ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

10 ஏக்கர்...ரூ.7 லட்சம் லாபம்! நெல், காய்கறிகள், பழங்கள், கால்நடைகள்...

கொய்யாவுடன் பாலசுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
கொய்யாவுடன் பாலசுப்பிரமணியன்

பேராசிரியர் உருவாக்கிய ஒருங்கிணைந்த பண்ணையம்!

மகசூல்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராயவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். அரசுக் கல்லூரி யில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர் பணியோடு, இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம் கொண்டவர். தன் குடும்பத்துக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை நெல், காய்கறிகள், பழங்கள், கால்நடைகள் என ஒருங்கிணைந்த பணணை யாக மாற்றி நிறைவான வருமானம் பார்த்து வருகிறார்.

திருமயம் அருகே ராயவரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் இருக்கிறது இவரது ஒருங்கிணைந்த பண்ணை. ஒரு காலைப்பொழுதில் அந்தப் பண்ணைக்குச் சென்றோம். முழுவதும் முள்வேலி போடப்பட்டுப் பாதுகாப்பாக இருந்தது பண்ணை. உள்ளே சென்றதும், கோழிகளுக்குத் தீவனம் கொடுத்துக் கொண்டிருந்த பேராசிரியர் பாலசுப்பிர மணியன், நம்மை வரவேற்றுப் பேசத் தொடங்கினார்.

கொய்யாவுடன் பாலசுப்பிரமணியன்
கொய்யாவுடன் பாலசுப்பிரமணியன்

“நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் ராயவரம். விவசாயக் குடும்பம். என்னோட கூடப் பொறந்தவங்க 3 பேரும் பெண்கள். அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலி வேலைகளைச் செஞ்சுதான் எங்களை எல்லாம் காப்பாத்துனாங்க. படிப்பு மேல எனக்கு ஆர்வம் இருந்ததால, விவசாய வேலைகளைச் செஞ்சிக்கிட்டே பி.எஸ்ஸி கணிதம் படிச்சு முடிச்சேன். மேற்கொண்டு படிக்கணும்னு ஆசை. ஆனா, குடும்பச் சூழ்நிலையால வெளிநாடு போய்ச் சம்பாதிக்க வேண்டிய நிலைமை.

சிங்கப்பூர்ல 2 வருஷம் வேலை பார்த்து, கூடப் பொறந்த 3 தங்கச்சிகளுக்கும் நல்ல படியா கல்யாணம் பண்ணி வெச்சேன். அதுக்கப்புறம் சொந்த ஊருக்குத் திரும்பி வந்திட்டேன். வந்ததும், வீட்டுக்கு வீடு பால் போடுறது, பேப்பர் போடுறதுன்னு சின்னச் சின்ன வேலைகளைச் செஞ்சு புதுக்கோட்டை மன்னர் அரசுக் கல்லூரியில எம்.எஸ்ஸி கணிதம் படிச்சேன். கஷ்டப்பட்டுப் படிச்சதால, கல்லூரியில் முதல் மாணவனா தேர்வானேன். அங்கேயே கெளரவ விரிவுரையாளர் வேலை கிடைச்சது. இப்போ உதவிப் பேராசிரியராக இருக்கேன்’’ என்று முன்னுரை கொடுத்தவர், தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

கோழிகள்
கோழிகள்

களத்துல இறங்குனாதான் காசு பார்க்க முடியும்

‘‘படிப்புல எந்தளவுக்கு ஆர்வமோ அந்தளவுக்கு விவசாயத்து மேலயும் ஆர்வம். இப்பவும் வகுப்பு எடுத்து முடிச்சதும் வீட்டுக்குக் கூட போகாம பண்ணைக்குத்தான் மொதல்ல போவேன். வெளியிலயோ, வீட்டிலயோ எவ்வளவு பிரச்னை வந்தாலும் இங்க வந்திட்டா போதும் மனசு லேசாகிடும். தினமும் காலை, மாலை ரெண்டு வேளையும் வந்து என்னால முடிஞ்ச வேலைகளைப் பார்த்துடுவேன். விடுமுறை நாள் வந்திட்டா முழுசா தோட்டத்திலதான் இருப்பேன். காலையில கொய்யா பறிக்கிறது, கோழி களுக்குத் தீவனம் போடுறது, கறந்து வச்ச பாலை விற்பனைக்குக் கடையில கொடுக் குறதுன்னு தோட்டத்துல இருக்கப் பெரும் பாலான வேலைகளை நானே பார்த்திடுவேன். வேலையாள்களை மட்டும் நம்பாம நாமே களத்தில் இறங்கிப் பார்க்கும்போதுதான் லாப நஷ்டத்தைத் தெரிஞ்சிக்க முடியும்’’ என்றவர், கொய்யா மரங்களிலிருந்து கொய்யாவைப் பறித்தவாறே ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்துப் பேசத் தொடங்கினார்.

களை பறிக்கும் பணியில்
களை பறிக்கும் பணியில்

வரப்புகளில் 1,000 தேக்கு மரங்கள்

‘‘இந்தப் பண்ணையோட மொத்த பரப்பு 10 ஏக்கர். நான், என்னோட தம்பி சரவணனோட சேர்ந்து 2015-ம் வருஷம்தான் இந்தச் செம்மண் பூமியை வாங்குனோம். வாங்கி 2 வருஷம் அப்படியே போட்டுட்டோம். 2017-ம் வருஷம் நிலத்தைச் சமன்படுத்தி, விவசாய நிலமா மாத்துனேன். மொத வேளையா முள்வேலி போட்டுப் பண்ணையை முழுசா அடைச்சேன். வரப்புகள்ல 1,000 தேக்கு மரங்களை நடவு செஞ்சேன். அதோட செம்மரம், ரோஸ்வுட், மகோகனின்னு நீண்ட கால மரப்பயிர்களையும் நடவு செஞ்சேன். 10 ஏக்கரும் இயற்கை விவசாயம் தான் செய்யணும்ங்கிறதுல உறுதியா இருந்தேன். நம்மாழ்வார் ஐயாவோட பேச்சுகள், பசுமை விகடன் வெற்றிக் கட்டுரைகளும்தான் நான் இயற்கை விவசாயத்துக்கு வர முக்கியக் காரணம்.

இயற்கை விவசாயமே இலக்கு

3 ஏக்கர்ல பாரம்பர்ய நெல், 2 ஏக்கர்ல கொய்யா, 2 ஏக்கர்ல மா, 1 ஏக்கர்ல எலுமிச்சை, 1 ஏக்கர்ல காய்கறிகள், அரை ஏக்கர்ல திராட்சை, அரை ஏக்கர்ல மீன்குளம் அதோட கால்நடைகளும் வச்சிருக்கேன். இந்தப் பண்ணையை உருவாக்கி இப்போ 3 வருஷம்தான் ஆகுது. பெருசா வேலையாட்கள்னு யாரையும் வெச்சுக்கல. பெரியப்பா, சித்தப்பா பசங்க, எங்க குடும்ப ஆட்கள் தான் விவசாய வேலைகள்ல ஈடுபடுறாங்க. அவங்களுக்குத் தேவையானதைச் செஞ்சு கொடுத்திடுவேன்.

வாழை
வாழை

நிலம் வாங்கும்போதே முடிஞ்சளவு நஞ்சில்லா பொருள்களை மட்டுமே விளையவெச்சு மக்களுக்குக் கொடுக்கணும்னு உறுதியா இருந்தேன். நெனச்ச மாதிரியே இப்போ இயற்கையில் விளைஞ்ச நஞ்சில்லா பொருள்களை மக்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். பஞ்சகவ்யா, மீன் அமிலம், ஜீவாமிர்தம், அமுதக்கரைசல்னு இயற்கை இடுபொருள்கள் எல்லாத்தையும் நானே தயாரிச்சு, பயிர்களுக்குக் கொடுக்கிறேன்’’ என்றவர் நெல் நடவு குறித்துப் பேசினார்.

3 ஏக்கர் நெல், ரூ.1,50,000 வருமானம்

3 ஏக்கர் நெல் சாகுபடியில தலா அரை ஏக்கர் தங்கச்சம்பா, தூயமல்லி, சீரகச் சம்பா, கறுப்புக்கவுனி, கிச்சிலிச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பானு பாரம்பர்ய நெல் ரகங்களை மட்டும் தான் நடவு செஞ்சிருந்தேன். கோடையில கருங்குறுவை கொஞ்சம் சாகுபடி செஞ்சிருந்தேன். நல்ல மகசூல் கிடைச்சது. நெல்லை அரிசியாக்கி விற்பனை செஞ்சேன். போன தடவை பாரம்பர்ய அரிசி விற்பனை மூலமா 1,50,000 ரூபாய் வருமானம் கிடைச்சது.

நெல் வயல்
நெல் வயல்

உழவுலயிருந்து, அறுவடை முடிச்சு நெல்லை அரைச்சு விற்கிறது வரைக்கும்னு மொத்தம் 60,000 ரூபாய் செலவாச்சு. அது போக 90,000 ரூபாய் நிகர லாபமா கிடைச்சது. வைக்கோல், தவுடு மொத்தத்தையும் மாடுகளுக்குப் பயன்படுத்திக்குவோம். இந்தத் தடவை ஒன்றரை ஏக்கர்ல தங்கச்சம்பா, அரை ஏக்கர்ல கறுப்புக்கவுனி, அரை ஏக்கர்ல மாப்பிள்ளைச் சம்பா நடவு செஞ்சிருக்கேன்’’ என்றவர், ஊடுபயிர் சாகுபடி குறித்துப் பேசினார்.

ஊடுபயிர் சாகுபடி

கொய்யா, மா, திராட்சை மூலமா வருமானம் வந்துகிட்டு இருக்குது. எலுமிச்சை இன்னும் மகசூலுக்கு வரல. அடுத்த வருஷம் எலுமிச்சையும் வருமானம் கொடுக்க ஆரம்பிச்சிடும். வயல், வரப்பு ஓரம்னு 10 ஏக்கர் நிலத்துக்குள்ளேதான் 700 தென்னை மரங்கள் நடவு செஞ்சிருக்கேன். இவ்வளவு தென்னை மரங்கள் நடவு செஞ்சிருக்க மாதிரியே தெரியாது. அடுத்த சில வருஷங்கள்ல தென்னை மரங்களிலிருந்தும் வருமானம் கிடைக்க ஆரம்பிச்சிடும்.

நிலக்கடலை
நிலக்கடலை


கொய்யா, மாமரத்துக்குள்ள ஊடுபயிரா கடலை, உளுந்து, பாசிப்பயறு, துவரைன்னு பயிர் வகைகளையும் நடவு செஞ்சு அதிலிருந்து வருமானம் பார்த்துடுவேன். இந்தத் தடவை கடலை போட்டா அடுத்த தடவை உளுந்து போடுவோம். இப்படி மாத்தி மாத்தி பயிர் செஞ்சிக்குவோம். கடலை எப்படியும் வருஷத்துக்கு ரெண்டு போகம் சாகுபடி பண்ணிடுவேன். போன வருஷம் கடலைச் சாகுபடி செஞ்சதுல ரெண்டு போகத்துக்கும் சேர்த்து 400 கிலோ கடலை கிடைச்சது. அதை எண்ணெயா ஆட்டுனதுல 150 லிட்டர் கிடைச்சது. ஒரு லிட்டர் 200 ரூபாய்க்கு விற்பனை செஞ்சோம். அந்த வகையில 30,000 ரூபாய் கிடைச்சது. கடலைக்கொடி, புண்ணாக்கை நாங்களே பயன்படுத்திக் கிறோம். கடலை போட்ட வகையில எல்லாச் செலவுகளும் போக 20,000 ரூபாய் நிகர லாபமா கையில் நின்னுச்சு.

அதே மாதிரி உளுந்து, பாசிப்பயறு, எள்ளு, துவரையை ஊடுபயிரா சாகுபடி செஞ்ச வகையில எல்லாச் செலவும் போக 60,000 ரூபாய் வரையிலும் நிகர லாபமாகக் கிடைச்சது. மொத்தமா வருஷத்துக்கு ஊடுபயிர் மூலமா 80,000 ரூபாய் கிடைக்கிது’’ என்றவர், மாடுகளுக்குத் தீவனம் அள்ளிப் போட்டுவிட்டு வந்து தொடர்ந்தார்.

மாடுகள்
மாடுகள்

பால் வருமானம்

‘‘மாடு, கோழி, மீன், ஆடு எல்லாம் இருக்குது. கன்றுகளோட சேர்த்து மொத்தமா 20 நாட்டு மாடுகள் இருக்குது. அதுல 4 பால் மாடுகள். இந்தப் பால் மாடுக மூலமா தினமும் ரெண்டு நேரமும் 5 லிட்டர் பால் கிடைக்குது. இந்தப் பாலை நேரடியா 70 ரூபாய்னு விற்பனை செய்றோம். தினமும் பால் மூலமா 350 ரூபாய் வருமானம் கிடைக்குது. பசுந்தீவனத்துக்குச் சூப்பர் நேப்பியர் பயிரிட்டிருக்கோம். மேய்ச்சல் முறை வளர்ப்புதான். தினமும் மேய்ச்சல் கூலி, மாடுகளுக்கான செலவு போக, பால் விற்பனை மூலமா வருஷத்துக்கு 73,000 ரூபாய் லாபமா நிக்குது.

மேய்ச்சலின்போது மாடுகள் போடுற சாணம் தோட்டத்துக்கு உரமா பயன்படுது. அதோட முக்கியமா பஞ்சகவ்யா உள்ளிட்ட இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கப்பயன்படுது” என்றவர், மீன், கோழி வளர்ப்புத் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘அரை ஏக்கர்ல அமைச்ச பண்ணைக் குட்டையை மீன் குளமா மாத்திட்டோம். குளத்துக்கு மேல கோழி கொட்டகை அமைச்சிருக்கோம். கொட்டைகை யிலிருந்து விழுற கோழி எச்சம்மூலம் உருவாகுற நுண்ணுயிர்ங்க மீன்களுக்கு உணவாகுது. அது இல்லாம, தனியா அசோலா வளர்த்து மீன், கோழிகளுக்குக் கொடுக்கிறோம். மற்ற பயிர்களுடன் கணக்கிடும்போது கால்நடை வளர்ப்பு மூலமாதான் அதிக லாபம் கிடைக்கும். இப்போதைக்குக் கொஞ்சம் ஆடுகளும் இருக்கு. ஆனால், விற்பனை செய்யல. தொடர்ந்து கால்நடைகளை அதிகப்படுத்தும்போது வருமானமும் அதிகமாகும்’’ என்றவர் நிறைவாக,

லாப கணக்கு
லாப கணக்கு


‘‘எல்லாத்தையும் திட்டம்போட்டு, சரியா செஞ்சா ஒருங்கிணைந்த பண்ணையம் லாபகரமானதா இருக்கும். அதுக்கு என்னோட பண்ணையே உதாரணம். இந்த 10 ஏக்கர் பண்ணையில இருந்து நெல் மூலம் 90,000, கொய்யா மூலம் 2,25,000 ரூபாய், ஊடுபயிர் மூலமா 80,000 ரூபாய், திராட்சை மூலமா 70,000 ரூபாய், பால் மூலமா 73,000 ரூபாய், மீன் மூலமா 85,000 ரூபாய், கோழி மூலமா 65,000 ரூபாய், காய்கறிகள் மூலமா 15,000 ரூபாய்னு மொத்தம் 7,03,000 ரூபாய் லாபம் கிடைக்குது. என்னைப் பொறுத்தவரைக்கும் இது நிறைவான லாபம்தான்’’ என்றபடியே விடை கொடுத்தார்.


தொடர்புக்கு, பாலசுப்பிரமணியன்,

செல்போன்: 80728 58395.

கொய்யா

கொய்யா வருமானம் குறித்துப் பேசிய பாலசுப்பிரமணியன், ‘‘லக்னோ 49, கப்சி, அர்க்கா கிரண்னு 3 ரகக் கொய்யாவை 2 ஏக்கர்ல நடவு செஞ்சிருக்கேன். மொத்தம் 400 மரங்கள் இருக்கு. கொய்யா நடவு செஞ்ச 6 மாசத் துலயே வருமானம் கிடைக்க ஆரம்பிச்சிருச்சு. கொய்யாவுல எங்களுக்கு வருஷம் முழுக்க வருமானம் கொடுக்குது. குறிப்பா பிப்ரவரி, மார்ச், ஆகஸ்ட், செப்டம்பர்னு மொத்தம் 4 மாசம்தான் அதிகமா காய்க்கிற நேரம். அந்த நேரத்தில தினமும் அதிகபட்சமா 100 கிலோ வரைக்கும்கூட மகசூல் கிடைக்கும். மத்த நேரத்தில தினமும் 25 கிலோ வரைக்கும் மகசூல் கிடைக்கும். இயற்கையில விளைவிக்கப்படுற எங்க கொய்யாவுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம். மக்கள் தேடி வந்து வாங்கிட்டுப் போயிடுறாங்க. நல்லா காய்க்கிற நேரத்துல மட்டும் சராசரியா 4,000 கிலோ மகசூல் கிடைக்கும் அதை கிலோ 40 ரூபாய்ன்னு விற்பனை செய்றது மூலமா 1,60,000 ரூபாய், மத்த நேரத்தில கிடைக்குற 2,500 கிலோவை, ஒரு கிலோ 50 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா 1,25,000 ரூபாய்னு கொய்யா மூலமா வருஷத்துக்கு 2,85,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல நடவு, இடுபொருள், அறுவடை, விற்பனை ஆள்கூலின்னு பார்த்தா 60,000 ரூபாய்ச் செலவாகும். அது போக 2,25,000 ரூபாய் கிடைச்சிக்கிட்டு இருக்குது’’ என்றார்.

அசோலா
அசோலா

மாம்பழம்

மா வருமானம் குறித்துப் பேசிய பாலசுப்பிரமணியன், ‘‘செந்தூரம், நீலம், பங்கனப்பள்ளி, இமாம்பசந்த்னு மொத்தம் 4 ரக மா போட்டிருக்கேன். நடவு செஞ்ச 2 வருஷத்துக்குப் பிறகு மகசூல் கொடுக்க ஆரம்பிச்சிடுச்சு. இந்த வருஷம் 120 கிலோ மகசூல் கிடைச்சது. 100 கிலோ வரைக்கும் இயற்கை முறையில் நாங்களே பழுக்க வெச்சு, கிலோ 200 ரூபாய்னு நேரடியா விற்பனை செஞ்சோம். அது மூலமா 20,000 ரூபாய் கிடைச்சது. ஆனா, இந்த வருமானத்தைவிட கூடவே செலவு செஞ்சிருக்கேன். நடவு செஞ்ச உடனேயே மா மரத்துல இருந்து பெருசா எதிர்பார்க்க முடியாது. அடுத்தடுத்த வருஷத்திலிருந்து அதிக வருமானம் கிடைக்கும். காய்கறிகளுக் காக ஒரு ஏக்கர் வரைக்கும் ஒதுக்கி இருக்கோம். அதுல வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை விளை விச்சிக்குவோம். தேவை போகக் கூடுதலா இருக்குறதை விற்பனை செய்வோம். அந்த வகையில காய்கறிகள் மூலமா எல்லா செலவும் போக வருஷத்துக்கு 15,000 ரூபாய் மிஞ்சும்’’ என்றார்.

திராட்சை
திராட்சை

திராட்சை

திராட்சை வருமானம் குறித்து, ‘‘இந்தப் பகுதியில எல்லாம் திராட்சை வரவே வராதுன்னு சொன்னாங்க. திராட்சை இந்த மண்ணுல வர வைக்க முடியும்ங் கிற வைராக்கியத்துலதான் திண்டுக்கல்லயிருந்து 500 குச்சிகளை வாங்கிட்டு வந்து அரை ஏக்கர்ல நடவு செஞ்சேன். நல்லாவே வந்திருச்சு. காய்கறி போடுறதுக்காக மானியத்துல போட்ட பந்தலைப் பயன்படுத்திக் கிட்டேன். வருஷத்துக்கு 3 தடவை திராட்சை அறுவடை செய்றேன். ஒரு தடவைக்கு 400 கிலோ வீதம் 3 தடவையும் சேர்த்து 1,200 கிலோ வரைக்கும் கிடைக்குது. அதை கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்றது மூலமா 84,000 ரூபாய் கிடைச்சது. பறிப்புக் கூலி, செலவுன்னு 14,000 ரூபாய் போனாலும் 70,000 ரூபாய் நிகர லாபமாக் கிடைக்கிது. இடைத்தரகர்கள் இல்லாம நேரடியா விற்பனை செய்றதால இந்த வருமானம் கிடைக்குது’’ என்றார் பாலசுப்பிரமணியன்.

மீன் பிடிப்போருடன்
மீன் பிடிப்போருடன்

40 தாய்க்கோழிகள், ஆண்டுக்கு 90,000 ரூபாய்

‘‘30 தாய்க்கோழிகள், 15 சேவல்கள், 10 தாய்க் கருங்கோழிகள், 2 சேவல்கள், 10 கின்னிக் கோழிகள் இருக்கு. ஒரு தாய்க்கோழி மூலமா 50 முட்டைகள் வீதம் 40 தாய்க்கோழிகள்லயிருந்து 2,000 முட்டைகள் கிடைச்சது. ஒரு முட்டை 10 ரூபாய்க்கு கொடுப்போம். 1,500 முட்டை வரையிலும் விற்பனை செய்வோம். அந்த வகையில 15,000 ரூபாய் கிடைக்கும். 300 முட்டையை அடைவச்சதுல 250 குஞ்சுகள் பொரிச்சது. இந்தக் குஞ்சுகளை வளர்த்து 3 மாசத்துல கிலோ 300 ரூபாய்னு விற்பனை செஞ்சோம். அந்த வகையில 300 கிலோ விற்பனை மூலமா 90,000 ரூபாய் கிடைச்சது. மொத்தமாகச் சேர்த்தா கோழியிலிருந்து 1,15,000 ரூபாய் கிடைச்சது. அதுல, தீவனச் செலவு, ஆள் கூலின்னு 40,000 ரூபாய் செலவாகிருச்சு. 65,000 ரூபாய் நிகர லாபம்’’ என்றார்.

மீன் குளம்
மீன் குளம்

மீன் விற்பனை

‘‘மீன் குளத்துல ரோகு, மிர்கால், கட்லா, புல் கெண்டைன்னு எல்லாம் கலந்து 2,000 குஞ்சுகள் வாங்கி விடுவோம். கிட்டத்தட்ட 300 குஞ்சுகள் வரைக்கும் அடிபட்டுப் போயிடும். 6 மாசம் கழிச்சு கொஞ்சம் கொஞ்சமா மீனைப் பிடிச்சு விற்பனை செய்வோம். மக்கள் நேரடியா வந்து வாங்கிட்டுப் போவாங்க. அரை கிலோவுக்கு அதிகமான மீன்கள் தான் விற்பனை. அரை கிலோவுக்குக் குறைஞ்சா தண்ணிக்குள்ளேயே விட்டுடுவோம். ஒவ்வொரு வாரமும் 20 கிலோ வரைக்கும் மீன் பிடிச்சு விற்பனை செய்றோம். உயிர்மீன் கிலோ 150 ரூபாய்னு விற்பனை செய்றோம். மீன் வளர்ப்பு மூலமா வருஷத்துக்கு சராசரியா 1,20,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. மீன் குஞ்சு, மீன் பிடி செலவுன்னு 35,000 ரூபாய் போக 85,000 ரூபாய் நிகர லாபமா கிடைக்குது’’ எனச் சொல்கிறார் பாலசுப்பிரமணியன்.