
கால்நடை
"எல்லோரும் நாட்டுக்கோழி வளர்ப்புல நம்ம ஊர் நாட்டுக் கோழிகளதான் வளர்க்கிறாங்க. இதுக்கான சந்தை தமிழ்நாட்டுக்குள்ளதான். ஆனா, கடக்நாத் கோழி ரகத்தை வளர்த்தா தமிழ்நாட்டைத் தாண்டி வெளி மாநிலங்கள்லயும் விற்பனை செய்யலாம். இதுக்கு இந்திய அளவுல நல்ல சந்தை இருக்கு. அதனால நல்ல லாபம் எடுத்துட்டு வர்றேன்” உற்சாகமாகச் சொல்கிறார் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், ஒண்டிவீரனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் வினோத்.
சோளம், கொள்ளு, பச்சைப்பயறு, தட்டைப்பயறு மட்டுமே விளையும் வானம் பார்த்த பூமி. கடக்நாத் கோழி வளர்ப்பு மூலம் அந்தப் பகுதியில் பிரபலமாகியிருக்கிறார் வினோத். சேலம் மாவட்டத்தில் கடக்நாத் கோழிகளை வளர்ப்பவர்களிடம் விசாரித்தால், இந்தக் கோழிக்குஞ்சுகள் ஓமலூர் பகுதியில் வாங்கியவை என்று வினோத்தின் விலாசம் சொல்கிறார்கள். ஒரு காலைவேளையில் வினோத்தின் கோழிப்பண்ணைக்குச் சென்றோம். பண்ணையில் கின்னிக்கோழிகளுக்குப் பசும்புல்லைப் போட்டுக் கொண்டிருந்தார். கின்னிக்கோழிகள் சந்தோஷத்தில் பறந்து வந்து பசுந்தீவனங்களைக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன. கின்னிக்கோழி வளர்ப்பு கூடாரத்துக்கு அருகில் உள்ள இன்குபேட்டரில், கடக்நாத் கோழிக்குஞ்சுகளை இறக்கி விடும் பணியைச் செய்துகொண்டே பேசத் தொடங்கினார் வினோத்.

“எனக்குச் சொந்த ஊர் இதேதான். எம்.பி.ஏ படிச்சிருக்கேன். சின்ன வயசில இருந்தே கால்நடை வளர்க்கிறதில ஆர்வம் அதிகம். கடக்நாத் கோழியில் புரதச்சத்து அதிகம்னு நண்பர்கள் சொன்னாங்க. அதை நம்மூர்ல வளர்த்துப் பார்த்தால் என்னவென்று யோசனை தோணுச்சு. வளர்க்குறதுக்காக ஒரிஜினல் கடக்நாத் கோழிகளைத் தேடினேன். கோழிகள் எதுவும் கிடைக்கல. நண்பர்கள் மூலமா மத்தியப் பிரதேசத்திலிருந்து நேரடியா 100 முட்டைகளை வாங்கிட்டு வந்து, குஞ்சு பொரிச்சு தர்றவங்ககிட்ட கொடுத்தேன். அதுல 50 கோழிக்குஞ்சுகள்தான் கிடைச்சது. இந்தக் கோழிக் குஞ்சுகளை வளர்த்து 6 மாசங்களுக்குப் பிறகு அதுவும் முட்டை விட ஆரம்பிச்சது. அந்த முட்டைகளை விக்காம அதையும் குஞ்சு பொரிக்கக் கொடுத்தேன்.
2013-ம் வருஷம், 50 கோழிகள்ல இருந்து 100, 200-னு அதிகரிச்சுச்சு. எண்ணிக்கை அதிகரிச்சதும் கடக்நாத் கோழிகளை விக்கலாம்னு உள்ளூர் கறிக்கடைக் காரர்கிட்ட கேட்டேன். ஆனா, எந்தக் கடைக் காரரும் கடக்நாத் கோழிகளை வாங்கிக்கல. பிராய்லர் கோழி இறைச்சிக்கு இருக்கிற வரவேற்பு கடக்நாத் கோழிக்கு இல்லனு தெரிஞ்சுகிட்டேன். ஆனா, இந்தக் கோழிகளைப் பத்தி தெரிஞ்சவங்க கார் எடுத்துக்கிட்டு வந்து வாங்கிட்டுப் போனதோடு குஞ்சுகள் கிடைக்குமா?னு கேட்டாங்க. அதனால, இறைச்சிக்குக் கோழிகளை வளர்ப்பதைவிடக் குஞ்சுகளை விற்பனை செய்யலாமேனு யோசனை வந்துச்சு” என்றவர் பணியை முடித்து விட்டுத் தொடர்ந்தார்.

வாரம் 7,000 கோழிக்குஞ்சுகள்
“தர்மபுரி மாவட்டத்திலிருந்து நாட்டுக்கோழிக் குஞ்சுகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் தமிழ்நாடு முழுக்க விற்பனை செஞ்சிட்டு வர்றாங்க. இந்த வியாபாரிகள் சிலர் என்கிட்ட கடக்நாத் கோழிக்குஞ்சுகள வாங்கி விற்பனை செஞ்சாங்க. அவங்களப் பார்த்து, அவங்களுக்குக் கோழிக்குஞ்சு விற்பனை செய்றவங்களும் என்னை அணுகினாங்க. கோழிக்குஞ்சு வியாபாரிகள் மூலமா 2016-ம் வருஷம் மகாராஷ்டிராவிலிருந்து ஆர்டர் கிடைச்சது. பிறகு இணையதளம், ஃபேஸ்புக் மூலமா டெல்லி, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் மாநிலங்கள்லயும் கடக்நாத் கோழிகளுக்கு வரவேற்பு இருக்கிறதைத் தெரிஞ்சுகிட்டேன். அங்கிருந்து ஆர்டர் பிடிச்சு கோழிக் குஞ்சுகள அனுப்ப ஆரம்பிச்சேன்.
100 குஞ்சுகள்ல தொடங்கினது இப்போ வாரம் 5,000 கோழிக்குஞ்சுகள அனுப்பிட்டு இருக்கேன். தமிழ்நாட்டுல வாரம் 2,000 குஞ்சுகள்வரை விற்பனை செஞ்சிட்டு வர்றேன். கோழிக் குஞ்சுகளைப் பெங்களூருக்கு அனுப்பி, அங்கிருந்து விமானம்மூலம் அஸ்ஸாம், மேற்கு வங்காளம், டெல்லி மாநிலங்களுக்கு அனுப்புறோம். ஆரம்பத்துல முட்டையை வெளியில் கொடுத்துக் குஞ்சு பொரிக்க வெச்சோம். அதுக்கு ஒரு முட்டைக்கு 5 ரூபாய் கொடுத்து வந்தோம். கோழிக்குஞ்சுகளோட விற்பனை அதிகரிக்கவும் இதுக்குன்னே ஒரு இன்குபேட்டரையும் வாங்கிட்டேன். இப்போ நாங்களே குஞ்சு பொரிக்க வைக்கிறதால, ஒரு முட்டையைக் குஞ்சு பொரிக்க வைக்க 1 ரூபாய் 50 காசுதான் செலவாகுது.

வாடகை இடத்திலிருந்து சொந்த இடம்
இதுக்கிடையில கோழி வளர்ப்புக் குறித்துப் பல புத்தகங்கள் வாங்கிப் படிச்சேன். தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தோட பயிற்சி நிலையங்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகள்லயும் கலந்துகொண்டு பல விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். கோழி வளர்ப்பு, உணவு உற்பத்தி சார்ந்த துறையின் கீழ் வர்றதால அதற்கான சான்றிதழ்களையும் வாங்கியிருக்கிறேன். ஏற்றுமதி பற்றிய பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு இறைச்சியை ஏற்றுமதி செய்ய உதவும் சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறேன்.
இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக என்னை மேம்படுத்திக்கொண்டு, கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்து தொடர்ந்து கோழி வளர்ப்பிலேயே முதலீடு செய்துட்டு வர்றேன். ஆரம்பத்துல வாடகை இடத்திலிருந்தோம். இப்போ சொந்தமா இடம் வாங்கிக் கோழிகளை வளர்த்துட்டு வர்றோம். ஒரு கோழி வளர்ந்து 6 மாசத்துல இருந்து முட்டை வைக்க ஆரம் பிக்கும். வருஷத்துக்கு 150-180 முட்டைகள்வரை கிடைக்கும். இப்ப, கோழிக் குஞ்சுகளோட விற்பனை தேவைக்காக 2,500-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்க்கிறேன். இந்த 2,500 கோழிகள் மூலமா தினமும் 1,000 முட்டையிலிருந்து 1,500 முட்டைகள்வரை கிடைக்குது. தினமும் பண்ணையிலேயே முட்டைகளைச் சேகரிச்சு வெச்சிடுவோம். வாரம் ஒரு நாள் முட்டைகளை மொத்தமா அடுக்கி புகை போடுவோம். கிருமிடத்தொற்று இருந்தா அதெல்லாம் அழிஞ்சிடும். பிறகு இன்குபேட்டர்ல வெச்சு பொரிக்க வைப்போம்.
ஒரு நாளைக்கு ரெண்டு தடவை கோழி களுக்குத் தீவனம் கொடுப்போம். அதுவே மூக்கை வைத்துத் தண்ணீர் குடிச்சுக்கிற மாதிரி பண்ணையைச் சுத்தி குழாய் அமைச்சிருக் கிறோம். 10 கோழிக்கு ஒரு சேவல் என்ற வகையில வெச்சிருக்கிறோம். தீவனத்தை முழுக்க முழுக்க வெளியிலிருந்து வாங்கித்தான் பயன்படுத்துறோம்.

ஒரு கோழிக்குஞ்சு 50 ரூபாய்
கடக்நாத் கோழியோட ஒரு முட்டை பொரிக்கிறதுக்கு 1.50 ரூபாய்ச் செலவாகும். கோழிக்கான தீவனம், மருந்து உள்ளிட்ட செலவுகள் ரூ.18.50 வரை செலவாகும். ஒட்டுமொத்தமாக உற்பத்திச் செலவு ரூ.20. 1,000 முட்டைகள் வெச்சா, 700 குஞ்சுகள் கிடைக்கும். வெளியூருக்கு அனுப்புறதுக்கு 15 ரூபாய் செலவாகிவிடும். அதனால, ஒரு கோழிக்குஞ்சு ரூ.50 என விற்பனை செய்றோம். எங்ககிட்ட கோழிக் குஞ்சு வாங்குறவங்க ஒரு மாசம் பராமரிச்சு 80-100 ரூபாய் வரை விலை வெச்சு விக்கிறாங்க. எங்ககிட்ட 30,000 குஞ்சுகளைப் பொரிக்க வைக்கிறதுக்கான இன்குபேட்டர் இருந்தாலும் வாரம் 10,000 முட்டைகள்வரை பொரிக்க வைப்போம். அதன்மூலமா 7,000 குஞ்சுகள் கிடைக்கும்” என்றவர் வருமானம்பற்றிப் பேசினார்.
மாத வருமானம் 14,00,000 ரூபாய்
“3,000 சதுர அடி அளவில் ரெண்டு ஷெட் போட்டிருக்கிறேன். தரையிலிருந்து கொஞ்சம் மேடு ஏத்தி அமைச்சிருக்கிறோம். இதுக்கு 5 லட்சம் செலவாச்சு. இன்குபேட்டர் இயந்திரம் வாங்க 5 லட்சம் ரூபாயும், மின்சாரம் தடைப்படாமல் இருக்க ஜெனரேட்டர் வாங்க 2.6 லட்சமும் ஆச்சு. இதையெல்லாம் அமைக்குறதுக்குச் சுமார் 13 லட்சம் ரூபாய் வரை செலவாச்சு. ஆனா, கையிலிருந்து செலவு பண்ணாம, கோழிக் குஞ்சுகள் மூலமா அப்பப்ப கிடைச்ச வருமானத்தை வெச்சே இத செஞ்சிட்டேன். இப்போ கோழி முட்டையை இன்குபேட்டர்ல அடுக்குறதுக்கும், அதைச் சரியான நேரத்தில எடுக்கிறதுக்கும் படிச்ச ஒருத்தரை வேலைக்கு வெச்சிருக்கிறேன்.

இவருக்கும், இவருக்கு உதவியாக இன்னொருத்தருக்கும் மாத சம்பளமாக 34,000 ரூபாய் ஆகுது. மின்சாரக் கட்டணம் மாசம் 10,000 ரூபாய் வருது. கோழித் தீவனம், மருத்துவம், போக்குவரத்துனு 12,20,000 ரூபாய் ஆகுது. ஒரு மாசத்துக்கான மொத்தச் செலவு 12,64,000. மாசம் 28,000 குஞ்சுகள் விற்பனை மூலமா 14,00,000 ரூபாய் வருமானமா கிடைக்குது. செலவு போக மாசம் 1,36,000 ரூபாய் லாபமா நிக்குது” என்றவர் நிறைவாக,
“கோழி வளர்ப்பு லாபகரமான தொழில் தான். ஆனா, அதற்கான சந்தையைப் புடிச்சு வெச்சுகிறது முக்கியம். சந்தை நன்றாக இருந்தால், நாம எவ்வளவு முதலீடு போட்டாலும் திரும்பக் கிடைச்சிடும். அந்த வகையிலதான் 8 வருஷமா இந்தத் தொழில செஞ்சிட்டு வர்றேன்” என்று விடைகொடுத்தார் வினோத்.
தொடர்புக்கு, வினோத்,
செல்போன்: 99655 68919.

பண்ணைகளிலிருந்தே வாங்கணும்!
கருங்கோழி வளர்ப்பு குறித்து வினோத் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே இடம் பெறுகின்றன.
கோழிக்குஞ்சுகளை வியாபாரிகளிடமிருந்து வாங்குவதைவிடப் பண்ணைகளைத் தேர்வு செய்து நேரடியாக வாங்குவது நல்லது. வியாபாரிகள் கையிருப்பில் என்ன கோழிக்குஞ்சு இருக்கிறதோ அதை விற்பனை செய்யத்தான் பார்ப்பார்கள். ஆகக் கோழிக் குஞ்சுகளை வாங்க நல்ல பண்ணையைத் தேர்வு செய்ய வேண்டும். பண்ணைக்குச் சென்று உங்களுக்குத் தேவையான ரகத்தைத் தேர்ந்தெடுக்கலாம். பண்ணையும், குஞ்சு பொரிப்பானும் ஒருங்கே அமைந்துள்ள இடத்துக்குச் சென்று தாய்க் கோழிகளைப் பார்த்து வாங்குவது நல்லது.

‘‘ஒரு கோழி வளர்ந்து 6 மாசத்துல இருந்து முட்டை வைக்க ஆரம்பிக்கும். வருஷத்துக்கு 150-180 முட்டைகள்வரை கிடைக்கும்.’’
கோழிக் குஞ்சு வாங்குவதற்கு முன்னதாகக் குஞ்சு வளர்ப்பதற்கான இடத்தைத் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். காற்றோட்டமான இடமாகவும், நிழலுள்ள இடமாகவும் இருக்க வேண்டும். கோழிக்குஞ்சுகள் வளரும் இடத்தில் பாம்பு, பூச்சிகள் உள்ளே செல்லாதவண்ணம் பாதுகாப்பானதாகவும் கொஞ்சம் உயரமான இடமாகவும் இருக்க வேண்டும். கிழக்கு-மேற்கு நீளவாக்கிலும், வடக்கு-தெற்கு அகலவாக்கிலும் இருக்கும் வகையில் ஷெட் அமைத்துக் கொள்ளலாம். குஞ்சுகளை இன்குபேட்டரிலிருந்து இறக்கியவுடனே கொஞ்சம் பானையில் தீக்கங்குகளை அல்லது நல்ல வெப்ப மூட்டும் விளக்குகளைப் போட்டு விட வேண்டும். கோழிக்குஞ்சுகள் வளர மிதமான சூடு தேவை. குஞ்சுகள் வளர்ந்த பிறகு அதாவது 20 நாள்களுக்குப் பிறகு இது தேவையில்லை.
கோழிக்குஞ்சு வாங்குபவர்களிடமே என்னென்ன தடுப்பு மருந்துகள் கொடுக்க வேண்டும் என்பதையும் எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் குஞ்சுகள் விற்கும்போதே ஏழாவது நாள் பி1 தடுப்பு மருந்தும், 14-வது நாள் ஐபிடி, 21-வது நாள் லாசோட்டா, 28-வது நாள் ஐபிடி பூஸ்டர் சொட்டுத் தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறோம். கோழிக்குஞ்சு வளர்ந்து 50 அல்லது 60-வது நாள் ஆர்பிடிகே என்ற தடுப்பூசியை இறக்கையில் போட வேண்டும். கோழிகளை நோய்கள் தாக்காதவாறு வளர்த்து விற்பனை செய்தாலேயே நல்ல லாபம் பெறலாம்.

லாபத்தையே முதலீடு ஆக்கணும்
“கோழி வளர்ப்புல குஞ்சுகள் விற்பனை என்பது லாபகரமானது. கொரோனா போன்ற நோய்த் தொற்றுகளுக்கு எதிராக உடல் சக்தியோடு இருக்கப் புரதச்சத்து அவசியம்னு மருத்துவர்கள் சொல்றாங்க. இதனால கோழி இறைச்சியைச் சாப்பிடுறவங்களோட எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. கோழி வளர்ப்புல இறங்க ஆர்வமுள்ளவங்க, ஆரம்பத்துல 10 கோழிகளுடன் ஆரம்பிக்கலாம். 10 கோழிகளை வளர்க்கும்போதே நிறைய விஷயங்களைக் கத்துக்க முடியும். கோழி வளர்ப்புல எவ்வளவு பணம் முதலீடு செஞ்சாலும் இழுத்துக்கொண்டேதான் இருக்கும். அதனால, கொஞ்சம் கொஞ்சமாகக் கத்துகிட்டு பிறகு முதலீடு செய்யலாம். கோழிகளை உற்பத்தி செஞ்சு, அதுல ஒரு பகுதியை விற்பனை செய்து அதன்மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீடு செய்யணும்” என்கிறார் வினோத்.