நாட்டு நடப்பு
Published:Updated:

25 சென்ட்... 8 மாதங்கள்... 89,000 ரூபாய்... அசத்தும் பூனைக்காலிச் சாகுபடி!

தோட்டத்தில் ஏகாம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
News
தோட்டத்தில் ஏகாம்பரம்

மகசூல்

புதிய கருவிகள், புதிய தொழில்நுட்பங்கள், மறைந்து கிடக்கும் வேளாண் வித்தைகள், அருகி வரும் பயிர்கள் எனப் பலவற்றையும் தேடிப்பிடித்துப் பயன் படுத்துவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அப்படிப்பட்ட விவசாயிகளைத் தேடிப் பிடித்து வாசகர்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது பசுமை விகடன். அத்தகைய விவசாயிகளின் அனுபவங்களை, உடனடியாகத் தங்கள் நிலத்திலும் சோதித்துப் பார்ப்பதில் நம் விவசாயிகளுக்கு இணையில்லை. அவர்களில் ஒருவர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்த ‘முன்னோடி இயற்கை விவசாயி’ ஏகாம்பரம்.

பூனைக்காலி
பூனைக்காலி

நம்மாழ்வாரிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவர்களில் இவரும் ஒருவர். தற்போது இயற்கை விவசாயப் பயிற்சிகளை வழங்கி வருகிறார். தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் பல இயற்கை விவசாயப் பண்ணைகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். தனது கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் ஏகாம்பரம், அருகிவரும் காய்கறிகளைப் பரவலாக்கும் பணிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், விட்லாபுரம் கிராமத்தில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து ‘பூனைக்காலி’ சாகுபடி செய்து அறுவடை முடித்திருக்கிறார்.

ஒரு பிற்பகல் வேளையில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஏகாம்பரத்தைச் சந்தித்தோம். “அப்பா, தாத்தானு பரம்பரையா விவசாயம் செய்துகிட்டு வர்றோம். போர்வெல் பாசனம்தான். 12-ம் வகுப்பு முடிச்ச உடனே, ‘உயிர்ச்சூழல் சான்றிதழ் கல்வி’ முடிச்சு, ‘லீசா விவசாயக் கூட்டமைப்பு’ல சேர்ந்தேன். அங்க ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன். முழுக்க இயற்கை விவசாயம் சார்ந்த வேலைதான். அப்புறம் நம்மாழ்வார் ஐயாவோடு பயணம் செஞ்சேன். அவரோட தமிழ்நாடு இயற்கை உழவர் இயக்கத்துல பயிற்சியாளரா இருந்தேன். சுனாமி வந்தபோது பாதிக்கப்பட்ட பகுதிகள்ல ஐயாவோடு இணைஞ்சு மீட்புப் பணிகள்ல ஈடுபட்டேன். அங்கேயே நாலரை வருஷம் ஓடிடுச்சு.

பூனைக்காலித் தோட்டம்
பூனைக்காலித் தோட்டம்

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார், ‘உணவுதான் நம்மளோட மருந்து, அதுதான் நமக்கு முக்கியம்’னு அடிக்கடி சொல்வார். அதனாலதான் அதிகமான பாரம்பர்ய நெல் வகைகள், பாரம்பர்ய காய்கறி ரகங்களை விதைச்சிருக்கேன். விழுப்புரம் மாவட்டத்துல மொத்தமா 30 ஏக்கர் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துக் காய்கறிகள், பந்தல் கொடிகள், நெல் வகைகளைப் பயிர் செய்திருக்கேன். பூனைக்காலிங்குற காய் பத்தி நிறைய பேருக்குத் தெரியாது. இன்னைக்கு நாம சாப்பிடுற மொச்சை மாதிரியான பயிர்தான். ஆனா, கொடிவகைக் காய்கறிகள்ல பூனைக் காலி அளவுக்கு மகத்துவம் உள்ளது எதுவும் இல்லை.

தமிழ்நாட்ல பூனைக்காலிச் சாகுபடி செய்றது கிடையாது. பூனைக்காலி பூ, விதை, வேர் எல்லாமே நல்ல மருந்து. என்கிட்ட இருந்து தமிழ்நாடு, வெளிமாநில சித்த மருத்துவர்கள் அதிகமா வாங்கிட்டு இருக்காங்க. இதுவும் சாதாரண உணவுதான். ஆனா, அதைத்தாண்டி நல்ல மருந்து. இதை ஒருமுறை நடவு செஞ்சா 3 வருஷம் வரைக்கும் மகசூல் தரக்கூடிய பயிர். பூனைக்காலி விவசாயம் செய்யச் செலவுகளும் ரொம்பக் குறைவு. நம்மாழ்வார் ஐயாவோட பயணம் செய்யுறப்போ இதைப்பத்தி ஒருமுறை சொன்னார்.

பூனைக்காலி பூ
பூனைக்காலி பூ

பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யலாம்னு நினைச்சப்போ பூனைக்காலி ஞாபகம் வந்தது. அதனால ஆடி 18-ம் தேதி விதைச்சிட்டேன். பூனைக்காலிக் காய்களுக்குச் சரியான சந்தை இல்லை. ஆனா, விதைகளுக்கு அதிகமான தேவை இருக்கு.

பூனைக்காலி அறுவடை முடிஞ்ச பிறகு, 45 நாள்ல 2 தடவை கலவைக் கரைசல் கொடுத்தா இலைகள் உதிர்ந்து மறுபடியும் காய்கள் பிடிக்க ஆரம்பிக்கும். 3 வருஷம் தொடர்ந்து மகசூல் கிடைக்கும்” என்றவர் வருமானம்பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

அட்டவணை
அட்டவணை

“போன முறை 15 சென்ட்ல பயிர் பண்ணினேன். இப்போ அரை ஏக்கர்ல பயிர் செய்திருக்கேன். அதுல 25 சென்ட்ல அறுவடை முடிஞ்சிருக்கு. மொத்தம் 215 கிலோ மகசூல் கிடைச்சது. வெளிசந்தையில 800 ரூபாய் வரைக்கும் விலை போகுது. நான் கிலோ 400 ரூபாய்னு விற்பனை செய்றேன். அந்த வகையில 86,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. விதை அறுவடைக்கு முன்னாடியே பூனைக்காலி காய் 125 கிலோ விற்பனை செஞ்சிருக்கேன். ஒரு கிலோ 30 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 3,750 ரூபாய்க் கிடைச்சிருக்கு. ஆக மொத்தம் 89,750 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. அதுல போக்குவரத்து, இடுபொருள்னு 9,000 ரூபாய் செலவு போக 80,750 ரூபாய் லாபமா நின்னுச்சு. மீதம் இருக்குற 25 சென்ட்லயும் அறுவடை செய்யப்போறேன். அதுலயும் இதே லாபம் கிடைக்கும்னு நம்புறேன். இது ஒரு அறுவடையில கிடைச்ச லாபம்தான். இன்னும் 2 அறுவடை கிடைக்கும். அதுல கிடைக்குற லாபமெல்லாம் போனஸ்தான்’’ என்றபடி விடைகொடுத்தார் ஏகாம்பரம்.

தொடர்புக்கு,
ஏகாம்பரம்,
செல்போன்: 72007 73224

பூனைக்காலித் தோட்டம்
பூனைக்காலித் தோட்டம்

இப்படித்தான் சாகுபடி

அரை ஏக்கர் நிலத்தில் பூனைக்காலிச் சாகுபடி செய்யும் விதம் குறித்து ஏகாம்பரம் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

வடிகால் வசதியுடன்கூடிய செம்மண், மணற்சாரி, லேசான களிமண் வகை மண்ணில் சிறப்பாக வளரும். சித்திரை மாதம் தவிர, அனைத்து மாதங்களிலும் நடவு செய்யலாம். ஆனால், தைப்பட்டம் மற்றும் ஆடிப்பட்டத்தில் நடவு செய்தால் முளைப்பு, செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதில் கறுப்பு, வெள்ளை என இரண்டு வகைகள் உள்ளன. கறுப்பு பூனைக்காலிதான் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

தேர்வு செய்த நிலத்தில் 500 கிலோ எருவைக் கொட்டிக் கலைத்துவிட்டு, இரண்டு சால் உழவு செய்ய வேண்டும். 4 நாள்கள் ஆற விட வேண்டும். பிறகு 6 அடி இடைவெளியில் (6X6 அடி) குழி எடுத்து, ஒவ்வொரு குழியிலும், 400 கிராம் தொழு உரம் போட்டு விதைகளை நடவு செய்ய வேண்டும். ஒரு குழியில் மூன்று விதைகளை விதைக்கலாம். ஏதாவது ஒன்று முளைக்காமல் போனாலும் ஏதாவது ஒன்று முளைத்துவிடும்.

தோட்டத்தில்
தோட்டத்தில்

மண்ணில் ஈரம் இருப்பதற்கு ஏற்பத் தண்ணீர் கொடுத்து வர வேண்டும். சாதாரண முறையில் பாசனம் செய்வதைவிட, சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது. நடவு செய்த 5-ம் நாள் முளைக்கத் தொடங்கும். 15-ம் நாள் களை எடுக்க வேண்டும். களையெடுத்த மறுநாள் குழிக்கு 250 கிராம் தொழுஉரம் இட வேண்டும். பிறகு, 35-ம் நாளில் இரண்டாவது களை எடுக்க வேண்டும். மறுநாள் ஊட்டமேற்றிய தொழுஉரம் குழிக்கு 250 கிராம் வீதம் இட வேண்டும்.

45-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற விகிதத்தில் கலவைக் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். பூப்பிடிக்கும் நேரத்தில் கலவைக் கரைசல் மகசூலுக்கு உதவியாக இருக்கும். 60-ம் நாள் ஊட்டமேற்றிய தொழுஉரத்தைக் கொடுக்கலாம். பூச்சித் தாக்குதல் அதிகமா இல்லாத பயிர். அதனால் பூச்சிவிரட்டிகள் தெளிக்கத் தேவையில்லை. சரியாக 60-ம் நாளுக்கு மேல் சமையலுக்கான காய்களைப் பறிக்கலாம். பூனைக்காலி விதைக்காகச் சாகுபடி செய்தால் முழுமையான அறுவடை முடிவடைய 8 மாதங்கள் ஆகும். ஒரு பூ, காயாகி, முற்றி அதில் விதை எடுக்க 90-100 நாள்கள் ஆகும். ஆனால், ஒட்டுமொத்த அறுவடையும் ஒரே நேரத்தில் முடிந்து விடாது. அவரைக் கொடியைப் போலவே பூ, காய், முற்றிய காய் எனக் கொடியில் அனைத்து வயதிலும் காய் இருக்கும். அதனால் முழுமையான அறுவடை முடிய 8 மாதங்கள் ஆகும்.

பூனைக்காலி விதைகள்
பூனைக்காலி விதைகள்

ஆண்மைக் குறைவுக்கு
அற்புத மருந்து!

பூனைக்காலி விதையின் மருத்துவக் குணங்கள் பற்றிப் பேசிய சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு, “பூனைக்காலி பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணங்கள் கொண்டவை. பெரும்பாலும் விதைகள்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஆண்மையைப் பெருக்கும் குணம் கொண்டது. பூனைக்காலி விதையை நன்றாக உலர வைத்துப் பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்துக் காலை, மாலை இருவேளை பாலில் கலந்து அருந்தி வர, ஆண்மைக் குறைபாடு சரியாகும். உடல் நடுக்கம் மாதிரியான உடல் கோளாறுகளுக்கும் பூனைக்காலி விதை நல்ல மருந்து. சித்த மருத்துவத்தில் பூனைக்காலி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

ஊட்டம் ஏற்றப்பட்ட தொழுவுரம்

275 கிலோ மட்கிய சாணம், 10 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 10 கிலோ தேங்காய்ப் பிண்ணாக்கு, 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா, 250 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலக்க வேண்டும். இந்தக் கலவையின்மீது 10 லிட்டர் அமுதக் கரைசலைத் தெளித்து 10 நாள்கள் வைத்திருந்தால் ஊட்டமேற்றப்பட்ட தொழுவுரம் தயாராகிவிடும். இது சிறந்த அடியுரமாகவும் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும்.