காடை வளர்ப்பு, காய்கறித் தோட்டம், மதிப்புக்கூட்டல்... விவசாயிகளுக்கு வழிகாட்டும் கரூர் கே.வி.கே!

சேவை
கரூர் மாவட்டம், தோகைமலையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புழுதேரி கிராமம். இங்கு இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையம் (கே.வி.கே) இப்பகுதி விவசாயிகளுக்குப் பல வகைகளிலும் சேவையாற்றி வருகிறது. தனியார் தொண்டு நிறுவனமான, சரஸ்வதி ஊரக மேம்பாடு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிலையமானது, 75 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது.
புழுதேரி மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்கள், மிகவும் வறட்சியான பகுதியாகும். இப்பகுதி விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் விதமாக... பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்குவது, புதிதாக அறிமுகமாகும் பண்ணைக் கருவிகள் மற்றும் மதிப்புக்கூட்டும் கருவிகள் குறித்து வழிகாட்டுவது, புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்வது, பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் பாதிப்புகளுக்குத் தீர்வு வழங்குவது... நாட்டுக்கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காடை வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்குதல் உட்பட இன்னும் பலவிதமான செயல்பாடுகளில் இந்நிலையம் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள ஒரு பகல்பொழுதில் இந்நிலையத்துக்குச் சென்றோம். இயற்கையான சூழலோடு, அதே சமயம் புதுமையாகவும் காட்சி அளித்த இதன் தோற்றம் வசீகரித்தது.

நன்கு காற்றோட்டம் உள்ளவாறு, புதுச்சேரி ஆரோவில் பாணியில் கட்டப்பட்ட கட்டடம். இதைச் சுற்றி நான்கு பக்கமும் அமைக்கப்பட்டுள்ள அகழியில் தண்ணீர் நிறைந்திருந்தது. இதில் தாமரை பூக்கள் பூத்துக் குலுங்கின. அகழிக்கு வெளியே நான்கு பக்கமும் ஆயிரக்கணக்கான எண்ணிக் கையில் தென்னை, மா, நெல்லி, சப்போட்டா, எலுமிச்சை, நாவல் உள்ளிட்ட மரங்களும், நெல், வாழை, காய்கறிகள், தீவனப்புல் ஆகியவையும் செழிப்பாகக் காட்சி அளித்தது. இந்நிலையத்தின் முகப்புப் பகுதியில் இருந்து, அலுவலகக் கட்டடத்துக்குச் செல்ல, அகழி யின் மீது ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியே உள்ளே சென்ற நம்மை, இந்நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் ஜெ.திரவியம் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றார்.
இலை வாழை மாதிரி திடல்
மிகுந்த உற்சாகத்தோடு பேசத் தொடங் கியவர், ‘‘அனைத்து விதமான பயிர்களுக்கும் இங்கு விவசாயிகள் ஆலோசனைகள் பெறலாம். ஆய்வு நோக்கத்தோடு... 10 ஏக்கர் பரப்பில் நெல், தலா 7 ஏக்கரில் தென்னை, எலுமிச்சை, 6 ஏக்கரில் கொய்யா, 4 ஏக்கரில் சப்போட்டா, 4 ஏக்கரில் தேக்கு, வேங்கை, பூவரசு உள்ளிட்ட மர வேலைப்பாடுகளுக்கான மரங்கள், 2 ஏக்கரில் தீவனப்புல், 1.5 ஏக்கரில் மா, 1.5 ஏக்கரில் நாவல், அரை ஏக்கரில் பெருநெல்லியும் சாகுபடி செய்துள்ளோம்.

நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து விவசாயி களுக்கு நேரடி பயிற்சி அளிப்பதற்காக, மாதிரி திடல் அமைத்துள்ளோம். இதில் தற்போது அசில் வகையைச் சேர்ந்த 33 நாட்டுக்கோழிகள் உள்ளன. இந்த மாவட் டத்தில் வாழை சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளில் பலர், தார் விற்பனை யைவிட, இலை விற்பனையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு நேரடி களப் பயிற்சி அளிப்பதற்காக, இலை வாழை மாதிரி திடல் அமைத்துள்ளோம். வீட்டுத் தோட்டம் களப்பயிற்சி அளிப்பதற்காக, 120 அடி நீளம், 100 அகலத்தில் மாதிரி திடலும் இங்கு செயல்பட்டு வருகிறது.
அதில் வெண்டி, கத்திரி, தக்காளி, மிளகாய், கொத்தவரை, செடி அவரை, புடலை, பாகல், பூசணி, பரங்கி, பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட பலவிதமான காய்கறிகளும்... சர்க்கரை வள்ளிகிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சேனைக் கிழங்கு, கருணைக்கிழங்கு ஆகிய கிழங்கு வகைகள்... புதினா, மல்லி, சிறுகீரை, புளிச்சக் கீரை, பசலைக்கீரை, பிரண்டை, தூதுவளை, துளசி, கற்றாழை, முடக்கத்தான் ஆகியவற்றை யும் பயிர் செய்து வருகிறோம்.

கன்றுகள் விற்பனை
தரமான தென்னங்கன்றுகள், பழமரக் கன்றுகள், காய்கறி நாற்றுகள், விதைகள், உயிர் உரங்கள் ஆகியவை இங்கு விற்பனை செய்யப் படுகின்றன. இந்தப் பகுதி விவசாயிகளிடம் இயற்கை விவசாயத்தை ஊக்கப் படுத்தும் நோக்கத்தோடு... பஞ்சகவ்யா, மீன் அமிலம் உள்ளிட்ட இயற்கை இடுபொருள்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்து வரு கிறோம். இவற்றைத் தயார் செய்யப் பயிற்சியும் அளிக்கிறோம்.
ஒருங்கிணைந்த பண்ணையம், விளை பொருள்கள் மதிப்புக் கூட்டுதல், நாட்டுக்கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காடை வளர்ப்புக்கான பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன’’ என்று சொன்னவர், இந்த நிலையம் கடந்த காலங்களில் ஆற்றிய முக்கியமான சாதனைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘2010-ம் ஆண்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தோடு இணைந்து... இந்த மாவட்ட விவசாயிகளிடம் எஸ்.ஆர்.ஐ. என அழைக்கப்படும் ஒற்றை நாற்று நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைப் பரவலாகக் கொண்டு சேர்த்தோம். அதற்காக ஏராளமான களப் பயிற்சிகள் அளித்தோம். அதன் பலனாக, கிட்டத்தட்ட 2,500 ஏக்கர் பரப்பில் இந்தப் பகுதி விவசாயிகள் ஒற்றை நாற்று நெல் சாகுபடி முறையை மேற்கொண்டு, குறைந்த செலவில் நிறைவான மகசூல் எடுத்து வருகிறார்கள்.
2011-12-ம் ஆண்டில் நபார்டு வங்கியின் உதவியுடன், முன்னோடி விவசாயிகளுக்கான ஒரு பயிற்சித்திட்டத்தைச் செயல்படுத் தினோம். அந்தத் திட்டத்தின் வாயிலாக 30 உழவர் மன்றங்களைச் சேர்ந்த விவசாயி களுக்கு நவீன தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் வழங்கினோம். அந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, நச்சலூர் உழவர் உற்பத்தி யாளர் கம்பெனியை 2012-ம் ஆண்டுத் தொடங்கினார்கள். அது, சிறப்பாகச் செயல் பட்டு வருகிறது.

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தோடு இணைந்து, இந்த மாவட்ட வாழை விவசாயிகளிடம் அடர் நடவு முறையில் வாழை சாகுபடி செய்யும் தொழில்நுட்பத்தைப் பரவலாக அறிமுகப் படுத்தினோம். குறிப்பாக, குளித்தலை சுற்று வட்டார கிராமங்களில் வாழை விவசாயம் அதிகம் என்பதால், அப்பகுதி விவசாயிகளுக்கு அடர் நடவு முறை பேருதவியாக அமைந் துள்ளது.
குளித்தலை வாழை மற்றும் எள் உற்பத்தியாளர் நிறுவனம்...
எங்களுடைய வேளாண் அறிவியல் நிலையத்தின் வழிகாட்டுதலால், வாழை சாகுபடியில் அதிக மகசூல் எடுத்த விவசாயி செந்தில்குமாருக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விருது வழங்கியது. இதுபோல் கரூர் மாவட்ட விவசாயிகளில் பலர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண் செம்மல் விருது பெற்றுள்ளார்கள்.
இந்நிலையத்தின் முன் முயற்சியின் காரணமாக... நபார்டு வங்கியின் நிதியுதவி யோடு, கரூர் முருங்கை மற்றும் காய்கறி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், குளித்தலை வாழை மற்றும் எள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவை தொடங்கப்பட்டு, ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.

காடை வளர்ப்புத் திட்டம்
நபார்டு வங்கியின் நிதியுதவியோடு, காடை வளர்ப்புத் திட்டத்தை செயல் படுத்தினோம். அந்தத் திட்டத்தின் கீழ், 150 விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தோம். அவர்களில் 50 விவசாயிகள் காடை வளர்ப்பில் ஈடுபட்டு, வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இந்த மாவட்டத்தின் காவிரிக் கரையோர கிராமங்களில் வெற்றிலை, கரும்பு ஆகிய பயிர்கள் அதிக அளவில் பயிர் செய்யப் படுகின்றன. அவற்றில் ஏற்படும் பூச்சி, நோய்த்தாக்குதல்களைக் கண்டறிந்து தீர்வு வழங்குவதில் சிறப்பும் கவனம் செலுத்தி வருகிறோம்.
இம்மாவட்டத்தில் அமைந்துள்ள அரவக் குறிச்சி பகுதியில்தான் தமிழகத்திலேயே அதிக அளவு முருங்கை சாகுபடி நடை பெற்று வருகிறது. அதில் பாதிப்பு ஏற்படுத் தக்கூடிய தேயிலை கொசு, நாவாய் பூச்சி, அசுவினி உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப் படுத்துவதற்கான வழிமுறைகளை இந்த நிலையத்தின் விஞ்ஞானிகள், விவசாயி களுக்கு வழங்கிவருகிறார்கள். மாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய உன்னிகளைக் கட்டுப்படுத்துவதற்கான மூலிகைக் கரைசல் தயாரிக்கும் முறையை இப்பகுதி விவசாயிகளுக்குச் சொல்லிக்கொடுத் துள்ளோம்.

மழைநீரை உட்கிரகிக்காத, சுண்ணாம்பு மண் நிறைந்த நிலங்கள், இம்மாவட்டத்தில் அதிகம். ஆனால், விவசாயிகளால் அதைக் கண்டறிய முடிவதில்லை. அதனால் பல பின்னடைவுகளைச் சந்திக்கிறார்கள். எங்களுடைய வேளாண் அறிவியல் நிலையத்தில் இயங்கி வரும் மண் ஆய்வுக் கூடத்தின் வாயிலாக, விவசாயிகளுக்குத் தேவையான மண் ஆய்வுகளை மேற்கொண்டு, என்னென்ன பயிர்களைப் பயிர் செய்யலாம் எனப் பரிந்துரைகளை வழங்கி வருகிறோம்.
எங்கள் நிலையத்தில் பயிர்நல ஆய்வகம் உள்ளது. அதன்மூலமாக, விவசாயிகளுக்குத் தேவையான உயிர் உரங்கள், எதிர் உயிரிகள், பாக்டீரியாக்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து தருகிறோம்.
இயற்கை விவசாயப் பயிற்சி...
சிறுதானியங்கள்
மதிப்புக்கூட்டும் இயந்திரம்...

இயற்கை விவசாயத்தை ஊக்கப் படுத்துவதற்காக மத்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள ஒரு சிறப்புத் திட்டம், இந்த நிலையத்தின் மூலம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. அத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நேரடி களப்பயிற்சி வழங்கி வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் வேட்டையார் பாளையத்தில் உள்ள ஓர் இயற்கை விவசாயப் பண்ணையில் பயிற்சி நடத்தினோம். இயற்கை விவசாயத்தில் நன்கு அனுபவம் பெற்ற சுந்தர் ராமன், விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தார். இயற்கை விவசாயம் சார்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அவ்வப் போது நடத்தி வருகிறோம். சிறுதானியங் களின் மகத்துவம் குறித்து இப்பகுதி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு... அவற்றை மதிப்புக் கூட்டு வதற்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். இதுபோன்ற தொழில்களில் ஈடுபட ஆர்வம் காட்டிய நபர்களுக்கு, மத்திய அரசுத் திட்டம் மூலம், 12 இயந் திரங்களை இலவசமாக வழங்கியுள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.
தொடர்புக்கு,
முனைவர் ஜெ.திரவியம்,
செல்போன்: 94889 67675, 97900 20666.
நல்ல வருமானமும் கிடைக்குது!
கரூர் மாவட்டம், அழகாபுரியைச் சேர்ந்த விவசாயி பூமிநாதன், “நெல், மலர்கள், காய்கறிகள் உள்படப் பலவிதமான பயிர்கள் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன். பயிர்கள்ல எந்த ஒரு பாதிப்புன்னாலும், புழுதேரி கே.வி.கே-வைத்தான் தொடர்பு கொள்வேன். அங்கவுள்ள விஞ்ஞானிகள் உடனடியா என்னோட பண்ணைக்கே வந்து, நேர்ல பார்வையிட்டு ஆலோசனைகள் சொல்வாங்க. பஞ்சகவ்யா, மீன் அமிலம், மூலிகைப் பூச்சிவிரட்டி, ஒட்டுண்ணி அட்டைகளும் இங்கதான் வாங்கிகிட்டு இருக்கேன்’’ எனத் தெரிவித்தார்.
வடசேரியைச் சேர்ந்த அன்னை தெரசா, ‘‘நாங்க ஏழ்மையான குடும்பம். வருமானத்துக்கு வழியில்லாமல் தவிச்சோம். இந்த நிலையிலதான் கடந்த வருஷம், புழுதேரி கே.வி.கே-வை அணுகினோம். சிறுதானியங்கள்ல இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க, 20 நாள்கள் பயிற்சி கொடுத்தாங்க. அதோடு, பாரம்பர்ய முறையிலான திருகை அமைப்போடு உள்ள மாவு அரைக்கும் இயந்திரத்தையும் இலவசமாகக் கொடுத்தாங்க. இந்தப் பகுதியில உள்ள 5 பெண்கள் ஒண்ணு சேர்ந்து, மாவு அரைச்சு தரும் தொழில் செஞ்சுக்கிட்டு இருக்கோம். சிறுதானியங்கள்ல இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களைத் தயார் செஞ்சும் விற்பனை செய்றோம். சத்துமாவு, எள்ளுசாதப் பொடி, நிலக்கடலை சாதப்பொடி, தினை லட்டு, கம்பு லட்டு, ராகி லட்டு, வாழைப்பழ மிக்ஸ் உள்பட 20 உணவுப்பொருள்கள தயார் செய்றோம். நல்ல வருமானமும் கிடைக்குது’’ எனத் தெரிவித்தார்.

பலவிதமான பண்ணைக் கருவிகள்
இந்நிலையத்தில் இயங்கி வரும் வேளாண் விரிவாக்கத்துறையின் தொழில்நுட்ப வல்லுநரான பெ.தமிழ்ச்செல்வி, “விவசாயப் பணிகளுக்கான வேலையாள் பற்றாக்குறை தற்போது அதிகமாக உள்ளது. இதைச் சமாளிக்க இப்பகுதி விவசாயிகளுக்குப் பண்ணைக்கருவிகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். மதுரை, மேலூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கண்டுபிடித்த நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை இப்பகுதி விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தினோம்.
குமாரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி துரைசாமி என்பவர், தோட்டக்கலை பயிர்களில் களை எடுக்கக்கூடிய ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்தார். அதனை ஏராளமான விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தோம். அவர் வடிவமைத்த இன்னும் பல கருவிகளை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளோம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் கண்டுபிடிக்கும் பண்ணைக் கருவிகளையும் விவசாயிகளிடம் கொண்டு சேர்த்துள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.