மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

ஒரு ஏக்கர்... ரூ.51,000 ஆத்தூர் கிச்சலிச் சம்பாவில் அசத்தலான லாபம்!

புண்ணியமூர்த்தி.
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணியமூர்த்தி.

மகசூல்

‘‘நவீன நெல் ரகங்களை ஒப்பிடும்போது, பாரம்பர்ய நெல் ரகங்கள்ல மகசூல் குறைவா தான் கிடைக்கும்னு ஒரு கருத்து இருக்கு. பாரம்பர்ய நெல் ரகங்கள்ல அதிக சத்து இருக்கு. அதனால அதைச் சாகுபடி செய்ய லாம்னு நினைக்குறவங்ககூட, மகசூல் காரணமா தயக்கம் காட்டுறாங்க. அப்படி நினைக்கிறவங்க தயக்கத்தைப் போக்கி, நல்ல மகசூல் கொடுக்குது ஆத்தூர் கிச்சலிச் சம்பா. இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கு’’ என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார், தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி புண்ணியமூர்த்தி.

ஒரு ஏக்கரில் ஆத்தூர் கிச்சலிச் சம்பா சாகுபடி செய்து 30 மூட்டை (60 கிலோ) மகசூல் எடுத்துள்ளார். இயற்கை விவசாயத்தில் இறங்கிய முதல் வருடத்திலேயே இந்த மகசூல் கிடைத்திருக்கிறது.

ஒரு பகல்பொழுதில் அவரைச் சந்திக்கச் சென்றோம். விற்பனை செய்வதற்காக, ஆத்தூர் கிச்சலிச் சம்பா அரிசியை அளந்து மூட்டைக் கட்டிக்கொண்டிருந்த புண்ணிய மூர்த்தி, மகிழ்ச்சியோடு வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

வயலில் புண்ணியமூர்த்தி.
வயலில் புண்ணியமூர்த்தி.



‘‘நான் ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டேன். ஆனா, குடும்பச் சூழ்நிலை காரணமா, முழுநேர விவசாயியா மாற வேண்டிய தாயிடுச்சு. காலப்போக்குல எனக்கு இதுல ஈடுபாடு அதிகமாயிடுச்சு. எங்களுக்கு மொத்தம் நாலரை ஏக்கர் நிலம் இருக்கு. ரெண்டரை ஏக்கர் நஞ்சை, ரெண்டு ஏக்கர் புஞ்சை. நெல் சாகுபடியை பொறுத்த வரைக்கும் போன வருஷம் வரையிலும், முழுமையா ரெண்டரை ஏக்கர்லயுமே ரசாயன முறையில நவீன நெல் ரகங்களைத் தான் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தேன். அதிக அளவு ரசாயன உரங்கள் பயன் படுத்தினதோடு மட்டுமல்லாம, வெள்ளைப் பூச்சி, இலைசுருட்டுப்புழு, கதிர்நாவாய் பூச்சித் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த மூணு தடவை பூச்சிகொல்லி அடிப்பேன்.

இந்த நிலையிலதான், எங்க ஊர்ல இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்குற, என்னோட உறவினர் அன்புசெல்வன், பூச்சிக்கொல்லி தெளிக்கிறதால வர்ற கெடுதல்களைப் பத்தி சொன்னதோடு, ஆத்தூர் கிச்சலி சம்பா அரிசியைக் கொடுத்து, சாப்பிட்டுப் பார்க்கச் சொன்னார். சாப்பாட்டுக்கு ரொம்பவே சுவையா இருந்துச்சு. சன்னரகமாகவும் இருந்ததுனால ரொம்பவே புடிச்சுப் போயிடுச்சு. அதுவும் பழைய சோறுக்கு ரொம்ப அருமையா இருந்துச்சு.

நெல்லுடன்
நெல்லுடன்

‘‘வழக்கமா சம்பா பட்டத்துல ஆடுதுறை-42, கோ-43 மாதிரியான நவீன ரகங்களைச் சாகுபடி செய்வேன். ஏக்கருக்கு 30 மூட்டை மகசூல் கிடைக்கும். பாரம்பர்ய நெல் ரகங் களைச் சாகுபடி செஞ்சா இந்தளவுக்கு மகசூல் கிடைக்குமானு சந்தேகம் இருந்துச்சு. ஆனா, ஆத்தூர் கிச்சலிச் சம்பாவுல நான் எதிர்பார்த்த நிறைவான மகசூல் கிடைச் சிருக்கு. இது சன்ன ரகமாக இருக்குறதுனாலயும், சாப்பிடுறதுக்குச் சுவையா இருக்குறதாலயும், ரொம்ப எளிதா விற்பனை செய்ய முடியுது. மக்கள் விரும்பி வாங்குறாங்க’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

ஆத்தூர் கிச்சலிச் சம்பா அரிசி
ஆத்தூர் கிச்சலிச் சம்பா அரிசி



மூணு வருஷமா எங்க வீட்ல ஆத்தூர் கிச்சலிச் சம்பா அரிசிதான் பயன்படுத்திக் கிட்டு இருக்கோம். இதை நானும் சாகுபடி செய்யணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, இது லாபகரமான விளைச்சல் கொடுக்கமானு ஒரு சந்தேகம் இருந்துச்சு. ஆனாலும், ஒரு தீர்க்க மான முடிவுக்கு வந்தேன். சோதனை முயற்சியா ஒரு ஏக்கர்ல மட்டும் ஆத்தூர் கிச்சலிச் சம்பா சாகுபடி செய்வோம்... ஒருவேளை, விளைச்சல் குறைஞ்சாலுமே கூட, இடுபொருளுக்கு அதிகமா செலவு செய்யப் போறதில்ல. அதுவும் இல்லாம, பாரம்பர்ய அரிசிக்கு அதிகமான விலை கிடைக்குறதுனால, நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லைனு நினைச்சேன்’’ என்றவர், இயற்கை விவசாய அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினார்.

‘‘பல வருஷம் ரசாயன உரங்கள் பயன் படுத்தின நிலத்தை, உடனடியா இயற்கை முறையில வளப்படுத்தணும்னா, பசுந்தாள் உரம் விதைப்பு செய்யுங்கனு, இயற்கை விவசாயிகள் ஆலோசனை சொன்னாங்க.

ஒரு ஏக்கருக்கு 10 கிலோ சணப்பு விதைகள தெளிச்சேன். 10 நாளைக்கு ஒரு தடவை தண்ணி பாய்ச்சினேன். நல்லா தளதளனு செழிப்பா வளர்ந்து, 45 நாள்கள்ல என் இடுப்பளவுக்கு வளர்ந்திருந்துச்சு. அது விரியும் நேரத்துல தண்ணீர் கட்டி, சேத்துழவு செஞ்சு மடக்கி உழுதோம். அடுத்த 10 நாள்கள்ல மண்ணு நல்லா புளிச்சு, கமகமனு சேறு வாசனை. மறுபடியும் உழவு ஓட்டி மண்ணைச் சமப்படுத்தி, நேரடி விதைப்பா, 20 கிலோ ஆத்தூர் கிச்சலிச் சம்பா விதைநெல்லை நிலம் முழுக்கப் பரவலா தெளிச்சோம்.

களைகளே இல்லை

பொதுவா, நேரடி நெல் விதைப்பு செஞ்சா, அதிகமா களை மண்டும். ஆனா, நான் பசுந்தாள் விதைப்பு செஞ்சு, 45 நாள்கள்ல மடக்கி உழுததால, களைகளே இல்ல. களையெடுக்குற செலவு மிச்ச மாயிடுச்சு.

நடவு செலவு மிச்சம்

நேரடி நெல் விதைப்பு செஞ்சதுனால, நாற்றங்கால் பராமரிப்பு, நாற்றுப் பறிப்பு, நாற்று நடவு செலவு உட்பட 7,000 ரூபாய் மிச்சமாயிருக்கு.

இடுபொருள்

மேலுரமா, ஊட்டமேற்றிய தொழுவுரத்துல மீன் அமிலம் கலந்து தெளிச்சோம். இதைத் தவிர பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி கொடுத்தோம். அவ்வளவுதான் வேற எதுவும் கொடுக்கல. பசுந்தாள் விதைப்பு செஞ்சு, மண் நல்லா வளமாகி இருந்ததுனால, பயிர் நல்லா செழிப்பா வளர்ந்து அதிக எண்ணிக் கையில தூர் வெடிச்சிருந்துச்சு. ஓர் அடி நீளத்துக்கு நல்லா வாளிப்பான கதிர்கள் வந்துச்சு. நல்லா நெருக்கமா, திரட்சியான நெல்மணிகள் உருவாகியிருந்துச்சு. அறுவடை சமயத்துல பயிர், நல்லா கிடுகிடுனு வளர்ந்து நாலடி உயரம் இருந்துச்சு. 140-ம் நாள்கள்ல அறுவடைக்கு வந்துச்சு. 30 மூட்டை மகசூல் கிடைச்சது’’ என்றவர் வருமானம் பற்றிப் பேசினார்.

செல- வரவு பட்டியல்
செல- வரவு பட்டியல்

ஒரு ஏக்கர்... 81,440 ரூபாய்

“30 மூட்டை மகசூல் கிடைச்சதுல, 3 மூட்டை நெல்லை, விதைக்காக வச்சிக் கிட்டேன். அதோட விலை மதிப்பு கிலோவுக்கு 60 ரூபாய் வீதம் 10,800 ரூபாய். 27 மூட்டை நெல்லை, அரிசியா மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சிகிட்டு இருக்கேன். 1,620 கிலோ நெல்லை அரிசியா அரைச்சதுல, 972 கிலோ அரிசி கிடைச்சது. ஒரு கிலோ 60 ரூபாய் வீதம் 58,320 ரூபாய் வருமானம் கிடைக்கும். குருணையோட மதிப்பு 1,620 ரூபாய். தவிடு மதிப்பு 2,700 ரூபாய். வைக்கோல் மதிப்பு 8,000 ரூபாய். ஆக மொத்தம் ஒரு ஏக்கர்ல ஆத்தூர் கிச்சலிச் சம்பா சாகுபடி செஞ்சது மூலம் 81,440 ரூபாய் வருமானம். சாகுபடி செலவு, அரவைக் கூலி உட்பட எல்லா செலவும் சேர்த்து 30,000 ரூபாய் போக, மீதி 51,440 ரூபாய் நிகர லாபமா கையில மிஞ்சும்’’ என்றவர் நிறைவாக,

‘‘ஒரு ஏக்கர்ல இந்தளவுக்கு லாபம் கிடைக்குதுனா மிகப்பெரிய விஷயம். வழக்கமா கோடை பட்டத்துல நெல் வயல்ல பருத்திச் சாகுபடி செய்வேன். ஆனா, இந்த வருஷம் ரெண்டரை ஏக்கர்லயும் பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சிருக்கேன். சித்த சன்னாவும், குள்ளக்காரும் பயிர் பண்ணியிருக்கேன்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு, புண்ணியமூர்த்தி,
செல்போன்: 99657 50296

அதிக வைக்கோல்

‘‘நவீன நெல் ரகங்கள், அறுவடை சமயத்துல அதிகபட்சம் ரெண்டே முக்கால் அடி உயரம்தான் இருக்கும். அதனால் குறைவான வைக்கோலே கிடைக்கும். ஏக்கருக்கு அதிகபட்சம் 50 கட்டுகள்தான் வைக்கோல் கிடைக்கும். ஆத்தூர் கிச்சலிச் சம்பாவுல 76 கட்டுகள் வைக்கோல் கிடைச்சிருக்கு. எங்க பகுதியில கடந்த சில வருஷமா, வைக்கோல் ஒரு கட்டு 100-120 ரூபாய் வரைக்கும் விலைபோகுது. இப்ப நான் உற்பத்தி செஞ்சிருக்குற ஆத்தூர் கிச்சலிச் சம்பா வைக்கோல், ரசாயன நச்சுத்தன்மை இல்லாத, சத்தான வைக்கோல். இதோட விலைமதிப்பு ஒரு கட்டு 150 ரூபாய். இந்த வைக்கோலை என்னோட மாடுகளுக்காக வச்சிக்கிட்டேன். வழக்கமான வைக்கோலைவிட, இது சுவையா இருக்குறதுனால மாடுகள் இதை விரும்பிச் சாப்பிடுது. ஒரு ஏக்கர்ல ஆத்தூர் கிச்சலிச் சம்பா சாகுபடி செஞ்சது மூலமா 11,400 ரூபாய் விலை மதிப்புள்ள வைக்கோல் கிடைச்சிருக்கு. கட்டுக்கூலி செலவு போக, 8,000 ரூபாய் லாபம்’’ என்கிறார் புண்ணியமூர்த்தி.

கால்நடைகளுடன்
கால்நடைகளுடன்

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கரில் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா சாகுபடி செய்ய புண்ணியமூர்த்தி சொன்ன தொழில்நுட்பம்...

20 லிட்டர் தண்ணீரில் 400 கிராம் சூடோமோனஸைக் கலந்து, அதில் 20 கிலோ ஆத்தூர் கிச்சலிச் சம்பா விதைநெல்லை கொட்டி 24 மணிநேரம் ஊறை வைக்க வேண்டும். அதன் பிறகு 6 மணிநேரம் சணல் சாக்கில் கட்டி வைத்து, சிறிது நேரம் நிழலில் உலர்த்தி, சாகுபடி நிலத்தில் விதைப்புச் செய்ய வேண்டும்.

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் ஏக்கருக்கு 10 கிலோ சணப்பு தெளித்து, 45-ம் நாள் தண்ணீர் கட்டி, சேத்துழவு செய்து, மடக்கி உழுது, மீண்டும் தண்ணீர் கட்ட வேண்டும். அடுத்த 10 நாள்களில் சணப்பு நன்கு மட்கிவிடும். மீண்டும் உழவு செய்து மண்ணை நன்கு சமப்படுத்தி, விதைநெல்லை நிலம் முழுக்கப் பரவலாகத் தெளிக்க வேண்டும். 20-ம் நாள் 20 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரத்துடன் 10 லிட்டர் மீன் அமிலம் கலந்து வயல் முழுவதும் பரவலாகத் தூவ வேண்டும். 25 மற்றும் 45-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும். 90-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3 மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்க வேண்டும். 140-ம் நாள் அறுவடைக்கு வந்துவிடும்.