ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

1.5 ஏக்கர்... 5 மாதங்கள்... ரூ.1.25 லட்சம்... பரிசு பெற்ற விவசாயியின் பலபயிர் சாகுபடி!

காய்கறிகளுடன் பொன்னு புதியவன்
பிரீமியம் ஸ்டோரி
News
காய்கறிகளுடன் பொன்னு புதியவன்

மகசூல்

காய்கறிச் சாகுபடியில் ஆர்வம் உள்ள விவசாயிகள், ஒரே வகையான காய்கறியை அதிக பரப்பில் சாகுபடி செய்வதைவிட, தன்னுடைய நிலத்தைப் பல பகுதிகளாகப் பிரித்து வெவ்வேறு வகையான காய்கறிகளைப் பயிர் செய்வதுதான் சிறந்த வழிமுறை என்கிறார்கள், இதில் அனுபவம் பெற்றவர்கள். ஏதேனும் ஒன்றில் மகசூல் குறைந்தாலோ, விலை சரிவு ஏற்பட்டாலோ, பிற காய்கறிகள் மூலம் லாபம் பார்த்துவிடலாம். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னு புதியவன். இவர், ஒன்றரை ஏக்கர் பரப்பில்... கத்திரி, வெண்டை, அவரை, தக்காளி, மிளகாய் ஆகிய ஐந்து விதமான காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து உத்தரவாதமான லாபம் பார்த்து வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகிலுள்ள களக்குடி கிராமத்தில் அமைந் துள்ளது பொன்னு புதியவனின் காய்கறித் தோட்டம். ஒரு காலைப்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். வெண்டை அறுவடைப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பொன்னு புதியவன், புன்னகையோடு நம்மை வரவேற்று மிகுந்த உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘விவசாயம்தான் எங்க குடும்பத்தோட வாழ்வாதாரம். எங்கப்பா தான் விவசாயத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தார். நான் ஐ.டி.ஐ-யில மோட்டார் மெக்கானிக் முடிச்சுட்டு சென்னையில 4 வருஷம் ஒரு கம்பெனியில மெக்கானிக்கா வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகு அரபு நாடுகள்ல 8 வருஷம் வேலை பார்த்தேன். அதிக வேலைப்பளுவால விரக்தி அடைஞ்சு, 2012-ம் வருஷம் சொந்த ஊருக்கே திரும்ப வந்துட்டேன்.

காய்கறிகளுடன் பொன்னு புதியவன்
காய்கறிகளுடன் பொன்னு புதியவன்

இங்க வந்ததும் என்ன தொழில் செய்றதுன்னு யோசனையில இருந்தேன். ‘நமக்கு சோறு போடுற விவசாயத்தை செய்ய வேண்டியதுதானப்பா? இதுல உனக்கு என்ன யோசனை வேண்டிக் கிடக்கு’னு அப்பா சொன்னார். எனக்கும் அது சரின்னு பட்டுச்சு. ஆனா அதேசமயம், ரசாயன உரங்கள் போட்டு விவசாயம் செய்றதுல எனக்கு உடன்பாடில்ல. அதனால, இயற்கை விவசாயம் செய்யப்போறேன்னு அப்பா கிட்ட சொன்னேன். ‘உரம் போடாம எப்படி விவசாயம் செய்ய முடியும்? இயற்கை விவசாயமெல்லாம் சும்மா பேச்சுக்குதான் நல்லா இருக்கும். அதுல நாம எதிர்பார்க்குற அளவுக்கெல்லாம் வெள்ளாமை பார்க்க முடியாது. நஷ்டம்தான் ஏற்படும்’னு அப்பா சொன்னார். ஆனா, நான் என்னோட முடிவுல உறுதியா இருந்தேன். காரணம், இயற்கை விவசாயத்துல ஜெயிச்சவங்களோட அனுபவங்களைப் பசுமை விகடன்ல ஏற்கெனவே நான் படிச்சிருந்ததுனால, இதுல எனக்கு நம்பிக்கை அதிகம்.

இயற்கை விவசாயம் செய்ய, அப்பா சம்மதம் தெரிவிச்சதும், எங்களுக்குச் சொந்தமான நிலத்துல 4 ஏக்கர் பரப்பை மட்டும் என்னோட முழுமையான கட்டுப் பாட்டுல எடுத்துக்கிட்டேன். நிலத்தை வளப்படுத்த முதல்கட்டமா, பலதானிய விதைப்பு செஞ்சு, மண்புழு உரம், கனஜீவாமிர்தம் போட்டேன். பலதானிய பயிர்கள் நல்லா செழிப்பா வளர்ந்து பூ பூக்கும் தருணத்துல மடக்கி உழுது, 2014-ம் வருஷம் மாப்பிள்ளைச் சம்பா நெல் சாகுபடி செஞ்சேன். இயற்கை விவசாயத்துக்கு மாறின முதல் வருஷம்ங்கறதுனால, அப்ப குறைவான மகசூல்தான் கிடைச்சது. அதுக்கு அடுத்தடுத்த வருஷங்கள்ல படிப்படியா மகசூல் அதிகரிச்சது. வெள்ளைப் பொன்னி, வாசனைச் சீரகச் சம்பா, அறுபதாம் குறுவை, பூங்கார் உட்பட இன்னும் சில பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செஞ்சேன்’’ என்று சொன்னவர், காய்கறிச் சாகுபடி குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

அவரைக்காய் சாகுபடி வயல்
அவரைக்காய் சாகுபடி வயல்

‘‘இயற்கை விவசாயத்துல காய்கறிச் சாகுபடி செய்யணும்னு ஆசைப்பட்டு, ஒரு ஏக்கர்ல வெண்டை சாகுபடி செஞ்சேன். நல்ல விளைச்சல் கிடைச்சது. ஆனா, அந்த வருஷம் எங்க பகுதியில நிறைய விவசாயிங்க வெண்டை சாகுபடி செஞ்சதுனால, லாப கரமான விலை கிடைக்கலை. வியாபாரிங்க கேட்ட விலைக்கு என்னோட வெண்டைக் காய்களைக் கொடுக்க வேண்டியதாயிடுச்சு. அதனால கொஞ்சம் மனசு ஒடிஞ்சுப் போயிட்டேன். ‘ஒரே விதமான காய்கறியை சாகுபடி செய்யாமல்... அந்த நிலத்தைப் பிரிச்சு ரெண்டு மூணு விதமான காய்கறி களைச் சாகுபடி செஞ்சா... ஒண்ணுல இல்லாவிட்டாலும் இன்னொண்ணுல விலை கிடைக்கும்னு நம்மாழ்வார் ஐயா பேசின ஒரு காணொளியைப் பார்த்த பிறகுதான் அவரை, வெண்டை, கத்திரி, தக்காளி, பச்சைமிளகாய்னு பல விதமான காய்கறிகளை சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்.

கத்திரிக்காய் சாகுபடி வயல்
கத்திரிக்காய் சாகுபடி வயல்

மொத்தம் 4 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செஞ்சிகிட்டு இருக்கேன். 40 சென்ட்ல வெண்டை... தலா 30 சென்ட்ல கத்திரி, தக்காளி... தலா 25 சென்ட்ல அவரை, பச்சை மிளகாய் உட்பட மொத்தம் ஒன்றரை ஏக்கர்ல 5 வகையான காய்கறிங்க இப்ப பறிப்புல இருக்கு. இன்னொரு ஒன்றரை ஏக்கர்ல இதே மாதிரி 5 வகையான காய்கறிங்க சாகுபடி செய்றதுக்காக, விதைப்பு செஞ்சி 10 நாள்கள் ஆகுது. சுழற்சி முறையில வருஷம் முழுக்க மகசூல் எடுக்குறதுக்காகதான், இரண்டு பகுதிகளா பிரிச்சு, வெவ்வேறு காலகட்டங்கள்ல காய்கறிகள் பயிர் செய்றதை வழக்கமா வெச்சிருக்கேன். இதனால என்னோட தோட்டத்துல எப்பவும் காய்கறிகள் பறிப்புல இருந்துகிட்டே இருக்கும். எப்பவும் அறுவடையில இருக்கும். மீதமுள்ள ஒரு ஏக்கர்ல ரத்தசாலி நெல் சாகுபடி செய்றதுக்காக நிலத்தைத் தயார்ப் படுத்திக்கிட்டு இருக்கேன்’’ எனத் தெரிவித்தவர், ஒன்றரை ஏக்கர் பரப்பில் தற்போது விளைச்சலில் இருக்கும் 5 வகையான காய்கறிகள் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தக்காளி சாகுபடி வயல்
தக்காளி சாகுபடி வயல்

“2 நாள்களுக்கு ஒரு முறை வெண்டைக்காய் பறிப்பேன். 3 நாள்களுக்கு ஒரு தடவை தக்காளி பறிப்பேன். வாரம் ஒரு முறை கத்திரி, அவரைக் காய் பறிப்பேன். 10 நாள்களுக்கு ஒரு முறை பச்சைமிளகாய் பறிக்கிறேன். இந்த 5 வகையான காய்கறிகளுமே 5 மாசத்துக்கு முன்னாடி ஒரே நாள்ல விதைப்பு செஞ்சது. காய்ப்புக்கு வந்ததுல இருந்து இப்ப மூணு மாசம் முடியப்போகுது. இனிமே காய்ப்பு ஓய்ஞ்சிடும். இதுவரைக்கும் வெண்டை 5,250 கிலோவும், கத்திரி 3,500 கிலோவும், தக்காளி 2,000 கிலோவும், அவரை 400 கிலோவும், மிளகாய் 350 கிலோவும் மகசூல் கிடைச்சிருக்கு. காய்கறிங்க ஏற்ற இறக்கத்தோட விற்பனையாகும். சராசரி விலையைச் சொல்றேன்.

வெண்டை கிலோ 10 ரூபாய்னு விலை வச்சா 52,500 ரூபாய், கத்திரி கிலோ ரூ.20-ன்னு பார்த்தா 70,000 ரூபாயும், தக்காளி கிலோ 10 ரூபாய் கணக்குல 20,000 ரூபாயும், அவரை கிலோ 30 ரூபாய்ன்னா 12,000 ரூபாயும், மிளகாய் கிலோ 25 ரூபாய் வீதம் 8,750 ரூபாய் கிடைச்சிருக்கு.

செலவு, வரவு அட்டவணை
செலவு, வரவு அட்டவணை

ஆக இந்த ஒன்றரை ஏக்கர் காய்கறிச் சாகுபடி மூலம் எனக்கு மொத்தம் 1,63,250 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதுல உழவு முதல் அறுவடை வரைக்குமான செலவு 38,000 ரூபாய் போக, மீதம் 1,25,250 ரூபாய் நிகர லாபமாக் கிடைச்சிருக்கு. இயற்கை முறையில விளைஞ்ச காய்கறிங் கிறதுனால, இதுக்குக் கூடுதல் விலையெல்லாம் நான் நிர்ணயம் செய்றதில்லை. சந்தையில பொதுவா மற்ற விவசாயிகள் கொண்டு வர்ற காய்கறிகளுக்கு என்ன விலை கிடைக்குமோ, அந்த விலை கிடைச்சாலே எனக்குப் போதும். நஞ்சில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்றோம்ங்கற ஆத்ம திருப்தியைதான் நான் பெருசா நினைக்குறேன்’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தொடர்புக்கு, பொன்னு புதியவன்,

செல்போன்: 89735 38508

வெண்டைக்காய் சாகுபடி வயல்
வெண்டைக்காய் சாகுபடி வயல்

இப்படித்தான் சாகுபடி!

ஒன்றரை ஏக்கர் பரப்பில்... அவரை, கத்திரி, வெண்டை, தக்காளி, பச்சை மிளகாய் சாகுபடி செய்ய, பொன்னு புதியவன் சொல்லும் செயல்முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

காய்கறிகள் சாகுபடி செய்ய, வடிகால் வசதியுடைய நிலம் அவசியம். தேர்வு செய்த நிலத்தில் 7 நாள்கள் இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவின்போது அடியுரமாக 6 டன் எரு இட வேண்டும். மொத்தம் மூன்று சால் உழவு ஓட்டி முடித்த பிறகு மண்ணைச் சமப்படுத்தி, விதைப்பு மற்றும் நடவு பணிகளைச் செய்ய வேண்டும்.

வெண்டைக்காய்
வெண்டைக்காய்

வெண்டை

40 சென்ட் பரப்பில் வெண்டை சாகுபடி செய்ய, 800 கிராம் விதை தேவைப்படும். தலா 1.5 அடி இடைவெளியில் ஒரு விதை வீதம் ஊன்ற வேண்டும்.

கத்திரி

30 சென்ட் பரப்பில் கத்திரி சாகுபடி செய்ய, 1,400 நாற்றுகள் தேவைப்படும். தலா 3 அடி இடைவெளியில் ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும்.

தக்காளி

30 சென்ட் பரப்பில் தக்காளி சாகுபடி செய்ய 3,250 நாற்றுகள் தேவைப்படும். தலா 2 அடி இடைவெளியில் ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும்.

தக்காளி
தக்காளி

அவரை

25 சென்ட் பரப்பில் செடி அவரைச் சாகுபடி செய்ய 400 - 500 கிராம் விதை தேவைப்படும். தலா 2 அடி இடைவெளியில் ஒரு விதை வீதம் ஊன்ற வேண்டும்.

பச்சை மிளகாய்

25 சென்ட் பரப்பில் பச்சை மிளகாய் சாகுபடி செய்ய 2,500 நாற்றுகள் தேவைப்படும். தலா 2 அடி இடைவெளியில் ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும்.

மிளகாய்
மிளகாய்

விதைநேர்த்தி

10 லிட்டர் தண்ணீரில் 20 மி.லி சூடோமோனஸ் திரவம் கலந்து, அதில் விதைகள் மற்றும் நாற்றுகளை நனைத்து எடுத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். இதனால், வேர் அழுகல் நோய் வராமல் பாதுகாக்கப்படும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து அவ்வப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 10 நாள்களுக்கு ஒருமுறை 300 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீருடன் கலந்து விட வேண்டும்.

பூ எடுக்கும் தருணத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி மீன் அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். காய் பிடிக்கும் தருணத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி தேமோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதைப்பு செய்த 30-ம் நாளில் இருந்தே 10 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் மற்றும் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மூலிகைக் கரைசல் கலந்து சுழற்சி முறையில் தெளிக்க வேண்டும். தேவைக்கு ஏற்றாற்போல களை எடுத்துக்கொள்ளலாம்.

அவரைக்காய்
அவரைக்காய்

75,000 ரொக்கப் பரிசு

இவர், கடந்த 2020-21-ம் ஆண்டுக்கான பாரம்பர்ய நெல் விளைச்சல் போட்டியில் கலந்துகொண்டு வாசனை சீரகச்சம்பா நெல் சாகுபடியில் ஹெக்டேருக்கு 10,200 கிலோ மகசூல் எடுத்து மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் 75,000 ரூபாய் ரொக்கப் பரிசும் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிளகாய் சாகுபடி
மிளகாய் சாகுபடி

விற்பனை வாய்ப்பைப் பொறுத்து சாகுபடி பரப்பு...

‘‘ஒன்றரை ஏக்கர் பரப்புல ஒரே வகையான காய்கறியை சாகுபடி செஞ்சிருந்தா, எனக்கு உத்தரவாதமான நிறைவான லாபம் கிடைச்சிருக்காது. ஒவ்வொரு காய்கறிக்கும் தனிப் பராமரிப்புன்னு எதுவும் கிடையாது. காய்கறி சாகுபடியில புதுசா ஈடுபட நினைக்குற விவசாயிகளுக்கு நான் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல விரும்புறேன். எடுத்த எடுப்புலயே ஏக்கர் கணக்குல காய்கறி சாகுபடி செய்யணும்னு நினைக்காதீங்க. ஒவ்வொரு காய்கறிக்கும் என்ன மாதிரியான விற்பனை வாய்ப்பு இருக்குனு முன்கூட்டியே ஓரளவுக்கு அனுமானம் செஞ்சு, அதுக்கேத்த மாதிரி 25 சென்ட், 30 சென்ட்னு குறைவான பரப்புல பயிர் பண்ணுங்க. அதுக்குப் பிறகு, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி படிப்படியா சாகுபடி பரப்பை அதிகரிக்கலாம்” என்கிறார் பொன்னு புதியவன்.

அவரைக்காய் சாகுபடி வயல்
அவரைக்காய் சாகுபடி வயல்

நேரடியாகவும் விற்பனை செய்றேன்!

‘‘நான் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகளை சந்தையில விற்பனை செய்றதோட மட்டுமல்லாம, சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு எடுத்துக் கிட்டு போயி, மக்கள்கிட்ட நானே நேரடியாவும் விற்பனை செய்றேன். எங்க வீட்டுத் திண்ணையில காய்கறிகளை வச்சு, என் மனைவியும் விற்பனை செய்வாங்க. அதனால, விற்பனையில பெரும்பாலும் பிரச்னை ஏற்பட்டதில்லை. எப்பயாவது ஒரு சில நேரங்கள்ல காய்கறிகள் விற்பனையாகாம மீதியானா, அதைச் சின்னச் சின்ன துண்டுகளா வெட்டி, எங்களோட ஆடு, மாடுகளுக்குப் போட்டுடுவோம். காய்கறி சாகுபடி செய்ற விவசாயிங்க குறைஞ்சபட்சம் 2 மாடுகள், 10 ஆடுகள் வச்சிருந்தா நல்லது’’ என்கிறார் பொன்னு புதியவன்.

கத்திரிக்காய்
கத்திரிக்காய்

பசுமை விகடனை அறிமுகப்படுத்தினார்!

‘‘எங்க ஊரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லாங்கிற விவசாயிதான் இயற்கை விவசாயத்தைப் பத்தியும், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன் பாட்டுனால என்னென்ன தீமைகள் வரும்கிறதையும் என்கிட்ட சொன்னார். அதோட மட்டுமல்லாம இயற்கை விவசாயம் செய்ற சில விவசாயிங்களோட தோட்டத்துக்கும் அழைச்சுட்டுப் போனார். ‘பசுமை விகட’னையும் அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார்’’ என்கிறார் பொன்னு புதியவன்.