
தீர்வு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மண்திட்டுபாளையத்தைச் சேர்ந்த குப்புசாமி, ஆடு வளர்ப்பில் தான் கற்றுக்கொண்ட விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
ஆடு வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு மிக முக்கியப் பிரச்னையாக இருப்பது, குட்டிகள் இறப்பு. எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும் குட்டிகள் இறப்பை கட்டுக்குள் கொண்டு வருவது எங்களுக்குச் சவாலாகவே இருந்து வந்தது. ஆடு குட்டி போடும்போதே இறந்துவிடும். இல்லையென்றால் குட்டி போட்டு ஒரு மாதத்துக்குள் இறந்துவிடும். ஆடு வளர்ப்பில் அப்போதுதான் நாங்கள் புதிதாக ஈடுபடத் தொடங்கியிருந்ததால், ஏன் இப்படி நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கே சில வருடங்கள் ஓடிவிட்டன.

ஆடு வளர்ப்பை பொறுத்தவரை, அது போடும் குட்டிகள் அனைத்தையும் வளர்த்து விற்பனைச் செய்தால்தான், நிறைவான லாபம் பார்க்க முடியும். இல்லையென்றால் நஷ்டம்தான். ஒருமுறை எதேச்சையாக எங்கள் ஊருக்குப் பக்கத்தில் வசிக்கும் கால்நடை மருத்துவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரிடம் ‘குட்டிகள் இறப்பு அதிகமாக இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. தீவனம், தண்ணீரெல்லாம் சரியாகத்தான் கொடுத்து வருகிறோம். ஆனால் குட்டிகள் இறப்பை தடுக்க முடியவில்லை’ என்றேன். அவர் ‘குட்டி போடுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரும் குட்டி போட்ட பிறகு 20 நாள்களும் ஆடுகளைத் தனிமைப்படுத்திப் பராமரித்தால், குட்டிகள் இறப்பை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்’ என்று சொன்னதோடு அந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

நாங்கள் 40 செம்மறி மற்றும் வெள்ளாடுகள் வளர்க்கிறோம். சினை ஆடு, குட்டி போடுவதற்கு 1 மாதத்திற்கு முன்பே கொட்டகையிலேயே தனிமைப்படுத்தினோம். அதற்கு தினமும் மக்காச்சோள குருணை 100 கிராம், பருத்திக் கொட்டை 100 கிராம் கலந்து கொடுத்தோம். இதோடு ஆடு குடிக்கும் தண்ணீரில் ஓர் ஆட்டுக்கு 50 கிராம் வீதம், தவிடும் கலந்து கொடுத்தோம். கொட்டகையைச் சுற்றியே மேய்ச்சலுக்கு விடுவோம். போதுமான அளவு சுண்ணாம்புச் சத்துக் கொடுத்தால், ஆடுகள் நோய்த்தாக்குதல் இன்றி ஆரோக்கியமாக வளரும் என்பதால், 4 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் சுண்ணாம்பு கலந்து மேலே தெளிந்த தண்ணீரை குடிக்கக் கொடுத்தோம்.

குட்டி போட்ட பிறகு குட்டிகளுக்குச் சரியான நேரத்தில் பால் குடிக்க விட்டோம். குட்டி போட்ட பிறகும் தொடர்ந்து அடர் தீவனங்களைக் கொடுத்து வந்தோம். ஆடு வளமானதோடு பால் சுரப்பும் நன்றாக இருந்தது. குட்டிகள் சரியாகப் பால் குடிக்கவில்லையென்றால், ஆட்டிலிருந்து பால் கறந்து புட்டியில் ஊற்றி கொடுத்தோம். குட்டி போட்ட 20 நாள்களில் குட்டிகளுக்குக் குடற்புழு நீக்கம் செய்தோம். 20 நாள்களுக்கு மேல் மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டோம்.

ஆடும் குட்டி போட்ட 21 நாள்களுக்குப் பிறகு பருவத்துக்கு வர ஆரம்பித்துவிட்டது. இப்படித் தனிமைப்படுத்திப் பராமரிக்கும் முறையால் ஆடுகளில் கருச்சிதைவு என்பதே இல்லாமல் போய்விட்டது. குட்டிகளும் ஊட்டமாக வளர்ந்து வந்தது. அதனால் சரியான நேரத்திற்குக் குட்டிகளை விற்பனை செய்ய முடிகிறது. நல்ல லாபமும் கிடைக்கிறது.

எங்கள் பண்ணையில் இன்னொரு பிரச்னையும் இருந்தது. சில ஆடுகள் பருவத்துக்கு வராமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஆடுகள், உரிய தருணத்தில், பருவத்துக்கு வரவில்லையென்றால் அதற்கு நாம் கொடுக்கும் உழைப்பு, தீவனம் எல்லாம் வீண்தான். முழுமையான மேய்ச்சலில் இருக்கும் ஆடுகளுக்குப் பிரச்னையில்லை. செமி கிராஸிங் என்று சொல்லப்படும் அரை மேய்ச்சலில் ஆடுகளுக்கு முழுமையான சத்துகள் கிடைக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. அந்த வகையில்தான் தாது உப்புக் கலவை பற்றாக்குறையால் பருவத்துக்கு வருவது தள்ளிப் போனது. தாது உப்பு கலவை கட்டியை கொட்டகையில் வாங்கிட்டு வந்து கட்டிவிட்டேன். ஆச்சர்யம் தாங்கவில்லை. ஆடுகள் சரியான நேரத்தில் பருவத்துக்கு வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதால், எங்கள் பண்ணையில் உள்ள ஆடுகள், பருவத்துக்குப் பருவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.’’
தொடர்புக்கு, குப்புசாமி,
செல்போன்: 99422 32774