
மகசூல்
சந்தையில் அதிக தேவையும், நல்ல விலையும் கிடைக்கும் விளைபொருள் எது என அலசி ஆராய்ந்து, அதற்கான பயிரைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் அபரிமிதமான லாபம் பார்க்கிறார்கள். இந்த வகையில்தான் தூத்துக்குடி மாவட்டம், கோடாங்கிப்பட்டியில் அத்திச் சாகுபடி செய்து வரும் விவசாயி ராஜ்குமார் நம் கவனத்தை ஈர்க்கிறார்.
தூத்துக்குடி அருகே வெம்பூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கோடாங்கிபட்டியில் அமைந்துள்ளது, ராஜ்குமாரின் ‘சிவம் இயற்கை விவசாயப் பண்ணை’. அத்தித் தோட்டத்தில் களை எடுப்புப் பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த ராஜ்குமாரை ஒரு காலை வேளையில் சந்தித்தோம்.
உற்சாகமாகப் பேசத் தொடங்கிய ராஜ்குமார் ‘‘விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டைதான் என்னோட சொந்த ஊரு. அடிப்படையில நாங்க விவசாயக் குடும்பம். எங்க அப்பா மானாவாரியா மிளகாய், பருத்தி, கம்பு, சோளம், மக்காச்சோளம் பயிர் செய்றது வழக்கம். நான் டிப்ளோமா ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடிச்சுட்டு, மதுரையில ஒரு பெரிய ஹோட்டல்ல மூணு வருஷம் வேலை பார்த்தேன்.

அதுக்குப் பிறகு, மலேசியா, சிங்கப்பூர்ல 10 வருஷம் வேலை பார்த்தேன். வெளிநாட்டுல இருந்தப்பவே இந்த 4 ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டிருந்தேன். கொரோனா பரவலுக்கு முன்னால சொந்த ஊருக்கு வந்தேன். கொரோனா அதிகமானதுனால என்னால திரும்பவும் வெளிநாட்டுக்குப் போக முடியல. அதே நேரத்துல இன்னும் எத்தனை நாளுதான் பொழப்புக்காக வெளிநாடுகளுக்கு ஓடிக்கிட்டே இருக்குறது? சொந்த ஊர்லயே இருந்துடுவோம்னு தோணுச்சு. ஏற்கெனவே நான் வாங்கிப் போட்டிருந்த நிலத்துல ஹோட்டல் கட்டலாம்னு ஆசைப்பட்டு, எங்கப்பாகிட்ட விஷயத்தைச் சொன்னேன். `ஊரு முழுக்க ஹோட்டல்கள் இருக்கு. ஆனா, விவசாயம் செய்யதான் ஆளுங்க ரொம்ப குறைவு. அதை செய்ப்பா’ன்னு அப்பா சொன்னார்.
எனக்கும் அதுதான் சரின்னு பட்டுச்சு. என்ன பயிர் சாகுபடி செய்யலாம்னு நண்பர்கள்கிட்ட ஆலோசிச்சேன். எல்லாரும் செய்யுறது மாதிரி இல்லாம, வித்தியாசமா அதே சமயத்துல சந்தையில அதிக தேவை இருக்கக்கூடிய பயிரை சாகுபடி செஞ்சா சிறப்பா இருக்கும்னு சொன்னாங்க. சில தோட்டங்களுக்குப் போனேன். அப்பதான் ஒரு விவசாயி பசுமை விகடனை எனக்கு அறிமுகப்படுத்தி, பழைய இதழ்களை கையில கொடுத்தார். அதை வாசிச்சப்போ இயற்கை விவசாயத்தைப் பத்தியும், கோவில்பட்டி பக்கத்துல படர்ந்தபுளி கிராமத்துல ராஜ்மோகன்ங்கிறவர், அத்திச் சாகுபடி செஞ்சுட்டு இருக்குறதையும் தெரிஞ்சு கிட்டேன். உடனே ஆர்வமாகி அவர்கிட்ட போன்ல பேசிட்டு, அவரோட தோட்டத் துக்கும் போனேன்.

அத்திச் சாகுபடியைப் பத்தி விரிவா சொன்னார். இந்த நிலத்தை சமப்படுத்தி, பல தானிய விதைப்பு விதை மூலமா மண்ணை வளப்படுத்திட்டு, இயற்கை முறையில ஒரு ஏக்கர்ல அத்திச் சாகுபடியைத் தொடங் கினேன். மூணு வருஷமா இதைத் தொடர்ந்து செஞ்சுகிட்டு வர்றேன். நான் சாகுபடி செஞ்சு கிட்டு இருக்குறது, ‘டர்க்கி பிரவுன்’ ரக அத்தி. இது தவிர, ஒரு ஏக்கர்ல கொய்யா, இன்னொரு ஏக்கர்ல எலுமிச்சை சாகுபடி செஞ்சிருக்கேன். மீதி ஒரு ஏக்கர் நிலத்துல மேய்ச்சல் முறையில 80 சிறுவிடை நாட்டுக் கோழிகள் வளர்க்குறேன்’’ என்று சொன்னவர், அத்திச் சாகுபடி அனுபவங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
‘‘ஆரம்பத்துல அறுவடை செஞ்ச பழங்களை அருப்புக் கோட்டையில உள்ள ரெண்டு பழக்கடைகள்லதான் விற்பனை செஞ்சுகிட்டு இருந்தேன். அத்தி ரகங்கள்லயே இந்த ‘டர்க்கி பிரவுன்’தான் அதிக தேவையுள்ள பழம். ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் எனக்கு விலை கிடைச்சது. ஆனா, பழக்கடைக்காரங்க ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் வரைக்கும் விலை சொல்லி என் கண்ணு முன்னாலயே வித்தாங்க. எண்ணிக்கை அடிப்படையில ஒரு பழம் 10 ரூபாய்னு விற்பனை செஞ்சாங்க. அதை பார்த்ததும்தான், நாமளே விற்பனையில இறங்குனா என்னன்னு தோணுச்சு. தோட்டத்துக்கு முன்னால ‘இயற்கை முறையில் விளைவிக்கப்பபட்ட அத்திப் பழம் கிடைக்கும்’னு ஒரு போர்டு வச்சேன்.
தூத்துக்குடி - மதுரை மெயின் ரோட்டுலயே என் தோட்டம் இருக்குறதுனால ரொம்ப எளிதா மக்கள் கவனத்தை ஈர்த்துச்சு. பைக்ல, கார்ல போறவங்க என் தோட்டத்துக்கு நேரடியா வந்து, ‘அத்திப் பழம் இருக்கா’னு ரொம்ப ஆர்வமா கேட்டு வாங்க ஆரம்பிச்சாங்க. இதே மாதிரி அருப்புக்கோட்டையில இருக்குற என்னோட வீட்டு முன்னாலயும் ஒரு போர்டு வச்சேன். அங்கேயும் உள்ளூர்க்காரங்க மத்தியில நல்ல வரவேற்பு. முன்கூட்டியே சொல்லி வச்சு பழம் வாங்குற வங்க அளவுக்கு இதுக்கு தேவை இருக்கு.

ஒரு கிலோ 200 ரூபாய்னு விற்பனை செய்றேன். வருஷத்துக்கு 8 மாசம் வரை பழம் பறிக்கலாம். ஒரு ஏக்கர்ல நடவு செஞ்ச 600 கன்னுகள்ல 450 கன்றுகள் நல்லா தரமா தேறி வந்திருக்கு. போன வருஷம் இந்த ஒரு ஏக்கர்ல உள்ள 450 அத்தி மரங்கள்ல இருந்து 1,350 கிலோ பழம் கிடைச்சது. அதை கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்தது மூலமா 2,70,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. இதுல இடு பொருள்கள், களையெடுப்பு, பழம் பறிப்புக் கூலி உட்பட மொத்தம் 65,000 ரூபாய் செலவை கழிச்சோம்னா, 2,05,000 ரூபாய் லாபமாக் கிடைச்சது. அடுத்தடுத்த வருஷங்கள்ல மகசூல் இன்னும் அதிகரிக்கும். அத்திச் சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் பல வகைகள்லயும் எனக்கு மனசுக்கு நிறைவா இருக்கு. இதுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்குறதோடு மட்டுமல்லாம, இதைச் சாகுபடி செய்றதும் எளிதா இருக்கு. பெருசா சொல்லிக்குற அளவு பூச்சி, நோய் தொந்தரவுகள் இல்லை’’ என மகிழ்ச்சியோடு பேசி முடித்தார்.
தொடர்புக்கு, ராஜ்குமார்,
செல்போன்: 97889 66786
இப்படித்தான் சாகுபடி!
ஒரு ஏக்கரில் ‘டர்க்கி பிரவுன்’ ரக அத்திச் சாகுபடி செய்ய ராஜ்குமார் சொல்லும் செயல்முறை இங்கு பாடமாக...
வடிகால் வசதி உள்ள மண்ணில் அத்திச் சாகுபடி செய்யலாம். மழைக்காலத்துக்கு முன்பாக நடவு செய்வது நல்லது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் 10 நாள்கள் இடைவெளியில் 2 முறை உழவு செய்ய வேண்டும். 10 அடி இடைவெளியில் 2 அடி உயரம், 2 அடி அகலத்தில் மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும் அதைத் தொடர்ந்து, சொட்டுநீர்ப் பாசன அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

மேட்டுப்பாத்தியின் நடுவில் தலா 7 அடி இடைவெளியில், 1 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 500 கிராம் எருவுடன், 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு கலந்து அடியுரமாக இட வேண்டும். 45 முதல் 50 நாள்கள் வயதுடைய கன்றுகள், நடவுக்கு ஏற்றவை. கன்று நடவு செய்த 40-ம் நாளில் இருந்து, 20 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து சொட்டுநீர்ப் பாசனம் மூலம் கொடுக்க வேண்டும்.
வாரம் ஒருமுறை 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் வேஸ்ட் டி கம்போஸர் கரைசல் கலந்து விட வேண்டும். மாதம் ஒரு முறை 200 லிட்டர் தண்ணீரில் 4 லிட்டர் சூடோமோனஸ் திரவம் கலந்து விட வேண்டும். குளிர்காலத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் ஏற்படும். அந்த நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலைக் கலந்து வாரம் ஒரு முறை சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
இலைத்துரு நோய் கண்காணிப்பு
இலைத்துரு நோய் தென்பட்டால் இலைகளை உதிர்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால், கிளைகள் முழுவதும் பரவி, மழைக்காலத்தில் காய்களிலும் படர்ந்து, புள்ளிகளை ஏற்படுத்தும். இதனால் பழங்கள் விலை போகாது. துருநோயை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். தேவைக்கேற்ப களை எடுக்க வேண்டும். 6 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு கன்றின் தூரிலும் 3 கிலோ எருவுடன் 50 கிராம் பாஸ்போபாக்டீரியா, 150 கிராம் மண்புழுவுரம், 25 கிராம் வேப்பம்பிண்ணாக்கு கலந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை இட்டு வர வேண்டும்.
கன்று நட்ட 4-ம் மாதத்திலிருந்து பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். அந்த பிஞ்சுகளை உதிர்த்து விட வேண்டும். 8-ம் மாதத்தில் இருந்து பிஞ்சுகளை காய்க்கவிடலாம். 10-ம் மாதத்தில் இருந்து காய்ப்பு படிப்படியாக அதிகரிக்கும். ஆண்டுக்கு ஒருமுறை மழைக்கு முன்பாகக் கவாத்து செய்ய வேண்டும். கவாத்து செய்தால்தான் மரம் அதிக உயரம் வளராமல் இருக்கும். அதிக கிளைகள் உருவாகி மகசூல் அதிகரிக்கும். இரண்டாம் ஆண்டு முதல் ஒவ்வொரு பறிப்பிலும் 20 முதல் 25 கிலோ வரை பழம் பறிக்கலாம். முறையாகக் கவாத்து செய்து பராமரித்து வந்தால் 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து மகசூல் எடுக்கலாம்.
ஆரம்பகட்ட செலவுகள்
‘‘உழவு, எரு, சொட்டுநீர்ப் பாசனம், கன்றுகள், நடவு... இது எல்லாத்துக்கும் சேர்த்து, ஆரம்பகட்டத்துல ஒரு ஏக்கருக்கு 1,05,400 ரூபாய் வரைக்கும் செலவாச்சு. ஒரு தடவை மட்டும் இந்தச் செலவுகளை செஞ்சு, அத்திச் சாகுபடி செஞ்சிட்டா, பல வருஷத்துக்கு பலன் அடையலாம்’’ என்கிறார் ராஜ்குமார்.
அதிகரிக்கும் அத்திச் சாகுபடி!
தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (பொறுப்பு) சுந்தர ராஜனிடம் பேசினோம், “மரத்துக்கும் பெரிய புதர்ச்செடிக்கும் இடைப்பட்ட வகையைச் சேர்ந்தது, அத்தி. நாட்டு அத்தி, டிம்லா அத்தி, ஆப்கான் அத்தி, இஸ்ரேல் அத்தி, பூனா அத்தி, டர்க்கி பிரவுன் என பல ரகங்கள் உள்ளன. இதில், சில ரக பழங்களைப் பறித்து அப்படியே விற்பனை செய்யலாம். சில ரக பழங்களை, உலர் பழங்களாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம். ‘டயனா’ என்ற ரக அத்தியின் தோல் மெல்லியதாக இருப்பதால் உலர் பழமாக மதிப்புக்கூட்டிட ஏற்றதாக உள்ளது. அத்தி, எல்லா வகை மண்ணிலும் வளரும் என்றாலும், குறுமணல் கலந்த களிமண் நிலம் மிகவும் ஏற்றது. ஓரளவு வறட்சியைத் தாங்கும். விவசாயி ராஜ்குமார் சாகுபடி செய்திருக்கும் டர்க்கி பிரவுன் ரக அத்தி, பறிக்கப்பட்ட பழங்களாக விற்பனை செய்வதற்கு ஏற்றது. இது நடுத்தர அளவாக இருப்பதாலும், பழங்கள் பார்ப்பதற்கு மினுமினுப்புடன் இருப்பதாலும் வணிக ரீதியாக விற்பனைக்கு ஏற்றது.

பலா மரத்தைப்போல, மரத்தண்டிலேயே அத்திக் காய்கள் காய்க்கும். மற்ற பழ மர வகைகளைவிட அத்தியில் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் குறைவு என்பதால் பராமரிப்பும் மிக எளிதானது. இதனாலும், சந்தையில் அதிக தேவை, அதிக விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மத்தியில் அத்திச் சாகுபடி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்திப் பழங்களைப் பறிக்கும் அளவுக்கு மரங்களை வளர்த்து, கவாத்து செய்து முறையாகப் பராமரித்து வந்தால் தொடர் மகசூல் பெறலாம்.
நடவு செய்த இரண்டாவது ஆண்டிலிருந்து ஒரு மரத்திலிருந்து சராசரியாக 35 முதல் 40 கிலோ வரை பழங்கள் பறிக்கலாம். ஆண்டுக்கு 10 கிலோ வீதம் மகசூல் அதிகரிக்கும். 5 ஆண்டுக் குப் பிறகு, ஆண்டுக்கு ஒரு மரத்திலிருந்து 70 கிலோ வரை மகசூல் எடுக்கலாம். கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், புதூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த 3 ஆண்டுகளாக அத்திச் சாகுபடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்றார்.
தொடர்புக்கு, சுந்தரராஜன்,
செல்போன்: 97505 49687