மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

சிறுதானியங்களுக்கு மரியாதை! பொலிக பொலிக சிறுதானியங்கள்... பொலிக!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

‘சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023’ கொண்டாடும் நேரம் இது. இந்தியாவின் பரிந்துரையை ஏற்று, ஐக்கிய நாடுகள் சபை சிறிய தானியங்களின் பலனை உலகம் முழுக்கக் கொண்டு போகச் சிறுதானியங்களுக்கு மரியாதை செய்திருக்கிறது. உலகம் முழுவதும் 130 நாடுகளில் சிறுதானியங்கள் விளைவிக்கப்பட்ட போதிலும், ஆசிய மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் 50 கோடிக்கும் மேற்பட்டோரின் பாரம்பரிய உணவாக உள்ளது. நம் ஊரில் ஒரு காலத்தில் கம்பு, சோளம், கேழ்வரகுதான் முக்கியப் பயிராகவும் உணவாகவும் இருந்தது. நெல் பக்கம் நம் கவனம் திரும்பிய உடனே, சிறுதானியங்களை மறந்துவிட்டோம். ஆனால், இன்றும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் சிறுதானிய உணவுகள் பிரதானமாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வுக்குப் பசுமை விகடன் இதழின் பங்களிப்பும் முக்கியமானது. முதல் இதழ் தொடங்கி, இதோ இந்த இதழ் வரையிலும் சிறுதானியங்களின் மகத்துவத்தைக் கடந்த 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து சொல்லிக் கொண்டுள்ளது.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


ஜி-20 கூட்டங்களில் சிறுதானிய விருந்து!
*இந்தியாவில் கம்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ராஜஸ்தான் முன்னிலையில் இருக்கிறது. வறட்சியான அந்த மண்ணுக்குக் கம்புதான் சரியான பயிர். சூடான கம்பு ரொட்டியும் காரசாரமான சட்னியும் ராஜஸ்தான் மாநில விருந்தோம்பலில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா தலைமையில் நடக்கும் ‘‘ஜி-20 கூட்டங்களில் பங்கேற்கும் வெளிநாட்டினருக்கு, சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை விருந்துகளில் வழங்க உள்ளோம். சிறுதானிய விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினருடன் கலந்துரையாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன’’ என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


கர்நாடகாவை கலக்கும் கேழ்வரகு களி!
‘ராகி மொத்தா’ கர்நாடக மாநில மக்களின் அன்றாடக் காலை உணவு. நம் ஊரில் காலையில் எழுந்த உடனே, டீ, காபி குடிக்கிற பழக்கம், கடந்த இரண்டு தலைமுறையாகத்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. முன்பெல்லாம்.. கம்பு, கேழ்வரகுக் கூழ்தான் தமிழ்நாட்டில் உள்ள வீடுகள் தோறும் இடம் பிடித்திருந்தது. கூழ் இருந்த வரையிலும் குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை வியாதி எட்டிப்பார்க்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், கர்நாடகாவில் இன்றும் வீடுகளில் மட்டுமல்ல, சிறிய தேநீர் கடைத் தொடங்கி ஹோட்டல்கள் வரை ‘ராகி மொத்தா’ என்ற உருண்டை வடிவ கேழ்வரகு களியைச் சூடான மொச்சைக்கொட்டை குழம்புடன் கொடுப்பார்கள். மதிய நேரத்தில் விதவிதமான ஊறுகாய் வகையுடன் கேழ்வரகு கூழில் மோர் ஊற்றிக் குடிப்பார்கள். அதைப் பார்த்தால் நமக்கும் ஒரு வாய் குடிக்கத் தோன்றும். தானிய வகைகளில் கேழ்வரகில்தான் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் புகழ்ந்து சொல்கிறார்கள்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


இவைதான் எதிர்கால உணவு!
சிறுதானியங்கள் சிறப்புக்களைச் சொல்லி இந்த ஆண்டு முழுக்கக் கொண்டாட, ஐ.நா சபை ஏன் சம்மதம் தெரிவித்தது தெரியுமா? இப்படியே பூமியின் வெப்பநிலை கூடிக் கொண்டே போனால் நெல், கோதுமை விளையாது. கம்பு, சோளம்... மாதிரியான இரவு நேரத்தில் பூ பூக்கக் கூடிய சிறுதானியங்கள் மட்டும்தான் விளையும் என்கிறார்கள் வேளாண் விஞ்ஞானிகள். இதனால்தான், இதை ‘எதிர்கால உணவு’ (Future Foods) என்றும் அடித்துச் சொல்கிறார்கள். சிறுதானியங்களின் சிறப்பே, குறைந்த நீர் இருந்தால் கூட ‘குபீர்’ என்று வளர்ந்து நல்ல விளைச்சல் கொடுக்கும். சிறுதானியங்கள் சாகுபடி செய்ய... ரசாயன உரம், பூச்சிக்கொல்லி விஷங்கள் தேவைப்படாது. ஆக, மண்ணுக்கும், மனிதர்களுக்கும் ஏன் ஒட்டுமொத்த பூமி பந்துக்கும் ஏற்ற பயிர் என்றால் அது, சிறுதானியங்கள்தான்.


ஐ.நா சபை
பாராட்டிய சிறுதானிய விவசாயிகள்!

’’ரேஷன் கடையில் சிறுதானியங்கள் வழங்குவோம்; பள்ளி மதிய உணவுகளில் சத்தான சிறுதானிய உணவுகளைக் கட்டாயம் கொடுப்போம்’’ என்று, இப்போதுதான் அரசு அறிவித்துள்ளது.
ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன்பே மாதிரி ரேஷன் கடை அமைத்துச் சிறுதானியங்களை மக்களுக்குக் கொடுத்து ஆச்சர்யப்படுத்திய ஓர் அமைப்பு இருக்கின்றது. இப்போது தெலங்கானா மாநிலத்தில் உள்ள ‘டெக்கான் டெலவப்மென்ட் சொசைட்டி’தான் அது. இந்தத் தொண்டு நிறுவனம், வறட்சியான மேடக் மாவட்டத்தில் ஜகிராபாத் மண்டல் பகுதியில் அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றப்படி சிறுதானியங்களைச் சாகுபடி செய்ய வைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் காட்டியது. இதைச் செய்தது எல்லாம் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு. வழக்கம் போல ஆரம்பத்தில் மத்திய, மாநில அரசுகள் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஐக்கிய நாடுகள் சபை இந்தச் சிறுதானிய பெண் விவசாயிகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் சுந்தரத் தெலுங்கில் சிறுதானியங்களின் மகிமையை பேச வைத்து மரியாதை செய்தது எல்லாம் வரலாறு. இன்னும் பல சாதனைகளை இந்தப் பெண்கள் செய்துள்ளார்கள். இந்தத் தகவல்கள் 2010-ம் ஆண்டுப் பசுமை விகடன் இதழில் தொடர் கட்டுரையாக வந்து கவனம் பெற்றது. இதன் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளில் சிலரின் கவனம் சிறுதானிய சாகுபடி பக்கம் திரும்பியதை யாரும் மறக்கவும், மறுக்கவும் முடியாது.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


சிறுதானியங்கள் நேரடிக் கொள்முதல்!
மத்திய அரசின் புள்ளிவிவரப்படி இந்தியாவில் அதிக அளவு சிறுதானிய சாகுபடி செய்யும் 21 மாநிலங்களில் ராஜஸ்தான்  முதலிடத்தில் உள்ளது. மத்திய பிரதேசம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
சத்தீஸ்கர் மாநில அரசு... வரகு, சாமை, ராகி ஆகிய பயிர்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, அவற்றுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்துள்ளது. இதுபோல் மற்ற மாநிலங்களும் சிறுதானிய உற்பத்தியை ஊக்கப்படுத்த சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.  கர்நாடகத்தில் சிறுதானியம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ஊக்கத்தொகை, ராஜஸ்தானில் வேளாண் கருவிகள் வாங்குவதற்கு மானியம், தெலங்கானாவில் சிறுதானியப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் திட்டம், ஆந்திர மாநிலத்தில் கர்ப்பிணிகளுக்குச் சிறுதானிய சத்துமாவு வழங்கல் எனச் சிறுதானிய உற்பத்திக்கு பல்வேறு மாநில அரசுகள் தீவிரம் காட்டிவருகின்றன.
சரி, தமிழ்நாட்டில் என்ன வேலை நடக்கின்றது என்று கேட்கிறீர்கள் தானே?
சிறுதானியங்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சோதனை அடிப்படையில் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த மாதம்தான் இதற்காகக் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டையில் சிறுதானியங்களை நேரடியாகக் கொள்முதல் செய்யும் வேலையில் தமிழ்நாடு வேளாண்மை துறை இறங்கி உள்ளது; நல்லது நடக்கட்டும்!


அவ்வையார்  மகிழ்ந்த நல்உணவு!
இப்போது அரிசி என்றால் நெல் அரிசி மட்டும்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், சாமை அரிசி, வரகு அரிசி... என சிறுதானியங்களிலும் அரிசி உண்டு.  ஒரு சமயம் அவ்வையார் அகோர பசியுடன் புல்வேளூர் என்ற ஊருக்குச் சென்றுள்ளார். இந்த ஊரைச் சேர்ந்த குறுநில மன்னன் பூதன் என்பவர், அப்போதுதான் வடித்து இறக்கியிருந்த வரகு அரிசிச் சோற்றையும் கத்திரிக்காய் வதக்கலையும் ஆவி பறக்கும் சூட்டோடு அவ்வையாருக்கு பரிமாறியுள்ளார்.  கூடவே சரியான பதத்தில் புளித்தமோரை ஊற்றியவுடன் அதன் சுவை பல மடங்காக பெருகி இருக்கிறது. எண்ணெயில் வாட்டியிருந்த கத்திரிக்காய் வதக்கலை அதோடு சேர்த்து  உண்டு களித்திருக்கிறார். இந்த அற்புதமான நல்உணவின் சுவைக்கு உலகையே ஈடாகத் தரலாம் என்று ரசித்து, ருசித்து ஒரு பாடலையும் பாடி வைத்திருக்கிறார்.


‘வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமு ரெனவே புளித்த மோரும்-தரமுடனே
பல்வேளூர்ப்பூதன் புகழ்ந்து பரிந்திட்ட சோறு
எல்லா உலகும் பெறும்’