Published:Updated:

காளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? எப்படி ஏற்றுமதி செய்வது? #DoubtOfCommonMan

காளான்
News
காளான்

தரத்தை வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பரிசோதிக்கும் ஆய்வகத்தில் தான் பரிசோதிக்கமுடியும். இதற்கென எல்லா மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் உணவுப் பரிசோதனை மையங்கள் உள்ளன.

Published:Updated:

காளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? எப்படி ஏற்றுமதி செய்வது? #DoubtOfCommonMan

தரத்தை வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பரிசோதிக்கும் ஆய்வகத்தில் தான் பரிசோதிக்கமுடியும். இதற்கென எல்லா மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் உணவுப் பரிசோதனை மையங்கள் உள்ளன.

காளான்
News
காளான்

``காளான் தரத்தை எவ்வாறு பரிசோதிப்பது? உண்ணும் காளான் புரோட்டீன் அளவு மற்றும் அது ஏற்றுமதி செய்ய வழிமுறை என்ன?" என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியெழுப்பியிருக்கிறார், வாசகர் கே.டி. பாலாஜி.

காளான்கள் இந்தியா, சீனா, கொரியா, ஐரோப்பா, ஜப்பான் எனப் பல்வேறு நாடுகளில் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. சமையல் வகைகளில் காளான்கள் இறைச்சியாகவே கணக்கிடப்படுகின்றன. சந்தைகளில் விற்கப்படுகின்ற அதிகமான காளான்கள் பண்ணை முறைகளில் வளர்க்கப்பட்டவை.

பொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை இரண்டு நாள்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். ஃபிரீஸரில் வைக்கக் கூடாது.

காளான்களில் நல்ல காளான், கெட்ட காளான் என இரு வகை காளான்கள் இருக்கின்றன. சில வகைக் காளான்கள் சத்துள்ளவையாகவும், சிலவகை நச்சுத்தன்மை கொண்டு உண்பவர்களுக்குத் தீங்கு விளைவிப்பவையாகவும் காணப்படுகின்றன. காளான்கள் முட்டை வடிவில் கண்ணுக்குத் தெரியாத அளவு முதல் பெரிய அளவு வகைக் காளான்கள் வரை கிடைக்கின்றன. நாய்க் குடைக் காளான், முட்டைக் காளான், சிப்பிக் காளான், பால் காளான், பூஞ்சைக் காளான் போன்றவை காளான்களில் சில வகைகள். இதுவரை 2,000 காளான் இனங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு இமயமலைப் பகுதியான சிக்கிம் மாநிலத்தில் காளான்கள் அதிக அளவு காணப்படுகின்றன. உலக அளவில் 12,000 முதல் 15,000 வகையான காளான்கள் காணப்படுகின்றன.

என்னென்ன சத்துகள்... எங்கே பரிசோதிக்கலாம்?

தரத்தை வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பரிசோதிக்கும் ஆய்வகத்தில்தான் பரிசோதிக்கமுடியும். இதற்கென எல்லா மாவட்டங்களிலும் அரசு மற்றும் தனியார் உணவுப் பரிசோதனை மையங்கள் உள்ளன.

எப்படிச் சாப்பிடலாம்?

பொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை இரண்டு நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். ஃபிரீஸரில் வைக்கக் கூடாது. பாதி அளவு எடுத்து உபயோகப்படுத்திவிட்டு மறுநாள் மீதியை உபயோகப்படுத்தலாம். ஆனால், திறந்து வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் காளான் கறுத்துவிடும். ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு மூடிவைத்தால் மூன்று நாள் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். நறுக்கிய பிறகு கூட வைத்திருக்கலாம். சிறிது நிறம் மாறினால் பரவாயில்லை. ஆனால், பிசுபிசுப்பாக மாறினால் பயன்படுத்தக் கூடாது. அதேபோல, காளானை நன்றாகச் சமைத்த பிறகே உணவில் சேர்க்க வேண்டும். காளான் சத்தான பொருளாக இருந்தாலும் அதை அனைவரும் சாப்பிட உகந்தது அல்ல. சிலருக்குச் சரும ஒவ்வாமை பிரச்னைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் காளானைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் தோல் அரிப்பு, தோல் தடிப்புகள் ஆகியவை ஏற்படக் கூடும்.

காளான்
காளான்

எப்படி வளர்க்கலாம்?

முதலில் காளான் வளர்க்க நினைப்பவர்களுக்கு சிப்பிக்காளான் வளர்ப்பு ஏற்றது. இதை வளர்க்க 25 டிகிரி முதல் 28 டிகிரி வெப்பநிலை தேவை என்பதால், கீற்றுக் கொட்டகைதான் சரியானது. 30 அடி நீளம், 16 அடி அகலத்தில் (480 சதுர அடி) கொட்டகை அமைக்க வேண்டும். கொட்டகையின் உயரம் 10 அடிக்கு மேல் போகக் கூடாது. சுற்றுச்சுவரைத் தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு எழுப்ப வேண்டும். கொட்டகையைச் சுற்றிலும் இரண்டு அடுக்குகள் பச்சை நிழல் வலையைக் கட்டி, உள்பகுதியில் ஒரு அடுக்கு நிழல் வலையோடு சணல் சாக்குகளையும் சேர்த்துக் கட்டித் தொங்கவிட வேண்டும்.

கொட்டகைக்குள் ஒன்றரை அடி இடைவெளியில் உரிகளை அமைக்க வேண்டும். ஒவ்வொரு உரியிலும் ஐந்து படுக்கைகளைக் கட்டித் தொங்க விட முடியும். இரண்டு வரிசைகளுக்கு இடைவெளியில் இரண்டரை அடி இடைவெளி கொடுத்து, அடுத்த உரியைக் கட்ட வேண்டும். 480 சதுர அடியில் மொத்தம் 600 படுக்கைகளைத் தொங்க விட முடியும்.

ஓர் அடி அகலம், இரண்டு அடி நீளம் இருக்கும் 80 கேஜ் பாலித்தீன் பையின், அடிப்பகுதியில் இரண்டு அங்குல உயரத்துக்குத் தொற்று நீக்கம் செய்யப்பட்ட வைக்கோலை நிரப்பி, அதன் மீது விதை வித்துகளைத் தூவ வேண்டும். அதன் மேல் வைக்கோலை நிரப்பி விதைகளைத் தூவ வேண்டும். இப்படித் தொடர்ந்து பை முழுவதும் நிரம்பிய பிறகு, மேற்புறத்தை நூலால் கட்டி விட வேண்டும். இரண்டு படுக்கைகளுக்கு ஒரு விதைப் புட்டித் தேவைப்படும். வேப்ப எண்ணெய்யில் நனைத்துத் துடைத்த சாக்கு தைக்கும் ஊசியால், படுக்கை முழுவதும் 12 இடங்களில் துளையிட்டு உரியில் தொங்கவிட வேண்டும். கொட்டகையில் உள்ள சாக்குகளை அவ்வப்போது நனைத்து உள்ளே தேவையான வெப்பநிலையைப் பராமரித்து வர வேண்டும். ஒரு படுக்கையிலிருந்து அதிக பட்சம் ஒரு கிலோ காளான் அறுவடை செய்யலாம்.

ஏற்றுமதி செய்வது எப்படி?

உலகச் சந்தையில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 1.7 சதவிகிதமாக இருக்கிறது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 சதவிகிதமாக உயரலாம் என்கிறது கணிப்பு.

காளான் ஏற்றுமதியைச் செய்யும் முன்னர், எந்த நாட்டுக்கு எந்த பொருள் தேவையானது என்பதைக் கவனிக்க வேண்டும். காளான் தேவை அதிகமாக உள்ள நாடுகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்படி சிறிய அளவில் காளான் ஆர்டர்களை எடுத்து ஏற்றுமதி செய்துவிட்டு, பிறகு பெரிய ஆர்டர்களை எடுக்கலாம்.

ஏற்றுமதி பொருள்களுக்குத் தரம்தான் முக்கியம். இதற்கு ஏற்ப காளானின் தர அளவைக் கடைப்பிடிக்க வேண்டும். இதில் கவனக்குறைவாக இருந்துவிட்டால் பொருள்களைத் திருப்பி அனுப்பிவிடுவார்கள். ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள் திரும்பி வருவது பெரிய நஷ்டத்தைக் கொடுக்கும். தரமும், பாதுகாப்பாக அனுப்பி வைப்பதும் ஏற்றுமதிக்கு ரொம்பவே அவசியம். எந்த நாட்டுக்கு எந்தப் பொருள் தேவை என்பதை ஏற்றுமதி முகவர் அமைப்புகளே (exporters associations) கொடுத்து உதவுகின்றன. ஏற்றுமதியாளர் லைசென்ஸ் வாங்கிவிட்டால் இந்தத் தொழிலில் இறங்கலாம். காளான் ஏற்றுமதி செய்ய உள்ள பொருளை முடிவு செய்த பிறகு ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவில் சேர்ந்துகொள்ள வேண்டும். ஏற்றுமதி சலுகைகள் மற்றும் பிற உதவிகளையும் இந்தக் குழுக்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

ஏற்றுமதி காளான்
ஏற்றுமதி காளான்

நிறுவனத்தைத் தொடங்குவது எப்படி?

தனிநபராக ஏற்றுமதி செய்ய முடியாது. நிறுவனமாகப் பதிவு கொண்டால்தான் ஏற்றுமதியாளருக்கான லைசென்ஸ் கிடைக்கும். எனவே, நிறுவனத்தைப் பதிவு செய்துவிட்டு தொழிலில் இறங்கலாம். பதிவு செய்யும் நிறுவனத்தின் பெயரை, இறக்குமதியாளர்கள் புரிந்துகொள்ளும்படி எளிதாகவும், சர்வதேச தொழில் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்குமாறு வைக்க வேண்டும். குறிப்பாக இண்டர்நேஷனல், எக்ஸ்போர்ட்ஸ், ஓவர்சீஸ் என இருக்குமாறு வைக்க வேண்டும்.

இதுபோன்ற உங்கள் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்!