ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.6.75 லட்சம் வருமானம்! அள்ளிக் கொடுக்கும் கொய்யா!

கொய்யாத் தோட்டத்தில் பாஸ்கரன்
பிரீமியம் ஸ்டோரி
News
கொய்யாத் தோட்டத்தில் பாஸ்கரன்

மகசூல்

ழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் கொய்யா... மனித உடலுக்குத் தேவையான பலவிதமான சத்துகளை வாரி வழங்குகிறது. இதைச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் சத்தான வருமானம் கொடுக்கிறது. தஞ்சாவூர் அருகே உள்ள மருங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வடக்குப்பட்டு, வல்லுண்டான்பட்டு, சூரியம்பட்டி, வாகரை கோட்டை, சுந்தராம்பட்டி, நாட்டரசன் கோட்டை உள்ளிட்ட கிராமங்கள், ஒரு காலத்தில் கொய்யாச் சாகுபடிக்குப் பேர் பெற்ற ஊர்களாகத் திகழ்ந்தன.

மண்வாகின் காரணமாக அங்கு விளையும் கொய்யா தனிச்சுவையுடன் இருந்ததால், தஞ்சாவூர் நகர மக்கள் இதை மிகவும் விரும்பி வாங்கினார்கள். கொய்யாப் பழ சீஸன் வந்துவிட்டால் அங்குள்ள கிராமங்களிலிருந்து தினமும் டன் கணக்கில் கொய்யாப் பழங்கள், தஞ்சாவூருக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களைச் சாப்பிடுவதுதான் கெளரவம், அவற்றில் மட்டும்தான் சத்துகள் அதிகம் என்ற தவறான புரிதலின் காரணமாக, கொய்யாவை அதிகம் விரும்பாத நிலை உருவானது. இதன் காரணமாகக் கடும் விலைச் சரிவு ஏற்பட்டதால், இப்பகுதி விவசாயிகள் கொய்யாச் சாகுபடியைக் கைவிட்டார்கள்.

இந்நிலையில் சமீபகாலமாகக் கொய்யாவின் மகத்துவத்தை மக்கள் உணரத் தொடங்கியதால், இதற்கான விற்பனை வாய்ப்புப் பிரகாசமாக இருப்பதோடு, ஓரளவுக்கு லாபகரமான விலையும் கிடைத்து வருகிறது. அதனால் அப்பகுதி விவசாயிகளில் சிலர் மீண்டும் கொய்யாச் சாகுபடியைக் கையில் எடுக்கத் தொடங்கி யுள்ளனர். மருங்குளம்-வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரன், கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை முறையில் கொய்யாச் சாகுபடி செய்து, வெற்றிகரமாக வருமானம் எடுத்து வருகிறார்.

பாஸ்கரன்
பாஸ்கரன்

ஒரு பகல்பொழுதில் அவரைச் சந்தித்தோம். தனது கொய்யாத் தோட்டத்தில் வேலையாக இருந்த பாஸ்கரன், நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று, கொய்யாப் பழத்தைப் பறித்து, நம்மிடம் கொடுத்து உபசரித்தவாறு பேசத் தொடங்கினார். ‘‘ரசாயன உரங்கள் போடாமல் இயற்கை முறையில சாகுபடி செய்றதுனால, எங்க தோட்டத்தோட கொய்யாவுல சுவை கூடுதலா இருக்கு. இதனால் வியாபாரிகள்கிட்ட என்னோட கொய்யாவுக்கு மவுசு அதிகம். ரசாயன முறையில கொய்யா விளைவிச்சோம்னா, வேர் கறையான், நெருப்பு எறும்பு, மாவுப்பூச்சி, நூற்புழுத் தாக்குதல்களைச் சமாளிக்குறது சவாலா இருக்கும். இந்தப் பகுதியைப் பொறுத்த வரைக்கும் கொய்யாச் சாகுபடியில நெருப்பு எறும்பு பெரிய தொந்தரவு. கொய்யா செடிகளோட வேர் பகுதிகள்ல பெரும் கூட்டமா எறும்புகள் உட்கார்ந்துக்கிட்டு, செடியோட வளர்ச்சியைப் பாதிக்கும். எறும்புகள் கூட்டம் கூட்டமா இருந்துகிட்டு, மண்ணுக்கும் வேருக்குமான தொடர்பைத் துண்டிச்சிடும். இதனால் மண்ணுல இருந்து தேவையான சத்துகளை, வேர்கள் உறிஞ்சி எடுக்க முடியாமப் போயிடும். ஆனால், என்னோட கொய்யாவுல அதுமாதிரியான பாதிப்புகளே இல்ல. காரணம், கன்று நடவு செய்யும்போதே, எருவோடு, வேப்பங் கொட்டைத்தூளை கலந்து வச்சிடுவேன்’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

‘‘நடவு செஞ்ச 3-வது வருஷம் காய்க்க ஆரம்பிச்சது. 4-வது வருஷத்துல இருந்து நிறைவான வருமானம் கொடுத்துக்கிட்டு இருக்கு.’’

கரும்பு கசக்கும்

‘‘எங்களோட வீடும் நிலமும் ஒருங்கிணைஞ்சு இருந்ததுனால, சின்ன வயசுல இருந்தே விவசாயத்தோடு சேர்ந்துதான் இருக்கேன். 12-ம் வகுப்பு முடிச்சப் பிறகு, எங்கப்பாவுக்கு ஒத்தாசையா முழுநேரமா விவசாயத்தைக் கவனிச்சிக்கிட்டேன். இந்தப் பகுதி விவசாயிகள் பெரும்பாலும் கொய்யா, முந்திரிச் சாகுபடி செய்றதுதான் வழக்கமா இருந்துச்சு. கொய்யா, முந்திரிக்கு எல்லாம் உரிய மரியாதை கிடைக்கா ததுனாலயும், போர்வெல் அதிகமானதுனாலயும் இந்தப் பகுதி முழுக்கக் கரும்புச் சாகுபடிக்கு மாறினோம். ஆரம்பத்துல கரும்புச் சாகுபடி திருப்தியா இருந்தாலும், நாளடைவுல சர்க்கரை ஆலைகளோட மோசமான செயல்படுகளால், நஷ்டம் ஏற்பட ஆரம்பிச்சது. இதனால் விரக்தி அடைஞ்சு, விவசாயத்தை அப்பா மட்டும் பார்த்தாலே போதும்னு நான் சிங்கப்பூருக்குப் போயிட்டேன். பல வருஷம் அங்கேயே இருந்து வேலை பார்த்தேன். இதுக்கிடையில எனக்குத் திருமணமானதுனால மறுபடியும் சொந்த ஊருக்கே திரும்பி வந்து, விவசாயம் செய்றேன்.

எங்க குடும்பத்துக்கு 6 ஏக்கர் நிலம் இருக்கு. இது செம்மண் பூமி. கொய்யாச் சாகுபடிக்கு உகந்த மண். இப்ப 2 ஏக்கர்ல லக்னோ-49 ரகக் கொய்யாவும், ரெண்டரை ஏக்கர்ல தைவான் ரகக் கொய்யாவும் சாகுபடி செஞ்சிருக்கேன். மீதி ஒன்றரை ஏக்கர்ல, சம்பா பட்டத்துல நெல்லும், மற்ற காலங்கள்ல நிலக்கடலை அல்லது உளுந்து சாகுபடி செய்றதை வழக்கமா வச்சிருக்கோம்’’ என்றவர் கொய்யாச் சாகுபடி அனுபவம் குறித்து விரிவாகப் பேசினார்.

மாடுகள்
மாடுகள்

6 மாதங்கள்... 90 பறிப்பு

‘‘ரெண்டரை ஏக்கர்ல சாகுபடி செஞ்சிருக்குற தைவான் கொய்யாவுக்கு ஒன்றரை வயசாகுது. கடந்த 5 மாசமாதான் மகசூல் கிடைச்சிக்கிட்டு இருக்கு. இதுல எனக்கு இன்னும் அனுபவம் ஏற்பட்டால்தான், இதுல உள்ள நிறை குறைகளை விரிவா பேச முடியும். ஆனா, ரெண்டு ஏக்கர்ல சாகுபடி செஞ்சிருக்குற லக்னோ-49 ரகக் கொய்யாவுக்கு 7 வயசாகுது. நடவு செஞ்ச 3-வது வருஷம் காய்க்க ஆரம்பிச்சது. 4-வது வருஷத்துல இருந்து நிறைவான வருமானம் கொடுத்துக்கிட்டு இருக்கு. வரிசைக்கு வரிசை 17 அடி, மரத்துக்கு மரம் 15 அடி இடைவெளியில ஏக்கருக்கு 125 மரங்கள் இருக்கு. இந்த இடைவெளியில் 170 கன்றுகள் வரை வைக்கலாம். நான் ஓரங்கள்ல டிராக்டர் போக இடம் விட்டிருக்கேன். அதனால 125 மரங்கள்தான் இருக்கு. வருஷத்துக்கு 6 மாசம் மகசூல் கொடுக்கும். ஒருநாள் விட்டு ஒருநாள் ஒரு ஏக்கருக்கு 150 கிலோ மகசூல் கிடைக்கும். 90 பறிப்புகள் மூலம் 13,500 கிலோ மகசூல் கிடைக்குது.

வியாபாரிகள் என்னோட தோட்டத்துக்கே வந்து காய்களைப் பறிச்சி எடுத்துக்கிட்டுப் போயிடுவாங்க. பறிப்புக் கூலி, போக்குவரத்துச் செலவு எதுவுமே எனக்குக் கிடையாது. ஒரு கிலோவுக்குக் குறைந்தபட்சம் 25 ரூபாய் விலை கிடைக்குது. இதன் மூலம் ஒரு ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு 3,37,500 ரூபாய் வருமானம் கிடைக்குது’’ என்றவர் நிறைவாக,

செலவு வரவு கணக்கு
செலவு வரவு கணக்கு

ஏக்கருக்கு ரூ.16,500 தான் செலவு

‘‘விவசாய வேலையாள்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவக்கூடிய காலம் இது. இந்தப் பிரச்னையில் இருந்து விவசாயிகள் எளிதாகத் தப்பிக்க, கொய்யாச் சாகுபடிதான் மிகச் சிறந்த மாற்று வழியாக இருக்கு. இதற்குப் பராமரிப்பும் அதிகம் தேவையில்ல. 6 மாசத்துக்கு ஒரு தடவை, எரு, வேப்பங்கொட்டைத்தூள், இலைதழைகள், தேங்காய்நார்க் கழிவு வச்சாலே போதும். இதுக்கு வருஷத்துக்கு ஏக்கருக்கு 16,500 ரூபாய்தான் செலவாகும். நடவு செஞ்ச 4-வது வருஷத்துல இருந்து எல்லாச் செலவும் போக, வருஷத்துக்கு ஒரு ஏக்கர்ல இருந்து 3,21,000 ரூபாய் வீதம் ரெண்டு ஏக்கர்ல இருந்து 6,42,000 ரூபாய் லாபம் கிடைக்குது’’ என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பாஸ்கரன்,

செல்போன்: 97906 68826

ஊடுபயிர் வருமானம்

‘‘மரத்துக்கு மரம் அதிக இடைவெளி இருக்குறதுனால, நிலம் முழுக்கப் பரவலா மண்ணுல சூரிய வெளிச்சம் படுது. கொய்யா நடவு செஞ்சதுல இருந்து 3 வருஷம் வரைக்கும், ஊடுபயிராக வருஷத்துக்கு ரெண்டு முறை உளுந்தும் கடலையும் மாத்தி மாத்திச் சாகுபடி செஞ்சேன். ஊடுபயிர் சாகுபடிக்கு, வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும் அடியுரமா ஏக்கருக்கு 10 டன் எரு போட்டேன். வேறு எந்த இடுபொருளுமே கொடுக்கல. ஆனாலும்கூட உளுந்துல 7 குவின்டால் (700 கிலோ) மகசூல் கிடைச்சுது. அது மூலமா 42,000 ரூபாய் வருமானம் கிடைச்சது.

கொய்யாத் தோட்டத்தில் பாஸ்கரன்
கொய்யாத் தோட்டத்தில் பாஸ்கரன்

நிலக்கடலையில ஏக்கருக்கு 9 மூட்டை (80 கிலோ) பருப்பு மகசூலாச்சு. ஒரு மூட்டைக்கு 6,000 ரூபாய் வீதம் 54,000 ரூபாய் வருமானம். கொய்யா நடவு செஞ்சதுல இருந்து மூணு வருஷம் வரைக்கும் ஊடுபயிர் சாகுபடி மூலமாக, வருஷத்துக்கு 96,000 ரூபாய் வருமானம். அதுல செலவு போக, சுமார் 60,000 ரூபாய் லாபமாகக் கிடைச்சது. கொய்யாச் சாகுபடியில ஊடுபயிர் சாகுபடி மிகவும் முக்கியம். களைகளைக் கட்டுப்படுத்த உறுதுணையாக இருக்கும். மண்ணுக்குத் தழைச்சத்து கொடுக்கும். ஊடுபயிர்களுக்கு அடியுரமா கொடுத்த எரு, உரமாகி கொய்யாவையும் செழிப்படைய வைக்கும்.

கொய்யாவில் மாவுப்பூச்சித் தாக்குதல்

கொய்யாச் சாகுபடியைப் பொறுத்தவரைக்கும் மாவுப்பூச்சித் தாக்குதலைச் சமாளிக்குறது சவாலாக இருக்கும். இலைகளோட மேல்பகுதி கறுத்துப் போயிடும். இலைகளோட பின் பகுதியில வெள்ளையா மாவு மாதிரி படர்ந்திருக்கும். குறிப்பாக இந்தப் பகுதிகள்ல, வெயில் காலங்கள்லதான் இதோட தாக்குதல் இருக்கும். இயற்கை முறையில் பெரும்பாலும் மாவுப்பூச்சித் தாக்குதலுக்கான வாய்ப்புக் குறைவுதான். ஒருவேளை அதுக்கான அறிகுறிகள் தெரிந்தால், அந்த இலையை மட்டும் அப்புறப்படுத்திடுவோம். அதிகாலையில பனிப்பொழிவு இருக்கும்போது, மற்ற இலைகள் மேல தடுப்பு நடவடிக்கையாகச் சாம்பலைத் தூவிவிடுவோம். மாலை நேரத்துல, ஒரு ஏக்கருக்கு 130 லிட்டர் தண்ணீர்ல 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து இலைகள் மேல தெளிப்போம். இதைச் செஞ்சிட்டாலே மாவுப்பூச்சித் தாக்குதலை ஆரம்பநிலையிலேயே எளிதாகக் கட்டுப்படுத்திடலாம்’’ என்கிறார் பாஸ்கரன்.

தைவான் கொய்யா

இரண்டரை ஏக்கர் நிலத்தில் உள்ள தைவான் கொய்யா பற்றிப் பேசிய பாஸ்கரன், ‘‘மொத்தம் 1,000 செடிகள் இருக்கு. தலா 10 அடி இடைவெளியில ஏக்கருக்கு 400 செடிகள் வீதம் நடவு செஞ்சிருக்கோம். லக்னோ-49 ரகக் கொய்யாவுக்குக் கொடுத்த மாதிரியேதான் இதுக்கும் இடுபொருள்கள் கொடுத்துக்கிட்டு இருக்கோம். அதோடு, மாதம் ஒரு முறை ஏக்கருக்கு 10 கிலோ கடலைப் பிண்ணாக்கை 100 லிட்டர் தண்ணீர்ல 24 மணிநேரம் ஊறவச்சி, வடிகட்டித் தெளிக்குறோம். இது இலைவழி ஊட்டமாகப் பங்களிப்பு செய்யுது. இதனால் தழைகள் எப்போதும் நல்லா செழிப்பா இருக்கு. செடிகள் ஊக்கமா வளருது. ஒரு வருஷம் வரைக்கும்தான் இதைக் கொடுத்தோம். நடவு செஞ்ச 6-வது மாசத்துக்குப் பிறகு பூப்பூத்து பிஞ்சு வரத் தொடங்கிடுச்சு. அதைக் கிள்ளி விட்டோம். ஒரு வருஷத்துக்குப் பிறகு மகசூல் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு’’ என்றார்.

கிளைகளை வளைத்துக்
கட்ட வேண்டும்!

நடவு செய்த ஒரு வருடத்துக்குப் பிறகு, செங்குத்தாக மேல்நோக்கிச் செல்லும் கிளைகளின் நுனிப்பகுதியில் ஒரு கயிற்றைக் கட்டி, கிளையைச் சற்று வளைத்து, மரத்தின் அடிப்பகுதியிலோ ஒரு கல்லிலோ கட்ட வேண்டும். கிளை வளைந்த பகுதியில் ஏராளமான துளிர்கள் உருவாகி, அதிகளவில் வெடிக்கும். இதனால் மகசூல் அளவு அதிகமாகும்.

கொய்யாச் செடிகள்
கொய்யாச் செடிகள்

இப்படித்தான் கொய்யாச் சாகுபடி!

ஒரு ஏக்கரில் லக்னோ-49 ரகக் கொய்யாச் சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் நான்கு சால் புழுதி உழவு ஓட்டி மண்ணைப் பக்குவப்படுத்த வேண்டும். வரிசைக்கு வரிசை 17 அடி, செடிக்குச் செடி 15 அடி இடைவெளியில், 2 அடி சுற்றளவு, 2 அடி ஆழம் கொண்ட குழி எடுக்க வேண்டும். ஒரு குழிக்கு 5 கிலோ எரு, 100 கிராம் வேப்பங்கொட்டைத்தூள் (தோலுடன் காயவைத்து, இடிக்கப்பட்ட, எண்ணெய்ப் பசையுடன்கூடிய வேப்பங்கொட்டைத்தூள்) கலக்க வேண்டும். அதனுடன் மண் மற்றும் மணல் கலந்து, குழியில் முக்கால் அடி உயரத்துக்கு நிரப்பி, கன்று நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப அவ்வப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 6-ம் மாதம் களைகளை அப்புறப்படுத்தி, கன்றிலிருந்து அரையடி தூரத்தில் வட்டமாகக் குழி பறித்து, 10 கிலோ எரு போட்டு மூட வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக இதே இடுபொருள்கள் கொடுக்க வேண்டும். அதேசமயம் ஆண்டுதோறும் எருவின் அளவை மட்டும் 10 கிலோ அதிகப்படுத்த வேண்டும். 5-ம் ஆண்டிலிருந்து ஒரு மரத்துக்கு 50 கிலோ வீதம் எரு வைத்தாலே போதுமானது.