
சுவடுகள்
கடந்த 14 ஆண்டுகளாகப் பசுமை விகடனுடன் பின் ஏர் பிடித்த விவசாயிகள் ஏராளம். புதிய தொழில்நுட்பம், இடுபொருள் தயாரிப்பு, மதிப்புக்கூட்டல் உள்ளிட்ட ஒவ்வொன்றிலும் முன்னோடி விவசாயிகள் பலர் இருக்கிறார்கள். பசுமை விகடன், ஆரம்பகாலங்களில் இத்தகைய முன்னத்தி ஏர்களை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தது. அந்த விவசாயிகளைப் பலரும் பின்பற்றினார்கள். அந்த வகையில் பசுமை விகடன் ஆரம்பகாலங்களில் பதிவு செய்த விவசாயப் பண்ணைகள் இன்றைக்கு எந்த நிலையில் இருக்கின்றன. அந்தப் பதிவால் சமூகத்துக்கு ஏற்பட்ட நன்மைகள், சம்பந்தப்பட்ட விவசாயிகள் அதற்குப் பிறகு கற்றுக்கொண்ட பாடங்கள் பற்றிப் பேசுகிறது இந்தப் பகுதி.
பந்தல் சாகுபடியில் முன்னோடி விவசாயியாக இருக்கும் ‘கேத்தனூர்’ பழனிச்சாமியின் அனுபவங்களைக் கடந்த இதழில் பார்த்தோம். ‘காய்கறிப் போட்டேன்... கவலையை விட்டேன்!’ என்ற தலைப்பில் 2007 மார்ச் 10 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் வெளியானது. அதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பந்தல் சாகுபடிக்கு மாறினார்கள். அப்படி மாறிய விவசாயிகளில் ஒருவர்தான் சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்துள்ள வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரன். தனது 5 ஏக்கர் நிலத்தில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தவரை இன்றைக்கு நிறைவான வருமானம் பார்க்கும் விவசாயியாக மாற்றி இருக்கிறார் பழனிச்சாமி.
ராஜசேகரனைச் சந்திப்பதற்காக வாழப்பாடியில் உள்ள அவரது தோட்டத்திற்குச் சென்றோம். நம்மை வரவேற்றவர் மகிழ்ச்சியாகப் பேசத் தொடங்கினார். ‘‘எனக்கு 36 வயசாகுது. என் மனைவி பேரு கோமதி. எங்களுக்குத் தரணி என்ற மகளும், மகிழன் என்ற மகனும் இருக்காங்க. எங்க அப்பா, அம்மாவோடு கூட்டுக் குடும்பமாகச் கிராமத்துல குடியிருக்கோம். எங்களுக்குப் பூர்விகமா 5 ஏக்கர் நிலம் இருக்குது. அதில் நெல், மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டு வந்தோம். பெருசா வருமானம் கிடைக்கல. வரவுக்கும் செலவுக்கும் சரியா இருந்துச்சு.
பேருக்கு விவசாயம் பார்த்துட்டு இருந்தேன். இந்த நிலைமையில, பசுமை விகடன்ல கேத்தனூர் பழனிச்சாமி ஐயாவின் பந்தல் காய்கறி பற்றிய கட்டுரையைப் படிச்சேன். ‘பந்தல் காய்கறி பயிரிட்டால் பணம் பார்க்கலாம்’னு பழனிச்சாமி ஐயா சொல்லி இருந்தாங்க. அவருடைய போன் நெம்பரும் கொடுத்திருந்தாங்க. அதையடுத்து அவரைத் தொடர்புகொண்டு பேசிட்டு, அவர் தோட்டத்துக்குப் போனேன்.

அவர் மிகப் பிரமாண்டமா இயற்கை முறையில பந்தல் விவசாயம் செஞ்சுட்டு இருந்தார். பந்தல் விவசாயத்தைப் பற்றித் தெளிவா, அதோட நெளிவு சுளிவு எல்லாம் பொறுமையா சொல்லிக்கொடுத்தார் பழனிச்சாமி ஐயா.
பாதை காட்டிய பழனிச்சாமி
பந்தல் சாகுபடியில அவர் எடுக்குற வருமான கணக்கைச் சொன்னதோடு, அதுக்கான ஆதாரங்களையும் காட்டினார். அதுக்கு பிறகு, பந்தல் காய்கறி பயிரிட்டே ஆகணும்னு எனக்கு ஆர்வம் வந்திடுச்சு. ஊருக்கு வந்ததும் பந்தல் அமைக்குற வேலையில இறங்கிட்டேன். பந்தல் அமைச்சதும், பாகல், பீர்க்கன், புடலைச் சாகுபடியை ஆரம்பிச்சுட்டேன். ஆரம்பத்துல பூச்சி, நோய் தாக்குதல் மாதிரியான சின்னச் சின்னச் சிக்கல் வந்துச்சு. அதுக்கும் போன் மூலமா கேட்டதுக்கு ஐயா ஆலோசனை கொடுத்தாரு. அடுத்த முறை சாகுபடி செய்யும்போது, முதல் ஆண்டு அனுபவம் கைக்கொடுத்துச்சு. அதுக்கு பிறகு, பந்தல் சாகுபடியில எனக்கும் திருப்தியான வருமானம் கிடைக்க ஆரம்பிச்சி, இப்ப வரைக்கும் கிடைச்சுட்டுதான் இருக்கு’’ என்று நீண்ட முன்னுரை கொடுத்தவர் பந்தலுக்குள் நம்மை அழைத்துச் சென்றார்.

சுழற்சி முறை சாகுபடி
பீர்க்கன் அறுவடை முடியும் தறுவாயில் இருந்தது. ‘‘எங்க பகுதியில தண்ணி பற்றாக்குறை இருக்கு. கொஞ்சம் தென்னை மரங்களும் இருக்குறதால வருஷம் முழுக்கப் பந்தல் சாகுபடி செய்ய முடியல. வருஷத்துல 6 முதல் 8 மாசங்கள் வரைக்கும்தான் பந்தல் சாகுபடி இருக்கும். ஆரம்பத்துல ஒரு ஏக்கர்ல ஆரம்பிச்சேன். இப்ப ரெண்டரை ஏக்கர்ல பந்தல் சாகுபடி பண்ணிட்டு இருக்கேன். நடவு செய்ததிலிருந்து 50 முதல் 60 நாள்கள்ல மகசூலுக்கு வந்திடும். தொடர்ந்து 180 முதல் 200 நாள்கள் வரைக்கும் காய் பறிக்கலாம். காய் பறிப்பதற்கு முன்பு, ஈரப்பதத்திற்கு ஏற்ப ஒருநாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடணும். ஆனால் காய் பிடித்த பிறகு தினமும் தண்ணீர் விடணும். வருஷம் ஒரு சாகுபடி நிச்சயம். ஒவ்வொரு ஏக்கர்லயும் ஒரு காய் பயிர் செய்வோம். பாகல் ஒரு ஏக்கர், பீர்க்கன் ஒரு ஏக்கர், புடல் அரை ஏக்கர்னு சாகுபடி பண்ணுவோம். அடுத்த தடவை புடல் நட்ட இடத்துல பாகல், பீர்க்கன் நட்ட இடத்துல புடல்னு மாற்றி மாற்றிச் சுழற்சி முறையில சாகுபடி பண்ணுவோம். இந்தத் தடவை பாகல், புடல் அறுவடை முடிஞ்சிடுச்சு. பீர்க்கன் அறுவடை முடியுற தறுவாயில இருக்கு’’ என்றவர் வருமானம் பற்றி சொல்லத் தொடங்கினார்.
“ஒரு ஏக்கர் நிலத்துல பாகல் தனிப்பயிரா சாகுபடி செஞ்சா சராசரியா 20 டன், பீர்க்கன் தனிப்பயிரா சாகுபடி செஞ்சா சராசரியா 15 டன், புடலை தனிப்பயிரா சாகுபடி செஞ்சா சராசரியா 25 டன் மகசூல் கிடைக்கும். பாகல், பீர்க்கன் சராசரியா கிலோ 20 ரூபாய் விலை கிடைக்கும். புடலைக்கு கிலோ 15 ரூபாய் கிடைக்கும். அந்த வகையில ஒரு ஏக்கர்ல பாகல் மூலம் 4,00,000 ரூபாய், புடலை மூலம் 3,75,000 ரூபாய் எடுத்திருக்கேன். இப்போ பீர்க்கன் மூலம் 3,00,000 ரூபாய் வருமானமாக் கிடைக்கும். அதுல ஒரு ஏக்கருக்கு 35,000 முதல் 50,000 ரூபாய் வரை செலவாகும். மீதிப்பணம் முழுக்க லாபம் தான்’’ என்றவர் நிறைவாக,
‘‘நடவு செய்ததிலிருந்து 50 முதல் 60 நாள்கள்ல மகசூலுக்கு வந்திடும். தொடர்ந்து 180 முதல் 200 நாள்கள் வரைக்கும் காய் பறிக்கலாம்.’’
‘‘பந்தல் அமைக்கும் செலவு முதல் முறை மட்டும்தான். பந்தல் 50 ஆண்டுகளைத் தாண்டியும் இருக்கும். பந்தல் மற்றும் சொட்டுநீர்ப் பாசனத்திற்குத் தோட்டக்கலைத்துறை மானியம் கிடைக்குது. விவசாயத்துல போதுமான வருமானம் இல்லாமல் இருந்த நான், இன்றைக்கு நிறைவான வருமானம் எடுக்கக்கூடிய விவசாயியாக மாறியிருக்கிறேன். அதற்கு அடிப்படை காரணம் பசுமை விகடன். அதன் மூலம் அறிமுகமான கேத்தனூர் பழனிச்சாமி ஐயா இருவரும்தான். இருவருக்கும் மனமார்ந்த நன்றி’’ என்றபடி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, ராஜசேகரன்,
செல்போன்: 97906 61303.
இப்படித்தான் பந்தல் சாகுபடி!
முதலில் நிலத்தைச் சமன் செய்ய வேண்டும். பிறகு 8 அடி உயரமுள்ள கருங்கல்லை வெளிச் சுற்றளவு முழுவதும் பன்னிரண்டரை அடிக்கு ஒரு கல் வீதம், ஒன்றரை அடி ஆழத்தில் நட வேண்டும். உள்ளே நேர் வாக்கிலும், குறுக்கு வாக்கிலும் ஒரு கல் விட்டு ஒரு கல் (25 அடி) நட வேண்டும். பந்தல் கல்லின் மேலே 6 கேஜ், 8 கேஜ், 16 கேஜ் அளவு இரும்புக் கம்பிகளால் பந்தல் அமைக்க வேண்டும். நிலத்தை மினி டிராக்டர் மூலமாக இரண்டு முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன்பு ஏக்கருக்கு 10 டிராக்டர் தொழுவுரம் கொட்ட வேண்டும். பிறகு 12 அடி இடைவெளியில் மேல் மேட்டுப்பாத்தி அமைத்துச் சொட்டு நீர்ப் பாசனம் வசதி செய்ய வேண்டும்.
நடவு முறை
பயோ டைனமிக் காலண்டரில் குறிப்பிட்டிருக்கும் தேதியைப் பார்த்து, பாத்தியில் விதைகளை நடவு செய்ய வேண்டும். விதைகள் வரிசையாக அல்லது 5 அடிக்கு ஒரு வட்டக் குழி அமைத்து அதில் இரண்டு அல்லது மூன்று விதைகள் என நடவு செய்யலாம். 5 அடிக்கு ஒரு குழி அமைத்து நடவு செய்வதே சிறந்தது.

பாத்தியில் ஒரே ரகக் காய்கறி விதையை மட்டும் நட வேண்டும். அதாவது பாகல் விதை என்றால் பாகல் விதையும், பீர்க்கன் விதை என்றால் பீர்க்கன் விதை மட்டுமே நட வேண்டும். பாகல், பீர்க்கன் எனக் கலந்து நடவு செய்தால் நோய் தாக்குதல் அதிகரிக்கும். நன்றாகப் பழுத்த பழத்திலிருந்து முற்றிய விதைகளை எடுத்து அதைப் பஞ்சகவ்யாவில் நனைத்து 12 மணி நேரம் நிழலில் உலர வைத்த பிறகே நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு சுமார் 400 கிராம் விதைத் தேவைப்படும்.
நடவு செய்த விதைகள் 8 முதல் 10 நாள்களில் முளைத்து வெளியே வரும். பிறகு கடலைப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு தலா 10 கிலோ எடுத்து, அதை 200 லிட்டர் தண்ணீரில் இரண்டு நாள்களுக்கு ஊற வைத்தால் பிண்ணாக்குக் கரைசல் தயாராகிவிடும். தயார் செய்த பிண்ணாக்குக் கரைசலை நடவு செய்த 20-ம் நாளில் செடியின் வேர்ப் பகுதியில் ஒரு குழிக்கு அரை லிட்டர் வீதம் ஊற்ற வேண்டும். தொடர்ந்து 15 நாள்களுக்கு ஒரு முறை பிண்ணாக்குக் கரைசல் கொடுத்தால் செடி ஆரோக்கியமாக வளர்வதோடு விளைச்சலும் அதிகமாகக் கிடைக்கும்.