
மகசூல்
'இஞ்சியைக் கண்டால் பித்தம் அஞ்சி ஓடும்’ என்பார்கள். நம் சமையலில் சைவ மற்றும் அசைவ உணவுகளில் சுவைக்காக மட்டுமல்லாமல் மருத்துவ பலன்களுக்காகவும் இஞ்சி சேர்க்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இஞ்சியை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார் தென்காசியைச் சேர்ந்த முத்துலெட்சுமி.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இருக்கிறது முத்துலெட்சுமியின் இஞ்சித் தோட்டம். செடியிலிருந்து இஞ்சியைப் பிரித்தெடுத்துக் கொண்டிருந்த அவரை ஒரு காலை வேளையில் சந்தித்தோம். ‘‘தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பக்கத்துல இருக்க காந்தீஸ்வரம் புதூர்தான் எனக்குச் சொந்த ஊரு. அங்க, மானாவாரியா கம்பு, சோளம், பருத்தி, கேழ்வரகு, சூரியகாந்தி, மக்காச்சோளத்தைச் சாகுபடி செய்வாங்க. அப்பா போலீஸ் வேலையில இருந்ததால அம்மா விவசாயத்தைப் பார்த்துக்கிட்டாங்க. நானும் அக்கா, தங்கச்சிகளும் பள்ளி விடுமுறை நாள்கள்ல அம்மா கூட காட்டுலதான் இருப்போம். களை எடுக்குறது, அறுவடை செஞ்ச தானியங்களைப் பிரிச்சு எடுக்குறதுனு விவசாய வேலைகளைச் செய்வோம்.
கல்யாணத்துக்குப் பிறகு குற்றாலத்துல கணவர் காவுசாமியின் வீட்டுக்கு வந்துட்டேன். அவரோட குடும்பமும் விவசாயக் குடும்பம்தான். என் கணவர், ரயில்வே போலீஸா வேலை பார்க்கிறார். அதனால நான் அத்தை, மாமாவுடன் சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். இங்க ரசாயன உரம், பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்திதான் நெல் சாகுபடி செஞ்சாங்க. மானாவாரிச் சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் கோடை உழவு, ஆட்டுக்கிடை, பெய்யுற மழையை நம்பித்தான் விவசாயம் பார்த்தோம். பெருசா ரசாயன உரம் எதுவும் பயன்படுத்தினதில்ல’’ என்றவர் செடியிலிருந்து சேகரித்த இஞ்சிகளை ஓரமாக வைத்துவிட்டுத் தொடர்ந்தார்.

பாடம் சொன்ன பசுமை விகடன்
‘‘என் கணவர் பசுமை விகடனை முதல் இதழ்ல இருந்தே தவறாம வாங்கிப் படிப்பாரு. எல்லா இதழ்களும் வீட்டுல பத்திரமா இருக்குது. என்னையும் படிக்கச் சொல்வாரு. அதுலதான் பாரம்பர்ய நெல் மட்டுமல்லாம, ஒட்டுரக நெல்லையும் இயற்கை முறையில சாகுபடி செய்யலாம்ங்கிறதைப் படிச்சு தெரிஞ்சுகிட்டேன்.
என் கணவருக்கு ஆரம்பத்துல இருந்தே இயற்கை விவசாயத்துமேல அதிக ஈடுபாடு இருந்துச்சு. ஆனா, வேலையில இருக்குறதால விவசாயத்தை செய்ய முடியல. நான் வேலையாளுங்க உதவியோட இயற்கை விவசாயம் செய்யலாம்னு முடிவெடுத்தேன். எங்களுக்குப் பாகப்பிரிவினையில் கொடுத்த 2 ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சோம். அது வண்டல் கலந்த களிமண் நிலம். தொழுவுரம் கொட்டி, கொழிஞ்சி, சணப்பை, பலதானியம் எல்லாம் விதைச்சு, மடக்கி உழுது நிலத்தை வளப்படுத்தினோம்.

குறைந்த பராமரிப்பு... கணிசமான லாபம்
என்ன பயிர் சாகுபடி செய்யலாம்னு யோசிச்சப்பதான் குற்றாலம் பக்கத்துல இருக்க செங்கோட்டை, புளியரைப் பகுதியில இஞ்சி சாகுபடி செய்றதைக் கேள்விப்பட்டோம். அங்க ரெண்டு, மூணு தோட்டங்களுக்குப் போயி, சாகுபடி முறையைக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டோம். நெல் சாகுபடியை விட, குறைவான பராமரிப்புல, கணிசமான லாபம் கிடைக்குதுனு சொன்னதால இஞ்சியைச் சாகுபடி செய்யலாம்னு முடிவெடுத்தோம்.
இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு பத்தி பசுமை விகடன்ல வெளியான குறிப்புகளை, கணவர் டைரியில குறிச்சு வெச்சிருந்ததுனால எனக்குச் சுலபமா இருந்துச்சு. முதல்கட்டமா 50 சென்ட்ல இஞ்சி சாகுபடி செஞ்சோம். தொடர்ந்து 70 சென்ட்ல இஞ்சி சாகுபடி செஞ்சோம். இப்ப அறுவடை நிலையில இருக்கு. இதுல ஊடுபயிரா நெல்லி, கொய்யா, மாதுளை, சீத்தா மாதிரியான பழமரங்களை நட்டு ஒரு வருஷம் ஆகுது. மீதமுள்ள 1.30 ஏக்கர் நிலம் அடுத்த இஞ்சி சாகுபடிக்காகத் தயார் நிலையில இருக்கு” என்றவர் நிறைவாக, வருமானம் குறித்துப் பேசினார்.
‘‘இது மலைப்பாங்கான பகுதிகள்ல நல்லா விளையும். மத்த பகுதிகள்ல குறைவான இடத்துல போட்டு நல்லா வளருதான்னு பாத்துட்டு சாகுபடி செய்யலாம்.’’
கொரோனாவால் கிடைத்த விலை
“போன வருஷம் 50 சென்ட்ல 3,560 கிலோ இஞ்சி கிடைச்சது. இதுல, என்னோட விதைத்தேவை, வீட்டுத்தேவை, உறவினர்கள், நண்பர்கள் என 500 கிலோவை எடுத்துக்கிட்டோம். மீதமுள்ள 3,060 கிலோவை பாவூர்சத்திரம் காய்கறிச் சந்தையில விற்பனை செஞ்சோம். ஒரு கிலோ இஞ்சிக்கு, குறைஞ்சபட்சம் 50 ரூபாய்ல இருந்து அதிகபட்சமா 80 ரூபாய் வரைக்கும் விலை கிடைச்சுது. கொரோனா தாக்கமான அந்த நேரத்துல, இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றிச் சமூக வலைதளங்கள்ல செய்தி பரவுனது விற்பனைக்கும், நல்ல விலை கிடைக்கிறதுக்கும் உதவியா இருந்துச்சு. இந்த வருஷம் 70 சென்ட்ல சாகுபடி செஞ்ச இஞ்சி அறுவடை நிலைக்கு வந்து ஒரு மாசமாச்சு. இப்போ சந்தையில ஒரு கிலோ இஞ்சி குறைஞ்சபட்சம் 20 ரூபாய்ல இருந்து அதிகபட்சமா 30 ரூபாய் வரைக்கும்தான் விற்பனையாகுது. இஞ்சியை அப்படியே விற்பனை செய்யுறதைவிட, விதை இஞ்சியா விற்கலாம்னு அப்படியே விட்டுட்டேன்.

போன தடவை 3,060 கிலோ இஞ்சி சராசரியா கிலோ 60 ரூபாய் விலையில விற்பனை மூலமா, 1,83,600 ரூபாய் வருமானமா கிடைச்சது. இதுல, உழவுல இருந்து அறுவடை வரைக்கும் 63,800 ரூபாய் செலவாச்சு. மீதமுள்ள 1,19,800 ரூபாய் நிகர லாபமா கிடைச்சது. அதிக பராமரிப்பு எதுவுமில்லாம கிடைச்ச இந்த லாபத்தை பெருசா நினைக்கிறேன். அடுத்த முறை இஞ்சியைச் சுக்கா மதிப்புக்கூட்டி விற்பனை செய்லாங்கிற திட்டத்துல இருக்கேன்” என்றவர் நிறைவாக,
“இது மலைப்பாங்கான பகுதிகள், மிதமான வெப்பமும் குளிரும் உள்ள சமவெளி பகுதிகள்ல நல்லா விளையும். மத்த பகுதிகள்ல குறைவான இடத்துல போட்டு நல்லா வளருதான்னு பாத்துட்டு சாகுபடி செய்யலாம்” என்றவர் தனது பணியில் கவனமாக... நாம் விடைபெற்றோம்.
தொடர்புக்கு,
முத்துலெட்சுமி,
செல்போன் 88703 49493.

மலச்சிக்கலைப் போக்கும் இஞ்சி!
இஞ்சியின் மருத்துவ குணம் குறித்து திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவிடம் பேசினோம். “இஞ்சி காய்ந்தால் சுக்கு. ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை’ என்பார்கள். மருத்துவத்திலும் சமையலறையிலும் தவிர்க்க முடியாத பொருள். இஞ்சிச் சாறெடுத்துத் தெளிய வைத்து அடியில் படியும் வெள்ளைநிற மாவுப்பொருளை நீக்க வேண்டும். பிறகு, அடுப்பிலேற்றி ‘சுர்’ என்ற சத்தம் வந்தவுடன் அடுப்பைவிட்டு இறக்கிப் பயன்படுத்துவதுதான் ‘சுரசம்’. வாரம்தோறும் எண்ணெய்க் குளியலுக்குப் பிறகு, இஞ்சிச்சுரசம் குடித்து வந்தால், வயிற்றில் உள்ள வாயு, மலச்சிக்கல், வயிற்றில் தங்கிய பழைய மலம் முதலான அனைத்தும் மறுநாள் காலையில் வெளியாகி உடல் புத்துணர்ச்சி பெறும். அத்துடன், வயிற்றுப்போக்கு, இதய நோய்கள், வாத நோய்கள், தோல் நோய்கள் முதலான பெரு நோய்கள் வராது.

இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்ஜிபெரின்’ என்னும் மருந்தியல் பொருள், இரைப்பை மற்றும் குடலில் உள்ள புண்களைக் குணமாக்கும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இஞ்சியின் மேல்தோலைச் சீவி, வட்ட வட்ட வில்லைகளாக நறுக்கி வெயிலில் சிறிதுநேரம் உலர்த்த வேண்டும். அதைச் சம எடை தேனில் போட்டு 40 நாள்கள் காற்றுப் புகாமல் மூடி வைத்து, தினம்தோறும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு துண்டு உண்டு வர உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். இது ஒரு சிறந்த காயகற்ப முறை. இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நரை, திரை மாறும். மூப்புப்பிணிகள் வராது. நல்லெண்ணெய்யுடன் இஞ்சிச்சாறு சமஅளவு கலந்து தைலமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு, வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைப்பாரம், அடுக்குத் தும்மல், கழுத்துவலி குணமாகும். இஞ்சியை வாயில்போட்டு மென்று உமிழ்நீரைத் வெளியே துப்பினால் தொண்டைப்புண், குரல் கம்மல் ஆகியவை குணமாகும்” என்றார்.
வேப்பங்கொட்டை-பூண்டுக்கரைசல்!
20 லிட்டர் நாட்டுமாட்டுச் சிறுநீரில், 500 கிராம் வெள்ளைப் பூண்டைத் தட்டிப் போட வேண்டும். அதில் உரலில் இடித்த 1 கிலோ வேப்பங்கொட்டையை வெள்ளைத் துணியில் கட்டி மிதக்க விட வேண்டும். 2 நாள்கள் வரை வைத்திருந்து வடிகட்டினால் வேப்பங்கொட்டை- பூண்டுக் கரைசல் தயாராகிவிடும். 10 லிட்டர் தண்ணீரில் இக்கரைசலை 300 மி.லி எடுத்துக் கொண்டு இதனுடன் 100 மி.லி, காதிசோப் கரைசலையும் சேர்த்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
இப்படித்தான் சாகுபடி செய்யணும்!
50 சென்ட் நிலத்தில் இஞ்சி சாகுபடி செய்ய முத்துலெட்சுமி கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:
இஞ்சி சாகுபடியைப் பொறுத்தவரை மே, ஜூன் மாதங்கள் நடவுக்கு ஏற்றவை. நடவு செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே உழவு செய்ய வேண்டும். 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவின்போது ஒரு டிராக்டர் மட்கிய தொழுவுரத்துடன், 25 கிலோ வேப்பம் பிண்ணாக்கைக் கலந்து பரவலாகத் தூவி உழ வேண்டும். பிறகு, 3 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் மேட்டுப்பாத்தி எடுக்க வேண்டும். பாத்திக்குப் பாத்தி ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒவ்வொரு பாத்தியிலும் வரிசைக்கு வரிசை 40 செ.மீ இடைவெளியில் சிறிய குழி எடுத்து இஞ்சி விதையை ஊன்றி அதன்மேல் ஒரு கை, தொழுவுரத்தைப் போட்டு மூட வேண்டும். ஒவ்வொரு வரிசையின் இடைவெளி, 20 முதல் 25 செ.மீ வரை இருக்க வேண்டும். 50 சென்ட் பரப்பளவில் நடவு செய்ய 200 கிலோ இஞ்சி விதைகள் தேவைப்படும்.

நாட்டு மாட்டுச் சாணத்தில் தண்ணீர் கலந்து பால் பதமாகக் கரைத்துக்கொள்ள வேண்டும். அந்தச் சாணிப்பாலில், விதை இஞ்சியை முக்கி எடுத்து நிழலில் 15 முதல் 20 நாள்கள் வரை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். இதனால், விதை சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்காது. அத்துடன், பூஞ்சண நோயும் கட்டுப்படும். இதை நடவுக்கு முன்பாகவே செய்து விட வேண்டும்.
விதை ஊன்றியதும் பாசன நீருடன் 5 லிட்டர் மீன் அமிலத்தைக் கலந்து விட வேண்டும். அத்துடன், பாத்திகளில் இலைதழைகள் அல்லது வைக்கோலை மூடாக்காகப் போட வேண்டும். இதனால், ஈரப்பதம் குறையாமல் இருப்பதுடன் வளர்ச்சியும் சீராக இருக்கும். 30 முதல் 35-ம் நாளில் முளைப்பு தெரியும்.
45-ம் நாளுக்குப் பிறகு, 15 நாள்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா, மீன் அமிலம், இ.எம்.கரைசலை 5 லிட்டர் என்ற கணக்கில் சுழற்சி முறையில் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். 3-ம் மாதம் களை எடுக்க வேண்டும். இஞ்சியைப் பொறுத்தவரைச் சாறு உறிஞ்சும் பூச்சி, செதில் பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, 3-ம் மாதத்திலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை வேப்பங்கொட்டை-பூண்டுக்கரைசல், மூலிகைப்பூச்சிவிரட்டி, வேப்ப எண்ணெய்க் கரைசலை சுழற்சி முறையில் (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

வேர் அழுகல் நோயிலிருந்து காப்பதற்காக 5-ம் மாதத்தில், 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் சூடோமோனஸ் திரவத்தைக் கலந்து, அதைப் பாசன நீரில் கலந்துவிடலாம். 7-ம் மாதம்வரை தொடர்ந்து 45 நாள்களுக்கு ஒருமுறை தொடர்ந்து களை எடுக்க வேண்டும். 7-ம் மாதத்தில் இஞ்சிச் செடியில் `மைக்’ போன்ற அமைப்பில் ரோஸ் நிறத்தில் பூ பூக்கும். அந்த நேரத்தில் மண் அணைக்க வேண்டும். இதனால், தூரில் இஞ்சி அதிகமாகக் கட்டும். 10-ம் மாதத்தில் இஞ்சிச் செடியின் தாள்கள் பழுத்துக் காய்ந்துவிடும். அந்த நேரத்தில் சந்தை தேவை, விலையைப் பொறுத்து அறுவடை செய்யலாம். விதைக்காக என்றால், 12-ம் மாதம்வரை காத்திருக்க வேண்டும்.