நாட்டு நடப்பு
Published:Updated:

குறுகிய காலத்தில்... நிறைவான லாபம்... கைகொடுக்கும் காகிதக்கூழ் மரங்கள்!

மரக்கூழ் தயாரிப்பதற்கான மரப் பொருள்களுடன்
பிரீமியம் ஸ்டோரி
News
மரக்கூழ் தயாரிப்பதற்கான மரப் பொருள்களுடன்

மரம் தொடர்-6

வேளாண் காடுகள் திட்டத்தின் மூலம்... தடிமரம், ஒட்டுப்பலகை, காகிதக்கூழ், எரிசக்தி, எண்ணெய் வித்து எனப் பயன்பாட்டின் அடிப்படையில் பல வகையான மரங்கள் வளர்ப்பது குறித்து இந்தத் தொடரில் ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். கட்டில், நாற்காலி, மேஜை, பீரோ, ஜன்னல், கதவுகள் உள்ளிட்டவற்றைத் தயார் செய்ய, தடிமரங்களாகப் பயனளிக்ககூடிய தேக்கு, மகோகனி, குமிழ், சிசு மரங்கள்... பிளைவுட் என அழைக்கப்படும் ஒட்டுப்பலகை தயாரிப்புக்கு பயன்படக்கூடிய மலைவேம்பு, சந்தனவேம்பு, மதகிரிவேம்பு, சில்வர் ஓக், நெல்ரை, மகோகனி உள்ளிட்ட மரங்கள் சாகுபடி மற்றும் வணிகம் குறித்துக் கடந்த அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் காகிதம் தயாரிக்கப் பயன்படக்கூடிய மரங்கள் குறித்து இந்த அத்தியாயத்தில் பார்க்கப் போகிறோம்.

காகிதத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தெரிந்துகொள்ளக் காகிதம் மற்றும் எரிசக்தியின் பயன்பாட்டை அளவுகோலாக வைப்பார்கள். இந்தியா சுதந்திரமடைந்தபோது அதன் மொத்த மக்கள் தொகை சுமார் 30 கோடிதான். அப்போது காகிதத்தின் பயன்பாடு ஒரு நபருக்கு ஆண்டுக்குச் சராசரியாக 2-3 கிலோதான். ஒரு கிலோ காகிதம் தயாரிக்க 4-5 கிலோ மரம் தேவைப்படும். 1980-களுக்குப் பிறகு கணினி பயன்பாட்டுக்கு வந்தது. கணினி அதிகரித்ததால், காகிதத்தின் தேவை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யதார்த்த நிலை என்ன தெரியுமா? சொன்னால் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். காகிதத்தின் தேவை பல மடங்கு அதிகரித்தது. நாடே டிஜிட்டல் மயமாகிவரும் இந்தக் காலகட்டத்திலும் கூட ஒரு நபருக்குச் சராசரியாக 13-15 கிலோ காகிதம் தேவைப்படுகிறது. அப்போது 100 சதவிகிதம் மரங்கள் வனங்களிலிருந்து எடுக்கப்பட்டன. இப்போது 95 சதவிகிதம் மரங்கள், வனங்களுக்கு வெளியேதான் எடுக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

சவுக்கு
சவுக்கு

2004-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் டன் காகிதக் கூழ் மரங்கள் தேவைப்பட்டன. அவை முழுக்க வனத்தோட்டங்களிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன. இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 17.65 லட்சம் டன் காகிதக் கூழ் மரங்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் 1 லட்சம் டன் மரங்கள் வனத்தோட்டங்களிலிருந்து எடுக்கலாம். மீதமுள்ள 16 லட்சம் டன் மரம் விவசாய நிலத்திலிருந்து எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எழுதுவதற்கு மட்டும்தான் காகிதம் பயன்படும் என்ற நிலை ஒருகாலத்தில் இருந்தது. ஆனால் இன்றைக்கு அப்படியல்ல... மெல்லிழைத்தாள் (Tissue Paper), அணையாடை (Sanitary Napkin Glitter paper) உள்பட இன்னும் பல்வேறு தயாரிப்புகளுக்கும் காகிதம் தேவைப்படுகிறது. இந்த உலகம் என்னதான் டிஜிட்டல் மயம் மற்றும் இயந்திர மயத்திற்கு மாறினாலும் கூட, பல்வேறு வகைகளிலும் புதிய புதிய முறைகளிலும் காகிதத்திற்கான தேவை என்பது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. பொறியியல், மருந்துவம், கணினி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஏதோ ஒரு வகையில் காகிதம் பயன்படுத்தப்படுகிறது.

மரக்கூழ் தயாரிப்பதற்கான மரப் பொருள்களுடன்
மரக்கூழ் தயாரிப்பதற்கான மரப் பொருள்களுடன்

இதனால் காகிதகூழ் மரங்களுக்கான விற்பனை வாய்ப்புகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கிறது. காகிதக்கூழ் தயாரிப்புத் தொழிலில் ஏராளமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒருபக்கம் காகிதகூழ் மரங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில்... மறுபக்கம் இந்த வகை மரங்களின் உற்பத்தி என்பது குறைந்து கொண்டே வருவது, கவலை அளிக்கிறது. தேவைக்கும், உற்பத்திக்கும் பெரிய இடைவெளி வந்துவிட்டது.

இந்த மரங்களை, இயற்கைக் காடுகளிலிருந்து பெற முடியாத நிலையில், செயற்கைக் காடுகளை அதிகரித்து, மரக்கூழ் மரங்களை அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும். வனத்துக்கு வெளியே வேளாண் காடுகளை ஊக்குவிப்பதால் மட்டுமே இதை ஈடுசெய்ய முடியும். எங்கெல்லாம் விவசாய நிலங்கள் தரிசாக இருக்கிறதோ, எங்கெல்லாம் விவசாயம் லாபகரமானதாக இல்லையோ, எங்கெல்லாம் விவசாயம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறதோ அந்த நிலங்களையெல்லாம் தேர்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 130 லட்சம் ஹெக்டேர் நிலம் உள்ளது. அவற்றில் 30 லட்சம் ஹெக்டேர் பயன்படுத்தாத நிலங்களாக உள்ளன. அதில் வேளாண் காடுகளை உருவாக்கலாம். தடிமரங்கள், ஒட்டுப்பலகை மரங்கள் ஆகியவற்றோடு காகிதக்கூழ் மரங்களையும் உற்பத்தி செய்யலாம். ஏற்கெனவே லாபகரமாக விவசாயம் செய்யப்படும் நிலங்களில், வரப்பு ஓரத்தில் மட்டும் இந்த மரங்களைச் சாகுபடி செய்யலாம்.

தைல மரங்கள்
தைல மரங்கள்

தமிழ்நாட்டில் காகிதம் தயாரிப்புத் தொடர்பான தொழிலில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. முன்பு புல், மூங்கில் ஆகியவற்றிலிருந்துதான் காகிதம் தயார் செய்யப்பட்டது. இன்றைக்கு அப்படியல்ல... சவுக்கு, தைலம், மலைவேம்பு, வேலமரம், கடம்பு, பாப்புலர் ஆகிய மரங்களைத்தான் காகிதக் கூழுக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். சில நிறுவனங்கள் மட்டும் குறைந்தளவுக்கு மூங்கில் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சவுக்கு மற்றும் தைலம் ஆகிய 2 மரங்கள்தான் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போதுதான் மாற்று காகிதக் கூழ் மரங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். அவற்றில் மலைவேம்பு முக்கிய இடத்தில் உள்ளது. இதன் சுற்றளவு 16 அங்குலம் இருந்தாலே அவற்றைக் காகிதக் கூழுக்குப் பயன்படுத்தலாம்.

குறைந்த வயதுடைய குமிழ் மரங்கள் மற்றும் சிசு மரங்களைக் காகிதக்கூழ் மரங்களாகப் பயன்படுத்தலாம். அவற்றின் வயது, நடவில் இருந்து 3-4 ஆண்டுகள் இருந்தாலே போதுமானது. தேவை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஒரு சில மரங்களை மட்டுமே சார்ந்திருக்காமல் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கினால்தான், தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளியை பெருமளவு குறைக்க முடியும்.

காகிதக்கூழ் இயந்திரம்
காகிதக்கூழ் இயந்திரம்

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்... சவுக்கில் எம்.டி.பி-1 (MTP-1), எம்.டி.பி-2 (MTP-2), எம்.டி.பி-3 (MTP-3 ) ஆகிய 3 ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், அந்தந்த நிலங்களில் உள்ள மண்ணின் அமிலத்தன்மை, காரத்தன்மைக்கு ஏற்ற புதிய ரகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தைலம், மலைவேம்பு, குமிழ் குறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மரக்கூழ் மரங்கள் குறைந்தபட்சம் 2-5 ஆண்டுகளில் அறுவடைக்கு வந்துவிடும். எல்லாப் பொருள்களின் விலையிலும் கணிசமான ஏற்ற, இறக்கம் இருக்கும். ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் மரம் சார்ந்த பொருள்களில் விலை குறைவு ஏற்படவில்லை. குறிப்பாகக் காகித தயாரிப்புக்குப் பயன்படும் மரங்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

காகித தயாரிப்பில் முதன்மை இடம் வகிக்கும் சவுக்கு மரச் சாகுபடியை பொறுத்தவரை... கன்றுக்கு கன்று 5 அடி, வரிசைக்கு வரிசை 5 அடி வீதம் இடைவெளி விட்டு கன்று நடவு செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் நட்டால் ஒரு ஏக்கருக்கு 1,770 கன்றுகள் நடவு செய்யலாம். கன்றுகள் நடவு செய்வதற்கு முன்பு, கலப்பையில் உழவு ஓட்டிவிட்டு, ஏக்கருக்கு 10-12 டன் எரு போட வேண்டும். இதன்மூலம் மண் வளம் நன்கு மேம்படும். பல காகித ஆலைகளே ஒப்பந்தமுறை சாகுபடி திட்டத்தில் ஏராளமான நாற்றுகளை வழங்குகின்றனர். விவசாயிகள் அத்திட்டத்தின் மூலம் சவுக்கு வளர்க்கலாம். இந்தத் திட்டத்தில் விருப்பமில்லாதவர்கள், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை அணுகி சவுக்கு சாகுபடியில் இறங்கலாம். சவுக்கைப் பொறுத்தவரை 30-36 மாதங்களிலேயே அறுவடை செய்யலாம். மரத்தின் சுற்றளவு 5 அங்குலத்தை எட்டினாலே போதும். அதில் நல்ல உற்பத்தியும் கிடைக்கும். சில மரங்கள் 15 மாதங்களில் கூட அந்த அளவை எட்டிவிடும். இருப்பினும் 3 ஆண்டுகளில் அறுவடை எனத் திட்டமிட்டால் உற்பத்தியும், அதன்மூலம் உருவாக்கக் கூடிய காகிதத்தின் தரமும் நன்றாக இருக்கும்.

காகிதம்
காகிதம்

மரங்கள் ஒரே மாதிரி சீராக வளர நீர்ப்பாசனமும், உர மேலாண்மையும் அவசியம். அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையை அணுகி சவுக்கு சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறலாம். சவுக்கு சாகுபடியில் 30-36 மாதங்களில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் குறைந்தபட்சம் 150 டன் மகசூல் எடுக்க முடியும். ஒரு டன்னுக்கு 5,000-6,000 ரூபாய் விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த அடிப்படையில் கணக்குப் பார்த்தால், 150 டன்னுக்கு 7,50,000- 9,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். காகிதம் தயாரிப்புக்கு பயன்படக்கூடிய மற்றொரு முக்கிய மரமான தைலமரச் சாகுபடியை பொறுத்தவரை... 6 அடிக்கு 6 அடி, 6 அடிக்கு 8 அடி, 6 அடிக்கு 10 அடி என நிலத்தின் வசதிக்கு ஏற்ப கன்றுகள் நடலாம். காகிதக் கூழ் மரங்கள் குறுகிய காலப் பயிர் என்பதால் இந்த இடைவெளியே போதும். இருப்பினும் எங்கெல்லாம் நீர்வள ஆதாரம் இல்லையோ அங்கு 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் நடலாம். மலைவேம்பு, சிசு ஆகியவற்றையும் 6 அடிக்கு 6 அடி இடைவெளியில் நடலாம்.

சந்தை வாய்ப்பு அதிகம் இருப்பதால், மற்ற மரங்களை விடக் காகித கூழ் மரங்களில் அதிக வருமானம் எடுக்கலாம். குறிப்பாகச் சவுக்குச் சாகுபடியில் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 50-60 டன் மகசூல் கிடைக்கும். ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் ரூ.5,000 விலை கிடைக்கும். தைலம் ஏக்கருக்குச் சராசரியாக 40-50 டன் உற்பத்தி கிடைக்கும். டன்னுக்குச் சராசரியாக 2,500 -3,000 ரூபாய் வீதம் விலை கிடைக்கும்.

காகிதம்
காகிதம்விவசாயிகள் தங்களுடைய வேளாண் காடுகளில் 6 அடிக்கு 6 அடி இடைவெளியில் மலைவேம்பு சாகுபடி செய்து அடுத்த 2 ஆண்டுகளிலேயே அறுவடை செய்து காகிதக்கூழ் தயாரிப்புக்கு அனுப்பலாம். ஒரு ஏக்கருக்கு 40-60 டன் மகசூல் கிடைக்கும். ஒரு டன்னுக்கு 2,000-2,500 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. சில விவசாயிகள் 70-80 டன் மகசூல் எடுக்கிறார்கள். எனக்குத் தெரிந்த விவசாயி ஒருவர் 105 டன் எடுத்தார். இருப்பினும் அதை நாம் உதாரணமாகச் சொல்ல முடியாது. இடைவெளி, தொழில்நுட்பம், நீர் மேலாண்மை ஆகியவற்றில் அதிக கவனமும் கூடுதல் உழைப்பும் செலுத்தினால்தான், நாம் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் மகசூல் கிடைக்கும். மற்ற மரங்களை விட, காகிதக் கூழ் மரங்கள் விவசாயிகளிடம் நன்கு பரிட்சயமாகி வருகிறது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள்–தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றனர்.

சவுக்கு
சவுக்குஒப்பந்தமுறை சாகுபடி திட்டத்தில் மட்டுமே, தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 25,000 ஏக்கருக்கு மேல் காகிதக் கூழ் மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் சிலர், இந்த மரங்களுக்குப் போதிய இடைவெளி கொடுக்காததாலும், உரமேலாண்மை, நீர் மேலாண்மை, களை மேலாண்மை உள்ளிட்ட பராமரிப்பு முறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்காததால், உற்பத்தி குறைகிறது. அதுபோன்ற தவறுகளைச் சரிசெய்ய வேண்டும்.

-கிளைகள் படரும்தைலம் சாகுபடி

தைலம் மரம் சாகுபடி செய்து அதில் ஊடுபயிராகத் தானிய வகைகள், காய்கறிகள், பயறு வகைகள் சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பார்க்கலாம். இவ்வாறு ஊடுபயிர் சாகுபடி செய்ய வேண்டுமென்றால், தைல மரங்களுக்கிடையே அதிக இடைவெளி விட வேண்டும். குறைந்தபட்சம் 5 மீட்டருக்கு 5 மீட்டர் இடைவெளி விட வேண்டும். வாழை, கறிவேப்பிலை ஆகியவற்றையும் ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம்.

முனைவர் பார்த்திபன்
முனைவர் பார்த்திபன்

மாற்றுப்பயிர் சாகுபடி அவசியம்

விவசாயிகள் தாங்கள் ஏற்கெனவே பல ஆண்டுகளாகச் சாகுபடி செய்து வரும் வழக்கமான பயிர்களை மட்டுமே சாகுபடி செய்யாமல்... அவ்வப்போது மாற்றுப் பயிர்களையும் முயற்சி செய்து பார்க்க வேண்டும். குறிப்பாக மரப்பயிர்கள் சாகுபடியில் ஆர்வம் காட்ட வேண்டும். இதனால் விவசாயிகள், தொழில் நிறுவனங்கள்... இந்த இரண்டு தரப்புமே பரஸ்பரம் பயன் அடையலாம். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் உள்நாட்டுக்கு தேவையான மூலப்பொருள்களை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கிறது.