மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சொற்ப அளவு இழப்பீடு வழங்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்யப்படும் தொகையில் 2 சதவீதம் பிரிமியம் தொகையாக செலுத்தப்படுகிறது. பர்பானி மாவட்டத்தில் தாசலா என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு பயிர் காப்பீடு இழப்பீடாக வெறும் ரூ.1.76 மட்டுமே வங்கிக்கணக்கில் சேர்ந்திருக்கிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட விவசாயி கிருஷ்ணாராவுத் கூறுகையில், நான் டிகிரி படித்துவிட்டு வேலை கிடைக்காததால் எனது தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறேன். சோயாபீன்ஸ், துவரை பயிரிட்டு இருந்தேன். இதற்கு பயிர் காப்பீடு பிரிமியமாக ரூ.455 செலுத்தினேன். அதன் பிறகு பயிர் இழப்பீடை மதிப்பீடு செய்ய 200 ரூபாய் செலவு செய்தேன். எனக்கு 27 ஆயிரம் இழப்பீடு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு கிடைத்த இழப்பீட்டு தொகை சிரிப்பை வரவழைப்பதாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
இது குறித்து கஜானன் என்ற விவசாயி கூறுகையில்,'' 3 ஏக்கர் நிலத்தில் 4 பயிர்களை பயிரிட்டு இருந்தேன். இதற்கு பயிர் காப்பீடாக 1800 ரூபாய் செலுத்தேன். ஆனால் ஒரு பயிருக்கு இழப்பீடாக 14.21 ரூபாயும், மற்றொரு பயிருக்கு இழப்பீடாக 1200 ரூபாயும் கிடைத்திருக்கிறது. மற்றொரு பயிருக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன்'' தெரிவித்தார்.

இதே போன்று முதுகலைப்பட்டம் பெற்று விவசாயம் செய்யும் பாண்டுரங் கதம் என்ற விவசாயிக்கு ஒரு பயிருக்கு 37.31 ரூபாய் இழப்பீடு கிடைத்திருக்கிறது. மற்றொரு பயிருக்கு ரூ.327 கிடைத்திருக்கிறது. ஆனால் பாண்டுரங் காப்பீடு பிரிமியமாக ரூ.595 செலுத்தியிருக்கிறார். பாண்டுரங்க் சகோதரர் 1980 ரூபாய் பயிர் காப்பீடு பிரிமியமாக செலுத்தி இழப்பீடு தொகையாக வெறும் ரூ.73.42 மற்றும் 260 ரூபாயை இரண்டு பயிர்களுக்கு பெற்று இருக்கிறார். வித்தல் என்பவர் ரூ.1800 பிரிமியம் செலுத்திவிட்டு ரூ.146ஐ இழப்பீடாக பெற்று இருக்கிறார்.
இது குறித்து பர்பானி மாவட்ட ஆட்சித்தலைவர் அச்சல் சூட் கூறுகையில், மாவட்டத்தில் 5 லட்சம் விவசாயிகளுக்கு 160 கோடி பயிர் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள இழப்பீடுகள் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
உழுதவன் கணக்குப் பார்த்தால்... மிஞ்சியது 8 ரூபாய்!
கர்நாடகா மாநிலம் கடாக் என்ற இடத்தை சேர்ந்த 50 விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்த வெங்காயத்தை விற்பனை செய்வதற்காக 415 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெங்களூரு யஷ்வந்த்பூர் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்காயத்தில் விலை ஒரு குவிண்டால் 500 ரூபாயிக்கு மொத்த சந்தையில் விற்பனையான நிலையில் திடீரென அது 200 ரூபாயாக சரிந்தது. விவசாயிகள் கொண்டு வந்திருந்த வெங்காயம் யஷ்வந்த்பூர் மொத்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது.

ஒரு குவிண்டால் வெறும் 200 ரூபாயிக்கு விற்பனையாகி இருந்தது. அதாவது ஒரு கிலோ வெறும் 2 ரூபாயிக்கு விற்பனையானது. மொத்த வியாபாரிகள் வெங்காயத்தை விற்பனை செய்த பிறகு அதற்கான பில்லை விவசாயிகளிடம் கொடுத்தனர். அவ்வாறு கிடைத்த பில் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் பவடப்பா என்ற விவசாயி 205 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்திருந்தார். ஆனால் அவருக்கு கிடைத்ததோ வெறும் 8.36 ரூபாய் மட்டுமேயாகும். வெங்காயம் விற்ற பணத்தில் 24 ரூபாய் சரக்குகளை ஏற்றி இறக்க பிடித்த செய்யப்பட்டு இருந்தது.

அதோடு 377 ரூபாய் சரக்கு கையாளுதல் கட்டணம் என்று கூறி கழித்துவிட்டனர். இந்த அளவுக்கு வெங்காயத்தின் விலை குறைந்திருப்பதால் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தொடர் மழையால் வெங்காயத்தின் தரம் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்படும் வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைப்பதாக கர்நாடகா விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது விவசாயி பவடப்பா கூறுகையில், ``நான் 205 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்தேன். ஆனால் எனக்கு வெறும் 8 ரூபாய் மட்டும்தான் கிடைத்தது. இதனால் மற்ற விவசாயிகள் விளைபொருளை யஷ்வந்த்பூர் மார்க்கெட்டிற்கு கொண்டு வரவேண்டாம் என்று விவசாயிகளை எச்சரிப்பதற்காகத்தான் எனக்கு கிடைத்த வெங்காய விற்பனை பில்லை சோசியல் மீடியாவில் வெளியிட்டேன். வெங்காயத்தை விளைவிக்க ரூ.25000 செலவு செய்தேன்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.