ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

ஆண்டுக்கு ரூ.3,70,000... ஆடு வளர்ப்பில் அருமையான லாபம்!

ஆடுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆடுகள்

கால்நடை

பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், உப வருமானம் ஈட்டுவதற்கு, ஆடு வளர்ப்பு மிகவும் உறுதுணையாகத் திகழ்கிறது. குறைவான முதலீடு மற்றும் எளிய பராமரிப்பிலேயே இதில் நிறைவான லாபம் பார்க்க முடிகிறது. எப்போது பணம் தேவைப்படுகிறதோ, அப்போது ஆடுகளை விற்று உடனடியாகப் பணத் தேவையை நிவர்த்தி செய்துகொள்ளலாம் என்பதால்தான் இதை `நடமாடும் ஏடிஎம்’ என்கிறார்கள். இந்த வகையில்தான் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியன், ஆடு வளர்ப்பு மூலம் நிறைவான பலன் அடைந்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராம நாயக்கன்பட்டியில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணியனின் பண்ணை. ஒரு பகல்பொழுதில் இவரை சந்திக்கச் சென்றோம். தன்னுடைய ஆடுகளுக்கு பசுந்தீவனம் கொடுத்துக் கொண்டிருந்தவர் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று, உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘நாங்க விவசாயக் குடும்பம். பல தலைமுறைகளா ஆடுகள் வளர்த்துக்கிட்டு இருக்கோம். இப்ப வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் வளர்த்துக்கிட்டு இருக்கேன். இப்ப என்கிட்ட 40 வெள்ளாடுகளும், 22 செம்மறி ஆடுகளும் இருக்கு. காலையில 7 மணியில இருந்து சாயந்தரம் 5 மணி வரைக்கும் இந்த ஆடுகளோடதான் என் பொழுது கழியுது. சாப்பிடக்கூட வீட்டுக்குப் போக மாட்டேன். என்னோட மனைவி இங்க சாப்பாடு கொண்டு வந்துடுவாங்க.

ஆடுகளுடன் பாலசுப்பிரமணியன்
ஆடுகளுடன் பாலசுப்பிரமணியன்

என்கிட்ட மொத்தம் 4 ஏக்கர் நிலம் இருக்கு. வயிறு நிறைய தீவனம் கொடுத்து என்னோட ஆடுகளை நல்லா ஊட்டமா வளர்க்கணும்ங்கறதுக்காகவே, தலா 25 சென்ட் பரப்புல அகத்தி, வேலி மசால், 10 சென்ட் பரப்புல கத்திரிக்காயும் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். என்னோட ஆடுகள் கத்திரிக்காய்களை விரும்பிச் சாப்பிடும். மீதியுள்ள பரப்புல, செண்டுமல்லி, கொத்த மல்லி, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்றேன். அறுவடை முடிஞ்ச பிறகு, அந்தக் குறிப்பிட்ட பகுதியில மட்டும் என்னோட ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவேன்.

நாம என்னதான் பசுந்தீவனம் கொடுத் தாலும், அதுங்க காலாற நடந்து மேய்ச்சல் மூலம் தீவனம் சாப்பிட்டாதான், உடல் ஆரோக்கியமா இருக்கும். ஆடுகளோட கழிவுகளால, நிலம் நல்லா வளம் அடைஞ்சு கிட்டே இருக்கு. இந்தப் பண்ணையில இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துல தான் என்னோட வீடு இருக்கு. அங்கதான் என்னோட ஆடுகளுக்குக் கொட்டகை அமைச்சிருக்கேன். இங்கயிருந்து சாயந் திரம் 5 மணிக்கு ஆடுகளை ஓட்டிக்கிட்டுப் போயி, கொட்டகையில அடைச் சிடுவேன். மறுநாள் காலையில 7 மணிக்கு இங்க ஓட்டிக்கிட்டு வந்துடுவேன். எப்பவும் என்னோட நேரடி கண்காணிப் பிலேயே இருந்துகிட்டு இருக்கணும் கிறதுனால, கொட்டகையைப் பண்ணையில அமைக்காம, என்னோட வீட்டுல அமைச்சிருக்கேன்’’ என்று சொன்னவர், ஆடுகள் விற்பனை மற்றும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

கொட்டகையில் ஆடுகள்
கொட்டகையில் ஆடுகள்

வெள்ளாடு மூலம் வருமானம்

ஒரு தாய் ஆடு மூலம் 8 மாசத்துக்கு ஒரு தடவை ஒரு ஈத்து கிடைக்கும். நாங்க வெச்சிருக்கிற இந்த ரக ஆடுகள்ல ஒரு ஈத்துக்கு 2 - 4 குட்டிகள் தவறாம கிடைக்குது. இந்தக் கணக்குபடி பார்த்தா, ஒரு தாய் ஆடு மூலம்... இரண்டு வருஷத் துல மூணு ஈத்துகள் மூலம், 6 - 12 குட்டிகள் கிடைக்கும். எப்பவும் என்கிட்ட 20 - 25 தாய் ஆடுகள் இருந்துகிட்டே இருக்கும். இது மூலமா வருஷத்துக்குக் குறைந்தபட்சம் 60 குட்டிகள் கிடைக்கும். பெட்டைகளை விற்பனை செய்றதில்லை. இனவிருத்திக்காக, நானே வளர்த்துப் பராமரிச்சுக்கிறேன். கிடாக்குட்டிகளை ஒரு வருஷம் வரை வளர்த்து அதுக்குப் பிறகு விற்பனை செய்றேன். ஒரு வருஷ கிடா, 15-ல இருந்து 18 கிலோ வரை எடை இருக்கும். கிடாக்களை உயிர் எடை முறையில விற்பனை செய்றது கிடையாது. உருப்படி கணக்குலதான் விற்பனை செய்றேன். ஒரு கிடா ஆடு குறைந்தபட்சம் 15,000 ரூபாய் வரைக்கும் விலை போகும். 15,000-க்குக் கீழ குறைச்சு வித்தது கிடையாது. இதுல நான் உறுதியா இருக்கேன்.

ஒரு வருஷத்துக்கு 25 கிடாக்கள் விற்பனை செய்றது மூலமா 3,75,000 ரூபாய் வருமானமாக் கிடைக்குது. இதுல ஆடுகளுக்கான தீவனம், பராமரிப்புச் செலவுகள் 1,25,000 ரூபாய் போக மீதமுள்ள 2,50,000 ரூபாய் லாபமாகக் கிடைக்குது.

செம்மறி ஆடுகள் மூலம் வருமானம்

செம்மறி கிடா குட்டிகளை விலைக்கு வாங்கிக்கிட்டு வந்து, மூணு மாசம் வரைக்கும் வளர்த்து, தீபாவளி, ரம்ஜான், பக்ரீத் மாதிரியான பண்டிகை சமயங்கள்ல விற்பனை செய்றேன். ஒரு செம்மறி கிடா குட்டியோட விலை 3,000 ரூபாய். அதை வாங்கிக்கிட்டு வந்து மூணு மாசம் வளர்த்து விற்பனை செய்றது மூலமா, எனக்கு 7,000-8,000 ரூபாய் விலை கிடைக்குது. ஒரு வருஷத்துக்குக் குறைந்தபட்சம் 30 செம்மறி கிடாக்கள் விற்பனை செய்றேன். இது மூலமா 2,10,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்குது. இதுல கிடாக்கள் வாங்க போட்ட முதலீடு போக 1,20,000 ரூபாய் லாபம். இதுக்குத் தீவன செலவுகள் கிடையாது. மேய்ச்சலே போதுமானது. ஆனாலும் கூட, நான் அப்பப்ப, அகத்தி, வேலி மசால் கொடுப்பேன்.

மொத்த வருமானம்

வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளர்ப்பு மூலம் எனக்கு வருஷத்துக்கு 3,70,000 ரூபாய் லாபம் கிடைக்குது. இது எனக்கு நிறைவான லாபம். பயிர் சாகுபடியைவிட, ஆடு வளர்ப்பு தான் எனக்கு முதன்மை தொழிலா வருமானம் கொடுத்துக்கிட்டு இருக்கு.

மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள்
மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள்


பிரகாசமான விற்பனை வாய்ப்பு

என்னோட ஆடுகளைப் பெரும்பாலும்... அருப்புக்கோட்டை, எட்டயபுரம், திருமங் கலம் ஆட்டுச்சந்தைகள்லதான் விற்பனை செய்றேன். ஓரளவுக்கு நியாயமான விலை கிடைக்குது. இதுபோல சில வியாபாரிங்க என்னைத் தேடி வந்தும் வாங்கிக்கிட்டுப் போறாங்க.

ஆடு வளர்ப்பைப் பொறுத்த வரைக்கும் பெரிய பராமரிப்பு எதுவும் கிடையாது. மாடுகள் வளர்க்க முடியாத சூழல்ல உள்ள விவசாயிங்க... ரொம்ப எளிமையா ஆடு வளர்ப்பு மூலம் நிச்சயம் வருமானம் பார்க்க முடியும். தீவனச் செலவுகளே இல்லாம, மேய்ச்சல் முறையிலயே ஆடுகளை வளர்க்க முடியும். கிராமங்கள், நகரங்கள்ல ஆட்டிறைச்சியோட தேவை நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டே இருக்கு. விவசாயிகள் தங்களோட அவசர பணத் தேவைகளுக்கு... ஒண்ணு, ரெண்டு ஆடுகளை வித்து அந்தத் தேவையைப் பூர்த்தி செஞ்சுக்கலாம். யாருகிட்டயும் வட்டிக்கோ, கை மாத்தாவோ கடன் வாங்கிக் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்ல. இதுக்கு நானே ஒரு உதாரணம்” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார் பாலசுப்பிரமணியன்.

தொடர்புக்கு, பாலசுப்பிரமணியன்,

செல்போன்: 97881 43396

இப்படித்தான் ஆடு வளர்ப்பு!

கொட்டகை பராமரிப்பு, தீவன மேலாண்மை, நோய்த்தடுப்பு முறைகள் குறித்து, பாலசுப்ரமணியன் தெரிவித்த தகவல்கள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

கொட்டகைச் சுத்தம் அவசியம்!

பரண், கொட்டகை ஆகிய முறைகளில் ஆடுகள் வளர்க்கலாம். பரண் முறையைவிட கொட்டகை முறை வளர்ப்பில் செலவு குறைவு. இந்த முறையில் ஆடுகள் வளர்த்தால், மிகவும் எளிதாக ஒவ்வோர் ஆட்டின் மீதும் தனிக்கவனம் செலுத்த முடியும். ஆடுகளுக்கு ஜீரணக் கோளாறுகள், நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருந்தால், உடனுக்குடன் கண்காணித்து தீர்வு காண முடியும். கொட்டகை காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்கும்படி கிழக்கு மேற்காக, சாய்வாக இருக்கும்படி அமைக்க வேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு முறை கொட்டகையைச் சுத்தப்படுத்திக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். சுகாதாரம் மிகவும் அவசியம்.

மேய்ச்சலில் ஆடுகள்
மேய்ச்சலில் ஆடுகள்

தீவன மேலாண்மை

தினமும் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் உலர்தீவனமாக, நன்கு காய வைக்கப்பட்டு, விதைகள் நீக்கப்பட்ட கொத்தவரைப் பொட்டு... பெரிய ஆடுகளுக்குத் தலா 500 கிராமும், சிறிய ஆடுகளுக்குத் தலா 250 கிராமும் கொடுக்க வேண்டும். முற்பகல் 11 மணி முதல் 12 மணிக்குள் பசுந்தீவனமாக அகத்தி கொடுக்கலாம். மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் பெரிய ஆடுகளுக்குத் தலா 250 கிராம் பருத்திக்கொட்டை பிண்ணாக்குடன், 250 கிராம் சிவப்புச் சோளம் கலந்து கொடுக்க வேண்டும். சிறிய ஆடுகளுக்கு 100 கிராம் பருத்திக்கொட்டை பிண்ணாக்குடன், 100 கிராம் சிவப்புச் சோளம் கலந்து கொடுக்க வேண்டும். மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வேலிமசால், அகத்தி கொடுக்க வேண்டும். பசுந்தீவனங்களைத் தரையில் போடாமல், கட்டித் தொங்க விட்டால், கொஞ்சமும் விரயம் ஆகாமல் பயன்படுத்தலாம்.

இரவு 7 மணிக்கு பெரிய ஆடுகளுக்குத் தலா 500 கிராம் வீதமும் சிறிய ஆடுகளுக்கு 250 கிராம் வீதமும் கத்திரிக்காய் கொடுக்கலாம். கத்திரிக்காயை பச்சையாக மட்டுமல்லாமல் நறுக்கி வெயிலில் உலர வைத்து வற்றலாகவும் கொடுக்கலாம். இதை ஆடுகள் மிகவும் விரும்பி சாப்பிடும். ஒவ்வொரு முறை தீவனம் வைக்கும்போதும் தீவனத்தட்டுகளைச் சுத்தப்படுத்திய பிறகே தீவனம் வைக்க வேண்டும். இதனால், ஆடுகள் தீவனத்தை விரும்பி எடுத்துக்கொள்ளும். 3 மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். கால்நடைத்துறையின் மூலம் வழங்கப்படும் தாது உப்புக்கட்டிகளைக் கொட்டகையில் கட்டி தொங்கவிடலாம். இந்தக் கட்டிகளை ஆடுகள் நக்குவதால் தாகம் ஏற்பட்டு தண்ணீரை அதிகம் குடிக்கும். இதனால், குடல் பெருக்கம் அடையும். அதிக தீவனம் எடுக்கும், எடையும் கூடும்.

புண்ணியமூர்த்தி
புண்ணியமூர்த்தி

கத்திரிக்காய் கொடுக்கலாமா?

தஞ்சாவூரைச் சேர்ந்த கால்நடை மூலிகை மருத்துவ நிபுணர் புண்ணியமூர்த்தியிடம் இது தொடர்பாகக் கேட்ட போது,‘‘கத்திரிக்காய்ல பலவிதமான சத்துகள் இருக்கு. இதைக் கொடுக் குறதுனால, ஆடுகளுக்கு எந்த ஒரு பின்னடைவும் ஏற்படாது. அதேசமயம், இதை அதிகமா கொடுத்துடக் கூடாது. ஒரு குட்டி பிறந்து மூணு மாசம் ஆன பிறகுதான் கொடுக்கணும். ஓர் ஆட்டுக்குத் தினமும் காலையில 100 கிராம், சாயந்தரம் 100 கிராம் வீதம் கத்திரிக்காய் கொடுக்கலாம். இதை மட்டும் தனியா கொடுத்துடக் கூடாது. மற்ற தீவனங்களோடு சேர்த்துதான் கொடுக்கணும். கத்திரிக்காய் சாப்பிடுறதுனால, ஆடுகளுக்குக் கிடைக்குற மிக முக்கியமான பிரயோஜனம்... நல்லா வயிறு நிறைஞ்ச உணர்வு கிடைக்கும்’’ எனத் தெரிவித்தார்.

புதிதாக வாங்கப்படும் ஆடுகள்

புதிதாக வாங்கி வந்த ஆடுகளை ஏற்கெனவே நம் கொட்டகையில் உள்ள ஆடுகளுடன் சேர்த்து அடைத்துவிடக் கூடாது. புதிய ஆடுகளைக் கொட்டகைக்குக் கொண்டு வந்ததும், முதலில் நன்கு குளிப்பாட்ட வேண்டும். பின், பருத்தித்துணியால் ஆடுகளின் மூக்குளை குடைந்து சுத்தம் செய்ய வேண்டும். அன்றைய தினமே, கால்நடை மருத்துவரின் வழிகாட்டுதலோடு தடுப்பூசிகள் போட வேண்டும். அடுத்தநாள் காலையில், தீவனம் ஏதும் கொடுக்காமல் வெறும் வயிற்றில் பரிந்துரைக்கப்பட்ட குடற்புழு நீக்க மருந்தை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தண்ணீருடன் கலந்து ஆட்டின் வாய்க்குள் ஊற்றி விட வேண்டும்.

பின்னர், வழக்கம்போல் மற்ற ஆடுகளுக்குக் கொடுக்கும் தீவனங்களைக் கொடுக்கலாம். 7 நாள்கள் வரை இப்படித் தனிமைப்படுத்திய பிறகே கொட்டகைகளில் மற்ற ஆடுகளுடன் சேர்த்து அடைக்க வேண்டும். இதனால் புதிய ஆடுகளுக்கு ஏதேனும் நோய்த்தாக்குதல் இருந்தால் அதை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். இல்லாவிட்டால், மற்ற ஆடுகளுக்கும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பருவ மாற்றத்துக்கு முன் தடுப்பூசி அவசியம்..!

கோடைக்காலத்தில் கானம் நோய்த் தாக்குதலும், மழைக்காலத்தில் கழிச்சல், வாய்ப்புண்ணும், குளிர்காலத்தில் சளி ஒழுகுதலும் வராமலிருக்கப் பருவநிலை மாறுவதற்கு 10 முதல் 15 நாள்களுக்கு முன்பே அந்தந்தப் பருவ நிலையில் தாக்கும் நோய்களுக்கான தடுப்பூசியைப் போட்டால், நோய்களைத் தவிர்க்கலாம்.

துள்ளுமாரி நோய் வராமல் தடுக்க வருடம் ஒரு முறை தடுப்பூசியும், கோமாரி நோய் வராமல் தடுக்க இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தடுப்பூசியும் போட வேண்டும். குட்டிகளுக்கு மாதம் ஒரு முறையும், பெரிய ஆடுகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறையும் குடற்புழு நீக்கத்துக்கான மருந்து கொடுக்க வேண்டும்.