
புறாபாண்டி
‘‘சென்னையில் வசிக்கிறோம். மாடித் தோட்டம்போல மொட்டை மாடியில் தேனீ வளர்க்க முடியுமா?’’
ச.லலிதா, சென்னை-14.
சென்னையில் பல ஆண்டுகளாகத் தேனீ வளர்த்து வரும் கே.வசந்தகுமார் பதில் சொல்கிறார்.
‘‘சென்னை மாநகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தேனீ வளர்த்து வருகிறார்கள் என்ற செய்தி பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். கடந்த 15 ஆண்டுகளாக நான் சென்னை அரும் பாக்கம் பகுதியில் தேனீ வளர்த்து வளர்கிறேன். தேனீ வளர்ப்பில், ‘விவசாய ரீதியில் தேனீ வளர்ப்பு’, ‘வணிக ரீதியில் தேனீ வளர்ப்பு’ என இரண்டு முறைகள் உள்ளன.
விவசாய ரீதியாக வளர்க்கும்போது, இந்தியத் தேனீக்களை மட்டும்தான் வளர்க்க முடியும். இவை, அயல் மகரந்த சேர்க்கைக்கு உகந்தவை. இந்தத் தேனீப் பெட்டிகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் தோட்டத்தில் ஆங்காங்கே வைத்து விட வேண்டும். இவற்றை இடம் மாற்றக் கூடாது. இம்முறையில், கிடைக்கும் தேனின் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அயல் மகரந்தச் சேர்க்கை, நன்றாக நடப்பதால், வயலில் உள்ள பயிர்களில் மகசூல் கூடும்.

வணிக ரீதியில் தேன் உற்பத்திக்காக வளர்க்க, இத்தாலியத் தேனீக்கள் சிறந்தவை. இவற்றை அடிக்கடி இடம் மாற்றி வைத்து வளர்க்க வேண்டும். இவை, அதிக அளவில் உண்ணக்கூடியவை. அதனால், பூக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில்தான் இவை வாழும். சென்னை யில் வளர்க்க இத்தாலித் தேனீக்கள் ஏற்றவை.
1,000 சதுரஅடி கொண்ட மொட்டை மாடியில், நான்கு பெட்டிகள் வரை வைக்கலாம். அதன் மூலம் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை தேன் கிடைக்கும். இந்த ஆறு மாதங்களில் மட்டும்தான் தென்னை, முருங்கை, குல்மொஹர்... போன்ற மரங்களில் அதிகமாகப் பூக்கள் இருக்கும். ஆறு மாதங்களுக்கு பூக்கள் இருந்தாலும் 5 மாதங்கள்தான் தேன் கிடைக்கும். ஜூன், ஜூலை மாதங்களில் காற்று வீசும். அடுத்து வரும் மாதங்களில் மழை பெய்யும். அதனால் இந்தக் காலங்களில் தேனீக்கள் வெளியில் செல்லாது. அப்போது, அவற்றுக்கு நாம் தான் உணவு கொடுக்க வேண்டும். ஒரு பங்கு சர்க்கரை, இரண்டு பங்கு நீர் கலந்து, தேனீக்களுக்குக் கொடுக்கலாம். இப்படிச் செய்யாவிட்டால், பெட்டியில் உள்ள தேனீக்கள் இறந்துவிடும். இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஓய்வு நேரத்தில் தேனீக்களைக் கவனித்தாலே போதும்.
வீட்டில் உள்ள தேனீப் பெட்டியிலிருந்து கலப்பட மில்லாத தேன் எடுத்து சாப்பிட்டுப் பாருங்கள்.அப்போதுதான் தேனின் உண்மையான சுவையை நீங்கள் உணர்வீர்கள். கடைகளில் வாங்கும் தேனைக் காய்ச்சிக் கொடுப்பதால், அதில் சுவை குறைந்து விடுகிறது. விற்பனைக்காக இல்லாவிடினும்... வீட்டுத்தோட்டம்போல, வீட்டுத்தே வைக்காக வாவது தேனீ வளர்க்கலாம்.

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும், பூச்சியியல் துறையில் ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி தேனீ வளர்ப்புக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். ஒருவேளை அன்று அரசு விடுமுறை நாளாக இருந்தால், அதையடுத்த வேலை நாளில் பயிற்சி நடைபெறும். இதற்குக் கட்டணம் உண்டு. முடிவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தேனீ வளர்ப்பில் ஆர்வம் இருப்பவர்கள் கட்டாயம் ஒருமுறை கலந்துகொண்டால், தேனீ வளர்ப்பைச் சிறப்பாகச் செய்ய முடியும். மேலும், இயற்கையான சூழலில் தேனீ கூடு கட்டுதல் தேனீக்களைக் கொல்லாமல் தேன் கூட்டிலிருந்து தேன் சேகரித்தல், தேன் கூடு அடுக்கு விற்பனை வணிகரீதியான தேனீ வளர்ப்பு தொடங்குதல், தேனீ பெட்டி வாங்குவது, தேன் விற்பனை… போன்ற விவரங்களைப் பயிற்சியின்போது அறிந்துகொள்ள முடியும்.’’
தொடர்புக்கு,1. பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் 641 003, தொலைபேசி: 0422 6611214, 6611414 .
2. கே.வசந்தகுமார், செல்போன்: 99418 68926 .

‘‘நிலக்கடலைச் சாகுபடி செய்ய விரும்புகிறோம். எந்த ரகம் ஏற்றது. விதை எங்கு கிடைக்கும்?’’
சி.முருகன், உளுந்தூர்பேட்டை.
விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானி முனைவர் கே.நடராஜன் பதில் சொல்கிறார்.
‘‘விருத்தாசலம் ஆராய்ச்சி நிலையத்தில் வி.ஆர்.ஐ.2 என்ற ரகத்தை உருவாக்கி வெளியிட்டார்கள். இந்த ரகத்தின் சிறப்புத்தன்மை எண்ணெய்க்கும் பயன் படுத்தலாம். சாப்பிடவும் பயன்படுத்தலாம். ‘காந்தி கடலை’ என்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரகத்தையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த ரகமும் நமது கொடிக்கடலை போன்ற குணாதிசயம் கொண்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிக வயது கொண்ட ரகங்கள் தாக்குப் பிடிப்பதில்லை. காரணம், காய்ப்பிடிக்கும் நேரத்தில் பருவ மழை பெய்துவிடுவதே. இதனால், மானாவாரி நிலத்திலும் நல்ல மகசூல் தரக்கூடிய டி.எம்.வி.13 என்ற ரகத்தைத் திண்டிவனம், எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது. இந்த ரகம் மழையை மட்டுமல்ல, காய்ப்பிடிக்கும் பருவத்தில் வறட்சி ஏற்பட்டாலும் தாங்கி வளரும்.
ஏக்கருக்குச் சராசரியாக 1,000 கிலோ மகசூல் கிடைக்கும். இந்த ரகத்தில் 50 சதவிகித அளவுக்கு எண்ணெய்ச் சத்து இருக்கும். ஆகையால், இதை எண்ணெய் எடுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதைத் தின்பண்டமாகப் பயன்படுத்து பவர்கள் அதிகம் சாப்பிட்டால், மயக்கம் வந்துவிடும் என்பது கவனிக்கதக்கது.

இந்த ரகத்தின் வயது 100 நாள்கள்தான். அறுவடை நாள்கள் குறைவு என்பதாலும், வறட்சியைத் தாங்கி மகசூல் கொடுப்பதாலும், இந்த ரகத்தை நிறைய விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். மேலும், விருத்தாசலம் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வெளியிடப் பட்ட வி.ஆர்.ஐ.8 என்ற ரகத்தை விவசாயிகள் விரும்பிச் சாகுபடி செய்து வருகிறார்கள். ஏக்கருக்கு 1,000 கிலோ மகசூல் கொடுக்கும். கடலை மிட்டாய், பர்ப்பி, கடலை உருண்டை… என மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய இந்த ரகக் கடலை உகந்த வகையில் உள்ளது. தற்போது, இந்த நிலக்கடலை விதை எங்கள் வேளாண் அறிவியல் நிலையத்தில் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வாங்கிப் பயன்பெறலாம்.’’
தொடர்புக்கு, செல்போன்: 99943 15004.
‘‘தென்னை நார் கயிறு தொழில் தொடங்க விரும்புகிறோம். இதற்கான பயிற்சி எங்கு கிடைக்கும்?’’
சி.முத்துசாமி, கரூர்.
‘‘மத்திய அரசின் கயிறு வாரியம் (COIR BOARD) தென்னை நார் (கயிறு) தொழிலின் மேம்பாட்டுக்கு, பல்வேறு மானியங்களையும் பல பயனுள்ள திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தஞ்சாவூரில் உள்ள மண்டல விரிவாக்க மையத்தில் தென்னை நார் பொருள்கள் தயாரிக்கப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. தொழில் தொடங்க தேவையான வழிகாட்டல் களையும் வழங்கி வருகிறது.’’
தொடர்புக்கு,
வளர்ச்சி அலுவலர்,
கயிறு வாரியம், மண்டல விரிவாக்க மையம்,
வல்லம் (வழி),
தஞ்சாவூர்-613403
தொலைபேசி 04362 264655.