மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

அரை ஏக்கர் ரூ.1,10,000 நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுப் புடலை!

புடலையுடன் அய்யனார்
பிரீமியம் ஸ்டோரி
News
புடலையுடன் அய்யனார்

மகசூல்

சேலம் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது தாதகாப் பட்டி உழவர் சந்தை. அங்கு பல்வேறு காய்கறிகளுக்கு மத்தியில் ஆள் உயரத்தில் இருக்கும் நாட்டுப் புடலை (பாம்புப் புடலை என்றும் சொல் கிறார்கள்) பலரையும் வாங்கத் தூண்டுகிறது. கலப்பின குட்டைப் புடலை கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாக, நாட்டுப் புடலை கிலோ 14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நாட்டுப் புடலை விற்பனையில் முனைப்பாக இருந்த விவசாயி அய்யனார், ‘இது இயற்கையாக விளைவிக்கப்பட்ட நாட்டுப் புடலை. நம்பி வாங்கிக்கிட்டுப் போங்க’ என வாடிக்கையாளர்களிடம் சொல்லிச் சொல்லி விற்பனை செய்து கொண்டிருந்தார்.

நாமும் அய்யனாரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘வியாபாரம் முடியட்டும்... தோட்டத்துக்கு வாங்க பொறுமையா பேசலாம்’’ என்றவர், தன்னுடைய தோட்ட முகவரியைக் கொடுத்தார்.

புடலையுடன் அய்யனார்
புடலையுடன் அய்யனார்

சேலம் மாவட்டம், சாமக் குட்டப்பட்டி கிராமத்திலிருந்த அய்யனாரின் தோட்டத்துக்கு அன்று மாலை நேரில் சென்றோம். தன்னுடைய குடும்பத்தினருடன் புடலை அறுவடைப் பணியில் மும்முரமாக இருந்தவர், காய் பறிப்பு வேலையைத் தன்னுடைய மனைவி மற்றும் மகனிடம் விட்டுவிட்டு நம்மிடம் பேசினார்.

“நான் ஏழாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். குடும்பத்துல நான்தான் மூத்தவன். எனக்கு நாலு தங்கைங்க. அப்பாவுக்கு 5 ஏக்கர் நிலம் இருந்துச்சு. அவரை, திராட்சைச் சாகுபடி செய்தாங்க. விவசாய நேரம்போக மீதி நேரத்துல வாடகைக்கு மாட்டுவண்டி ஓட்டுவாரு. ஆள் பற்றாக்குறையால குடும்பத்துல எல்லோரும் சேர்ந்தே அவரைக்காய் பறிப்போம். அப்பா அவரைக்காய் மூட்டையை மாட்டு வண்டியில மார்க்கெட்டுக்கு எடுத்துக்கிட்டு போய் வித்துட்டு வருவாரு. டவுனிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்துல எங்க கிராமம் இருக்குறதால காய்கறியைக் கொண்டு போய் வித்துட்டு வர்றதிலயே பாதி நாள் போயிடும். ஓய்வும் கிடைக்காது. விவசாய வேலையும் நடக்காது. இதனால, என்னோட படிப்புக்கு முழுக்குப் போட்டுட்டு, அப்பாவுக்குத் துணையா விவசாய வேலையில இறங்கிட்டேன். இப்போ எனக்கு 52 வயசாகுது.

15 வருஷத்துக்கு முன்ன, களை எடுக்க, விவசாய வேலைக்கு ஆள் கிடைச்சாங்க. ஓடை வேலை (100 நாள் வேலை) வந்த பிறகு, களை எடுக்கக்கூட ஆள் கிடைக்குறதில்ல. குடும்பத்தில இருக்க எல்லோருமே சேர்ந்து செஞ்சாதான் விவசாயம்னு ஆயிடுச்சு. இதனால நம்மால எந்தளவுக்குப் பராமரிக்க முடியுமோ அதுக்குத் தகுந்த மாதிரி பயிர் செய்ய வேண்டியிருக்கு’’ என்றவர், புடலைச் சாகுபடி பற்றிப் பேசினார்.

பந்தலிலே ஒய்யாரமாகத் தொங்கும் புடலங்காய்கள்
பந்தலிலே ஒய்யாரமாகத் தொங்கும் புடலங்காய்கள்

‘‘பந்தல் காய்கறியில அரை ஏக்கர்ல புடலை பயிர் பண்ணிட்டு வர்றோம். முக்கால் ஏக்கரை அவரைப் பயிர் செய்யத் தயாரா வெச்சிருக்கேன். 40 சென்ட் அளவுக்கு வாழைத் தோப்பும், 50 சென்ட் அளவுக்குக் கொய்யா தோப்பும் இருக்கு. ஒரு ஏக்கர் அளவுக்கு மாட்டுத் தீவனமும், 2 ஏக்கர் அளவுக்கு மா மரங்களும் இருக்குது.

திராட்சை பயிர் பண்ணும்போது திண்டுக்கல் பகுதியில இருந்து நாட்டுப் புடலை விதை வாங்கிட்டு வந்து ஊன்றிப் பார்த்தோம். அது, நல்லா வரவே, நாட்டுப் புடலையும் எங்கள் பந்தல் காய்கறியில் இணைஞ்சிடுச்சு. தொடர்ந்து 20 வருஷமா புடலை பயிர் செய்றோம். ஒண்ணுரெண்டு புடலையை அறுக்காம அப்படியே விட்டுட்டா விதை தயாராகிடும். அதை அடுத்த சாகுபடிக்குப் பயன்படுத்திக்குவோம்.

ஆரம்பத்தில விதையை மட்டுமே ஊன்றிப் பயிர் செஞ்சோம். இப்போ, நாத்து விட்டு, அதை எடுத்து நடவு பண்ணி சாகுபடி செய்றோம். இப்படிச் செய்றது மூலம், ஒரு மாசத்துக்கு ரெண்டு களை எடுக்க வேண்டிய வேலை மிச்சமாகுது. விதை முளைக்குமா, முளைக் காதானு யோசிக்க வேண்டிய அவசியமில்ல. கார்த்திகை மாசம் விதை ஊன்ற ஆரம்பிப்போம். மாசி மாசத்திலிருந்து அறுவடை செய்ய ஆரம்பிப்போம்.

பொதுவாக, பந்தல் காய்கறியில புடலைக்குக் களை, பராமரிப்புச் செலவு ரொம்பக் குறைவு. புடலைக்கொடி பந்தல்ல நல்லா ஓடி நிழல் கட்டிடும். அதனால பிற்பகுதியில களை பிரச்னை இருக்காது. களை வெட்ட ‘பவர் டில்லர்’ (களையெடுக்கும் கருவி) வாங்கி வெச்சிருக்கேன். பயிர் இருக்கிற பகுதியில நாங்க களை பிடுங்கிடுவோம். மத்த பகுதியில பவர் டில்லர் மூலம் களை எடுத்துடுவேன்.

எங்க வீட்டுல 4 கறவை மாடுகளும், 15 ஆடுகளும் இருக்கு. கிடைக்குற சாணத்தையும், ஆட்டுப் புழுக்கையும் நல்லா தூள் பண்ணி செடிகளுக்குப் போடுறதால உரச் செலவு பெருசா இல்ல. ரசாயன உரங்களைப் போட்டா செடி அதிக அளவுல கொடி ஓடும். ஆனா, சீக்கிரமா பழுத்துடும். அதனால இயற்கை உரங்கள் கொடுத்தா மட்டும் போதும். நானும் ஆரம்பத்தில ரசாயன உரங்களைப் பயன்படுத்திக்கிட்டு வந்தேன். இப்போ ரெண்டு மூணு வருஷமா சேலம் சந்தியூர் கேவிகே-வில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் எங்கத் தோட்டத்தைப் பார்வையிட வர்றாங்க. அவங்க, இயற்கை முறையில காய்கறியை விளைய வெச்சு பாருங்க செலவும் குறையும், காய்கறி வாங்குறவங்ககிட்ட இயற்கை முறையில விளைவிக்கப்பட்டதுனு சொல்லியே விற்கலாம்னு சொன்னாங்க. அதைத்தான் கடைப்பிடிச்சுட்டு வர்றேன்.

புடலை அறுவடை
புடலை அறுவடை

புடலையில வீரிய ரகம் 5 முதல் 6 மாசம் வரை இருக்கும். ஆனா, நாட்டு ரகம் 9 மாசம் வரைக்கும் இருக்கும். பொதுவா, வீரிய ரகத்தில விளைச்சல் அதிகமாகவே இருக்கும். ஆனா, முன்கூட்டியே முடிஞ்சிடுறதால முழுமையான பலன் கிடைக்காமப் போயிடும். ஆனா, நாட்டு ரகம் தொடர்ந்து பலன் கொடுக்குறதால விலை ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிச்சு, வீரிய ரகத்தை தாண்டி கூட நல்ல லாபம் கொடுக்கும். வீரிய ரகத்தோட நாட்டுப் புடலை ரெண்டு மூணு ரூபாய் கூடுதலாகவே விலை நிர்ணயிக்கிறாங்க. இதனால, நமக்கு நாட்டு ரகம் போட்டா லாபம்தான். ஒரே சிரமமான விஷயம், ஹோட்டல்காரங்க, காய்கறி கடைகாரங்க நாட்டுப் புடலையை அதிகமாக வாங்க மாட்டாங்க. காரணம், அதோட நீளம், விலை கொஞ்சம் கூடுதல்ங்கிறதுதான்” என்று சொல்லிக் கொஞ்சம் இடைவெளி விட, அறுவடை பணியிலிருந்த அவருடைய மனைவி அமுதா தொடர்ந்தார்.

“புடலங்காய் காய்க்கும்போது குருவிகள் ஏதோ பழம்னு நினைச்சு புடலங்காய் பிஞ்சைக் குத்தித் தின்ன பார்க்கும். அதைத் தடுக்க, தோட்டத்தில பல பகுதியில தக்காளிச் செடி வெச்சிருக்கோம். குருவிங்க தக்காளிப் பழத்தைக் கொத்தி தின்னுட்டு போயிடுது. இதனால புடலங்காய் பிஞ்சுக்கு எந்தப் பாதிப்பும் வர்றதில்ல. புடலங்காய் அறுக்குறதும் சுலபம். சாயங்கால நேரத்தில 5 மணிக்கு வயலுக்கு வந்து, ஒரே ஆள், ஒரு மணி நேரத்தில 100 கிலோவுக்கு மேல பறிச்சிடலாம். மத்த காய்கறிகளை இவ்வளவு ‘ஈஸி’யா பறிக்க முடியாது. ஆனா, மத்த காய்கறிகளைச் சுலபமா மார்க்கெட்டுக்கு எடுத்துட்டுப் போயிடலாம். நாட்டுப் புடலை நீளமா இருக்குறதால உடையாம கவனமா எடுத்துட்டு போகணும். அதற்குத் தகுந்த மாதிரி அடுக்கி வைக்கணும்” என்றார்.

பறித்த புடலங்காயை அடுக்கிக்கொண்டே எவ்வளவு செலவாகும் என்பது குறித்துப் பட்டியலிட்ட அய்யனார்,

“வாரத்துக்கு மூணு நாள்கள் அறுவடை. 100 கிலோவிலிருந்து 150 கிலோ வரைக்கும் காய் பறிக்கலாம். உழவர் சந்தையில 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகுது. சில நேரம் 40 ரூபாய் வரைகூட விற்பனையாகுது. 6 மாசம் வரைக்கும் காய் பறிக்கலாம். அதாவது, 24 வாரம் வரை காய் பறிக்கலாம். வாரம் மூணு நாள் கணக்குல 70 முதல் 75 நாள் காய் அறுவடை செய்யலாம். அதன் மூலம் அரை ஏக்கர்ல இருந்து 7,500 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ சராசரி விலையாக 20 ரூபாய்னு வெச்சுகிட்டால் கூட 1,50,000 ரூபாய் வருமானமாக் கிடைக்கும்.

இதுல, எரு வைக்க 10,000 ரூபாய், உழவுக்கு 5,000, களைவெட்ட 5,000, கொடி கட்ட 5,000 ரூபாய், வேப்பம் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு மூணு தடவை வைக்கணும். அதுக்கு, 4,500 ரூபாய். வேப்பெண்ணெய் கரைசல் தெளிக்க (5 முறை) 2,500 ரூபாய், பழ ஈ இனக்கவர்ச்சி பொறி வைக்க 500 ரூபாய். போக்குவரத்துச் செலவு 7,500-னு மொத்தம் 40,000 ரூபாய் செலவாகும். இதைக் கழிச்சுட்டா அரை ஏக்கர்ல இருந்து 1,10,000 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு தடவை பந்தல் அமைச்சா, அதை 10 வருஷம் பயன் படுத்தலாம். அதுனால அதைச் செலவுக் கணக்குல சேர்க்கல” என்று உற்சாகத்துடன் சொல்லி முடித்தார்.


தொடர்புக்கு, அய்யனார்,

செல்போன்: 93612 31796

இப்படித்தான் புடலை சாகுபடி

நாட்டுப் புடலை சாகுபடி குறித்து அய்யனார் சொன்ன தகவல்கள் இங்கே பாடமாக...

புடலை நடவு செய்யும் வயலை நான்கு முறை நன்கு உழவு செய்ய வேண்டும். செம்மண், கரிசல் மண், வண்டல் மண்ணில் நன்கு வேர் பரவும். அரை ஏக்கருக்கு மூன்று டிராக்டர் எரு கொட்ட வேண்டும். மாட்டு எருவுடன் ஆட்டு எரு இருந்தால் சிறப்பு. அது கிடைக்காத பட்சத்தில் மாட்டுச் சாணமே போதுமானது. எரு போடும்போதே உயிர் உரங்கள் ஒரு கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 50 கிலோ கலந்து போட வேண்டும்.

புடலையுடன் அய்யனார்
புடலையுடன் அய்யனார்



எரு போடும்போது வயல் முழுவதும் பரப்பாமல், புடலை விதை நடவுசெய்யும் வரிசையில் மட்டும் எருவை பரப்பினால் போதுமானது. இதனால், எரு வீணாகாமல் செடிக்கு மட்டும் உதவும் வகையில் இருக்கும். செடிக்குச் செடி 3 அடி, வரிசைக்கு வரிசை 8 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இடைவெளியைக் குறைத்தால் பந்தலில் கொடி அதிகமாக ஓடித் தொங்கலாகிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் சிறந்தது.

விதை ஊன்றி 12 நாள்கள் ஆன பிறகு, முளைப்பு வரும். 20 நாளில் ஒரு களை எடுத்து விட வேண்டும். விதை ஊன்றி 30 நாள்களுக்குப் பிறகு, கொடி ஓட ஆரம்பிக்கும். அந்தச் சமயத்தில் பந்தல் ஏற்றிவிடுவதற்கான சணல் கயிற்றைக் கொண்டு கொடி கட்டி விட வேண்டும். முதன்மையான தண்டுக்கொடியை விட்டுவிட்டு மற்றதைக் கிள்ளி விட வேண்டும். பந்தல் ஏறும்போது முதன்மையான கொடி மட்டுமே மேலே ஏற்றி விட வேண்டும். பக்கவாட்டில் வருவதைக் கிள்ளி விட வேண்டும். கிள்ளி விடாவிட்டால் கொடி அதிகமாகப் படர்ந்து பந்தல் கீழே தொங்க ஆரம்பித்துவிடும். கொடி ஓட இடம் இல்லாமல் காய்ப்பும் குறைந்துவிடும் என்பதால் பந்தலில் இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.

75-ம் நாளில் பிஞ்சு பிடிக்க ஆரம்பிக்கும். இப்போது பழ ஈக்கள் சேதாரத்தை உண்டு பண்ணும். அதைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி கட்டிவிட வேண்டும். 90-ம் நாளிலிருந்து காய் பறிக்க ஆரம்பிக்கலாம்.

புடலையுடன் அய்யனார்
புடலையுடன் அய்யனார்

இலை மற்றும் பூக்களில் ஆரஞ்சு நிற வண்டு ஓட்டை போடும். அதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மி.லி வேப்பம் எண்ணெயை ஒட்டும் திரவத்துடன் கலந்து 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

பந்தலில் கொடி ஏற ஆரம்பித்தவுடன் 30 கிலோ கடலைப் பிண்ணாக்கை ஊற வைத்துத் தண்ணீர் பாயும்போது கலந்து விட வேண்டும். இதன் மூலம் தண்டு வளர்ச்சி நல்ல முறையில் இருக்கும். நிறைய பூக்கும். பூக்கள் கொட்டாமல் இருக்கவும், காய்ப்புப் திறன் அதிகரிக்கவும் தேமோர் கரைசலை வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும். இதன்மூலம் மகசூல் கூடும். மழைக்காலத்தில் பூக்கள் கொட்டிவிடும் என்பதால் காய்ப்புப் திறன் குறைவாக இருக்கும். ஆனால், அந்தச் சமயத்தில் விலை அதிகரிக்கும். மழைக்காலத்தில் விதை ஊன்றினால், எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் கோடைக்காலத்தில் நல்ல விளைச்சலுடன் அறுவடை செய்யலாம். அலைச்சல் இல்லாமல் நல்ல வருமானமும் பார்க்கலாம்.