மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

புன்னை எண்ணெயில் மோட்டார் பம்ப்செட்!

ராஜசேகரன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜசேகரன்

கருவி

பல ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ‘நீட் பார் ஆல்ட்டர்நேட்டிவ் பியூல்ஸ்’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். சரத்பவார் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்தார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் (ஐ.சி.ஏ.ஆர்) தான் அந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் புன்னை எண்ணெயில் பம்ப்செட் இயங்கும் கண்டுபிடிப்பு பற்றிய கட்டுரையை ‘பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்’ஆக அவர்கள் முன்பாகப் போட்டுக் காண்பித்து முக்கால் மணி நேரம் அதைப் பற்றி விளக்கினேன். அந்தக் காலகட்டத்தில் காட்டாமணக்கு எண்ணெய் (ஜெட்ரோஃபா பயோடீசல்) பற்றிய விவாதங்கள் பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தன. ஜெர்மன், பிரான்ஸ், இஸ்ரேல், இந்தியாவில் வடகிழக்கு பகுதியிலிருந்தும் விஞ்ஞானிகள் பலரும் வந்திருந்தனர். அந்தக் கட்டுரையில் ‘பயோ டீசல்’ பிரச்னைக்குத் தீர்வைப் பார்த்ததும் பலரும் பாராட்டினார்கள். ‘நாங்களெல்லாம் விஞ்ஞானிகள் எங்களால் இவ்வளவு சிறப்பான ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஒரு விவசாயி, எப்படி இத்தனை அருமையான கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தீர்கள்’ என்று மனம் திறந்த பாராட்டு தெரிவித்தார்கள்.

ராஜசேகரன்
ராஜசேகரன்

அந்தப் பெருமைக்குரிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் நம் ஊர்க்காரர்தான். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன்தான் அவர். இவருடைய கண்டுபிடிப்புகளை பற்றி பசுமை விகடனில் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. அந்த வகையில் இவர் ஏற்கெனவே பசுமை விகடன் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான். இருந்தாலும் பெட்டிரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை உயர்ந்து காணப்படும், இந்த நேரத்தில் இவரைப் பற்றி எழுதுவது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இவருடைய கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களுக்குச் சவால்விடும் வகையில் எப்படி அமைந்தது என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். புன்னை மர எண்ணெய்மூலம் மோட்டார் ‘பம்ப் செட்’டுகளை இயக்குவதற்கான வழிகளை அறிமுகம் செய்ததுதான் இவருடைய சாதனை.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பார்கள். அதைப்போல் விவசாயத்திற்குத் தண்ணீர் மிகவும் அத்தியாவசியமானது. இந்தத் தண்ணீரைப் பெறுவதற்கு என்னென்ன உத்திகளைப் பயன்படுத்த முடியும் என்பதில் இவருடைய கண்டுபிடிப்பு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

புன்னை மரம்
புன்னை மரம்

ராஜசேகரன், நிலத்துக்குப் பாசனம் செய்யப் புன்னை மர விதைகள் இருந்தால் போதும் என்கிறார். விதைகளை வேர்க்கடலையைப்போல் காய வைத்து, அதன் தோலை உரித்து, அதில் உள்ள பருப்பைத் தனியாக எடுத்துக் காயவைக்கிறார். பிறகு அதைச் செக்கில் கொடுத்து ஆட்டி எண்ணெய் தயாரிக்கிறார்.

தோட்டத்தில் இரண்டு புன்னை மரங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து கிடைக்கும் விதைகளை வைத்துத்தான் இவர் பாசனம் செய்கிறார். அந்தக் காலத்தில் புன்னை மரங்கள் நம்நாட்டில் அதிகம் இருந்தன. அந்தப் புன்னை மரத்தில் இருக்கும் விதைகளைக் கொண்டு புன்னை எண்ணெய் தயாரித்து, கோயில்களில் விளக்கு ஏற்றுவது வழக்கம். குறிப்பாகச் சிவாலயங்களில் இந்த எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். மின்சாரம் வந்தபிறகு, கோயில் விளக்குகளுக்கு மின்சாரமே போதுமானது என்கிற நிலை உருவாகிவிட்டது.

புன்னனைக்காய்
புன்னனைக்காய்

இவருடைய பண்ணை நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா, வேட்டைக்காரனிருப்பு என்ற கிராமத்தில்தான் இருக்கிறது. இப்போது நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் எல்லாம் பூமிக்கடியிலிருந்து கிடைக்கக்கூடிய கூடியவை. இவை என்றாவது ஒரு நாள் தீர்ந்து போக வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், ‘பயோ டீசல்’ எனப்படும், தாவர வகை எரிசக்தி எரிபொருள் எந்தக் காலத்திலும் இருக்கக்கூடியது. மனிதனுக்குக் கை கொடுக்கக்கூடிய ஒரு எண்ணெயாக இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் பயன்படுத்தும்போது அவற்றிலிருந்து வெளிப்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.

விவசாயத்தில் இருக்கும் பச்சை பசுமையான மரங்களுக்கும், செடி கொடிகளுக்கும் இந்த மாசு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது ராஜசேகரனின் கருத்து. ஆனால், இந்தப் ‘பயோடீசல்’ சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதில்லை.

விதைகள்
விதைகள்

5 குதிரைத் திறனுள்ள (hp) மோட்டாரை இயக்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 600 மி.லி புன்னை மர எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு இணையாக டீசல் பயன்படுத்த வேண்டும் என்றால், 800 மி.லி டீசல் தேவைப்படும் என்கிறார். இன்றைய காலகட்டத்தில் டீசல் விற்கும் விலை நமக்கே தெரியும்.

நிலத்தில் 2 புன்னை மரங்கள் வைத்திருந்தால் அவர்கள் டீசலை வாங்க வேண்டியதில்லை. அதில் கிடைக்கும் விதைகளை வைத்து மோட்டாரை இயக்கி விட முடியும். புன்னை மரமே இல்லை என்பவர்கள் தங்கள் நிலத்தில் புன்னை மரக் கன்றுகளை வாங்கி நடவு செய்யலாம். அது 5 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல பலனைக் கொடுக்கும். புன்னை மரக் கன்றுகளை ஆடுமாடுகள் கடிப்பதில்லை. பூச்சித் தாக்குதலும் கிடையாது. 5 ஆண்டுகளில் 4 முதல் 20 கிலோ வரை விதைகள் கிடைக்கும். 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரு மரம் 60 கிலோ விதைகளை ஒவ்வோர் ஆண்டும் தரும். தோட்டத்தில் புன்னையை வளர்ப்பதால் ஏராளமான தேனீக்கள் நம் தோட்டத்துக்கு வரத்தொடங்கும். அவை, பயிர்களில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட உதவியாக இருக்கும். ஆந்தை இந்த மரத்தைத் தேடி வரும் பறவையாக இருக்கிறது.

எலித் தொல்லை, பூச்சித் தொல்லை போன்றவற்றைச் சரி செய்வதில் ஆந்தைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால் ஆந்தைகளின் உதவி இயற்கை விவசாய ஆர்வலர்களுக்குத் தேவைப்படுகிறது. எனவே விவசாயிகள், தங்கள் நிலத்தில் ஒரே ஒரு புன்னை மரத்தையாவது நட்டு வளர்ப்பது மிகவும் நல்லது.

புன்னை மரம்
புன்னை மரம்

புன்னை மர விதைகளைச் சேகரித்து வைத்து, பிறகு செக்கில் ஆட்டி, எண்ணெயைத் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, ‘டீசல் மோட்டார் பம்ப் செட்’டில் ஊற்றிப் பயன்படுத்தலாம்.

‘புன்னை எண்ணெயைத் தயாரிப்பதற்கு ஒரு லிட்டருக்கு சுமார் 50 ரூபாய் செலவாகும். அதே நேரம் ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தேவைக்குப் போதுமான அளவு எண்ணெயை எடுத்துக்கொண்டு மீதமுள்ள எண்ணெயை லிட்டர் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஒரு கிலோ புன்னை விதையை அரைத்தால் 600 மி.லி எண்ணெயும், 300 கிராம் பிண்ணாக்கும் கிடைக்கும். அதனை இயற்கை உரமாக வயலில் பயன்படுத்தலாம்.

டீசல் மோட்டார்கள் நான்கைந்து வருடங்களில் துருப்பிடித்து விடுகின்றன. காரணம், அவை வெயில், மழையில் நனைந்து கொண்டு வெளியில் இருக்கின்றன. ஆனால், புன்னை எண்ணெயில் ஓடும் மோட்டார் துருப் பிடிப்பதில்லை. ரிப்பேருக்காக மெக்கானிக்கைக் கூட கூப்பிட வேண்டிய அவசியமில்லை.

டீசல் மோட்டார்கள், தண்ணி இறைக்கும்போது ‘கடமுடா கடமுடா’ சத்தத்துடன் ஓடும். ஆனால் இந்தப் புன்னை மர எண்ணெயைப் பயன்படுத்தும்போது மோட்டார் ஓடும் சத்தமே கேட்காது. அதாவது டீசல் வண்டி ஓட்டுவதற்கும் பெட்ரோல் வண்டி ஓட்டுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது. டீசல் பயன்படுத்தியபோது ஒரு நிமிஷத்துக்கு 750 லிட்டர் தண்ணீரை மோட்டார் கொட்டும். புன்னை எண்ணெயைப் பயன்படுத்தினாலும் அதே அளவு தண்ணீர் கொட்டுகிறது. 10 ஹெச்.பி ஜெனரேட்டர், 20 ஹெச்.பி ஜெனரேட்டர்ல கூட புன்னை எண்ணெயை ஊத்திப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். நல்லாவே ஓடியிருக்கு, எந்தப் பிரச்சனையும் இல்லை’ என்கிறார்.

நாற்றுகள்
நாற்றுகள்

‘இதைப் பெரிய விஷயமாக நான் நினைக்கவில்லை. சாகுபடி செலவை எப்படிக் குறைப்பது என்று யோசிக்கும்போது இந்த யோசனை வந்தது. அவ்வளவுதானே தவிர, நான் பெருசாகக் கண்டுபிடித்ததாக நினைக்கவில்லை. புன்னை மரத்தில் ஆந்தை கூடுகளையும் அங்கங்கே வைத்து, அவை வசிக்க வசதி செய்து வைத்திருக்கிறேன். ஆந்தைகள் நடமாட்டம், வயல்வெளியில் எலிகள், பூச்சிகள் தொந்தரவைக் குறைக்கிறது.

விவசாயிகள் அவர்களுடைய தோட்டங்களில் 2 புன்னை மரங்களை நடவு செய்து வளர்க்கலாம். மின் பற்றாக்குறை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையைச் சரி செய்து கொள்ள இது மிகவும் உதவிக்கரமாக இருக்கும். விவசாயிகள் விழிப்புணர்வோடு புத்திசாலித்தனமாக இது போன்ற செயல்களைச் செய்தால் தங்களின் விவசாயத்தை லாபகரமானதாகவும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் அமைத்துக்கொள்ள முடியும்’ என்கிறார் ராஜசேகரன். புன்னை எண்ணெயை இந்த அளவுக்கு அலசி ஆராய்ந்திருக்கும் ராஜசேகரன், வெறும் விவசாயி மட்டுமல்ல.. டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், டிப்ளமோ இன் ஏரோநாட்டிக் இன்ஜினீயரிங் ஆகிய படிப்புகளை முடித்துவிட்டு, இந்திய விமானப் படையில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜசேகரன்
ராஜசேகரன்

‘கஜா புயலின்போது தோட்டத்தில் இருந்த புன்னை மரங்கள் விழுந்துவிட்டன. இப்போது இரண்டு மரங்கள்தான் இருக்கின்றன. அதோடு புன்னை எண்ணெய் பம்ப்செட் பயன்பாட்டை நிறுத்திவிட்டேன். ஆனால், அதை முன்னெடுக்கும் செயல்பாட்டை நிறுத்தவில்லை. இந்தக் கண்டுபிடிப்பு பரவலாக வேண்டும் என்ற நோக்கத்தினாலும், புன்னை மரங்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்ற நோக்கத்தினாலும்தான் இதை முன்னெடுத்தேன். ஒரு கட்டத்தில் அரசோ, பிற அமைப்புகளோ யாரும் இதை தொடர்ந்து பரவலாக்க முன்வரவில்லை. தனி மனிதனாக என்னால் முடிந்த முயற்சிகளைச் செய்துவிட்டேன். இன்றைக்கு டீசல் விலை உச்சத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் புன்னை எண்ணெயில் ஓடும் பம்ப்செட்களின் தேவை அதிகமாக உள்ளது. பல ஆண்டுகள் இதைப் பயன்படுத்தி பார்த்த அனுபவத்தில் செலவில்லாமல் பாசனம் செய்ய இது உதவி செய்கிறது என்பது நிதர்சனமான உண்மை. புன்னை எண்ணெய் பயன்படுத்தி பம்ப்செட் இயக்க விரும்பும் விவசாயிகளுக்கு பயிற்சியும் ஆலோசனையும் கொடுத்து கொண்டுதான் இருக்கிறேன். மரத்திலிருந்து விதைகள் கிடைக்கும் சமயத்தில் தேவைப்படுவோருக்கு விதைகளும் கொடுக்கிறேன்’ என்கிறார்.

தொடர்புக்கு, ராஜசேகரன்,

செல்போன்: 97510 02370

- கண்டுபிடிப்போம்

பம்ப்செட்
பம்ப்செட்

விதைகள் எவ்வளவு கிடைக்கும்?

புன்னை மரம் நட்டு ஐந்தாம் ஆண்டில் 10 அடி உயரத்துக்கு மரம் வளர்ந்திருக்கும். இந்தப் பருவத்தில் காய்ப்பு ஆரம்பிக்கும். பொதுவாக ஒரு மரத்தில் ஓர் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவை புன்னை மகசூல் கொடுக்கும். ஐந்தாம் ஆண்டு முதல் ஒரு மரத்திலிருந்து ஓர் ஆண்டுக்கு 4 கிலோ முதல் 20 கிலோ வரையிலான பருப்பு கிடைக்கும். 10 வருடங்களுக்குப் பிறகு 10 கிலோ முதல் 60 கிலோ.. 20 வருடங்களுக்கு பிறகு 50 கிலோ முதல் 150 கிலோ என்று உயர்ந்துகொண்டே போய், 25 வருடங்களுக்குப் பிறகு 150 கிலோ முதல் 300 கிலோ வரை பருப்பு கிடைக்கும். அதிகபட்சமாக 500 கிலோ கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

எம்.ஜே.பிரபு
எம்.ஜே.பிரபு

எல்லா மண்ணிலும் வளரும்

“முன்ன பெரும்பாலான கோயில்கள்ல புன்னை மரங்கள் இருந்துச்சு. இப்ப அதெல்லாம் எங்க போச்சுனே தெரியல. புன்னை மரங்கள் எல்லா வகையான மண்லயும் வளரும்னாலும், கடற்கரை ஓரங்கள்ல அதிகமா பாக்க முடியும். அஞ்சு வருஷத்துல காய்ப்புக்கு வந்துடும். எங்க தோட்டத்துல 30 வயசான ரெண்டு புன்னை மரங்கள் இருக்கு. இதுல உள்ள பழங்களை வெளவால்கள் தின்னுட்டு, கொட்டையை கீழ போட்டுடும். இதன் மூலமாவே வருஷத்துக்கு 300 கிலோ கிடைச்சுடும். நல்லா காயவெச்சு, ரெண்டு தடவை உடைச்செடுத்தா... 150 கிலோ கிடைக்கும். செக்குல கொடுத்து ஆட்டுனா, 100 லிட்டர் எண்ணெய் கிடைக்கும்” என்கிறார் ராஜசேகரன்.