மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்புழு மன்னாரு: கைவிட்ட பழப்பயிர்கள்.. கைகொடுத்த மரப்பயிர்கள்! இது தோற்று ஜெயித்தவரின் கதை!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

மிழ்ப் புத்தாண்டு அன்று அலைபேசியில் நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் பேசினார். `எப்படி இருக்கிறீர்கள், உங்கள் பண்ணை எப்படி உள்ளது?’ என்று கேட்டேன். அவர் சொல்லிய தகவல்கள் கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் இடம் பெறாதவை. ‘‘பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மலை அடிவாரத்தில், பத்து ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினேன். நீங்கள் கூட அந்தப் பகுதியிலுள்ள முன்னோடி விவசாயிகள், வேளாண் வல்லுநர்களின் தொடர்பு எண்களைக் கொடுத்து பேசச் சொன்னீர்கள். எல்லோரிடமும் பேசினேன். சிறந்த பண்ணை என்ற பெயர் எடுக்க வேண்டும் என்று கையிலிருந்த பணத்தையெல்லாம் முதலீடு செய்தேன். இந்தியாவிலேயே சிறந்த தோட்டக்கலை நர்சரிகள் இருக்கும், ஆந்திர மாநிலம் கடியம் பகுதியிலிருந்து பழக்கன்று களை வாங்கி வந்து நடவு செய்தேன். முற்றிலும் இயற்கை வழி விவசாயம்தான். இதனால், பழ மரங்கள் சிறப்பாக வளர்ந்தன. மா மரங்கள் மரம் நிறையப் பூ பூத்துக் காய்ப்புக்கு வரத்தொடங்கின. நாம் பட்ட கஷ்டத்துக்குப் பலன் கிடைக்கப்போகிறது என்று தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்தேன்.

ஒரு நாள் காலை நேரத்தில் தோட்டத்தில் வேலை செய்யும் ஆள், ‘ஐயா, ஓடி வாங்க, ஓடிவாங்க...’ என்று அலறியபடியே அழைத்தார். தோட்டத்திலிருந்த மா மரங்களில் குரங்குகள் கூட்டமாக அமர்ந்து கொண்டு, காய்களைத் தின்பதும், பறித்துப் போடுவதுமாக இருந்தன. சத்தம் போட்டு விரட்டினோம். ஆரம்பத்தில் பயந்த குரங்குகள், காலப்போக்கில் எங்களைக் கடிக்க வந்தன.

மாவில்தான் இந்தப் பிரச்னை என்றால், குட்டை ரகத் தென்னை மரங்களில் மரநாய்கள் பாடாய்படுத்தின. மரத்தில் ஒரு தேங்காய்கூட இருக்காது. அத்தனையையும் மர நாய்கள் கடித்துக் கீழே போட்டிருக்கும். இந்த அனுபவத்தின் மூலம் பறவை, வன விலங்கு களிடமிருந்து மாதுளையைக் காப்பாற்ற நிழல் வலைகளை அடித்துப் பாதுகாப்பு செய்தோம். ஆனால், மாதுளையின் மீது வரி வரியாகக் கோடுகள் விழுந்தன. சந்தைக்குக் கொண்டு சென்றால், நோய் வந்த காய் என்று வாங்க மறுத்தார்கள். உண்மையில் மாதுளையை நோய் தாக்கவில்லை. தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு, மாதுளை மீது இப்படி வரிகள் உருவாகும் என்று தெரிந்துகொண்டேன். மாதுளையின் உள்ளே நன்றாகத்தான் உள்ளது. மேல் பகுதியில்தான் வரியாக உள்ளது. நல்ல பழம்தான். தமிழ்நாட்டில் விளையும்போது இப்படித்தான் இருக்கும்; இயற்கை வழியில் விவசாயம் செய்துள்ளேன். ஒரு பழத்தைச் சாப்பிட்டுப் பாருங்களேன்... என்றெல்லாம் நான் கதறிக் கதறிச் சொல்லியதை எந்த வியாபாரியும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இப்படி, அடி மேல், அடி விழுகிறதே என்று ஒரு நாள் மாலை நேரத்தில் மா மரத்தடியில் உட்கார்ந்து யோசித்தேன். நான் செய்த தவறுகள் கண்முன்பே வந்து நின்றன.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

வனவிலங்குகள் நடமாடும் வனப்பகுதிக்கு அருகில் பழ வகை மரங்களைச் சாகுபடி செய்திருக்கக்கூடாது. கர்நாடகாவில் விளைகிறது, ஆந்திராவில் நல்ல மகசூல் கொடுக்கிறது என்றெல்லாம் சொன்னதைக்கேட்டு நடவு செய்தேன். ஆனால், கள நிலவரத்தைத் தெரிந்துகொள்ளாததால் மாதுளையில் கையைச் சுட்டுக்கொண்டதை உணர்ந்தேன். பல ஆண்டுகளின் உழைப்பும் பணமும் போட்டுள்ளோம். இந்த நிலத்தில் என்னதான் மிஞ்சி உள்ளது என்று சலிப்புடன் தோட்டத்தைப் பார்த்தேன். நான் நட்டுவைத்திருந்த மலைவேம்பு, தேக்கு, மகோகனி... என மரப்பயிர்கள் தளதளவென வளர்ந்து, காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. இத்தனைக்கும் இந்த மரங்களையெல்லாம் மதித்து ஒருமுறைகூட உரம் கொடுத்ததோ... பாசனம் செய்ததோ கிடையாது. நண்பர் ஒருவர் சொன்னார் என்று விருப்பமே இல்லாமல்தான் பழ மரங்களுடன் ஊடுபயிராக இவற்றையெல்லாம் நடவு செய்திருந்தேன். இத்தனை ஆண்டுகளாக அவற்றையெல்லாம் நான் பெரிதாகக் கண்டுகொள்ளவும் இல்லை. ஆனால், அன்றைய தினம் அவைதான் எனக்குப் புதிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தன.

புத்தருக்கு அரச மரத்தடியில் ஞானம் கிடைத்ததுபோல, எனக்கு மா மரத்தடியில் தெளிவு பிறந்தது. இந்த நிலத்துக்கும், இங்குள்ள சூழ்நிலைக்கும் மரப்பயிர்கள் மட்டுமே ஏற்றவை என்று புரிந்துகொண்டேன். இந்தப் பகுதிக்கு ஏற்ற மரப்பயிர்களை நடவு செய்தேன். அதிலும் ஒரே வகை மரப்பயிராக இல்லாமல், பல வகைகளைக் கலந்து நடவு செய்துள்ளேன். மூன்று ஏக்கரில் சாகுபடி செய்திருந்த மாதுளைச் செடிகளை வெட்டி எறிந்துவிட்டு, பசுந்தீவனங்களைச் சாகுபடி செய்தேன். மரப்பயிர்களுடன், கால்நடை வளர்ப்பும்தான் வருமானத்துக்குக் கைகொடுக்கின்றன. இரண்டு முறை மலைவேம்பு மரங்களை அறுவடை செய்து விற்பனை செய்துவிட்டேன். வேலி ஓரம் நடவு செய்திருந்த மூங்கில்கூட ஆண்டு தோறும் வருமானம் கொடுக்கிறது.

‘‘ஒவ்வொரு தடவையும் சாகுபடி செய்யும்போது என்னென்ன தவறு செய்தோம் என்பதைச் சிவப்பு மையில் நான் எழுதி வைப்பேன். அடுத்த சாகுபடியின்போது, அந்தத் தவற்றைச் செய்யமாட்டேன்.’’

எல்லாத் தொழிலிலும் தோல்வி, சறுக்கல் ஏற்படுவதுபோல விவசாயத்திலும் ஏற்படும். இன்னும் சொல்லப்போனால், மற்ற தொழில்களைவிடப் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். இளமை துடிப்பு, முதலீடு செய்ய கை நிறையப் பணம், ஆலோசனை வழங்க முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள், வழிகாட்ட வேளாண் இதழ்களும் புத்தகங்களும், தகவல்களை அள்ளிக் கொட்டும் இணையதளம்... என அத்தனை வாய்ப்புகள் இருந்தும், என் நிலத்தின் சூழ்நிலைக்கு எல்லா வற்றையும் செய்ய முடியாது என்று கற்றுக்கொண்டேன்.

இங்கே என்ன செய்ய முடியும், என்ன முடியாது என்று தெளிவுகிடைத்தது. இதை வெளியிலிருந்து வந்து யாரும் கற்றுக்கொடுத்துவிட முடியாது. நான் செய்த தவறுகளைத் திரும்பிப் பார்க்காமல், ஆலோசனை சொல்லியவர்கள் மீதும் வழிகாட்டியவர்கள் மீதும் சேற்றை வாரி இறைத்து, ‘‘விவசாயம் செய்தால் நஷ்டம்தான் வரும். யார் சொல்வதையும் நம்பாதீர்கள்...’’ என்று சமூக வலைதளங்களில் என் தோல்வி சுமையை யார் மீதாவது ஏற்றிவிட்டு, நிம்மதியடைந்திருப்பேன். வெற்றி பெறுவதற்கு நானே பொறுப்பு என்பதுபோல, தோல்வி அடைவதற்கும் நானே பொறுப்பு. எல்லாச் சாபங்களிலும் ஒரு வரம் இருக்கும். ஒவ்வொரு தோல்விகளுக்குள் வெற்றிக்கான வழி தெரியும் என்று சொல்வார்கள். என் அனுபவத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை. ஒவ்வொரு பயிரும் எனக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுத்துக்கொண்டுள்ளது. நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன்’’ என்று கடகடவென்று சொல்லி முடித்தார்.

இவர் மட்டுமல்ல, விவசாயத்தில் வெற்றி பெற்றவர்களின் அனுபவங்கள் பெரும்பாலும் இந்த ரகமாகத்தான் இருக்கும். இன்னொரு கதையையும் கேளுங்கள். இவர் வாழ்ந்த காலத்தில் ஒரு முறையாவது இவரது பண்ணைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பிய விவசாயிகள் தமிழ்நாட்டில் ஏராளம். விவசாயிகள் மட்டுமல்ல, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட இவரது விவசாய அனுபவங்களையும் பண்ணையையும் பார்க்க நேரம் கிடைக்குமா? என்று காத்திருந்த காலமும் உண்டு.

 ‘நேரடி நெல் விதைக்கும் கருவி’ பயிற்சி வகுப்பின்போது பேசும் எஸ்.பாலசுப்ரமணியன்
‘நேரடி நெல் விதைக்கும் கருவி’ பயிற்சி வகுப்பின்போது பேசும் எஸ்.பாலசுப்ரமணியன்

‘‘என்னுடைய பெயர் எஸ்.பாலசுப்ரமணியன். முன்பு ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தேன். இப்போது முழுநேர விவசாயி. விவசாயப் படிப்பு முடித்துவிட்டு விவசாயத்துக்கு வரவில்லை. எல்லாம் இந்தப் பண்ணையிலேயே சொந்த அனுபவத்தில் கற்றுக்கொண்டதுதான். பொதுவாக ஒரு விஷயத்தை எப்பவுமே நான் சொல்வது உண்டு. ஒவ்வொரு தடவையும் சாகுபடி செய்யும்போது என்னென்ன தவறு செய்தோம் என்பதைச் சிவப்பு மையில் நான் எழுதி வைப்பேன். அடுத்த சாகுபடியின்போது, அந்தத் தவற்றைச் செய்யமாட்டேன். தவறுகளைக் குறித்து வைத்துக்கொண்டு, அதையெல்லாம் களைந்தாலே, விவசாயத்தில் ஏகப்பட்ட விஷயங்களைக் கற்றுக்கொண்டு வெற்றியடைய முடியும். 1961-ம் வருஷம் தொடங்கி நாற்பத்தேழு ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். இன்றுவரை கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன். இந்தப் பண்ணையில் மார்கழி மாதத்தில் குடமிளகாய், முட்டைக்கோஸ்... என்று விதம்விதமாகக் காய்கறி, நெல் எல்லாவற்றையும் புதுப்புது முறைகளில் பயிரிடுவேன். பக்கத்தில் உள்ளவர்கள் ஆச்சர்யமாக வந்து பார்ப்பார்கள்’’ என்று அவர் சொல்லி முடித்தபோது கூடியிருந்த விவசாயிகள் முகத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது.

2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு காலைப் பொழுதில், சென்னை, படப்பையிலிருக்கும் தன்னுடைய பண்ணையில் பசுமை விகடன் சார்பில் நடைபெற்ற ‘நேரடி நெல் விதைக்கும் கருவி’ பயிற்சி வகுப்பின்போதுதான், வரப்பு மீது நின்றபடி இப்படி தன் விவசாய அனுபவங்களைப் பாடமாகப் பகிர்ந்தார், அமரர் எஸ்.பாலசுப்ரமணியன்.