ளிக் கிழங்கு மாவுக்கான மவுசு குறையவில்லை. இந்தச் செய்தி மலேசியா வரை சென்று சேர்ந்தது. மலேசியாவுக்கும் இந்தோனேஷியா நாட்டின் ஜாவா தீவிலிருந்து ஜவ்வரிசி வருவது நின்று போயிருந்தது. மைதா மாவுக்கு மாற்று கண்டுபிடித்த மாணிக்கம் செட்டியாரை அணுகினால், ஜவ்வரிசிக்கும் மாற்று பொருள் கண்டுபிடிக்கலாம் போப்பட்லால் ஷா என்ற தொழிலதிபர் நினைத்தார். உடனே, சேலம் புறப்பட்டு வந்து மணிக்கம் செட்டியாரைச் சந்தித்து, தனது கோரிக்கையை வைத்தார். என்ன ஆச்சர்யம், ஜாவா தீவிலிருந்து வந்த ஜவ்வரிசி யைக் காட்டிலும் மரவள்ளிக் கிழங்கு மாவு ஜவ்வரிசி பளீர் வெண்மை நிறத்தில் இருந்தது. உடனடியாக, நாடு முழுவதும் மரவள்ளிக் கிழங்கு ஜவ்வரிசி விற்பனைக்குச் சென்றது. உண்மையான ஜவ்வரிசையைக் காட்டிலும் மரவள்ளி ஜவ்வரிசிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் இரண்டாம் உலகப்போர் முடிந்து ஜாவா தீவிலிருந்து ஜவ்வரிசி இந்தியாவுக்கு இறக்குமதியானது. ஆனால், நம் மக்கள் அதை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. விலை மட்டும் கூடுதல் இல்லை. நிறமும் கொஞ்சம் மங்கலாக இருந்தது. மரவள்ளி ஜவ்வரிசி வெண்மை நிறத்தில் கண்ணைப் பறித்தது. இதனால், ஜாவா ஜவ்வரிசிக்கு வரவேற்பு குறைந்துபோனது. மீண்டும் எப்படியாவது, இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று ஜாவா வியாபாரிகள் திட்டம் போட்டார்கள்.

ஆனால், சேலம் வியாபாரிகள் விழித்துக்கொண்டார்கள். சேலம் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு தொழில் வளர ராஜதந்திரமான வேலைகளில் இறங்கினார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஜாவா அரிசி, இந்தியா பக்கம் எட்டிப்பார்க்க கூடாது என்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு உதவி செய்தது வேறு யாருமல்ல; இடைக்கால அரசில் மத்திய அமைச்சராக இருந்தவரும், அப்போதைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான ராஜாஜிதான்.

அப்போது மரள்ளிக்கிழங்கு ஜவ்வரிசிக்கும் சேகோ (Sago) என்றுதான் பெயரிட்டு விற்பனை செய்து வந்தார். தமிழ்நாட்டைக் காட்டிலும் மேற்கு வங்க மாநில மக்கள்தான் ஜவ்வரிசியை அதிகம் விரும்பி உண்கிறார்கள். இங்குதான், ஜாவா தீவு வியாரிபாரிகளும் அலுவலகம் அமைத்து ஜவ்வரிசியை விற்பனை செய்து வந்தார்கள். ‘ஜாவா தீவிலிருந்து வருவதுதான், உண்மையான சேகோ (Sago). எனவே, மரவள்ளிக் கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்படும் பொருளை சேகோ (Sago) என்று சொல்லக் கூடாது’ என நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால், வெற்றி சேலம் மாணிக்க செட்டியாருக்குத்தான் கிடைத்தது. சத்துகள் மற்றும் பயன்பாடுகள் அளவில் ஒப்பிட்டால், ஜாவா அரிசியை விட மரவள்ளிக் கிழங்கு மாவில் நிறைய சத்துகள் உள்ளன. ஆகையால் மரவள்ளிக் கிழங்கு மாவையும் சேகோ (Sago) என்று நீதிமன்றம் தீர்ப்பு சொன்னவுடன், ஜாவா வியாபாரிகள் ஊருக்குப் புறப்பட்டுவிட்டார்கள்.

ராஜாஜி
ராஜாஜி

இன்றளவும் மரவள்ளிக் கிழங்கு மாவு சேகோ என்ற பெயரில்தான் அழைக்கப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கை அரைக்கும் ஆலைக்கு சேகோ பேக்டரி என்றுதான் பெயர். மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் ஆலைகளை ஊக்கப்படுத்தவும், அரசு சார்பில் சேலத்தில் ஒரு நிறுவனம் இயங்குகிறது. இதற்கும் ‘சேகோ சர்வ்’ என்றுதான் பெயர்.

இன்றும் சேலம் பகுதியில் மைதா மாவு பாதி, மரவள்ளி மாவு பாதிக் கலந்து விற்பனை செய்வதும் நடக்கிறது. ‘‘அந்த ஹோட்டல்காரன் கிழங்கு மாவு கலந்து பரோட்டா செய்கிறான், போண்டா போடுகிறான்’’ என்று போட்டி ஹோட்டல்காரர்கள் புகார் சொல்லும் அளவுக்கு மரவள்ளிக் கிழங்கு மாவு சர்ச்சை இன்னும் சேலத்தில் இருந்தபடி தான் உள்ளது.

‘‘மரவள்ளிக் கிழங்கை அரைக்கும்போது கிடைக்கும் கழிவு பொருளான திப்பி அற்புதமான கால்நடை தீவனம். இந்தத் திப்பியை மாடுகளுக்குக் கொடுத்து வந்தால் பால் உற்பத்தி கூடும்.’’

சேலம்-சென்னை செல்லும் சாலையில் ஆத்தூர் பகுதியில்தான் பெரும்பாலன சேகோ பேக்டரிகள் உள்ளன. இந்த ஆலைகளிலிருந்து கிளம்பும் வாடை, நீங்கள் தூங்கிக்கொண்டு பயணம் செய்தாலும் ஆத்தூர் வந்து சேர்ந்து விட்டீர்கள் என்பதை நினைவூட்டும்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

மரவள்ளி மாவிலிருந்து ஜவ்வரிசி மட்டு மல்ல, சலவை மற்றும் நூல் நூற்க தேவைப்படும் ஸ்டார்ச், குளுக்கோஸ்... போன்றவை தயாரிக்கப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கை அரைக்கும்போது கிடைக்கும் கழிவு பொருளான திப்பி அற்புதமான கால்நடை தீவனம். இந்தத் திப்பியை மாடுகளுக்குக் கொடுத்து வந்தால் பால் உற்பத்தி கூடும். மாடுகளும் ஆரோக்கியமாக இருக்கும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து புதிய மரவள்ளிக் கிழங்கு ரகங்களை அறிமுகப் படுத்தியிருந்தாலும், ‘முள்ளு வாடி(ஆத்தூர்), கேரளா ரகங்களைத்தான் விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு குவிண்டால் 6,000 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது என்ற இனிப்பான செய்தியும் இந்த நேரத்தில் வந்துள்ளது.

ஜவ்வரிசி
ஜவ்வரிசி

மரவள்ளியைப் பயன்படுத்தி இன்னும் பல வகையான உணவுப்பொருள்களைத் தயாரிக்க முடியும். தாய்லாந்து நாட்டுக்கு இயற்கை விவசாயம் சம்பந்தமான பயிற்சிக்குச் சென்றிருந்தபோது, தினமும் சுவையான புட்டிங் உணவில் இடம்பெற்றிருக்கும். இது எதிலிருந்து செய்கிறார்கள் என்று அறிந்துகொள்ள ஒருநாள் சமையல் செய்பவர்களிடம் கேட்டபோது, ‘‘மரவள்ளிக் கிழங்கு ஜவ்வரிசியும் இளநீரும் கலந்து செய்கிறோம்’’ என்று சொன்னார்கள். என்னது மரவள்ளிக்கிழங்கு தாய்லாந்திலும் உள்ளதா? என்று தாய்லாந்து நண்பர்களிடம் கேட்டபோது, இன்னொரு தகவலையும் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்கள்.

‘‘உலக அளவில் அதிக பரப்பளவில் நைஜீரியாதான் சாகுபடி செய்கிறது. இதில் எங்களுக்கு இரண்டாம் இடம் என்றாலும், உலக அளவில் மரவள்ளிக் கிழங்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் உள்ளது தாய்லாந்து தான். டென்மார்க், இஸ்ரேல் போன்ற பால் வளத்தில் கொழிப்பதற்குத் தாய்லாந்து நாட்டிலிருந்து செல்லும் மரவள்ளிக் கிழங்கு தீவனமும் முக்கியக் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது’’ என்று சொல்லி வியக்க வைத்தார்கள்.