ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

1 ஏக்கர்... ரூ.2,51,000 ஜீரோ பட்ஜெட் சம்பங்கியில் செழிப்பான லாபம்!

சம்பங்கி
பிரீமியம் ஸ்டோரி
News
சம்பங்கி

மகசூல்

சம்பங்கி மலர் சாகுபடியில் நல்ல வருமானம் எடுத்து வருகிறார் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குவாகம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கராசு.

ஒரு பகல்பொழுதில் இவருடைய சம்பங்கி தோட்டத்துக்குச் சென்றோம். பூ பறித்துக் கொண்டிருந்த தங்கராசு, இன்முகத்தோடு நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘உணவுப் பொருள்களை இயற்கை முறையில சாகுபடி செஞ்சா ஒரு பிரயோஜனம் உண்டு. மலர் சாகுபடியில கூடவா, ரசாயனத்தைத் தவிர்க்கணும்னு சிலர் கேட்குறாங்க. இயற்கை முறையில சாகுபடி செய்றதுனால, என்னோட சம்பங்கி பூ, நல்லா தெளிவா இருக்கு. சீக்கிரத்துல வாடிப்போகுறதில்ல. இதனால் என்னோட சம்பங்கிக்கு வியாபாரிகள் மத்தியில தனி மரியாதை. ரசாயன இடு்பொருள்கள் தவிர்க்குறதுனால, மிக முக்கியமான நன்மை, பூச்சிகளோட நாம போராட வேண்டிய தில்லை’’ என்று சொன்னவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

தங்கராசு
தங்கராசு

‘‘எங்களோடது விவசாயக் குடும்பம். ஸ்கூல், காலேஜ் படிச்சப்பவே விவசாய வேலைகள் பார்ப்பேன். நான் முதுகலை பட்டப்படிப்பு முடிச்சுட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமா தேர்வு ஆகி பல அரசு துறைகள்ல வேலை பார்த்தேன். கடைசியா, புள்ளியல் துறையில உதவி இயக்குநராக இருந்து, 2009-ம் வருஷம் ஓய்வு பெற்றேன். அதுக்குப் பிறகு, முழுமையாக விவசாயத்துல இறங்கிட்டேன். ரசாயன முறையில நிலக்கடலை, கம்பு உட்பட இன்னும் சில பயிர்கள சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தேன். இந்தச் சூழ்நிலையிலதான் சம்பங்கிச் சாகுபடி செஞ்சா நல்ல வருமானம் கிடைக்கும்னு வேளாண்மைத்துறை அதிகாரிகள் சொன்னாங்க.

அதேமாதிரி பெரம்பலூர்ல இருக்குற என்னோட நண்பர் ஒருத்தரும் சொல்ல, 2019-ம் வருஷம், ஒரு ஏக்கர்ல ‘பிரஜ்வல்’ ரக சம்பங்கிப் பூ சாகுபடியைத் தொடங்கினேன். மலர் சாகுபடியைப் பத்தி எனக்குப் பெருசா எதுவும் தெரியாது. வேளாண்மைத்துறை அதிகாரிகளோட ஆலோசனைபடிதான் விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தேன். அப்போதான், சாறு உறிஞ்சும் பூச்சி தாக்க ஆரம்பிச்சது.

சம்பங்கி அறுவடை
சம்பங்கி அறுவடை

அதுக்கு என்ன மருந்து அடிக்கணும்னு கேட்டப்போ, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளோட பெயர்களைச் சொன் னாங்க. அதையெல்லாம் வாங்கி அடிச்சுப் பார்த்தேன். எந்தப் பலனும் இல்ல. அந்த நேரத்துல எனக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல நஷ்டம் ஆயிடுச்சு. சின்ன வயசா இருக்குறப்ப எங்கப்பா, இயற்கை இடுபொருள்கள் மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செஞ்சது ஞாபகம் வந்துச்சு. இயற்கை விவசாயம் செய்யணும்னு முடிவெடுத்தேன். ஆனா, அதை எப்படிச் செய்யணும்னு எனக்குத் தெரியாது.

அந்த நேரத்துலதான் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், மகாராஷ்டிராவுக்கு போய் சுபாஷ் பாலேக்கரை சந்திச்சு இயற்கை விவசாயத்த கத்துக்கிட்டோம். இயற்கை முறையில மண்ணை எப்படி வளப்படுத்தலாம், என்னென்ன இடு பொருள்கள் கொடுக்கலாம், என்னென்ன பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தலாம்னு, அவர் கத்துக் கொடுத்த விஷயங்கள் இயற்கை விவசாயத்து மேல எனக்கு நம்பிக்கையைக் கொடுத்துச்சு. மகசூல் குறைவா கிடைச்சாலும் பரவாயில்லை... இனிமே எக்காரணத்தைக் கொண்டும் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்தக் கூடாதுனு முடிவெடுத்தேன்.

சம்பங்கி சாகுபடி
சம்பங்கி சாகுபடி

எனக்கு மொத்தம் 5 ஏக்கர் நிலம். இது எல்லாத்துலயுமே முழுமையா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். ஒரு ஏக்கர்ல சம்பங்கி, 2 ஏக்கர்ல நிலக்கடலை, 2 ஏக்கர்ல கம்பு சாகுபடி செஞ்சிருக்கேன்’’ எனச் சொன்னவர், இயற்கை முறையில் சம்பங்கி சாகுபடி அனுபங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

‘‘என்னோட சம்பங்கிப் பூக்களைக் கும்பகோணம் பூ மார்க்கெட்டுலதான் விற்பனை செய்றேன். மற்ற ரகச் சம்பங்கியைவிட இது பார்க்குறதுக்குப் பெருவெட்டா இருக்குறது னாலயும், சீக்கிரத்துல வாடிப்போயிடாமல் தரமா இருக்குறதுனாலயும், என்னோட பூவுக்கு, அங்கவுள்ள வியாபாரிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்குறாங்க.

மல்லி, பிச்சிப் பூக்களோட வரத்து அதிகமா இருந்தா சம்பங்கியோட விலை கொஞ்சம் குறைவா இருக்கும். மல்லி, பிச்சியோட வரத்து குறைவா இருந்தா 1 கிலோ சம்பங்கி விலை 100 ரூபாயைத் தாண்டிடும். இது தவிர, முகூர்த்த நாள்கள், பண்டிகை நாள்கள், திருவிழாக்கள், விரத நாள்கள்ல சம்பங்கி விலை அதிகமா இருக்கும். சம்பங்கிக்கு ஒரு கிலோவுக்குக் குறைந்தபட்சம் 40 ரூபாயில் இருந்து அதிகபட்சமா 200 ரூபாய் வரைக்கும் கும்பகோணம் மார்க்கெட்ல விலை கிடைக்குது.

செலவு, வரவு கணக்கு
செலவு, வரவு கணக்கு

எங்களோட சம்பங்கிக்கு இப்ப ஒன்றரை வருஷமாகுது. விதைக்கிழங்கு நட்ட மூணாம் மாசத்துல இருந்து பூ பறிச்சுக்கிட்டு இருக்கோம். தினமும் பூ பறிப்போம். இந்த ஒரு வருசத்துல மொத்தம் 8,800 கிலோ சம்பங்கிப்பூ மகசூல் கிடைச்சிருக்கு. ஒரு கிலோவுக்குச் சராசரி விலையா 45 ரூபாய் வீதம் 3,96,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல 1,45,000 ரூபாய் செலவு போக மீதி 2,51,000 ரூபாய் நிகர லாபமாக் கிடைச்சிருக்கு. இதுவே எனக்கு நிறைவான லாபம்தான். இன்னும் போகப் போக மகசூல் கூடிக் கிட்டேதான் இருக்கும். சம்பங்கியை இயற்கை முறையில பராமரிச்சுட்டு வந்தா 3 வருஷம் வரைக்கும் தொடர்ந்து மகசூல் எடுத்துக்கிட்டே இருக்கலாம்” என மகிழ்ச்சியோடு பேசி முடித்த தங்கராசுவிடம் விடைப் பெற்றுக் கிளம்பினோம்.

தொடர்புக்கு, தங்கராசு,

செல்போன்: 94420 41514

இப்படித்தான் சம்பங்கி சாகுபடி

ஒரு ஏக்கரில் சம்பங்கி சாகுபடி செய்ய, தங்கராசு சொல்லும் செயல்முறை பாடமாக இங்கே இடம் பெறுகிறது.

வடிகால் வசதியுள்ள நிலம் ஏற்றது. சம்பங்கி சாகுபடியைத் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே, இதற்கான நிலத்தில் தலா 20 கிலோ சணப்பு, தக்கைப்பூண்டு விதையைப் பரவலாகத் தூவ வேண்டும். 40 - 50 நாளில் பூ பூத்த நிலையில், தண்ணீர் பாய்ச்சி, பசுந்தாள் உரப் பயிர்களை மடக்கி உழ வேண்டும். நிலத்தை 10 நாள்கள் காயவிட்டு, மீண்டும் ஒரு முறை உழவு செய்து, 7 நாள்கள் காய விட வேண்டும். பின்னர், 20 டன் மாட்டு எருவுடன், 300 கிலோ வேப்பம் பிண்ணாக்கை கலந்து அடியுரமாக இட்டு உழவு செய்ய வேண்டும். 2 நாள்கள் கழித்து, மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். பாத்திக்குப் பாத்தி இடைவெளி ஒன்றரை அடி. பாத்தியின் உயரம் அரையடி, அகலம் இரண்டரை அடி இருக்க வேண்டும்.

சம்பங்கி சாகுபடி
சம்பங்கி சாகுபடி

மேட்டுப்பாத்தி அமைத்த பிறகு, சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 100 அடி நீளம், இரண்டரை அடி அகலத்தில் பிளாஸ்டிக் மல்ச்சிங் தாளை எல்லாப் பாத்திகளிலும் விரிக்க வேண்டும். பொதுவாக மல்ச்சிங் தாள் மூன்று அடி அகலத்தில் இருக்கும். மீதியுள்ள அரை அடியை மடக்கி விடலாம். பின்னர், குழிக்குக்குழி 2 அடி இடைவெளியில், 3 முதல் 5 இன்ச் ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். செடி வளர போதுமான இடைவெளி தேவை. எனவே ஜிக் ஜாக் (முக்கோண முறை) முறையில் நடவு செய்தால் செடி வளரும்போது அடர்த்தி அதிகமாவதோடு, செடி ஒன்றுக்கொன்று மோதாமல் இருக்கும்.

விதைநேர்த்தி

ஏக்கருக்கு 350 கிலோ, விதைக்கிழங்கை நிழலில் 5 நாள்கள் காயவைத்து, அடுத்தநாள் 200 லிட்டர் தண்ணீரில் தலா 1 கிலோ டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து கரைசலாக்கிக்கொள்ள வேண்டும். தனியாக வேறொரு பிளாஸ்டிக் கேனில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். தனியாக இன்னொரு சிறிய கேனில், ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள 20 லிட்டர் டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனஸ் உயிர் உரக் கரைசலில், 20 லிட்டர் ஜீவாமிர்தகரைசலை ஊற்றி ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதில் விதைக்கிழங்கைப் போட்டு 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும் (ஒரு முறை விதைக்கிழங்கு ஊறவைக்கப் பயன்படுத்திய கரைசலை மீண்டும் விதைக்கிழங்கு ஊறவைக்கப் பயன்படுத்தக் கூடாது). கரைசலில் ஊற வைக்கப் பட்ட விதைக்கிழங்கை 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்திக் குழியில் ஊன்றி மண் அணைத்து விட வேண்டும். அன்றே முதல் நீர் விட வேண்டும். பின்னர், மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து 3 நாள்களுக்கு ஒரு முறையோ, 5 நாள்களுக்கு ஒரு முறையோ தண்ணீர் விட வேண்டும்.

சம்பங்கி சாகுபடி
சம்பங்கி சாகுபடி

விதைக்கிழங்கு ஊன்றிய 15-ம் நாள் தலா 1 லிட்டர் பாஸ்போபாக்டீரியா திரவம், அசோஸ் பைரில்லம் திரவம் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து சொட்டுநீர்ப் பாசனம் மூலம் விட வேண்டும். 3 நாள்கள் கழித்து டிரைக்கோடெர்மா விரிடி 1 கிலோ, சூடோமோனஸ் 1 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து சொட்டுநீர்ப் பாசனம் மூலம் விட வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இதுபோல் கொடுக்க வேண்டும். விதைக்கிழங்கு ஊன்றிய ஒரு மாதத்துக்குப் பிறகு 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து சொட்டுநீர்ப் பாசனம் மூலம் விட வேண்டும்.

அடுத்த 15 நாள்கள் கழித்து, 200 லிட்டர் அமுதக் கரைசலை சொட்டுநீர்ப் பாசனம் மூலம் விட வேண்டும். இதுபோல் சுழற்சி முறையில் 15 நாள்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யாவையும், அமுதக்கரைசலை மாற்றி மாற்றிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் தலா 2 கிலோ வீதம் எருவும், 300 கிராம் வேப்பம்பிண்ணாக்கும் இட வேண்டும். இந்த அளவுக்கு இயற்கை உரம் கொடுக்கும்போதுதான் விளைச்சல் குறைவில்லாமல் கிடைக்கும்.

இடுபொருள்களுடன்
இடுபொருள்களுடன்

கிழங்கு ஊன்றியதிலிருந்து 12-15-ம் நாளில் முளைப்பு தெரியும். 30 முதல் 35-வது நாளில் தண்டு உருண்டு திரளத் தொடங்கும். 45-50-ம் நாளில் அரையடி உயரத்தில் செடிகள் வளர்ந்து நிற்கும். 65-70-ம் நாளில் மொட்டுகள் உருவாகியிருக்கும். 85-90-ம் நாளில் பூ பூக்க ஆரம்பிக்கும். 90-வது நாளில் இருந்து பூ பறிக்க ஆரம்பிக்கலாம். ஆரம்பத்தில் அரைக் கிலோ, ஒரு கிலோ எனக் குறைவான மகசூல் கிடைக்கும். அதைத் தொடர்ந்து படிபடியாக மகசூல் அளவு அதிகரிக்கும்.

மாவுப்பூச்சி தாக்குதலுக்கு 3-ஜி கரைசல்

வெயில் காலத்தில்தான் மாவுப்பூச்சியின் தாக்குதல் இருக்கும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிவற்றைத் தலா 1 கிலோ எடுத்து உரலில் போட்டு இடித்து, வெள்ளைத் துணியில் கட்டி 10 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் 7 நாள்கள் வரை ஊற வைத்து வடிகட்ட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

தங்கராசு
தங்கராசு

களையைக் கட்டுப்படுத்த மல்ச்சிங் தாள்

சம்பங்கியைப் பொறுத்தவரை களைகளைக் கட்டுப்படுத்துவதென்பது பெரும் சவாலானது. அதிக அளவில் களைகள் வளர்ந்துகொண்டே இருக்கும். 20 நாள்களுக்கு ஒரு களை எடுக்க வேண்டியதிருக்கும். இதற்கு அதிக செலவாகும். மல்ச்சிங் தாள்களைப் பாத்திகளில் விரிப்பதால் களைகள் முழுமையாகவே கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் களை எடுக்கும் செலவு மிச்சம். மண்ணின் ஈரப்பதமும் பாதுகாக்கப்படுகிறது. பறவைகள், விலங்குகள் தொந்தரவு ஏதும் இல்லாவிட்டால் இரண்டு ஆண்டுகள் வரையிலும் மல்ச்சிங் தாள்கள் தாக்குப் பிடிக்கும்.