ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

ஆண்டுக்கு ரூ.2 லட்சம்... ஒரு ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணையம்!

பண்ணையில் ராஜசேகரி
பிரீமியம் ஸ்டோரி
News
பண்ணையில் ராஜசேகரி

தற்சார்பு

மாடித்தோட்டத்துக்கு அடுத்து நகரவாசிகளின் பெருங்கனவாக இருப்பது தற்சார்புடன்கூடிய ஒரு தோட்ட வீடுதான். வீடு, வீட்டைச் சுற்றித் தோட்டம், அதில் மாடுகள், கோழிகள் எனக் கால்நடைகளோடு வாழ்வது இன்று பெரும்பாலானவர்களின் கனவாக இருக்கிறது. அந்த வகையில் பண்ணை, பண்ணைக்குள் வீடு என்று அமைதியான இடத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து வாழ்ந்து வருகிறார் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரி. இவருடைய தோட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா, ஜெயபுரம் அடுத்த ரெட்டியார் வட்டத்தில் இருக்கிறது. ஒரு மாலை வேளையில் அவருடைய தோட்டத்துக்குச் சென்றோம்.

‘வாத்தியார் வீடு எங்கே’ என்றால் அனைவரும் வழி சொல்கிறார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைதியாக வீற்றிருந்தது வீடு. பலாமரத்திலிருந்து பறித்த பலாப் பழங்களை வெட்டி அதிலிருந்து பழங்களை எடுத்துக் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார் ராஜசேகரி.

பண்ணையில் ராஜசேகரி
பண்ணையில் ராஜசேகரி



“எனக்குப் பூர்வீகம் இதே ஊர்தான். கல்யாணத்துக்கு அப்புறம் கணவரின் வேலை காரணமாகத் திருப்பத்தூர்ல குடியேறிட்டோம். கிராம வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட மனசும் உடம்பும் நகரத்து வாழ்க்கை கொஞ்சம் கசக்கத்தான் செய்தது. இருந்தாலும் கணவரின் வேலை, பசங்களோட படிப்புக்காக நகரத்து வாழ்க்கையை ஏத்துக்க வேண்டியதா இருந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா அதிலிருந்து மீள்றதுக்காக மாடித்தோட்டம் அமைச்சேன். அதோடு மனவளக்கலை அமைப்புல சேர்ந்து யோகா, தியானம்னு பல விஷயங்கள கத்துக்க ஆரம்பிச்சேன். அந்த விஷயங்கள் பல தரப்பட்ட மக்களுக்கும் போய்ச் சேரணுங் கிறதுக்காகப் பல இடங்களுக்கும் போய் வகுப்பு எடுக்க ஆரம்பிச்சேன். பசங்களோட படிப்பு முடிச்சதும் 2005-ம் வருஷம் மறுபடியும் கிராமத்துக்கே வந்துட்டோம். எங்களுக்குச் சொந்தமா 5 ஏக்கர் நிலமிருக்கு. தண்ணி வசதி பெருசா இல்லாததால நிலக்கடலை, பயறு வகைகள்னு அதுல மானாவாரி விவசாயம்தான் நடந்துட்டு வந்தது. இதுல ஒரு ஏக்கர் நிலத்த மட்டும் பிரிச்சு அதுல வீடு கட்டினோம்’’ என்றவர் தொடர்ந்தார்

“பசுமை விகடனுக்கு முன்பே ஆனந்த விகடன்ல வந்த இயற்கை விவசாயம் பத்தின தகவல்களைப் படிச்சிருக்கேன். பிறகு, பசுமை விகடனையும் தொடர்ந்து படிச்சிட்டு வர்றேன். அந்த அனுபவங்கள் மூலமா ‘பகிர்வு’ என்ற தன்னார்வ அமைப்பு மூலமா சமூகச் செயற்பாட்டாளர் மலர்விழியோடு சேர்ந்து சில நீர்நிலைகளைச் சீரமைச்சு கொடுத்திருக்கோம். இப்பவும் இந்த அமைப்புமூலம் நீர்நிலைகள்ல மரங்கள் வளர்க்கிறது, சீரமைச்சு கொடுக்கிறதுனு செயல்பட்டுட்டு இருக்கோம்” என்று முன்கதை சொன்னவர் கோழிகளுக்குத் தீவனம் போட்டுவிட்டு வந்து தொடர்ந்தார்.

காய்கறிகள்
காய்கறிகள்
வீட்டுடன் தோட்டம்
வீட்டுடன் தோட்டம்



வீட்டைச் சுற்றித் தோட்டம்

“இந்த ஒரு ஏக்கர் நிலத்துல வீடு, உறவினர் வந்தா தங்குறதுக்கு இடம், கோழிகளுக்கான ஷெட்னு அரை ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருக்கோம். வீட்டுக்கு முன்னால இருந்த இடத்துல முதல்ல பயிர் வெச்சோம். 10 அடிக்கு 10 அடி இடைவெளியில நிலத்தைச் சுத்தியும் தென்னங்கன்றுகள வெச்சோம். உள்ளே பல வகையான பழப்பயிர்கள் வெச்சோம். அதுல இப்போ 20 தென்னை, 4 மா, 3 ஜம்பு நாவல், 3 சீத்தா, 2 பலா, 2 சப்போட்டா, 2 பெருநெல்லி, ஒரு எலுமிச்சை, ஒரு பாதாம் பலன் கொடுத்துட்டு இருக்கு. ஆப்பிள், முந்திரிகூட வெச்சோம். ஆனா, இந்த மண்ணுக்கு அது வளரல. இங்கிருக்கும் எல்லா மரங்களுக்கும் 15 நாள்கள் இடைவெளியில பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் கொடுத்து வளர்த்தோம். இடுபொருள் தயாரிக்கிறதுக்குன்னே ஒரு நாட்டு மாடு வாங்கினோம். இப்போ 2 நாட்டு மாடுகள் இருக்கு. தென்னை மட்டை, மரங்கள்ல விழுகிற இலைதழைகளை அப்படியே மூடாக்காப் போட்டுறோம். அதனால, நிலத்துல எப்பவும் ஈரப்பதம் இருக்கும். தோட்டமும் குளுமையா இருக்குது. ஓரளவுக்கு இந்த இடம் தயாரான பிறகு நாட்டுக்கோழிகள் வாங்கி வளர்க்க ஆரம்பிச்சோம். இப்போ 30 நாட்டுக்கோழிகள், 100 குஞ்சுகள் இருக்கு.

பலாமரம்
பலாமரம்
அத்தி
அத்தி


வேலையாட்கள் தேவையில்லை

5 வருஷத்துக்கு முன்ன வீட்டுக்குப் பின்புறம் இருந்த அடுத்த அரை ஏக்கர் நிலத்தைத் தயார் பண்ண ஆரம்பிச்சோம். அதுல 24 ஜம்பு நாவல் கன்றுகளை 10-க்கு 10 அடி இடைவெளியில வெச்சோம். அதோட 20 மகோகனி, 5 சில்வர்வுட், 4 வாட்டர் ஆப்பிள், 3 கொய்யா, 2 மா, 2 மாதுளை, 2 அத்தி, 2 எலுமிச்சை, 2 முருங்கை, ஒரு அவகோடா இருக்கு. இதுலயே ஊடுபயிரா கத்திரி, கீரைகளைச் சாகுபடி பண்ணிட்டு வர்றேன். ஆரம்பத்திலேயே பாசனத்துக்காக ஒரு ஆழ்துளைக் கிணறு அமைச்சோம். அதிலிருந்துதான் நிலத்தோட பல பகுதிக்கும் குழாய் அமைச்சுப் பாசனம் செஞ்சிட்டு வர்றேன். ஈரப்பதத்தைப் பொறுத்து வாரத்துக்கு ஒருமுறையோ ரெண்டு முறையோ பாசனம் செஞ்சிட்டு வர்றேன். பராமரிப்பு வேலைகளை வீட்ல இருக்கிறவங்களே பாத்துக்கிறோம். கோழிகளுக்குத் தானியங்களை வாங்கிட்டு வந்து தீவனமா கொடுக்கிறோம். குஞ்சுகளுக்கு மட்டுமே தீவனம் வாங்கிக் கொடுக்கிறோம். வேறெதையும் வெளியிலிருந்து வாங்குறதில்ல. முன்பெல்லாம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் கொடுத்துட்டு இருந்தேன். இப்போ மண்ணு நல்லா வளமாகிட்டதால அதுகூடக் கொடுக்கிறதில்ல. மூணு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு கிலோ அல்லது ரெண்டு கிலோ எருவை மரத்துக்கு அடியில் போட்டு விடுறதோட சரி. பழமரப்பயிர்களுக்குப் பூச்சித் தாக்குதல் பெருசா இல்ல. அதனால, வருஷம்தோறும் மகசூல் கொடுத்துட்டு இருக்கு” என்றவர் வருமான கணக்கைப் பற்றிப் பேசினார்.

எலுமிச்சை
எலுமிச்சை
நாவல், மல்லி
நாவல், மல்லி



பழங்கள், காய்கறி மூலம்

81,500 ரூபாய்

“தற்சார்போடு வாழணும். நமக்குப் புடிச்ச விவசாயத்தைச் செய்யணும்னு தான் இந்தப் பண்ணையை உருவாக்கி யிருக்கிறேன். இங்கே விளையும் விளைபொருள்களுக்குக் கணக்கு பார்த்தால், 20 தென்னை மரங்கள் மூலம் வருஷத்துக்கு 3,600 தேங்காய்கள் கிடைக்கும். ஒரு தேங்காய் 10 ரூபாய் என்ற கணக்குல 36,000 ரூபாய் வருமானம். 3 ஜம்பு நாவல் மரங்கள் மூலமா 15,000 ரூபாய், காலாபாட், பங்கனப்பள்ளி மாமரங்கள் மூலம் 500 கிலோ மாம்பழங்கள் கிடைக்கும். ஒரு கிலோ 20 ரூபாய் என்ற கணக்கில் 10,000 ரூபாய், காய்கறிகள் மூலமா 8,000 ரூபாய், பலா மரத்திலிருந்து ஒரு வருஷத்துக்கு 25 பழங்கள் கிடைக்கும். ஒரு பலா குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கு விற்றால்கூட 5,000 ரூபாய். பெருநெல்லி மூலமா 2,500 ரூபாய், எலுமிச்சையில 2,000 ரூபாய், முருங்கை 2,000 ரூபாய், சப்போட்டோ 100 கிலோ கிடைக்குது. ஒரு கிலோ 10 ரூபாய் என்ற கணக்குல 1,000 ரூபாய். ஆக, பழங்கள், காய்கறிகள்மூலம் ரூ.81,500 ரூபாய் வருமானம் கிடைக்குது.

மாட்டுடன்
மாட்டுடன்



கோழி, மாடு மூலம் 1,18,600 ரூபாய்

30 கோழிகள் மூலமா வருஷத்துக்கு 3,600 முட்டைகள் கிடைக்குது. ஒரு முட்டை 12 ரூபாய். அது மூலமா 43,200 ரூபாய் கிடைக்குது. மாசத்துக்கு 12 கோழிகள இறைச்சிக்காக விற்பது மூலமா 4,200 ரூபாய் வருமானம். வருஷத்துக்கு 50,400 ரூபாய் கிடைக்கும். மாடுகள் மூலமா கிடைக்கும் பாலுக்குக் கணக்கு போட்டா வீட்டுத்தேவைப் போக 10,000 ரூபாய். மாடு மூலமா வருஷத்துக்கு ஒரு கன்று கிடைக்குது. அதை 15,000 ரூபாய்னு விக்கிறோம். ஆகா, கால்நடைகள் மூலமா 1,18,600 ரூபாய் வருமானம்.

பழங்கள், காய்கறிகள், கால்நடைகள் மூலமா வருஷத்துக்கு 2,00,100 ரூபாய் வருமானமா கிடைக்குது. இதுல கோழிக்குஞ்சுகளுக்கான தீவனத்தை மட்டும் தான் வெளியிலிருந்து வாங்குறோம். அதுவொரு 15,000 போக மீதி லாபமா கிடைச்சிட்டு வருது. இவ்வளவுக்கும் இன்னும் அரை ஏக்கர்ல காய்கறிகள தவிர மற்ற பயிர்கள் வருமானம் கொடுக்க ஆரம்பிக்கல. அது கொடுக்க ஆரம்பிச்சா, ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாய் குறையாம வருமானம் கிடைக்கும். பசுமை விகடன் புத்தகத்துல வர்ற விவசாயிகள் மாதிரியே நல்ல வருமானம் எடுக்கும் நோக்கத்தோடு உழைச்சிட்டு இருக்கேன்” என்றவர் நிறைவாக,

வருமான கணக்கு
வருமான கணக்கு
பண்ணையில் ராஜசேகரி
பண்ணையில் ராஜசேகரி



தற்சார்பு வாழ்க்கை

“இந்தப் பண்ணையை லாப நோக்குல நடத்தல. என் மனத் திருப்திக்காகவும், வீட்டுத் தேவைக்கான காய்கறி, பழங்களுக்காகவும் நடத்திட்டு வர்றேன். மீதி இருக்கிறதைதான் விக்கிறேன். நாங்க நல்ல காற்றோட்ட வசதியோட, ஆரோக்கியமான உணவுப் பொருள்களை, விளையவெச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம். இங்கே விளையவில்லையென்றாலும், இதையெல்லாம் காசு கொடுத்துதானே வாங்கியிருக்கணும். தற்சார்பு பத்தி அதிகம் பேசப்படுற இந்தக் கொரோனா காலத்துல இந்த மாதிரி ஒருங்கிணைந்த பண்ணை முறைதான் கைக்கொடுக்குது” என்று விடைகொடுத்தார்.


தொடர்புக்கு,

ராஜசேகரி,

செல்போன்: 95853 38568