Published:Updated:

காலிங்கராயன் தினம்: முளைப்பாரி எடுத்து, கும்மிகொட்டி நன்றி செலுத்திய விவசாயிகள்!

காலிங்கராயன் வாய்க்காலில் முளைப்பாரி விடும் விவசாயிகள்
News
காலிங்கராயன் வாய்க்காலில் முளைப்பாரி விடும் விவசாயிகள்

``வாய்க்காலை வெட்டி அதை மக்களுக்காக அர்ப்பணித்தவர் காலிங்கராயன். தானும், தன் வாரிசுகளும் இந்த வாய்க்கால் நீரைப் பயன்படுத்தக் கூடாது என்ற காரணத்துக்காகப் பொள்ளாச்சி அருகே இடம் பெயர்ந்து சென்றவர் காலிங்கராயன்."

Published:Updated:

காலிங்கராயன் தினம்: முளைப்பாரி எடுத்து, கும்மிகொட்டி நன்றி செலுத்திய விவசாயிகள்!

``வாய்க்காலை வெட்டி அதை மக்களுக்காக அர்ப்பணித்தவர் காலிங்கராயன். தானும், தன் வாரிசுகளும் இந்த வாய்க்கால் நீரைப் பயன்படுத்தக் கூடாது என்ற காரணத்துக்காகப் பொள்ளாச்சி அருகே இடம் பெயர்ந்து சென்றவர் காலிங்கராயன்."

காலிங்கராயன் வாய்க்காலில் முளைப்பாரி விடும் விவசாயிகள்
News
காலிங்கராயன் வாய்க்காலில் முளைப்பாரி விடும் விவசாயிகள்

பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைக்கும் வகையில் நதிநீர் இணைப்புக்கு முன்னோடியாகவும், தரிசாகக் கிடந்த பூமிகளை வளப்படுத்தும் நோக்கத்தோடு 1271-ம் ஆண்டு காலிங்கராயன் வாய்க்கால் வெட்டும் பணியை அப்போதைய பூந்துறை நாட்டின் ஜமீனாக இருந்த காலிங்கராயன் தொடங்கினார். சுமார் 12 ஆண்டுகள் தொடர்ந்து சிரமப்பட்டு காலிங்கராயன்பாளையத்தில் இருந்து ஆவுடையார்பாறை வரையிலும் 90 கி.மீ தூரத்துக்கு வெட்டி முடிக்கப்பட்ட காலிங்கராயன் வாய்க்கால் 1283-ம் ஆண்டு தை 5-ம் தேதி மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்தத் தினத்தையே காலிங்கராயன் தினமாக அரசு கொண்டாடி வருகிறது.

கும்மிகொட்டி நன்றி செலுத்தும் விவசாயிகள்.
கும்மிகொட்டி நன்றி செலுத்தும் விவசாயிகள்.

காலிங்கராயன் வாய்க்காலை வெட்டியதால் அவரின் நினைவாக மணி மண்டபமும், காலிங்கராயன் சிலையும் காலிங்கராயன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

காலிங்கராயன் தினத்தையொட்டி பல்வேறு விவசாய அமைப்புகள், கட்சியினர் அவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், வாய்க்கால் நீருக்கு மலர்கள் தூவியும்
காலிங்கராயனுக்கு மரியாதை செலுத்தினர்.

காலிங்கராயன் தினத்தையொட்டி வாய்க்கால் பாசனம் பெற்று வரும் பகுதிகளான கணபதிபாளையம், பஞ்சலிங்கபுரம், சோளங்கபாளையம், சாவடிபாளையம், பாசூர், ஊஞ்சலூர் போன்ற பல்வேறு பகுதிகளிலும் பெண்களும் ஆண்களும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து மையப்பகுதியில் முளைப்பாரியை வைத்து கும்மியடித்தும், குலவையிட்டும் காலிங்கராயன் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.  

பின்னர், முளைப்பாரியை வாய்க்காலில் விட்டு, மறைந்த காலிங்கராயனுக்கு விவசாயிகள் சார்பில் மரியாதை செலுத்தினர். அதேபோல முந்தைய பூந்துறை நாட்டின் தலைநகராக விளங்கிய வெள்ளோட்டிலும் காலிங்கராயன் சிலைக்கு விவசாயிகளும், விவசாய அமைப்புகளின் சார்பிலும், ஊர் மக்கள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தி.மு.க.வினர்
தி.மு.க.வினர்

காலிங்கராயன்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க சார்பில் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் தலைமையில் மாநில நெசவாளர் அணியின் மாநிலத் தலைவர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லப்பொன்னி உள்ளிட்ட கட்சியினர் காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க சார்பில் கட்சியின் மூத்த நிர்வாகியும், எம்.எல்.ஏ-வுமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம், த.மா.கா மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், பா.ஜ.க எம்.எல்.ஏ சரஸ்வதி உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் மற்றும் கூட்டணிக் கட்சியினரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க.வினர்
அ.தி.மு.க.வினர்

பின்னர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
``வாய்க்காலை வெட்டி அதை மக்களுக்காக அர்ப்பணித்து வரலாற்றில் பொன் எழுத்துகளால் பதிக்கப்பட வேண்டிய பெயருக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தவர் காலிங்கராயன். தானும், தன் வாரிசுகளும் இந்த வாய்க்கால் நீரைப் பயன்படுத்தக் கூடாது என்ற காரணத்துக்காக பொள்ளாச்சி அருகே இடம் பெயர்ந்து சென்றவர் காலிங்கராயன்.

பெரும் நிலக்கிழாராக இருந்தும் தனது நிலத்துக்கு தான் வெட்டிய கால்வாய் நீரை பயன்படுத்தாமல் மக்களுக்காக அர்ப்பணித்த அவரின் புகழ் என்றும் மறையாமல் நிலைத்து நிற்கும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் த.மா.கா போட்டியிடுமா, அ.தி.மு.க போட்டியிடுமா என்பதை கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். காலமும் சூழலும் மாறியுள்ளதால் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியின் வேட்பாளர் வெற்றி வாகை சூடுவார். இந்தத் தேர்தல் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும்'' என்றார்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் அக்கட்சியினர் காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தைத் தொடங்க முதன்முதலில் திட்டமிடும்போது அத்திக்கடவில் இருந்து அவிநாசிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காகத் திட்டம் தீட்டப்பட்டது.

கொ.ம.தே.க.வினர்
கொ.ம.தே.க.வினர்

பிற்காலத்தில் இத்திட்டம் காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து தொடங்கி நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்வதாகத் திட்டம் தயாரித்து இப்பணிகள் முடிவடைந்து வரும் பிப்ரவரி 15-ல் தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து இத்திட்டத்துக்காகத் தண்ணீர் பம்பிங் செய்துகொண்டு செல்லப்படுவதால் இத்திட்டத்தின் பெயரை காலிங்கராயன் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் என்று மாற்றியமைக்க வேண்டும். மேலும், இந்த வாய்க்காலை தூய்மைப்படுத்த மத்தியஅரசு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்'' என்றார்.
பா.ஜ.க சார்பில் மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ், எம்.எல்.ஏ சரஸ்வதி தலைமையில் பா.ஜ.க-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.