ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

3 ஏக்கர், ரூ.4,58,000 மீன் வளர்ப்பில் நிறைவான வருமானம்!

மீன் அறுவடையில் செந்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
மீன் அறுவடையில் செந்தில்

மகசூல்

திக உற்பத்தி மற்றும் அதிக விலை கிடைப்பதன் மூலம் அபரிமிதமாக லாபம் எடுத்து விடலாம் என நம்பி இருந்தால், அது பல நேரங்களில் காலை வாரிவிடும். உற்பத்திச் செலவைக் குறைத்தல், தனித்துவ மான தொழில்நுட்பங்களைக் கடைப் பிடிப்பதன் மூலம்தான் உத்தரவாதமான லாபம் பார்க்க முடியும். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் ரிசியூரில் வசிக்கும் விவசாயி செந்தில். இவர், 3 ஏக்கர் பரப்பில் குளம் அமைத்து, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மழை பெய்துகொண்டிருந்த ஒரு பகல் பொழுதில் இவரது மீன் பண்ணைக்குச் சென்றோம். தனது வேலையாள்களுடன் சேர்ந்து வலையில் மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்த செந்தில் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘இப்ப பெய்ஞ்ச தொடர் கனமழையில், இந்தப் பகுதியில இருக்க மத்த விவசாயிகளோட மீன் குளங்கள்ல எல்லாம் தண்ணி நிரம்பி வழிஞ்சு, மீன்கள் வெளியேறிடுச்சு. ஆனா, எனக்கு அதுமாதிரி யான பாதிப்பு இல்ல. காரணம், 3 அடி ஆழத்துக்குக் குளத்தை வெட்டி, அந்த மண்ணைப் பயன்படுத்தி, 4 அடி உயரத்துக்குக் கரை அமைச்சிருக்கேன். குளத்தோட அடி மட்டத்துல இருந்து 7 அடி உயரம் தண்ணியைத் தேக்க முடியும்.

மீன் அறுவடையில் செந்தில்
மீன் அறுவடையில் செந்தில்

குளத்துக்கரை உயரமா இருக்குறதால வெளியில இருந்து, அடிச்சிக்கிட்டு வரக்கூடிய தண்ணி தடுத்து நிறுத்தப்படுது. மழைநீரை அதிக அளவுல குளத்துக்குள்ளாற சேமிச்சு வச்சிக்கவும் இது வசதியாக இருக்கு. வெற்றிரகமான மீன் வளர்ப்புக்கு, நல்ல உயரமான கரைகள் மிகவும் அவசியம். 45 நாள்களுக்கு ஒரு தடவை வலையில மீன்களைப் பிடிச்சு கட்டி, மறுபடியும் குளத்துக்குள்ளாற புரட்டி விடுவோம். இதனால மீன்களோட வளர்ச்சி சிறப்பா இருக்கு. எங்க மீன்களுக்கு, கத்திரிக்காய், பூசணி, சுரைக்காய், அழுகிய வாழைப்பழம், மாம்பழம் எல்லாம் போடுவோம். இத மீன்களும் விரும்பிச் சாப்பிடுது. இதனால தீவனச் செலவும் பெருமளவுல குறையுது. இதுமாதிரி இன்னும் சில தனித்துவமான தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்குற துனாலதான் மிகவும் குறைவான பரப்புலயே அதிக லாபம் கிடைக்குது’’ என்றவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

‘‘எங்க அப்பா, தாத்தா எல்லாம் பெரிய விவசாயிங்க. ஏக்கர் கணக்குல நிலம், நிறைய மாடுகள் இருந்துச்சு. எனக்கு இயல்பாவே விவசாயத்து மேல ஈடுபாடு வர ஆரம்பிச்சது. நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது, ஒரு சின்ன பரப்புல நானே உழவு ஓட்டி, எள்ளு தெளிச்சு, எந்த ரசாயன உரமும் போடாம விவசாயம் செஞ்சேன். 3 மூட்டை எள்ளு மகசூல் கிடைச்சது. அதை அப்பாகிட்டயே விற்பனை செஞ்சு, அதுல கிடைச்ச பணத்துல சைக்கிள் வாங்கினேன்.

படிச்சு பெரிய வேலைக்குப் போகணுங்கற கனவுல இருந்த அப்பாவுக்கு பயம் வந்துடுச்சு. ‘இனிமேல் நீ இங்கயிருந்தா, விவசாயியாகவே மாறிடுவே’னு சொல்லி என்னை வெளியூர் அனுப்பிட்டார். நான் ‘டிப்ளோமா கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்’ படிச்சு, பல வருஷமா ‘கார்ப்பரேட் கம்பெனி’கள்ல வேலை பார்த்தேன். நான் வெளியூர்ல இருந்தாலும்கூட விவசாய ஈர்ப்பு எனக்குக் குறையவே இல்ல.

சென்னையில இருந்து மாசத்துக்கு ஒரு தடவை சொந்த ஊருக்கு வந்து விவசாயத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன். கடந்த 4 வருஷமா 5 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். இப்போ ரெண்டு வருஷமா இங்கேயே நிரந்தமாகத் தங்கி, மீன் வளர்ப்புலயும் ஈடுபட்டுகிட்டு இருக்கேன்.

மீன்கள்
மீன்கள்


தமிழ்நாடு மீன்வளத்துறையின் நீர்வள நிலவளத் திட்டத்தில் 100 சதவிகித மானியத்துல ரெண்டு ஏக்கர்ல மீன்குளம் வெட்டிக் கொடுத்தாங்க. மீன் குஞ்சுகள், மீன் வளர்ப்புக்குத் தேவையான உபகரணங்களையும் 100 சதவிகித மானியத்துல கொடுத்தாங்க. மீன் வளர்ப்புக்கு முறையான பயிற்சியும் கொடுத்தாங்க. என்னோட சொந்த செலவுல கூடுதலா ஒரு ஏக்கர்ல குளம் வெட்டிக்கிட்டேன். இப்ப மொத்தம் 3 ஏக்கர்ல மீன் குஞ்சுகள், மீன்கள் வளர்த்து விற்பனை செஞ்சுகிட்டு இருக்கோம்’’ என்றவர், மீன் வளர்ப்பு பற்றிப் பேசினார்.

குளங்களின் அமைப்பு

‘‘மீன் குஞ்சுகள் வளர்ப்புக்காக, தலா 20 சென்ட் பரப்புல 5 குளங்கள், அது இல்லாம தலா 50 சென்ட் பரப்புல இரண்டு குளங்களும் இருக்கு. ஒரு ஏக்கர் பரப்புல மீன் வளர்ப்புக்கான குளமும் இருக்கு. முட்டை குஞ்சுகள்னு சொல்லக்கூடிய நுண்மீன் குஞ்சுகள் (முட்டையிலிருந்து வெளியில் வந்து நான்கு நாள் வயதுடையவை) வாங்கிக்கிட்டு வந்து, வளர்த்தோம். ஒரு மாசத்துக்குப் பிறகு, விற்பனை செய்ய ஆரம்பிச்சு, அதிகபட்சமா 7 மாச வயசு வரைக்கும் மீன் குஞ்சுகளை விற்பனை செய்வோம்.

நுண்மீன் குஞ்சுகள்

20 சென்ட் பரப்புக்கு 10 கிலோ வீதம் கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு, 5 நாள்கள் கழிச்சு, போர்வெல் மூலம் மூன்றரையடி மட்டத்துக்குத் தண்ணி விடுவோம். பிறகு, 100 லிட்டர் சாணக்கரைசல் ஊத்துவோம். அடுத்த 3 நாள்கள் கழிச்சி, 2 கிலோ கடலைப் புண்ணாக்கை 5 லிட்டர் தண்ணியில ஊற வைச்சு, நல்லா கரைச்சு ஊற்றுவோம். அடுத்த 10 - 15 நாள்கள்ல ‘பிளாங்டன்’ பாசி உருவாகி இருக்கும். 20 சென்ட் பரப்புக்குத் தலா 2 லட்சம் நுண்மீன் குஞ்சுகள் வீதம் மொத்தம் 20 லட்சம் நுண்மீன் குஞ்சுகள் விடுவோம். ரோகு 50 சதவிகிதம், தலா 25 சதவிகிதம் மிர்கால், கட்லா விடுவோம். ரோகு இன மீன்களுக்குத்தான் விற்பனை வாய்ப்பு அதிகம்’’ என்றவர், விற்பனை வாய்ப்பு பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

மீன் குளம்
மீன் குளம்


“2-ம் மாசத்துல இருந்து குஞ்சுகளை வலையில் பிடிச்சு விற்பனை செய்ய ஆரம்பிப்போம். 7 மாசம் வரைக்கும் குஞ்சுகளை விற்பனை செய்வோம். குஞ்சுகளோட அளவைப் பொறுத்து, 50 பைசாவுல இருந்து 10 ரூபாய் விலையில விற்பனை செய்வோம். 20 லட்சம் குஞ்சுகள் விட்டோம்னா, 4 லட்சம் குஞ்சுகள் விற்பனைக்குக் கிடைக்கும். போன தடவை 4 லட்சம் குஞ்சுகள் மூலமா 3,56,000 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு.

1,750 கிலோ மகசூல்

ஒரு ஏக்கர் குளத்துல இருக்கிற மீன்களை 8-ம் மாசத்துல இருந்து பிடிக்க ஆரம்பிச்சா 12-ம் மாசம் வரைக்கும் பிடிச்சு விற்பனை செய்வோம். 4,000 குஞ்சுகள்ல 3,500 மீன்கள் பிழைப்புத்திறனோடு விற்பனைக்குத் தேரும். குறைஞ்சபட்சம் அரை கிலோவுல இருந்து அதிகபட்சம் ஒன்றரை கிலோ எடை கிடைக்கும். மொத்தத்துல குறைந்தபட்சம் 1,750 கிலோ மகசூல் கிடைக்கும். இந்தப் பகுதிகள்ல திருமணம், காதுக்குத்து மாதிரியான விசேஷங்களுக்கு, ஒரே சமயத்துல 200 கிலோ, 300 கிலோனு மீன்கள் கேட்பாங்க. இதுமாதிரி கேட்குறவங்களுக்கு ஒரு கிலோ குறைந்தபட்சம் 110 ரூபாய்னு விற்பனை செய்வேன்.

செலவு/வரவு கணக்கு
செலவு/வரவு கணக்கு


இதுக்கிடையில வாரம் ஒரு தடவை மீன்களைப் பிடிச்சு, கிலோ 200 ரூபாய் விலையிலயும் விற்பனை செய்வேன். சராசரியா ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் வீதம் 1,750 கிலோவுக்கு 2,62,500 ரூபாய் வருமானம் கிடைக்குது. மொத்தம் 3 ஏக்கர் குளத்துல உற்பத்தி செய்யக்கூடிய மீன் குஞ்சுகள், மீன் விற்பனை மூலமா வருஷத்துக்கு 6,18,500 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல நுண்மீன் குஞ்சுகள், தீவனம், மீன் பிடிப்புச் செலவு, மீன்குளத்தைப் பராமரிக்குறதுக்காக உள்ள நிரந்த ஆள் சம்பளம், இதரச் செலவுகள் எல்லாம் சேர்த்து, 1,60,500 ரூபாய் செலவாகும். அதுபோக, 4,58,000 ரூபாய் நிகர லாபமாகக் கையில் நின்னுச்சு’’ என்றவர் மகிழ்ச்சியோடு விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, செந்தில்,

செல்போன்: 99760 81111.

தீவன மேலாண்மை

மீன் குஞ்சுகளுக்கான தீவன மேலாண்மை பற்றிப் பேசிய செந்தில், ‘‘குளத்துக்குள் நுண்மீன் குஞ்சுகளை விட்டு, ரெண்டு நாள் கழிச்சுதான் தீவனம் கொடுக்கணும். 3-ம் நாள்ல இருந்து தினமும் காலையில் சரியா 8 மணிக்கும், சாயந்தரம் 5 மணிக்கும் தீவனம் கொடுப்போம். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துல தீவனம் போட்டாதான், அதுக்கு பழகி, எல்லாக் குஞ்சுகளும் ஒரே நேரத்துல மேல வந்து தீவனம் சாப்பிடும். முதல் மாசம் நுண்மீன் குஞ்சுகளுக்குனு கடையில வாங்கி தீவனம் கொடுப்போம். 20 சென்ட் பரப்பு குளத்துக்குத் தினமும் 100 கிராம் வீதம் தீவனத்தைக் காலை, மாலை ரெண்டு வேளையும் பிரிச்சு கொடுப்போம்.

தீவனம்
தீவனம்


2-வது மாசத்துல இருந்து அடுத்த 6 மாசத்துக்குத் தினமும் 200 கிராம் நுண்மீன் குஞ்சு தீவனம், 100 கிராம் குஞ்சு தீவனம் கொடுப்போம். 3 நாளைக்கு ஒரு முறை குஞ்சு தீவனத்துக்குப் பதிலா, நாங்க தயார் பண்ணின மாவு தீவனம் (70 சதவிகிதம் தவிடு, 10 சதவிகிதம் குருணை, 20 சதவிகிதம் சோளம் கலந்தது) 100 கிராம் போடுவோம். மாவு தீவனத்தை மீன் குஞ்சுகளால சுலபமா சாப்பிட முடியாது. வேகமாக நீந்திகிட்டேதான் சாப்பிடும். இதனால ஆக்சிஜன் அளவு அதிகமாகி, மீன் குஞ்சுகளோட வளர்ச்சி அதிகரிக்கும். வாரம் ஒரு தடவை 250 கிராம் கடலைப் புண்ணாக்கைத் தண்ணியில ஊற வச்சு, கட்டி இல்லாம கலக்கி ஊத்துவோம். வாரம் ஒரு தடவை 3 கிலோ சாணத்தைத் தண்ணியில கரைச்சு ஊத்துவோம்.

தண்ணி கரும்பச்சை நிறத்துக்கு மாற ஆரம்பிச்சா, தீவனம், சாணக்கரைசல் அளவை குறைப்போம். தண்ணி வெள்ளையா இருந்தா, அளவை அதிகப்படுத்துவோம். தீவனம் போட்ட 5 நிமிஷத்துக்குள்ள முழுக்கச் சாப்பிட்டுச்சுனா, தீவனத்தோட அளவை அதிகப்படுத்துவோம். 10 நிமிஷம் ஆன பிறகும் தீவனம் மிச்சமிருந்தா, தீவனத்தோட அளவைக் குறைப்போம். கரைகள்ல கத்திரிக்காய், பூசணிக்காய், சுரைக்காய் எல்லாம் சாகுபடி செய்றோம். பூச்சித்தாக்கியது, சொத்தை விழுந்த கத்திரிக்காயைச் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, வெங்காயச் சாக்குல கட்டி, குளத்துக்குள்ளாரப் போட்டுடுவோம். அது அழுகி, தானாகக் கரைஞ்சு மீன் குஞ்சுகளுக்கு உணவாகிடும். வாரத்துக்குச் சுமார் ஒரு கிலோ கத்திரிக்காய் போடுவோம். சாக்கில் மிச்சம் இருக்குறதைப் பிரிச்சு உதறிவிடுவோம்.

பூசணிக்காய் இல்லைன்னா சுரைக்காயை ரெண்டா நறுக்கியும் குளத்துக்குள்ள போடுவோம். அதுவும் அழுகி உணவாகிடும். வாரம் அரைக்கிலோ வீதம் இதைப் போடுவோம்’’ என்றார்.

இறைச்சி மீன்

‘‘ஒரு ஏக்கர் பரப்பில் குளம் அமைச்சு, 50 கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு போட்டு, ஒரு வாரம் கழிச்சு தண்ணி விட்டு, மிதமான பச்சை நிறம் வரும் அளவுக்குத் தேவைக்கு ஏற்ப சாணம் கரைப்போம். 15 நாள்ல ‘பிளாங்டன்’ பாசி உருவாகிடும். 30 - 60 நாள் வயசுல 4,000 மீன் குஞ்சுகள் விடுவோம். தினமும் 5 - 6 கிலோ கடையில வாங்கின தண்ணிமேல மிதக்கக்கூடிய தீவனத்தைப் போடுவோம். இதை ரெண்டு வேளையா பிரிச்சு போடுவோம். 3 நாளைக்கு ஒரு தடவை ஒருவேளை மட்டும், வழக்கமான தீவனத்தைத் தவிர்த்துட்டு, தவிடு, குருணை, சோளம் கலந்து தயார் செஞ்ச மாவு தீவனம் ஒரு கிலோ போடுவோம். அடுத்தடுத்த மாசத்துல தண்ணியோட நிறம், மீன்கள் தீவனம் சாப்பிடுறதைப் பொறுத்து, தீவனத்தோட அளவை 10 சதவிகிதம் கூட்டுவோம். வாரம் ஒரு தடவை ஒரு கிலோ கடலைப் புண்ணாக்கை 10 லிட்டர் தண்ணியில ஊற வச்சு, கட்டி இல்லாம நல்லா கரைச்சி ஊத்துவோம். வாரம் ஒரு தடவை 20 கிலோ சாணத்தைத் தண்ணியில கரைச்சு விடுவோம். சமையலுக்குப் பயன்படுத்த முடியாத நிலையில இருக்கக் கத்திரிக்காய், அழுகிப்போன பூசணி, சுரைக்காய், மாம்பழம், வாழைப்பழம் எது கிடைச்சாலும் போடுவோம்’’ என்கிறார் செந்தில்.

மீன் குளம்
மீன் குளம்

பக்கவாட்டுப் பகுதியில்
கொடி வகை கீரைகள்

மீன் குளம் பராமரிப்புக் குறித்துப் பேசிய செந்தில், ‘‘நீர் மட்டத்துல இருந்து சுமார் 4 அடி உயரத்துல குழாய் அமைச்சு, அது வழியாகத் தண்ணீர் ஊத்துற மாதிரி அமைச்சிருக்கேன். மேலே இருந்து தண்ணீர் ஊத்தும்போது, ஆக்சிஜன் அளவு அதிகரிக்குறதோட, அதுல இருந்து பொங்கி வரக்கூடிய நுரையில் மீன் குஞ்சுகள் மோதி விளையாடும். இதனால மீன் குஞ்சுகளோட வளர்ச்சி சிறப்பா இருக்கும். குளத்தோட தரைப்பகுதியில கரைகளின் பக்கவாட்டுப் பகுதியில கொடி வகை கீரைகளை நிறைய படரவிட்டுருக்கோம். வெயில் அதிகமாக இருக்கும்போது, மீன் குஞ்சுகள் அங்க போயி தங்கிடும். நிழலுக்காக, கரைகள்ல மரங்கள் வளர்த்தோம்னா, அதுல பறவைகள் வந்து உட்கார்ந்து, மீன்குஞ்சுகளைப் பிடிக்குற ஆபத்து அதிகம்’’ என்றார்.

வலைச் செலவைக் குறைக்கும் ‘டேப் வயர்’

‘‘சின்ன குஞ்சுகளாக இருக்கும்போது எது எந்த ரகம்னு கண்டுபிடிக்குறது சிரமம். அதனால ஒவ்வொரு ரகத்தையும் தனித் தனிக் குளத்துலதான் விடுவோம். குஞ்சுகள் விற்பனைக்கு இதுதான் வசதியாக இருக்கும். ஒவ்வொரு ரகத்துலயும் குறிப்பிட்ட எண்ணிக்கையில பிடிச்சு விற்பனை செய்யவும் இதுதான் வசதியா இருக்கும். பறவைகளால் பாதிப்பு வராம இருக்க, பொதுவா, எல்லா பக்கமும் வலை கட்டுவாங்க. ஆனா, அதுக்கு நிறைய செலவாகும். அதைத் தவிர்க்க மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ‘டேப் வயரை’, குளத்துக்கு மேல குறுக்கும் நெடுக்குமாகக் கட்டி, அதுல ‘சிடி’யைத் தொங்க விட்டுடுவேன். அதுல சூரியவெளிச்சம் பட்டு, ஒளிவீசும். அதைப் பார்த்துப் பயந்து, பறவைகள் வராது. ரெண்டு மூணு மாசம் வரைக்கும் அது இருந்தா போதும்’’ என்கிறார் செந்தில்.