மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

70 ஏக்கர் ஒன்றரைக் கோடி வருமானம்... வறட்சி பூமியில் வளமான பண்ணை!

பண்ணையில் தரணி முருகேசன்
பிரீமியம் ஸ்டோரி
News
பண்ணையில் தரணி முருகேசன்

முயற்சி

வறட்சி மிகுந்த ராமநாதபுரம் மாவட்டத்தில், ஆண்டு முழுவதும் பாரம்பர்ய நெல் ரகங்கள் உட்பட பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்து சாதனை படைத்து வருகிறார் விவசாயி தரணி முருகேசன். விவசாயத்துடன் மாடு, கோழி வளர்ப்பு என உபதொழில்களையும் இணைத்து ஒருங்கிணைந்த பண்ணையம் செய்து முன்மாதிரி விவசாயியாகத் திகழ்ந்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் ராமநாதபுரத்தில் இயற்கை விவசாயத்தில் இவர் நிகழ்த்திக் காட்டியுள்ள மாற்றங்கள் ஏராளம். 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த பசுமை விகடன் இதழில் ‘நேற்று சீமைக்கருவேலம் காடு, இன்று ஆண்டுக்கு 30 லட்சம் தரும் காடு... 52 ஏக்கரில் அற்புதப் பண்ணையம்’ என்ற கட்டுரையின் மூலம் இவர், பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.

ஒரு காலைப் பொழுதில் ராமநாத புரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் எட்டிவயல் கிராமத்தில் உள்ள அவருடைய பண்ணையில் முருகேசனைச் சந்தித்தோம். சீமைக் கருவேல மரங்கள் சூழ்ந்திருக்க, அதன் நடுவே பசுமைத்தீவுபோல காட்சி தந்தது அவரது இயற்கை விவசாயப்பண்ணை.

மலர் சாகுபடி
மலர் சாகுபடி

‘‘மசானபு ஃபுகோகா எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகம்தான் நான் இயற்கை விவசாயம் செய்ய உந்துகோலாக இருந்தது. ராமநாதபுரம் முன்னாள் ஆட்சியர் நந்தகுமார், நம்மாழ்வார், பசுமை விகடன் இணைந்து இயற்கை விவசாயப் பயிற்சி பட்டறை நடத்துனாங்க. இந்த வயல்லதான் வகுப்பு நடந்துச்சு. அந்த வகுப்புல இயற்கை விவசாயத்துல எனக்கிருந்த பல சந்தேகங் களுக்குத் தெளிவான விடை கிடைச்சது. தொடர்ந்து நம்மாழ்வாரோட சிஷ்யரான ஏகாம்பரம் கொஞ்சநாள் என் கூடவே இருந்ததும் நான் முழுமையான இயற்கை விவசாயியா மாறக் காரணமா அமைச்சிருச்சு.

பொதுவா, ஒரு நிலத்துல விவசாயம் செய்றதுக்கு முன்ன, மண் மாதிரி எடுத்துச் சோதனை செஞ்சு, பரிசோதனை முடிவு களோட அடிப்படையில தேவையான ஊட்டசத்துகளைக் கொடுத்து விவசாயம் செய்றது பொது வான நடைமுறை. ஆனா, இயற்கை விவசாயம் செய்யுற நிலத்துல மண் பரிசோதனை அவசியம் இல்லைனு நம்மாழ்வார் ஐயா சொல் வாங்க. அதை இயற்கை விவசாயம் மூலமா என்னு டைய நிலத்துல உறுதிப்படுத்தி யிருக்கேன்.

கேரட், முள்ளங்கியுடன்
கேரட், முள்ளங்கியுடன்

இந்த 50 ஏக்கர் விவசாயப் பண்ணை களிமண் தரை, உப்புத் தண்ணி. பொத்தேந்தல் பகுதியில 13 ஏக்கர் வண்டல் மண், நல்ல தண்ணி இருக்கு. தெற்குத்தரவையில 7 ஏக்கர் நிலம் இருக்கு. நல்ல மண் வளம். ஆனா, உப்புத் தண்ணி. இப்படி வேற வேற தன்மையுள்ள நிலங்கள்ல எல்லா வகையான பயிர்களையும் சாகுபடி செஞ்சு, அந்த முயற்சியில் வெற்றியும் அடைஞ்சிருக்கேன்’’ என்றவர், தனது விவசாய முறைகள் பற்றிப் பகிர்ந்து கொண்டார்.

புடலை
புடலை

நுண்ணீர் பாசனம் மேலாண்மை

‘‘ராமநாதபுரம் மாவட்டத்துல பெரும் பாலும் வானம் பார்த்த பூமி. மானாவாரி விவசாயம்தான். ஒவ்வொரு வருஷமும் நவம்பர், டிசம்பர் மாசத்துலதான் மழை பெய்யும். அந்தத் தண்ணியைச் சேமிச்சு வெச்சு, விவசாயம், குடிநீர்த் தேவைகளைச் சமாளிக்குறோம். இந்தப் பண்ணையில 20 அடி ஆழத்துல 6 பண்ணைக்குட்டைகள் அமைச்சு, மழைநீரைச் சேமிச்சு, அது மூலமா இயற்கை விவசாயம் செய்றேன். தெற்குதரவை, பொத்தேந்தல் பண்ணைகளை ஒருங்கிணைந்த பண்ணையமா உருவாக்கிட்டு இருக்கேன். கிடைக்குற தண்ணியை வெச்சு, எப்படி விவசாயம் செய்றதுனு யோசிச்சேன். வேளாண்துறை நண்பர்கள் மூலம் (Micro Irrigation System) நுண்ணீர்ப் பாசனம் மேலாண்மை பற்றித் தெரிஞ்சுகிட்டேன். ‘ஸ்பிரிங்ளர்’, ‘ரெயின் கன்’ அமைச்சேன். அது மூலமா, மழைச்சாரல் போல எல்லாப் பயிர்களுக்கும் தண்ணி கொடுக்க முடியுது. தண்ணி ஆவியாகுறது குறைஞ்சு, நிலத்தில எப்பவும் ஈரப்பதம் இருக்குறதால பயிர்கள் செழிப்பா வளருது’’ என்றவர், தான் சாகுபடி செய்யும் பயிர்களைப் பட்டியலிட்டார்.

தர்பூசணியுடன் தரணி முருகேசன்
தர்பூசணியுடன் தரணி முருகேசன்

‘‘மலைப்பகுதியில விளையுற காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி பயிர்களை ராமநாதபுரத்துல சாகுபடி செய்றேன். இது வறண்ட பூமி. சீமைக்கருவேல் முள் மட்டும்தான் வரும்னு பொதுவான நம்பிக்கை வெளிமாவட்ட மக்கள்கிட்ட இருக்கு. அதை மாத்தணும்னு நினைச்சேன். வெளிமாவட்ட விவசாயிகளை விடுங்க... முதல்ல எங்க மாவட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கத்தான் மலைப் பயிர்களைச் சாகுபடி செய்றேன். கேரட், முட்டைக்கோஸ் நல்லா வருது. ஆனா, மலைப்பகுதியில விளையுற அளவுக்கு உருண்டையா, அந்தக் கனத்துல இன்னும் வரல. கேரட் முதல் முயற்சியில விரல் அளவுக்குத்தான் வந்துச்சு. தொடர்ந்து இயற்கை முறையில சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் சாகுபடி செய்றதுனால கொஞ்சம் கொஞ்சமா அளவு அதிகமாகிட்டே போகுது.

மிளகாய், வெண்டைக்காய், கொத்தவரை, கத்திரி, முருங்கைனு பல வகைக் காய்கறிப் பயிர்கள், வல்லாரை, கரிசலாங்கண்ணி, தண்டுக்கீரை, அகத்திக்கீரை, அரைக்கீரைனு பல வகைக் கீரைகள், சப்போட்டா, நெல்லி, கொய்யா, மாதுளை, பப்பாளி, தர்பூசணி, வாழை, சீதா, நாவல் மாதிரியான பழ வகைகள்,
ரோஜா, மல்லிகை, சம்பங்கி, செண்டுமல்லினு பூ வகைகள், புடலை, பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், சர்க்கரைப் பூசணி, வெள்ளைப் பூசணி மாதிரியான கொடி வகைப் பயிர்கள், தென்னை, மகோகனி, வேங்கை, தோதகத்தி, செம்மரம், சந்தனம், அத்தி உள்ளிட்ட மர வகைகளைப் பயிர் பண்ணியிருக்கேன்.

சுரைக்காய்
சுரைக்காய்

எள், நிலக்கடலை, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம், கம்பு மாதிரியான புஞ்சை தானியங்களை ஊடுபயிராச் சாகுபடி பண்ணியிருக்கேன். எல்லாத்துக்கும் மேல பூங்கார், சித்திரைக்கார், மாப்பிள்ளைச் சம்பா, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, அறுபதாம் குறுவை, கருத்தகார்... உள்ளிட்ட 19 வகையான பாரம்பர்ய நெல் ரகங் களைச் சாகுபடி செய்றேன். எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு 54 டன் உற்பத்தி செய்றேன்’’ என்றவர், கால்நடைகள் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

‘‘பண்ணையில கிர், சாகிவால், தார்பார்க்கர் உள்ளிட்ட நாட்டின மாடுகள் 60 இருக்கு. அதேபோல 1,000 நாட்டுக்கோழிகளையும் வளர்த்துட்டு வர்றேன். என்னோட பண்ணையில விளையுற நெல்லை அரிசியாவும், மாவாவும் மாத்தி விற்பனை செய்றேன். அதோட கீரை, காய்கறிகள், பழங்கள் எல்லாத்தையும் நேரடியா விற்பனை செய்றேன்.

என்னோட விளைபொருளுக்கு நான்தான் விலை நிர்ணயம் செய்றேன். இயற்கை முறையில விளைவிக்குறதால வாடிக்கையாளர்கள் தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. ராமநாத புரத்துல 3 இடங்கள்ல விற்பனையகம் அமைச்சிருக்கேன். அன்றாடம் பண்ணைகள்ல அறுவடையாகுற காய்கறிகள் விற்பனையகங்கள் மூலம் நேரடியா மக்களுக்கு விற்பனை செய்றோம். பாரம்பர்ய அரிசி, எண்ணெய் பயிர் வகைகளை ஆன்லைன் மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாம வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்.

விவசாயம்
விவசாயம்


நான் சாகுபடி செய்ற 70 ஏக்கர் நிலத்துல இருந்து போன வருஷம் ஒன்றரைக் கோடி ரூபாய் வருமானம் கிடைச்சது. எனக்குப் பணம் சம்பாதிக்க வேற தொழில்கள் இருக்கு. நான் இயற்கை வேளாண்மையை ஆன்ம வேளாண்மை தத்துவமா பார்க்குறேன். அதுனால, இதுல இருந்து கிடைக்குற லாபத்தை மறுபடியும் விவசாயத்துக்கே முதலீடு பண்ணிடுறேன். அதுனால, நான் லாப, நஷ்டக்கணக்கு பார்க்குறதில்ல. என்கிட்ட மொத்தம் 60 பேர் வேலை பார்க்குறாங்க. அவங்களுக்கான சம்பளம், கால்நடைகளுக்கான பராமரிப்பு, நில மேம்பாடு போக, பண்ணையில தியானம், இயற்கை வேளாண்மை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த ஒரு கோடி ரூபாய் செலவுல ஒரு கட்டடம் கட்டியிருக்கேன். இப்படி இதுல வர்ற வருமானத்தை இங்கயே முதலீடு பண்ணிடுறேன்’’ என்றபடி விடைகொடுத்தார்.


தொடர்புக்கு, தரணி முருகேசன்,

செல்போன்: 94434 65991.

உரம் வாங்கத் தேவையில்லை!

‘‘பண்ணைக்குத் தேவையான உரங்களை நானே தயார் பண்ணிக்குறேன். என்னைப் பொறுத்தவரையில பயிர்களுக்கு இடையில வளர்ற களைகள், மரங்கள்ல இருந்து உதிர்ந்து விழுகுற இலைகள்தான் பெரிய உரம். ஆனா, அது பயிர்களைப் பாதிக்கும்னு நினைச்சுகிட்டு பெரும்பாலும் அப்புறப்படுத்திடுறாங்க. நான் அப்படிச் செய்றதில்ல. பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் ரெண்டையும் தயார் பண்ணி பயன்படுத்துறேன். வாரம் ஒரு தடவை நுண்ணீர்ப் பாசனம் வழியாகப் பஞ்சகவ்யாவைப் பயிர்களுக்குத் தெளிச்சுக்கிட்டு வர்றேன். இதைத் தவிர, வேற எந்த உரங்களும் போடுறதில்ல. பூச்சித்தாக்குதல் இருந்தா மட்டும் மூலிகைப் பூச்சிவிரட்டி தயார் செஞ்சு, அதையும் நுண்ணீர்ப் பாசனம் மூலம் தெளிச்சுக்கிட்டு வர்றேன். குறைவான தண்ணியை வெச்சு, பயிர்களை விளைவிக்க இந்த நுண்ணீர்ப் பாசனம் பெரிய உதவியா இருக்குது’’ என்கிறார் முருகேசன்.

விவசாயிகளுக்குப் பயிற்சி
விவசாயிகளுக்குப் பயிற்சி

அதிக மகசூல் எடுக்கலாம்!

நுண்ணீர்ப் பாசனம் பற்றிப் பேசிய முருகேசன், ‘‘மண் வகை எதுவா இருந்தாலும், நிலத்தை உழவு ஓட்டத் தேவையில்ல. ரொம்ப வருஷமா விவசாயம் செய்யாம இருந்த நிலத்தில புதுசா விவசாயம் செய்யும்போது, முதல்ல நிலத்தைச் சுத்தம் பண்ணி, சமப்படுத்தணும். மரம், செடி, கொடிக நடுறதுக்குப் பாத்திகட்டி, உதிர்ந்த இலைகள், வைக்கோல் மூடாக்கு போடணும். மூடாக்கு மண்ணுல மட்கியதும் எந்த வகையான மரம், செடி, கொடி, காய்கறி விதைகளாக இருந்தாலும் மண்ணை நம்பி நடவு செய்யலாம். பிறகு, பாசனத்துக்காக நுண்ணீர்ப் பாசனம் அமைச்சுக்கணும். அதை அமைக்க ஒரு ஏக்கருக்கு 3,500 ரூபாய்தான் செலவாகும். அதோட ஆயுள்காலம் ஒரு வருஷம். இந்தப் பாசனம் மூலம் குறைஞ்ச தண்ணியை வெச்சு, அதிக மகசூல் எடுக்கலாம். கடும் கோடைக்காலங்கள்லயும் நிலத்தை வறண்டு போகாம வைக்க இந்த நீர் பாசனம் உதவும்’’ என்றார்.

ஜீவாமிர்தம் தயாரிப்புதேவையான பொருள்கள்:

தண்ணீர் - 200 லிட்டர்

நாட்டுப் பசுமாட்டுச் சாணம் - 10 கிலோ

நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர் - 10 லிட்டர்

வெல்லம் - 1 கிலோ

பயறு மாவு - 1 கிலோ

சாகுபடி செய்யும் நிலத்தின் வரப்பு மண் ஒரு கைப்பிடி.

சாணம் புதிதாக இருக்க வேண்டும். பழைய சாணத்தைப் பயன்படுத்த கூடாது. நாள் ஆக ஆக மாட்டுச் சிறுநீரின் வீரியம் அதிகமாகும். அனைத்துப் பொருள்களையும் கலந்து, ஒரு பேரலில் இரண்டு நாள்கள் வைக்க வேண்டும். அதன் பிறகு, எடுத்துப் பயன்படுத்தலாம். இதை ஒரு வாரத்துக்குள் பயன்படுத்துவது, முழுமையான பலனைக் கொடுக்கும். நிழலில், காற்றுப் போகுமாறு சணல் சாக்குக் கொண்டு மூடி வைக்க வேண்டும். காலை, மாலை இருமுறை குச்சிமூலம் கரைசலை வலதுபுறமாகக் கலக்கி விட வேண்டும்.

பரங்கிக்காய்
பரங்கிக்காய்

ஜீவாமிர்தத்தைப் பயிருக்கு ஊட்டம் கொடுப்பதற்காகப் பாசன நீருடன் கலந்து விடலாம். இலைவழித் தெளிப்பாகவும் பயன்படுத்தலாம். இளம்பயிராக இருந்தால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மி.லி என்ற அளவிலும், வளர்ந்த பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மி.லி என்ற அளவிலும் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், பயிர்கள் செழித்து வளரும். பயிருக்குத் தேவையான ஜிப்ரலிக் அசிட்டிக் அமிலம் (GAA), நாப்தலின் அசிட்டிக் அமிலம் (NAA) போன்ற வளர்ச்சியூக்கிகள் ஜீவாமிர்தத்தில் இருப்பதால், பயிர்களில் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடந்து மகசூல் அதிகரிக்கும். இந்த இரண்டு அமிலங்களைத்தான் தனியார் நிறுவனங்கள், வளர்ச்சி ஊக்கிகள் என்ற பெயரில் விற்பனை செய்கின்றன.