நாட்டு நடப்பு
Published:Updated:

தமிழ்நாட்டு நெல்தான் உலக நெல் ரகங்களின் தாய்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி


போர் வீரர்கள் சாப்பிட்ட அரிசி!
அரிசி சோறு சாப்பிட்டால் ஆபத்து என்ற பிரச்சாரம் மெள்ளத் துளிர்விட்டு வருகிறது. ஆனால், இந்த அரிசியைத்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயிர் செய்து உண்டு உழைத்து வாழ்ந்து சென்றுள்ளனர் இம்மண்ணின் மக்கள். உடல் உழைப்பு இல்லாமல் அமுதமே அருந்தினாலும் அது  கேடு விளைவுக்கும் என்பதுதான் இயற்கை விதி. இங்கு நெல், அரிசி என்று எதை எடுத்தாலும் ஆயிரமாயிரம் பாடல்களும் தகவல்களும் கொட்டிக்கிடக்கின்றன.
தமிழ்நாட்டில் கல்லுண்டை சம்பா என்ற நெல் ரகம் அந்தக் காலத்தில் சாகுபடி செய்யப்பட்டது. இப்போதும் விதைச் சேகரிப்பாளர்கள் இந்த ரகத்தை வைத்துள்ளார்கள். இந்த ரகத்தைப் பற்றிச் சித்தர்கள் மிகச் சிறப்பாகச் சொல்கிறார்கள். அது சித்த மருத்துவத் தொகை அகராதியிலும் இடம் பெற்றுள்ளது. அதாவது, மன்னர்கள், தங்களுடைய போர் வீரர்களுக்கும் குத்துச்சண்டை வீரர்களுக்கும் இந்த அரிசியின் உணவைக் கொடுத்து வந்துள்ளார்கள். இந்த அரிசியைச் சாப்பிட்டால், உடல், கல் போன்று வலுவடையும் என்பதாலேயே கல்லுண்டை சம்பா என்ற காரணப் பெயர் உருவாகி உள்ளது. இதனால்தான் சித்த மருத்துவத் தொகை அகராதியில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


நலம் தரும் நல்ல மணிச்சம்பா!
‘நல்ல மணிச்சம்பா நாடுகின்ற நீரிழிவைக் கொல்லும் மிகந்தசுகம் கொண்டளிக்கும்’
-என்ற சித்தர் பாடலை இன்றும் சித்த மருத்துவர்கள் பாடி வருகிறார்கள். இந்த மணிச்சம்பா நீரிழிவு என்ற சர்க்கரை வியாதியைக் குணப்படுத்தும் என்று சொல்கிறார்கள். ஆம், தவறான தகவல் என்றால், மக்கள் இலக்கியமாக, சித்தர் பாடலாகப் பல நூறு ஆண்டுகளாக, இந்த நெல் ரகங்களின் புகழ் நிலைத்திருக்காது. தகுதி உள்ளதே நிலைத்து நிற்கும். சித்தர்கள் சொல்லிவிட்டார்கள் என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பத் தேவையில்லை. இப்போதும்கூட இதன் பலா பலன்கள் குறித்து ஆய்வு செய்யலாம். இவ்வளவு சிறப்பு கொண்ட மணிச்சம்பா நெல் எங்கு இருக்கிறது என்று தேடிக் கொண்டிருக்கும் போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு விவசாயி சாகுபடி செய்திருந்தார். தங்கம் போலப் பளபளக்கும் நிறத்திலிருந்தது மணிச்சம்பா நெல் மணிகள்.


மைசூர் மகாராஜா நெல்!
நம் பக்கத்து மாநிலமான கர்நாடகாவை ஆட்சி செய்த மைசூர் மகாராஜாக்கள் ‘ராஜமுடி’ என்ற நெல் ரகத்தை விரும்பி உண்டுள்ளார்கள். அரண்மனை விருந்தில் ராஜமுடி அரிசி சோறு கட்டாயம் இடம் பெற்றுள்ளது. இந்த நெல் ரகத்தை அதிக பரப்பில் சாகுபடி செய்ய ஒரு சலுகை அறிவித்தார்கள். அதாவது, விவசாயிகள் நிலவரியாகப் பணம் கொடுக்க வேண்டாம். இந்த ‘ராஜமுடி’ நெல் ரகத்தை வரியாகச் செலுத்தலாம் என்று அரசக்கட்டளையாக இருந்துள்ளது.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


டெல்டா கொண்டாடும் நெல் ரகம்!
தஞ்சை டெல்டாவுக்கு இணையாகத் தமிழ்நாட்டில் போட்டிப் போட்டுக் கொண்டு நெல் சாகுபடி செய்யும் பகுதிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் திருவள்ளூர் மாவட்டம். இதனால்தான், இங்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே திரூர் குப்பம் பகுதியில் நெல் ஆராய்ச்சி மையத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். திருவள்ளூர் மாவட்டத்துக்காக உருவாக்கிய நெல் ரகம் ஒன்று தஞ்சை டெல்டா விவசாயிகளால் விரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ரகத்தை  சாகுபடி செய்ய வேண்டாம் என தமிழக அரசு சொல்லியபோது, அப்பகுதி விவசாயிகள், சாலையில் இறங்கி போராட்டங்கள் நடத்தியதெல்லாம்,  சமீபகால வரலாறு. ஆம், அந்த ரகத்தின் பெயர் டி.கே.எம்-9. திரூர் குப்பம் என்பதன் சுருக்கம்தான் டி.கே.எம். ‘‘இதன் அரிசி சற்றுப் பெரியதாக இருக்கிறது. பொதுவிநியோக திட்டத்தில் இதைக் கொடுத்தால், மக்கள் வாங்குவதில்லை. இதனால், இந்த ரகத்தைச் சாகுபடி செய்ய வேண்டாம்’’ என்று கடந்த ஆண்டு, மேட்டூர் அணை திறக்கும் முன்பு சென்னையில் நடந்த கூட்டத்தில் வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் கோரிக்கை வைத்ததை நேரில் பார்த்தேன். உடனே ஒரு விவசாயி எழுந்தார்,
‘‘குறுவைப் பட்டத்தில மற்ற நெல் ரகங்களைக் காட்டிலும் டி.கே.எம்-9 ரக நெல் அதிகளவு விளைச்சல் கொடுக்குது. ஏக்கருக்கு 40 மூட்டைகளுக்குக் கிடைக்குது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி விஷம் தேவைப்படாத ரகம். இதனல்தான், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் டெல்டா மாவட்ட விவசாயிங்க, விரும்பி சாகுபடி செய்றோம். இந்த ரகத்தை விடச் சிறப்பான ரகத்தைக் கண்டுபிடிச்சுக் கொடுத்துடுங்க. டி.கே.எம்.9 ரகத்தை மறந்துடுறோம்’’ என்று சொல்லி முடித்தார் அரங்கம் அதிர கைதட்டல்கள் ஒலித்தன.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


விவசாயி கண்டுபிடித்த ஊதா நிற நெல்!
வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மட்டும்தான் புதிய நெல் ரகத்தை உருவாக்க முடியுமா? விவசாயிகள் கூட நெல் ரகத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சின்னார் என்ற விவசாயி.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த புஷ்பம் என்ற விவசாயி ஆடுதுறை - 36 (ADT 36) நெல் ரகத்தை விதைத்தார். களை எடுக்கும்போது, சில பயிர்கள் மட்டும் ஊதா நிறத்தில் களைச்செடி போன்று இருந்தது. இது களைச்செடி என்று பிடுங்க முற்பட்ட சமயம் நெல்மணி போன்ற கதிரும் இருந்துள்ளது.
இந்தத் தகவலைப் பக்கத்து நிலத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சின்னார் என்பவரிடம் சொல்லியிருக்கிறார். உடனே, அந்த நெற்பயிர்களைக் கண்காணித்து, அதைத் தனியாக அறுவடை செய்து எடுத்துள்ளார் சின்னார். அடுத்தடுத்த ஆண்டுகளில் விதைப் பெருக்கம் செய்து ஊதா நிற நெல்லை சாகுபடி செய்துள்ளார். இதை ஆராய்ச்சி நோக்கில் சாகுபடி செய்து பார்த்தார். நல்ல விளைச்சல் கிடைத்தது. சுற்று வட்டார விவசாயிகளுக்குக் கொடுத்தார். இப்படி ஒரு நெல் ரகம் இருப்பது பல ஆண்டுகள் கழித்துத்தான் பக்கத்து மாவட்ட விவசாயிகளுக்குத் தெரிந்தது. அடுத்து ஊடகங்களில் வெளிவந்து, தமிழ்நாடு முழுக்கப் பரவத் தொடங்கிப் பாராட்டுகளைப் பெற்றது. இந்த ரகத்தை உருவாக்கிய விவசாயி சின்னார்,  இதற்காக பாராட்டுப் பத்திரங்கள் ஏதும் பெற்றுவிடவில்லை. ஆனால், சின்னார் இயற்கையோடு கலந்துவிட்டாலும் இந்த ரகத்தின் பெயர் மட்டும் சாட்சியாக உள்ளது.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


மலைவாழ் மக்கள் விரும்பும் தஞ்சாவூர் நெல்!
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், ஆரம்பத்தில் நவீன நெல் ரகங்கள் வெளியிடப்படவில்லை. இந்த மண்ணிலிருந்த சிறந்த ரகங்களைத் தேர்வு செய்து, அதை விவசாயிகளுக்குப் பிரபலப்படுத்தி வந்தார்கள். அதில் ஒன்றுதான் புழுதிக்கார்.
இந்தப் பாரம்பர்ய நெல் ரகம் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. இறவையிலும் சாகுபடி செய்யலாம் என்பது இதன் சிறப்பு. இந்த ரகத்தை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூரில்தான் சேகரித்து வைத்துள்ளார்கள். இந்த ரகத்தின் குறியீடு, G. Tj. D. I என்பதாகும். இதில் Tj என்பது தஞ்சாவூர் மாவட்டத்தைக் குறிக்கும். நேரடி நெல் விதைப்பு ஏற்ற ரகம் இது. இப்போது ஈரோடு, சேலம் பகுதிகளில் உள்ள மலைப்பகுதி விவசாயிகள் இந்த ரகத்தை விரும்பி சாகுபடி செய்து வருகிறார்கள். 130 நாள்கள் வயது கொண்டவை. சிவப்பு நிறத்தில் உள்ள இந்த அரிசி  சோற்றுடன் மணக்க, மணக்க மொச்சைக் கொட்டை குழம்பு ஊற்றி, விருந்தினர்களுக்குக் கொடுப்பதை இந்த மலைப்பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

தமிழ்நாட்டு நெல்தான்
உலக நெல் ரகங்களின் தாய்!


நெல்தான் தமிழ்நாட்டின் முக்கிய உணவு பயிர் என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள், 1921-ம் ஆண்டுக் கோயம்புத்தூரில் உள்ள நெல் ஆராய்ச்சி மையத்தில் அற்புதமான பணியினைத் தொடங்கினார்கள். அதாவது, தமிழ்நாட்டிலிருந்த பாரம்பர்ய நெல் ரகங்களின் கலப்பு ஏற்படாமல் இருக்க ‘தனி வழித் தேர்வு’ மூலம் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்குக் கொடுத்தார்கள். அதில் முதலில் தேர்வு செய்த ரகம் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’தான். இதற்கு ஜி.இ.பி.-24. (Government Economic Botanist) என்று பெயர் சூட்டினார்கள். சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் மட்டும் விளைந்த இந்த நெல் ரகத்தை அப்போதைய சென்னை மாகாணம் முழுக்கச் சாகுபடி செய்ய ஆணையிட்டார்கள். இத்துடன் நிற்கவில்லை, முதன் முதலாகப் புதிய நெல் ரகத்தை உருவாக்கும்போது, தாய் ரகமாக ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவைத்தான் தேர்வு செய்தார்கள். இதன் அருமை, பெருமைகளை, தமிழ்நாடு, இந்தியாவுடன் சுருக்கிக் கொள்ளாமல், உலகில் எங்கு நெல் ஆராய்ச்சி நடந்தாலும் அதில் ஆத்தூர் கிச்சிலிச் சம்பாதான் தாய் ரகம் என்று சொல்லும் நிலையை உருவாக்கினார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.-8,  ஐ.ஆர்.-40-க்கு ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவைத் தாய் வித்தாகத் தேர்வு செய்தார்கள். ஆக, இப்படி உலக அளவில் 750-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களுக்குத் தாய் ரகமாக ஆத்தூர் கிச்சிலிச் சம்பா இருந்துள்ளது.
ஆனால், உலகம் கொண்டாடிய இந்த நெல் ரகம் ஆத்தூர் பகுதியிலேயே இல்லாமல் போனது. 2007-ம் ஆண்டு, இந்த ரகத்தை இப்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தில் கண்டுபிடித்து, அது சம்பந்தமாக கட்டுரை எழுதி விவசாயிகள் மத்தியில் மீண்டும் பிரபலப்படுத்தியது, பசுமை விகடன் இதழ்தான். அந்தக் கதையை சொன்னால் பக்கங்கள் நீளும், நிற்க. இன்று தமிழ்நாட்டில் பரவலாக ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, விவசாயிகளால் விரும்பி சாகுபடி செய்யும் ரகமாக பிரபலமாகியுள்ளது.