ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

மலைக்க வைக்கும் மலைத்தேன்!மருத்துவ ரகசியம் சொல்லும் காணிகள்!

காணி அங்காடி
பிரீமியம் ஸ்டோரி
News
காணி அங்காடி

இயற்கை

மூலிகை வளம் மிகுந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் கிடைக்கும் தேன் வகைகளுக்கு மிகுந்த மருத்துவக் குணம் இருக்கிறது. அதனால் மலையில் வசிக்கும் காணி இன மக்கள், அடர்ந்த காட்டுக்குள்ளிருந்து எடுத்துவரும் தேனுக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது. காணி மக்களின் பின்னணியில் தமிழக வேளாண்மைத்துறை இருப்பது தான் கூடுதல் சிறப்பு.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களையொட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையில் காணி இன மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தினை, மரவள்ளிக் கிழங்கு, சேம்பு, சேனை, சிறுவள்ளிக் கிழங்கு, கருவள்ளிக் கிழங்கு, காந்தாரி மிளகு, குறுமிளகு, வாழை போன்ற பயிர் களைச் சாகுபடி செய்கிறார்கள்.

காடுகளில் தேன் எடுப்பது காணி இன மக்களின் பிரதான தொழில். மலை உச்சியில் உள்ள பாறை இடுக்குகள், உயர்ந்து வளர்ந்த மரங்களின் உச்சியில் இருக்கும் தேன் கூடுகளில் லாகவமாகச் சென்று தேன் எடுப்பார்கள். இப்படி எடுக்கும் தேனை வாங்கிச் சென்ற இடைத்தரகர்கள் சமவெளிப்பரப்பில் அதை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தார்கள்.

தேன்
தேன்

இடைத்தரகர்களின் செயல்பாட்டைத் தடுக்கத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகத் தேன், குறுமிளகு, காந்தாரி மிளகு உள்ளிட்ட பொருள்களுக்கு இயற்கை தரச்சான்று பெறப்பட்டுள்ளது. அத்துடன், பாளையங்கோட்டையில் உள்ள உழவர் சந்தையில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும் நேரடி விற்பனையைக் காணி மக்களே செய்ய வசதியாகத் தனியாகக் கடையையும் மாவட்ட நிர்வாகம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.

மலையில் கிடைக்கும் தேன் வகைகள் பற்றிப் பேசிய பொதிகைமலை ஆதிவாசி காணிக்கார சமுதாய முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் வேலுச்சாமி, “மலையில நாங்க மிளகு, கிழங்கு வகைகளைப் பயிரிடுறோம். காட்டுக்குள்ள போய் மரங்கள், பாறைகள்ல இருக்குற தேன் கூடுகள்ல இருந்து தேன் எடுக்கிறோம்.

ஆளுகளோ, விலங்குகளோ போக முடியாத பாறை இடுக்குல தேன் கூடு இருக்கும். அதனால ரொம்பச் சூதானமா கவனமாகப் போய்தான் தேனை எடுக்கணும். இந்தத் தேனும் சுவையாக இருக்கும்.


இதைக் ‘காணி’ என்ற பேர்லயே விற்பனை செய்றோம். பொதிகை மலையில கிடைக்குற தேன் ரொம்பவே நல்லாயிருக்கும். நாங்க தேன் இல்லாம சாப்பிடவே மாட்டோம். கிழங்கு, தினை, பலாச்சுளைனு எதுவா இருந்தாலும் அதோட கொஞ்சம் தேனையும் சேர்த்துச் சாப்பிடுவோம். இப்பல்லாம் தினை தோசைக்குக்கூட தேன் சேர்த்துக்குறோம்.

இங்கே பெருந்தேன், சிறுதேன், பாறை இடுக்கில் இருக்கும் பொந்துதேன், கொம்புத்தேன்னு நாலு வகையான தேன் கிடைக்கும். இதுல, பெருந்தேன்ங்கறது வேப்பம்பூ, நாவல்பூவிலிருந்து தேனீக்கள் தேன் எடுத்து வந்து சேர்க்கும். ஆனி, ஆடி மாசத்துல இந்தத் தேன் கிடைக்கும். இது கொஞ்சம் கசப்புச் சுவையோடு இருக்கும். நிறம் கொஞ்சம் வெள்ளை கலந்த பொன்னிறமா இருக்கும்.

காணி அங்காடி
காணி அங்காடி

பங்குனி, சித்திரை மாசத்துலயும் பெருந்தேன் கிடைக்கும். அப்ப மலையில பூக்குற ‘ஞாரப்பூ’ மூலமாக் கிடைக்குற இந்தத் தேன் மணமா இருக்கும். கொஞ்சம் மஞ்சள் கலந்த நிறத்தில இந்தப் பெருந்தேன் இருக்கும். இது உடம்புக்கு ரொம்பவே நல்லது. வயிறு சம்பந்தமான எல்லாச் சிக்கலையும் இந்தத் தேன் தீர்த்திடும்.

புரட்டாசி கடைசி, ஐப்பசி மாசத்துல காடுகள்ல குறுவாணிப் பூ பூத்துக் குலுங்கும். அந்தப் பூவுல இருந்து தேனீக்கள் எடுத்து வந்து சேமிக்கிறதுதான் கொம்புத்தேன். பழுப்பு நிறத்தில இருக்கும். ஆனா, இந்தத் தேனை வாங்கிட்டு வந்து வீட்டுல வெச்ச பிறகு நிறம் மாறிடும். அதுதான் இந்தத் தேனோட சிறப்பு.

சிறுதேன் வருஷம் முழுக்கக் கிடைச்சாலும் ஆனி மாசத்துல கிடைக்கிறதுதான் சிறப்பானதா இருக்கும். ஆனி மாசத்துல எடுக்குற தேன், உறைஞ்சி போய் கடிச்சு சாப்பிடுற அளவுக்கு மொறுமொறுப்பா இருக்கும். கடிச்சு சாப்பிடுற அளவுக்கு மொறுமொறுப்பா இருக்கும்.

பங்குனி, சித்திரை மாசத்துல பாறை இடுக்குல கிடைக்குற தேன் எடுப்போம். அந்தச் சமயத்தில பொந்துதேன் அதிகமாக் கிடைக்கும். ஆளுகளோ, விலங்குகளோ போக முடியாத பாறை இடுக்குல தேன் கூடு இருக்கும். அதனால ரொம்பச் சூதானமா கவனமாகப் போய்தான் தேனை எடுக்கணும். இந்தத் தேனும் சுவையாக இருக்கும்.

வேலுச்சாமி
வேலுச்சாமி

முன்னாடியெல்லாம் வியாபாரிங்க மலைக்கே வந்து எங்ககிட்ட இருந்து பொருளை வாங்கிட்டுப் பணம் கொடுப்பாங்க. நாங்க கஷ்டப்பட்டுத் தேன் எடுத்துட்டு வந்தாலும், லிட்டருக்கு 400 - 500 ரூபாய்தான் கொடுப்பாங்க. ஆனா, இப்போ எங்க தேனுக்கு மரியாதை கிடைச்சிருக்கு. நிறைய ஊர்கள்ல இருந்து எங்க கடைக்கு வந்து வாங்குறாங்க. வெளியூர்கள்ல இருந்தும் ஆர்டர் செஞ்சு வாங்குறாங்க. இப்ப ஒரு லிட்டருக்கு 1,300 ரூபாய் கிடைக்குது” என்றார் மகிழ்ச்சியாக.

பொதிகை மலையில் 1,500 மீட்டர் உயரத்தில் விவசாயம் செய்யும் காணி மக்களுக்கு வேளாண்மைத்துறையினர் உதவிக்கரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். காணி மக்களின் விளைபொருள்களுக்கு ‘இயற்கை விவசாயம்’ என்பதற்கான சான்று பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

தேன் எடுத்தல்
தேன் எடுத்தல்

இதுபற்றிப் பேசிய திருநெல்வேலி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் எஸ்.சுரேஷ், ‘‘காணி மக்கள் தங்களுடைய வீடுகளைச் சுற்றிலும் உள்ள விளைநிலங்களில் பயிர் செய்கிறார்கள். ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகள் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. இயற்கை முறைகளைப் பயன் படுத்தியே விவசாயம் செய்கிறார்கள்.

அதனால் அவர்கள் விளைவிக்கும் மிளகு, கிழங்கு உள்ளிட்ட பொருள்களில் எந்த வகையான ரசாயனமும் இல்லை என்பதை ஆய்வுகள்மூலம் நிரூபித்தோம். அதனால் காணி மக்களின் நிலத்திலிருந்து கிடைக்கும் பலா, வாழை, நெல்லிக்காய், கொய்யா, அன்னாசி, மிளகு, தேங்காய், தேன் என 40 வகையான பொருள்களுக்கு இயற்கை விளைபொருள் என்பதற்கான தரச்சான்று கிடைத்தது.

இங்கு கிடைக்கும் தேன் சுத்தமானது மட்டுமல்லாமல் மருத்துவக் குணமுடையது. காட்டில் உள்ள கரடியின் விருப்பமான உணவு தேன். அதனால் கரடி உள்ளிட்ட விலங்குகள் கைக்கு எட்டாத தேனை மட்டுமே இவர்களால் எடுக்க முடியும். அதனால் உயர்ந்த மரத்தின் உச்சியிலோ, ஆபத்து நிறைந்த பாறையின் இடுக்குகளிலோ சென்று தேன் எடுக்கிறார்கள்.

எஸ்.சுரேஷ்
எஸ்.சுரேஷ்

சாதாரணமாகச் சமவெளிப் பரப்பில் இயற்கை விவசாயம் நடக்கும் விளைநிலங்களில் ரசாயன சோதனை நடத்தினால் அனுமதிக்கப் பட்ட அளவுக்குள் ரசாயனம் இருக்கும். அதனால் அந்த விளைநிலங்களுக்கு இயற்கை வேளாண்மைக்கான சான்று கொடுக்கப்படுகிறது. ஆனால், காணி மக்களின் விளைநிலங்களில் விளையும் பொருள்களில் சிறிதுகூட ரசாயனம் இல்லாமல் இருப்பதே தனிச்சிறப்பு.

காணி மக்களின் தேன் வகைகளுக்கு இப்போது நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வருடத்துக்கு 2,500 லிட்டர் தேன் எடுக்க முடியும் என அவர்கள் நம்பிக்கையாகச் சொல்லியிருந்தாலும் அவர்களால் அவ்வளவு கொடுக்க முடியவில்லை. அதனால்தான் தரமான அவர்களின் தேனுக்கு விலை அதிகம் வைத்துள்ளார்கள். வனத்தில் கிடைக்கும் மலைத்தேன் சாப்பிட்டால் இதுவரை நாம் சாப்பிட்டது தேனே இல்லை என்று தோன்றும். அதன் சுவை அந்தளவுக்கு மலைக்க வைக்கிறது” என்றார் வியப்புடன்.