
கழனிக்காட்டு விஞ்ஞானிகள்! கலக்கல் கருவிகள், கருவாகி... உருவான கதை!-3
‘தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்று சொல்வார்கள். அதுவும் சவால்கள் நிறைந்த விவசாயத்தில் தினம் தினம் புதிய கண்டுபிடிப்புகளின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கண்டுபிடிப்புகளைப் பற்றிப் பேசுகிறது இந்தத் தொடர்.
பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கும்... வாழ்வதற்கும் ஆதாரமாக விளங்குவது சூரியசக்தி. அந்தச் சூரிய சக்தியின் அருமையை விஞ்ஞான உலகம் பெரிதும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். விவசாயத்தில் சூரியசக்தி பயன்பாடு அதிகரிக்க வேண்டுமென்று கடந்த 15 ஆண்டுகளாக அரசாங்க அதிகாரிகளும் விவசாயிகளும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக மானியங்கள்கூட வழங்கப்படுகின்றன. இருந்தாலும், விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் விதமாகச் சூரியசக்தி உபகரணங்கள் முழுமையாகச் சென்று சேரவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள 10 கிராமங் களில் எங்குமே சூரியசக்தி பயன்பாட்டில் உள்ள ‘பம்ப்செட்’டுகள் கிடையாது. ‘சோலார் பம்ப்செட்’ வாங்க வேண்டுமென்றால் அதற்கு மானியத்தொகை எங்கு கிடைக்கும், நல்ல பொருளாக எங்கு வாங்கலாம் என்பதுபோன்ற விவசாயிகளின் மனதில் எழும் கேள்விகளுக்கு இன்னும் சரிவர பதில் கிடைத்தபாடில்லை.

சூரிய சக்திதான் வருங்காலத்தில் முக்கியத் தேவையாகவும், நீண்டநாள் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கப்போகிறது. இலவச மின்சாரத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வந்தால் அது சரியான தீர்வாக இருக்காது. அதனால் சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இஸ்ரேலில் அரசாங்கம் விநியோகம் செய்யும் மின்சாரத்துக்காக யாரும் காத்திருப்பதில்லை. அங்குள்ள விவசாயிகள், யாரையும் சார்ந்திருக்காமல் சூரிய மின்சக்தி பயன்பாட்டில் நல்ல விளைச்சலை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் சிறு, குறு விவசாயிகளுக்குச் சூரியசக்தி மின்சாரம் பற்றி வழிகாட்டி வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த டேவிட் ராஜா பியூலா. சூரியசக்தியின் உதவியோடு ‘சோலார் பேனல்’களை வைத்து, ‘ஸ்பிரேயர்’, நீர் இறைக்கும் இயந்திரம், வீடு, பண்ணையில் விளக்குகள் எரிப்பதற்கு எனப் பல பயன் பாட்டுக்குச் சோலார் மின்சாரத்தைப் பயன் படுத்தி அசத்தி வருகிறார்.
இவர், திருநெல்வேலி மாவட்டம், கடையம் தோட்டக்கலைத்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இவரின் துணைவியார் கல்லூரிப் பேராசிரியை. ‘சோலார் பேனல்’களை வைத்து வித்தியாசமான பல உபகரணங்களைக் கண்டுபிடித்து உருவாக்கி, அந்தப் பகுதி மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இப்போது நாம் டேவிட் ராஜா கண்டு பிடிப்புக்கு வருவோம். இவர் சூரிய சக்தியைப் பயன்படுத்தி ‘வறட்சி தடுப்பான்’ (Drought Fighter) என்ற பெயரில் ‘சோலார்’ நீர் இறைக்கும் கருவியை உருவாக்கியுள்ளார். இதை எப்படிக் கண்டுபிடித்தார்? அதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. கடையம் தோட்டக்கலைத்துறையில் பணிபுரிந்தபோது, பணிநிமித்தமாக ஒரு கிராமத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கு, ஒரு ஏழை விவசாயி 25 சென்ட் நிலத்தில் ரோஜா பூச்செடிகளைச் சாகுபடி செய்துகொண்டு இருந்திருக்கிறார். தண்ணீர்ப் பற்றாக்குறை, சரிவர மின்சாரம் கிடைக்காததால் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சக் கிணற்றிலிருந்து பத்து, பதினைந்து முறை தண்ணீர் எடுத்துச் சென்று ஒவ்வொரு செடிக்கும் ஊற்றிக்கொண்டு இருந்திருக்கிறார். அந்த விவசாயி படும் சிரமம் அவர் மனத்தை உலுக்கியிருக்கிறது. அதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா? என்று அவர் யோசித்ததன் விளைவால் ‘சோலார் மின்விசை மோட்டார்’ ஒன்றைக் கண்டுபிடித்தார்.
கோடைக்காலத்தில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம்வரை மழை அதிகம் கிடைக்காது. அந்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு வசதியாக இந்தச் சிறிய வகை ‘மோட்டார் பம்ப்செட்’டை பயன்படுத்தலாம். நம்ம ஊர் கிணறுகளில் கோடைக்காலங்களில் தண்ணீர் கீழே போய்விட்டால், ‘பம்ப்செட் மோட்டா’ரில் தண்ணீர் ஊற்றி அதன் பிறகு மோட்டாரை இயக்குவார்கள். ஆனால் இந்தச் ‘சோலார் மோட்டா’ரில் அந்தத் தொல்லையெல்லாம் இருக்காது’ என்கிறார் டேவிட் ராஜா. இதை ‘ஸ்பிரேயர்’ ஆகவும் பயன்படுத்தலாம். நீர் இறைக்கும் கருவியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ‘ஸ்பிரேயரா’கப் பயன் படுத்துவதாக இருந்தால் தலையில் ஒரு ‘ஹெல்மெட்’ அணிந்துகொண்டு முதுகில் ‘டேங்க்’ மாட்டிக்கொண்டு இயற்கை பூச்சி விரட்டியைத் தெளிக்கலாம்.
உபயோகப்படுத்தும் முறை
‘சோலார் பேனலை’ ஒரு மணி நேரம் சூரிய ஒளியில் வைத்துவிட வேண்டும். அது சூரிய சக்தியைப் பெற்ற பிறகு, மோட்டாரை இயக்க வேண்டும். மூன்று மணி நேரம்வரை இந்த ‘மோட்டார்’ வேலை செய்கிறது. பிறகு மீண்டும் சூரிய ஒளியில் ‘மோட்டாரைச் சார்ஜ்’ செய்து கொண்டு பிறகு பயன்படுத்தலாம்.
இனி டேவிட் சொல்வதைக் கேட்போம். “பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு வர்ற தண்ணியை நிறுத்திட்டா, அணைக்குக் கீழே விவசாயம் செய்ற விவசாயிகளுக்குத் தண்ணி கிடைக்கிறதில்ல. அந்தப் பகுதியில ‘டீசல் இன்ஜினை’ பயன்படுத்தித் தண்ணி இறைக்கிறாங்க. டீசலுக்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கு. அதுக்கு மாற்றா இந்தச் ‘சோலார்’ நீர் இறைக்குற கருவியை உருவாக்கி விவசாயிகளுக்குக் கொடுத்தோம். 0.5 ‘ஹெச்.பி’யில இயங்கக்கூடியது. ‘சோலார் பேனலோட இருக்குற இந்த நீர் இறைக்குற கருவியைத் திறந்தவெளியில வெச்சு அப்படியே மோட்டாரை இயக்கலாம். இதுல நீளமான குழாய் இணைச்சிருக்கோம். அது மூலமா வயல்ல எங்க தண்ணி வேண்டுமோ அங்கே கொண்டுபோய்ப் பாய்ச்சலாம்.
அதேபோல மல்லி, முல்லைப்பூ சாகுபடி செய்யுற விவசாயிக, கோடைக்காலத்தில தண்ணி பற்றாக்குறையால ரொம்ப அவதிப்படுறாங்க. அவங்க, செடியைச் சுற்றி தேங்காய்நார்க் கழிவைப் (கோகோபித்) போட்டு அதுமேல இந்தக் குழாய் மூலமா தண்ணி தெளிச்சுட்டு வந்தா தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்.

இந்தக் கருவி கிட்டத்தட்ட நம் வீடுகள்ல பயன்படுத்துற ‘சம்ப் மோட்டார்’ மாதிரிதான். அதுல சில மாற்றங்களைச் செஞ்சு, ‘சோலார் பேனலை’ப் பொருத்தி தோட்டத்தில தண்ணீர் இறைக்கப் பயன் படுத்துற மாதிரி வடிவமைச்சு இருக்கோம். சுமார் 25 அடி ஆழ திறந்தவெளிக் கிணறு, ஆழ்துளைக் கிணறு (போர்வெல்), பண்ணைக்குட்டை, ஓடை, தொட்டி, கால்வாய்களிலிருந்து தண்ணி எடுத்து வயலுக்குப் பாய்ச்ச பயன்படும். அடுக்குமாடி குடியிருப்பு தொட்டிகள்ல தண்ணி நிரப்பவும் பயன்படுத்தலாம். இது சிறு, குறு விவசாயி களுக்குப் பயன்படக்கூடிய எளிமையான கருவி. இதோட விலை 0.5 ‘ஹெச்.பி’ கருவி 35,000 ரூபாய். இதுலேயே 1 ஹெச்.பி திறனுள்ள கருவியின் விலை 1 லட்சம் ரூபாய். இது 100 அடி வரையுள்ள போர்வெல்ல இருந்து தண்ணி எடுத்துக் கொடுக்கும். ஸ்பிரேயர் 15,000 ரூபாய்” என்கிறார்.
தொடர்புக்கு,
டேவிட் ராஜா பியூலா,
செல்போன்: 94862 85704.
- கண்டுபிடிப்போம்