
சிறுதானியம்
பாரம்பர்ய ரகங்கள்தான் பசுமைப் புரட்சி அறிமுகமாவதற்கு முன்பு இந்தியாவில் கோலோச்சின. பசுமைப் புரட்சிக்குப் பிறகு பாரம்பர்ய விதைகள் அழிவை நோக்கி நகர்ந்தன. கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் பாரம்பர்ய ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் 72 கேழ்வரகு ரகங்களைச் சாகுபடி செய்து அசத்தி இருக்கிறார் ஈஸ்வர கவுடா பாட்டீல் என்கிற விவசாயி.
தார்வாட் மாவட்டம், குண்டகொல் தாலுக்கா, மட்டிகட்டி என்ற கிராமத்தில், வயலில் அறுவடைக்குத் தயாராக இருந்த 72 கேழ்வரகு ரகங்களையும் பார்வையிடும் ‘கேழ்வரகு கள விழா’ (Ragi Field Day) நவம்பர் 9-ம் தேதி நடைபெற்றது. கேழ்வரகுச் சாகுபடியில் ஆர்வமுள்ள கர்நாடகா, ஆந்திர மாநில விவசாயிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஈஸ்வர கவுடா சாகுபடி செய்த 72 ரகங்களில் 39 நாட்டுக் கேழ்வரகு ரகங்களை வழங்கியவர் ‘சஹஜ சம்ருதா’ அமைப்பின் நிறுவனர் கிருஷ்ணபிரசாத். இவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். நிகழ்வுகுறித்து அவரிடம் பேசினோம். “இந்தக் களவிழா பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் கேழ்வரகைப் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். கேழ்வரகின் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்துவிட்டது. இந்தியாவில் கேழ்வரகு அதிகம் சாகுபடி செய்யப்படும் மாநிலம் கர்நாடகா. அதற்கடுத்து தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்கள் உள்ளன. கர்நாடகாவில் நிறைய கேழ்வரகு ரகங்கள் இருந்தன. முதன்முதலில் கேழ்வரகுச் சாகுபடியின் உன்னதத்தைத் தென்னிந்தியர்களுக்கு உணர்த்தியவர் ‘டாக்டர்.பிரான்சிஸ் புச்சனன்’ என்ற தாவரவியலாளர்.
இவர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1800-ம் ஆண்டு மைசூருவிலிருந்து மலபார் பகுதிக்குப் பயணம் செய்தார். அப்போது மானவாரி பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்படும் பயிராகக் கேழ்வரகு இருந்திருக்கிறது. கேழ்வரகோடு அவரை, துவரை, சோளம் என 10 வகையான பயிர்கள் சாகுபடி செய்வதையும், அதில் கிடைக்கும் மகசூல் அளவையும் பற்றிக் குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறார். அதை வைத்துதான் எங்கள் மாநிலத்தில் கேழ்வரகின் முக்கியத்துவத்தை உணர்ந்தோம்.

ஒவ்வொரு பகுதியின் மண், தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வெவ்வேறு கேழ்வரகு ரகங்கள் இருக்கின்றன. குறிப்பாகத் தென் கர்நாடகப் பகுதிகளில் நிறைய கேழ்வரகு ரகங்கள் இருந்திருக்கின்றன. ‘கேழ்வரகு களி, நல்ல தூக்கம்’ என்ற பழமொழியே கன்னடத்தில் உண்டு. அந்தளவுக்குக் கேழ்வரகுச் சாகுபடி கன்னட மக்களின் விவசாயத்தில் இரண்டற கலந்தது. இன்றைக்கும் கேழ்வரகுச் சாகுபடியில் 56 சதவிகிதப் பங்களிப்பைக் கர்நாடக மாநிலம் வழங்கி வருகிறது” என்று கேழ்வரகின் வரலாறு பற்றி பேசியவர் தொடர்ந்தார்.
“1973-ம் ஆண்டுப் பெங்களூரு பல்கலைக்கழகம் ‘இண்டஃப்’ என்ற உயர் விளைச்சல் கேழ்வரகு ரகத்தை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு நாட்டுக் கேழ்வரகு ரகங்களைச் சாகுபடி செய்வது வெகுவாகக் குறைந்துவிட்டது. இதோடு மக்காச்சோளம், பருத்தி, கரும்பு போன்ற பணப்பயிர்கள் நுழைய கேழ்வரகின் சாகுபடி மேலும் குறைந்தது.

கலப்பு பயிர் இருந்தால் காப்பீடு தேவையில்லை
இன்றைக்கெல்லாம் பயிர் காப்பீடு பற்றி விவசாயிகள் பேசுகிறார்கள். ஒரே பயிரைச் சாகுபடி செய்யும்போதுதான் காப்பீடு தேவை வருகிறது. பல பயிர்களைக் கலந்து சாகுபடி செய்யும்போது இந்தப் பிரச்னை இருக்காது. கேழ்வரகு பயிரிடும்போது அதோடு அவரை, துவரை, சோளம், கடுகு, கொள்ளு பயிர் செய்வது வழக்கம். கேழ்வரகுச் சாகுபடி பாதிக்கப்பட்டாலும் மற்ற பயிர்கள் காப்பாற்றிவிடும். இந்த முறை தொன்றுதொட்டு இருந்து வந்தது. சமீபத்திய பருவநிலை மாற்றத்தால் அதிக மழைப் பொழிவு காரணமாகப் பணப்பயிர்களெல்லாம் தாக்குப்பிடிப்பதில்லை. விவசாயிகளுக்கு நஷ்டத்தைத் தருகின்றன. இதுபோன்ற காலங்களில் நாம் கேழ்வரகைத் தாராளமாகக் கையில் எடுக்கலாம். அதற்கு முத்தாய்ப்பாகத்தான் இந்தக் கேழ்வரகு கள விழா நடத்தப்பட்டது” என்றவர் கேழ்வரகு கள விழாவைப் பற்றி பேசினார்.



39 ரக நாட்டுக் கேழ்வரகு
“தென் கர்நாடகாவை ஒப்பிடும்போது வட கர்நாடகாவில் கேழ்வரகுச் சாகுபடி குறைவு. அந்தப் பகுதியில் விழிப்புணர்வு பெருக வேண்டும் என்ற நோக்கிலேயே தார்வாட் மாவட்டத்தில் இந்தக் கேழ்வரகு ரகங்களைப் பயிர் செய்யச் சொன்னோம். ஈஸ்வர கவுடா சிறுதானியச் சாகுபடியில் மிகவும் ஆர்வமுள்ளவர். அவர் இருக்கும் பகுதியில் முதன்முதலாக வரகைப் பயிரிட்டு, நல்ல விளைச்சல் எடுத்தார். அது அந்தப் பகுதி விவசாயிகளுக்கு உத்வேகம் அளித்தது. அதன் விளைவாக 39 நாட்டுக் கேழ்வரகு ரகங்களை எங்கள் அமைப்பின் சார்பாக வழங்கினோம். 40 கேழ்வரகு ரகங்களை ஹைதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி மையம் வழங்கியது. 1 ரகம் டெல்லியில் உள்ள விதை வங்கியிலிருந்து வழங்கப்பட்டது. எல்லாமே நாட்டு ரகங்கள்தான்.
மொத்தம் 80 ரகங்களை நாற்று விட்டார். அதில் 8 ரகங்கள் சரியாக முளைக்கவில்லை. மீதி 72 ரகங்கள் நன்றாக முளைத்தன. அவற்றைப் பறித்து ஜூலை மாதத்தில், அரை ஏக்கரில் நடவு செய்தார். அக்டோபர் மாதத்திலேயே அறுவடைக்கு வந்துவிட்டது. கேழ்வரகின் சாகுபடி காலம் 90 நாள்கள். இதை விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக வயலிலேயே சில நாள்கள் விட்டு அறுவடை செய்யப்பட்டது” என்றவர் சில கேழ்வரகு ரகங்களின் சிறப்புகள் பற்றியும் பேசினார் கிருஷ்ண பிரசாத்.



சுவையான தேன்கூடு ராகி
“இங்கு சாகுபடி செய்ததில் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்தது தேன்கூடு ராகி, யுகாண்டா ராகி, தொட்ட ராகி, போண்டா ராகி ஆகியவை. தேன்கூடு ராகியில் சமைக்கப்படும் உணவு அதிகச் சுவை கொண்டது. கேழ்வரகு களி சமைப்பதற்கு இந்த ரகத்தை அதிகம் தேர்வு செய்வார்கள். யுகாண்டா ராகி ரகத்தின் கதிர் பெரியதாக இருக்கும். அதே போன்று தொட்ட ராகி, போண்டா ராகியும் உருவத்தில் பெரியது. சன்ன பத்தா ராகி என்ற ஒரு ரகம் இருக்கிறது. இது கேழ்வரகின் தாள்களுக்காகவே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தீவனத்துக்காகப் பயிர் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ரகத்தைத் தேர்ந்தெடுக்கலாம். கேழ்வரகு தானியம் ஊதா, சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வெள்ளை நிறத்திலும் கேழ்வரகு ரகங்கள் இருக்கின்றன. அவை மஜ்ஜிகே, பெலி ஆகியவையாகும். எருமை கொம்பு ராகி என்ற ஒரு ரகம் இருக்கிறது. இதன் கதிர்கள் நீண்டதாக இருக்கும். விளைச்சலும் அதிகமாகக் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு கேழ்வரகு ரகத்தைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு விஷயங்கள் கேழ்வரகில் இருக்கின்றன.
ஆந்திர மாநிலத்திலிருந்து வந்திருந்த ராமப்பண்ணா என்ற விவசாயி, ‘இந்தத் தேன்கூடு கேழ்வரகைச் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். திரும்பவும் இப்போதுதான் பார்க்கிறேன். உயர் விளைச்சல் ரகங்கள் வந்தபிறகு பாரம்பர்ய ரகங்களை மறந்துவிட்டேன். கண்டிப்பாக இதன் விதைகள் எங்களுக்கு வேண்டும்’ என்று சொன்னார். பல விவசாயிகளும் கேழ்வரகு ரகங்களைப் பார்த்தபோது இப்படித்தான் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்” என்ற கிருஷ்ணபிரசாத், நிறைவாக,

இங்கு விதைகள் கிடைக்கும்
“கேழ்வரகுச் சாகுபடியில் கர்நாடகத்தைப் போலவே தமிழகமும் சிறப்பு வாய்ந்தது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் கேழ்வரகுச் சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிக மழை, வறட்சி போன்ற சூழல்களிலும் கேழ்வரகு தாக்குப்பிடித்து வளரும். கடுமையான உடலுழைப்பை மேற்கொள்பவர்களுக்கு கேழ்வரகுக் களி சிறந்த உணவு. இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. சத்துகள் அளவிலும் ‘பாலிஷ்’ செய்த அரிசியைவிட அதிக சத்துகள் கொண்டவை. கேழ்வரகு விதைகள் தேவைப்படுவோர் எங்கள் அமைப்பை அணுகலாம். குறைந்தளவு விதைத் தருவோம். அதைக் கொண்டு பெருக்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்புக்கு,
#38, 1St Cross, Adipampa Road, Vani Vilas Mohalla, Mysuru, Karnataka 570002 Cell: 070900 09911
ஈஸ்வர கவுடா, செல்போன்: 89710 50999
50,000 சிறுதானிய ரகங்கள்
ஹைதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி இளங்கோவனிடம் பேசினோம். “ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுதானிய ரகங்களைச் சேமித்து வைத்திருக்கிறோம். அதில் கேழ்வரகு ரகங்களும் அடக்கம். கர்நாடகாவிலிருந்து சேகரிக்கப்பட்ட நாட்டுக் கேழ்வரகு ரகங்கள்தான் ஈஸ்வர கவுடாவுக்கு வழங்கப்பட்டன. சிறுதானியங்களை விதைத்து, அதைப் பெருக்கமடைய செய்பவர்களுக்கும் அது சம்பந்தமான ஆராய்ச்சிகள் செய்ய நினைப்பவர்களுக்கும் விதைகளைக் கொடுக்கிறோம். அதேபோன்று சிறுதானியச் சாகுபடி சம்பந்தமான பயிற்சிகளும், மதிப்புக்கூட்டுதல் தொடர்பான பயிற்சிகளும் எங்கள் மையத்தில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்புக்கு,
செல்போன்: 98481 61434