
தெலங்கானாவிலும் தடம்பதித்த நம்மாழ்வார்!
பக்கத்து வயல்
“சமூகம் என்பது மனிதன் மட்டுமே அடங்கியதல்ல. பிராணிகள், பறவைகள், பூச்சிகள் உள்ளிட்ட அனைத்துக்கும் வாழ்வளிப்பதே உண்மையான சமூகம். இதற்குப் பங்களிப்பது இயற்கை விவசாயம். சின்ன சின்னத் தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கும் இயற்கை வேளாண்மையை இந்தியாவிலுள்ள 47 வேளாண் பல்கலைக்கழகங்களும் எதிர்க்கின்றன. அதையும் கடந்து செயல்படும் தன்னார்வக் குழுக்களோடு பயணிப்பதே எனக்கு உவப்பானதாக இருக்கிறது” இவை ஒரு ஆவணப்படத்துக்கு அளித்த பேட்டியில் நம்மாழ்வார் பேசிய வார்த்தைகள். ஆரம்பகட்டத்தில் அவருடைய ஆதரவோடும், சில ஆலோசனைகளோடும் செயல்படத் தொடங்கிய ஒரு தன்னார்வ அமைப்பு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பல விவசாயிகளை இயற்கை விவசாயிகளாக மாற்றிவருகிறது.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ளது நீடித்த வேளாண்மைக்கான மையம். இந்த மையத்தின் இயக்குநர் வேளாண் விஞ்ஞானி ராமனாஞ்சநேயலு. இந்த அமைப்பின் மூலம், இந்தியாவில் ஆறு மாநிலங்களில் இயற்கை விவசாயத்தைப் பரப்பிவருகிறார்.
நம்மாழ்வார் சிறப்பிதழுக்காக ஹைதராபாத் மாநகரம், தர்ணகாவிலுள்ள அவருடைய மையத்தில் அவரைச் சந்தித்துப் பேசினோம். “இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்துவந்தேன். 1986-ம் ஆண்டு முதலே ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் (தெலங்கானா, ஆந்திரா) பல்வேறு இடங்களில் விவசாயத் தற்கொலைகள் நடந்துவந்தன. குறிப்பாக, தெலங்கானா மாநிலத்திலுள்ள எனபாவி கிராமத்தில் பருத்திச் சாகுபடி செய்யும் விவசாயிகள் நிறைய பேர் தற்கொலை செய்துகொண்டனர். அந்தத் தற்கொலைகள் என்னை பாதித்தன. ஒருகட்டத்தில் `தற்கொலையைத் தடுக்கும்விதமாக ஏதாவது செய்ய வேண்டும்’ என்று எண்ணினேன். அது குறித்து ஆராய்ந்தேன். அப்போது இந்திய அளவில் சிலர் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வந்தனர். குஜராத்தில் பாஸ்கர் சாவே, மகாராஷ்டிராவில் சுபாஷ் பாலேக்கர், தமிழ்நாட்டில் நம்மாழ்வார், கர்நாடகாவில் நாராயண ரெட்டி, கோவாவில் கிளாடு ஆள்வாரிஸ் ஆகியோரின் பணிகள் முக்கியமானதாக இருந்தன. 2004-ம் ஆண்டு முதல் நம்மாழ்வாரோடு தொடர்பிலிருந்தேன்.

ரசாயன உரங்களை உயர்த்திப் பிடிக்கும் அரசு அவற்றால் தோல்வியடைந்த விவசாயிகளைப் பற்றி வாய்திறப்பதில்லை. `மாற்றுத் தொழில்நுட்பங்கள்’ என்ற பெயரில் தேவையில்லாத திட்டங்களை மக்கள் தலையில் கட்டுகிறது. `மரபணு மாற்று விதைகள் வேண்டுமா, வேண்டாமா?’ என்ற விவாதம் நடந்துகொண்டிருந்தபோதே பன்னாட்டு கம்பெனிகளுக்காக மரபணு மாற்றுப் பருத்தி விதைகளை அனுமதித்தது அப்போதைய அரசு. இதற்கெல்லாம் தீர்வாக ஒரு சுதந்திரமான அமைப்பைக் கொண்டுவர வேண்டும் என்று தொடங்கப்பட்டதுதான் `நீடித்த வேளாண்மைக்கான மையம்’ (CSA-Centre for Sustainable Agriculture) என்று அறிமுகம் கொடுத்தவர், தொடர்ந்தார்.
“அதிக பூச்சிக்கொல்லி விஷத்தைப் பயன்படுத்தும் மாநிலங்களில் தெலங்கானாவும் ஆந்திராவும் முன்னணியில் இருக்கின்றன. அதேபோல, சாகுபடிக்காக அதிக செலவு செய்யும் மாநிலங்களிலும் முதல் 10 இடங்களில் வருகின்றன. விவசாயிகள் பூச்சிக்கொல்லியில்லா விவசாயத்தை (Non-Pesticide Management) மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியே பூச்சிகளைக் கண்டறிவதற்காக `வயல்வெளிப் பள்ளி’ என்ற பெயரில் விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்தோம். இதற்காக, தெலங்கானாவில் அதிக விவசாயத் தற்கொலைகள் நடக்கும் வாராங்கல் மாவட்டம், எனபாவி, புனுகுலு கிராமங்களைத் தேர்ந்தெடுத்தோம். மகளிர் சுயஉதவிக் குழுக்கள், உழவர் குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்களோடு இணைந்து நீடித்த வேளாண்மைக்கான (Community Managed Sustainable Agriculture) திட்டத்தைக் கையிலெடுத்தோம்.

2005-ம் ஆண்டு பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைக் குறைக்கும் திட்டத்தையும் ஆந்திர மாநில அரசோடு இணைந்து முன்னெடுத்தோம். இதன் மூலம் 1,500 கிராமங்களில், 35 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், 18 மாவட்டங்களில் பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் குறைத்தோம். இந்தப் பணியை மூன்று ஆண்டுகளில் முடித்தோம்.
இதனால் 2005-2010-ம் ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேசத்தில் பூச்சிக்கொல்லி பயன்பாடு 50 சதவிகிதம் குறைந்தது. இயற்கைவழி விவசாயத்தில் உற்பத்திசெய்த பொருள்களை விற்பனை செய்ய விவசாயிகள் சிரமப்பட்டனர். அதற்காக 2009-ம் ஆண்டில் ஒரு சந்தையை உருவாக்கினோம். சகஜ ஆஹாரம் (இயற்கை உணவு) என்ற பெயரில் செயல்படும் இந்த அமைப்பில் 23 கூட்டுறவுச் சங்கங்கள், 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இப்போது ஹைதராபாத்தில் ஆறு இயற்கை அங்காடிகளும், விசாகப்பட்டினத்தில் ஒன்றும் இயங்கிவருகின்றன. எங்கள் அமைப்பின் மூலமாக விவசாயிகளுக்கு இயற்கை விவசாயச் சான்றிதழ் பெற்றுக் கொடுத்திருக்கிறோம்” எனறு பூரிப்போடு சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.
முன்கூட்டியே பூச்சிகளைக் கண்டறிவதற்காக, `வயல்வெளிப் பள்ளி’ என்ற பெயரில் விவசாயிகளுக்குப் பயிற்சி கொடுத்தோம். கேரளாவில் இயற்கை வேளாண் கொள்கை கொண்டு வருவதற்கும் நம்மாழ்வார் பங்களித்திருக்கிறார்.
“தெலங்கானாவில் மூன்று மாவட்ட விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில், ‘கிஸான் மந்த்ரா’ என்ற பெயரில் விவசாயிகள் குறைதீர் மையத்தை உருவாக்கியுள்ளோம். அதன் மூலம் பட்டா மாற்றம், காப்பீடு உள்ளிட்ட விவசாயம் தொடர்பான பிரச்னைகளைச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, உதவிகளைப் பெற்றுத் தருகிறோம். அடுத்து மொபைல் செயலிகள் மூலம் பயிர் பாதுகாப்பு, பூச்சிகள் தாக்குதலுக்கு `பெஸ்டோஸ்கோப்’ (Pestoscope) என்ற பெயரில் வழிகாட்டுகிறோம். இந்தியாவில் எந்தப் பகுதியிலிருந்தும் இதில் தொடர்புகொண்டு தீர்வைப் பெறலாம். `E-krishi group of apps’ என்ற பெயரில் அனைத்து இயற்கை விவசாயம் தொடர்பான செயலிகளும் இதில் உள்ளன.
குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப் மாநில அரசுகளோடு ‘கிராமின் அகாடமி’ என்ற பெயரில் வேலை செய்துகொண்டிருக்கிறோம். தெலங்கானாவில் தற்கொலைகள் நடக்கின்றன. ஆனால், நாங்கள் வேலை செய்யும் கிராமங்களில் விவசாயிகள் தற்கொலைகள் இல்லை என்பதுதான் எங்கள் பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறோம்” என்ற ராமனாஞ்சநேயலு நிறைவாகச் சொன்னவை முக்கியமானவை. “15 வருடங்களுக்கு முன்னர் இயற்கை விவசாயத்தின் தேவையை உணர்த்தும் வகையில் ‘டேக்கிங் ரூட்ஸ்’ (Taking Roots) என்ற பெயரில் ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டோம். அதில் பாஸ்கர் சாவே, நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் போன்றோர் இயற்கை விவசாயத்தைப் பற்றிப் பேசினார்கள். எங்களுடைய பயிற்சிகளில் அதைத் திரையிட்டுக் காட்டுகிறோம். நம்மாழ்வார் ஹைதராபாத்துக்கும் வந்திருக்கிறார். நாங்கள் வேலை செய்யும் எனபாவி, புனுகுலு கிராமங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறோம்.
‘‘‘இந்தியாவில் உள்ள 47 வேளாண் பல்கலைக்கழகங்களும் இயற்கை வேளாண்மையை எதிர்க்கின்றன’ என்று சொன்னார் நம்மாழ்வார்.’’
இயற்கை விவசாயத்தை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விவாதத்தையும், கூட்டத்தையும் ஹைதராபாத்தில் நடத்தியிருக்கிறோம். அப்போதெல்லாம் ஹைதராபாத்துக்கு வந்து பங்களித்திருக்கிறார். ‘எப்படி விவசாயிகளோடு இணைந்து பணியாற்ற வேண்டும், எப்படி இணைந்து பணியாற்றினால் சிறப்பான விஷயத்தைக் கொண்டுவர முடியும்’ என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். நம்மாழ்வாரின் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களையும் எங்களுடைய விவசாயிகளுக்குச் சொல்லிக்கொடுத்து வருகிறோம்.
‘இந்தியாவிலுள்ள 47 வேளாண் பல்கலைக்கழகங்களும் இயற்கை வேளாண்மையை எதிர்க்கின்றன’ என்று சொன்னார் நம்மாழ்வார். உண்மைதான். ரசாயன விவசாயத்துக்கான அரசியல் பெரிது. இயற்கை விவசாயத்தைப் பரவலாக்குவது ஒரு நீண்ட பயணம். இதை அனைவரும் சேர்ந்துதான் முன்னெடுக்க முடியும். கேரளாவில் இயற்கை வேளாண் கொள்கை கொண்டு வருவதற்கும் நம்மாழ்வார் பங்களித்திருக்கிறார். இது தொடர்பான கூட்டம் ஒன்று 2010-ம் ஆண்டு, திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
அதன் பிறகு 2012-ம் ஆண்டு, கேரள அரசு இயற்கை வேளாண் கொள்கையைக் கொண்டுவந்தது. இன்று சிக்கிம் மாநிலத்துக்கு அடுத்து கேரள மாநிலம்தான் இயற்கை விவசாயத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திவருகிறது. எங்கள் செயல்பாடுகளுக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த வகையில் தெலங்கானா, ஆந்திராவில் முன்னெடுக்கும் இயற்கை விவசாயம் தொடர்பான பணிகளில் நம்மாழ்வார் பெயரும் நிலைத்திருக்கும்” என்று சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு:
முனைவர் ராமனாஞ்சநேயலு, செல்போன்: 90006 99702
Centre for Sustaiable Agriculture
12-13-485/5, Nagarjuna nagar, Tarnaka, Secundrabad-500017
Cellphone: 85007 83300
Email: csa@csa-india.org
கூடுதல் விலைக்குக் கைகொடுக்கும் `சகஜ ஆஹாரம்!’

தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் அடுத்த தர்ணகாவில் மூன்றடுக்கு மாடியில் அமைந்திருக்கிறது நீடித்த வேளாண்மைக்கான மையம் மற்றும் `சகஜ ஆஹாரம்’ இயற்கை அங்காடி. கீழ்த்தளத்தில் இயற்கைக் காய்கறிகள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள், தேன், அரிசி, சிறுதானியங்கள். முதல் தளத்தில் 15 பேர் அமரும் வகையில் சிறு பயிற்சிக் கூடம், `கிஸான் மந்த்ரா’ அலுவலகம் அமைந்திருந்தன. பயிற்சிக்கூடத்தில் நம்மாழ்வார் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இரண்டாவது தளத்தில் மதிப்புக்கூட்டப்படும் கருவிகள், ஊறுகாய், தின்பண்டங்கள் தயாரிக்கும் கூடம் அமைந்திருந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரகலா அங்கே மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து விளக்கினார். ‘‘இது விவசாயிகளால் நடத்தப்படும் அங்காடி. இங்கிருந்துதான் ஹைதராபாத்திலுள்ள பல அங்காடிகளுக்கு இயற்கை விளைபொருள்கள் செல்கின்றன. விவசாயிகளின் பெயர், தொலைபேசி எண், விளைவிக்கும் பொருள்கள் ஆகியவற்றை அங்காடியின் முன்புறம் வைத்திருக்கிறோம். நுகர்வோர் பொருள்கள் குறித்த சந்தேகங்களை விவசாயிகளிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்” என்றார். சகஜ ஆஹாரம் கூட்டமைப்பின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ், கிஸான் மந்த்ரா பொறுப்பாளர் வந்தனா உள்ளிட்டோரும் அங்கு நடைபெற்றுவரும் பணிகள் குறித்து விளக்கினர்.

எனபாவி கிராமத்திலிருந்து காய்கறி கொண்டு வந்திருந்த விவசாயி ஸ்ரீசைலத்திடம் பேச்சுக் கொடுத்தோம். “எனக்கு இருப்பதே ஒரு ஏக்கர் நிலம்தான். அதில் நெல், காய்கறிப் பயிர் சாகுபடி செய்கிறேன். 2015-ம் ஆண்டிலிருந்து சகஜ ஆஹாரத்துக்குக் காய்கறி கொடுக்கிறேன். மற்ற விவசாயிகளுக்கும் இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கிறேன். சந்தை விலையைவிடக் கூடுதல் விலை கொடுப்பதால், இங்கே விற்கிறேன். இயற்கை விவசாயச் சான்றிதழும் வைத்திருக்கிறேன். பணமும் முறையாக வந்து சேர்ந்துவிடுகிறது’’ என்றார் புன்சிரிப்போடு.