கொரோனா பறித்தது 26 ஆயிரம்... இயற்கை கொடுத்தது 2.30 லட்சம்! இடுபொருள், மாடித்தோட்டம், சொட்டுநீர்...

அசத்தும் பட்டதாரி இளைஞர்
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள பு.ஆலாம் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. பொறியியல் பட்டப்படிப்பு படித்து விட்டு, தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த இவர், கொரோனா பொது முடக்கத்தால் வேலையை இழந்திருக்கிறார். இந்நிலையில்தான் வேளாண்மை சார்ந்த சுயதொழிலில் இறங்கிய இவர், மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் சம்பாதித்து வருவது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒரு மாலைப்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். பஞ்சகவ்யா தயாரிப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண் டிருந்த பாலாஜி, மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார்.

‘‘இயற்கை விவசாயம் செய்யணுங்கற எண்ணம் விவசாயிகள் மத்தியில நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே இருக்கு. ஆனால், உடனடியா இதுல இறங்குற தில்லை. காரணம், ‘மாடுகள் வளர்க்குறதுக் கான சூழல் இல்லை, இயற்கை இடு்பொருள்கள் தயாரிக்க நேரம் இல்லை’னு சொல்றாங்க. இந்த நிலையிலதான் நான் உற்பத்தி செஞ்சு தரக்கூடிய இயற்கை இடுபொருள்களால, இந்தப் பகுதியில நிறைய விவசாயிங்க, ரொம்ப ஆர்வமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்காங்க இதை நினைக்குறப்ப, மனசுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. இதனால் எனக்குக் கை நிறைய வருமானம் கிடைக்குது’’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தவர், வேளாண்மை சார்ந்த சுய தொழில் பயணம் குறித்து விவரித்தார்.

“எங்க குடும்பத்தோட பூர்வீகத் தொழில் விவசாயம். எங்களுக்கு 4 ஏக்கர் நிலமிருக்கு. ஆனால், இந்தப் பகுதியில கடும் வறட்சி நிலவுறதுனால, கடந்த பல வருஷங்களா, 3 ஏக்கர் நிலத்தைத் தரிசாவே போட்டு வச்சிட்டோம். ஒரு ஏக்கர் நிலத்துல தென்னை இருக்கு. கேணியில ஊறக்கூடிய சொற்ப அளவு தண்ணியை வச்சு, அப்பா தென்னை விவசாயத்தைக் கவனிச்சிக்கிட்டு இருந்தார். ‘விவசாயத்தை நம்ப முடியாது. நீ படிச்சு வேலைக்குப் போ’னு என்னை அப்பா நல்லா படிக்க வச்சார். ஆனால், சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயத்துல ஈடுபாடு அதிகம். விவசாய வேலைகள் அத்துப்படி.
ஆனாலும் கூட எங்க அப்பாவோட ஆசையை நிறைவேத்தணும்ங்கற வைராக்கியத்தோடு, படிப்புல முழு கவனம் செலுத்தினேன். இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பு தேர்வுல, பல்கலைக்கழக அளவுல 44-வது இடம் பெற்றேன். முதுகலை பொறியியல் தேர்வுல கல்லூரி அளவுல இரண்டாம் இடம் பெற்றேன். கரூர்ல உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில விரிவுரையாளரா வேலைக்குச் சேர்ந்தேன். மாசம் 26,000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். 2020-ம் வருஷம் வரைக்கும் கல்லூரியில வேலை பார்த்தேன். இதுக்கிடையில பசுமை விகடன் தொடர்ச்சியா படிச்சதுனாலயும், நம்மாழ்வார் வீடியோக்களை சமூக வலைதளங்கள்ல அடிக்கடி பார்த்ததுனாலயும், இயற்கை விவசாயத்துல ஈர்ப்பு ஏற்பட்டுச்சு. நிலத்துல இறங்கி இயற்கை விவசாயம் செய்யலைன்னாலும் கூட, இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களை ஆர்வமா படிச்சு தெரிஞ்சுகிட்டேன்.

இந்த நிலையில்தான், 2020-ம் வருஷம் கொரோனா பொது முடக்கத்துனால, நான் வேலை பார்த்துக்கிட்டு இருந்த கல்லூரியை மூடிட்டாங்க. அதனால, விரிவுரையாளர் வேலையை இழந்தேன். வருமானத்துக்கு வழியில்லாம போயிடுச்சு. அப்பதான் விவசாயம் சார்ந்த சுயதொழில்ல இறங்கலாம்ங்கற யோசனை வந்துச்சு.
சொட்டுநீர்ப் பாசனம்
வறட்சி மற்றும் தண்ணி பற்றாக்குறையில தவிச்சுக்கிட்டு இருந்த எங்க பகுதி விவசாயிங் களைச் சந்திச்சு, சொட்டுநீர்ப் பாசனத்தை அறிமுகப்படுத்தினேன். வானகத்துல மூணு நாள்கள் நடந்த இயற்கை வேளாண் பயிற்சி முகாம்ல கலந்துகிட்டு, இயற்கை இடு பொருள்கள் தயாரிக்கக் கத்துக்கிட்டேன்.

மண்புழுவுரம் தயாரிப்பு
முதல்ல, மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பிச்சேன். 4 அடி அகலம், 2 அடி உயரம், 16 அடி நீளமுள்ள... இரண்டு பாலித்தீன் பைகளை (க்ரோ பேக்) வாங்கினேன். அதை என்னோட தென்னந்தோப்புல நிழல்பாங்கான இடத்துல தகுந்த முறையில அமைச்சேன். அந்த பைகள்ல மாட்டு எரு, தேங்காய் உரிமட்டை, காய்கறிக் கழிவுகளைப் போட்டு, 20 கிலோ மண்புழுக்களை விட்டு, அதுக்கு மேல இலைதழைகளையும் தென்னை மட்டைகளையும் போட்டு தினமும் தண்ணீர் விட்டேன். அடுத்த 60 நாள்கள்ல மண்புழுஉரம் தயாராயிடுச்சு. அதை இந்தப் பகுதி விவசாயிங்ககிட்ட கொடுத்து ‘ஒரு தடவை போட்டுப் பாருங்க... பலன் தெரிஞ்சா, தொடர்ந்து வாங்குங்கனு சொன்னேன். மண்புழுவுரம் போட்டதுனால, வழக்கத்தை விடக் கூடுதல் விளைச்சல் கிடைச்சது. இந்தப் பகுதி விவசாயிங்க என்கிட்ட தொடர்ச்சியா மண்புழுவுரம் வாங்க ஆரம்பிச்சாங்க.
ஊட்டமேற்றிய தொழுவுரம்... உற்சாக வரவேற்பு
அடுத்ததா மண்புழு உரத்தோடு... வேப்பம் புண்ணாக்கு, புங்கன் புண்ணாக்கு, இலுப்பைப் புண்ணாக்கு, ஆமணக்குப் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு கலந்து ஊட்டமேற்றிய மண்புழுவுரம் தயாரிச்சேன். இது பயிர் வளர்ச்சி யூக்கியாக மட்டுமல்லாம... பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தாகவும் இருந்ததால, விவசாயிகள் மத்தியில இதுக்கு அதிக வரவேற்பு கிடைச்சுச்சு.

விற்பனை அதிகரிச்சதால கடை திறந்தேன்
மண்புழுவுரம், ஊட்டமேற்றிய மண்புழுவுரம்... இந்த இரண்டோட விற்பனையுமே அதிகரிச்சதால, பரமத்தியில ஒரு கடையைத் தொடங்கினேன்” என்று சொன்ன வர், மற்ற இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து விவரித்தார்.
‘‘ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மீன் அமிலம், மூலிகைப் பூச்சிவிரட்டி, தேமோர் கரைசல், வேப்பங்கொட்டை கரைசல், அக்னி அஸ்திரம்னு இயற்கை விவசாயத்துக்குத் தேவையான எல்லா இடுபொருள்களையுமே தயார் பண்ணி, விற்பனை செய்ய ஆரம் பிச்சேன். அதோட, தோட்டக் கலைத்துறை மூலமா விவசாயிகளுக்கு மானியத்தோட சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுக் கொடுத் தேன். என்னோட கடையில நாட்டு ரக விதை களையும் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். கரூர் நகர்ப்புறத்துல உள்ள வீடுகளுக்கு மாடித்தோட்டமும் அமைச்சு கொடுத்துக் கிட்டு இருக்கேன்.

இப்படிப் பல வகைகள்லயும் வருமானம் பார்த்துக்கிட்டு இருக்கேன். ஒரு நாட்டுமாடு வச்சுருக்கேன். இப்போ, நான் 9 பேருக்கு வேலை கொடுத்துக்கிட்டு இருக்கேன்” என்று சொன்ன பாலாஜி, விவசாயம் சார்ந்த இந்தச் சுயதொழில் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
வருமானம்
மண்புழுவுரம்
“மாசத்துக்கு, 2 டன் மண்புழு உரம் விற்பனை செய்றேன். ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் வீதம் 20,000 வருமானம் கிடைக்குது. இதுல, செலவுன்னு பார்த்தா, நாட்டு மாட்டுச் சாணம் வாங்க, படுக்கை அமைக்க, மன்புழுவுரத்தை சளிச்சு எடுக்க ஆள் கூலி எல்லாம் சேர்த்து மொத்தம் 6,000 வரை செலவாகும். மீதி 14,000 ரூபாய் லாபம் கிடைக்குது.

ஊட்டமேற்றிய மண்புழுவுரம்
மாசத்துக்கு 1,200 கிலோ ஊட்டமேற்றிய மண்புழு உரம் விற்பனையாகுது. ஒரு கிலோ 18 ரூபாய்னு வித்துக்கிட்டு இருக்கேன். அதுல மாசம் 21,600 ரூபாய் வருமானம் கிடைக்கும். நாட்டுமாட்டுச் சாணம், அஞ்சு வகையான புண்ணாக்கு, ஆள் கூலி, போக்குவரத்துச் செலவுகள் எல்லாம் போகக் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.
ஜீவாமிர்தம்
மாசத்துக்கு 180 லிட்டர் ஜீவாமிர்தம் தயார் பண்ணி, ஒரு லிட்டர் 10 ரூபாய்னு விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். இது மூலமா மாசத்துக்கு 1,800 ரூபாய் வருமானம் கிடைக்கும். நாட்டுச்சர்க்கரை, சிறுதானிய மாவு உட்பட எல்லாச் செலவுகளும் போக, ஜீவாமிர்தத்துல 1,500 ரூபாய் லாபம் கிடைக்கும்.
பஞ்சகவ்யா
மாசத்துக்கு 100 லிட்டர் பஞ்சகவ்யா விற்பனை செய்றேன். ஒரு லிட்டருக்கு 100 ரூபாய் வீதம் 10,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். 10 லிட்டர் பால், 10 லிட்டர் தயிர், 5 சீப்பு வாழைப்பழம், 10 இளநீர், 9 கிலோ நாட்டுச்சர்க்கரை, 9 கிலோ கடலைப் புண்ணாக்கு உட்பட எல்லாச் செலவுகளும் போக, பஞ்சகவ்யாவுல மாசத்துக்கு 7,300 ரூபாய் லாபம் கிடைக்குது.
மீன் அமிலம்
மாசத்துக்கு 100 லிட்டர் மீன் அமிலம் தயார் செஞ்சு, ஒரு லிட்டர் 200 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா, மாசத்துக்கு 20,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. மீன் கழிவுகள், நாட்டுச்சர்க்கரை வாங்குறதுக்கான செலவுகள் போக 14,000 ரூபாய் லாபம் கிடைக்குது.
மூலிகைப் பூச்சிவிரட்டி
மாசத்துக்கு 200 லிட்டர் வரை மூலிகைப் பூச்சிவிரட்டி விற்பனை செய்றேன். ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் வீதம், மாசத்துக்கு 14,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல, மூலப்பொருளா பயன்படுத்தப்படுற புங்கன், ஊமத்தை, ஆமணக்கு, எருக்கன், ஆடாதொடை, கொய்யா, எலுமிச்சை இலைகள் எங்க பகுதி யிலயே கிடைக்குது. இதுக்கு செலவு கிடையாது. பல வகையான இலைகளோட... புகையிலை, பச்சை மிளகாய், பூண்டு கலந்து மூலிகைப் பூச்சி விரட்டி தயார் செய்றதுனால, வீரியம் அதிகமா இருக்கும். இதுக்கான செலவுகள் போக 10,400 ரூபாய் லாபம் கிடைக்கும்.
தேமோர் கரைசல், வேப்பங்கொட்டை கரைசல், அக்னி அஸ்திரம்
மாசத்துக்கு 30 லிட்டர் தேமோர் கரைசல் தயார் செய்றேன். ஒரு லிட்டர் 50 ரூபாய் விற்பனை செய்றது மூலமா, 1,500 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல செலவு போக 1,220 ரூபாய் லாபம் கிடைக்குது. வேப்பங்கொட்டை கரைசல், அக்னி அஸ்திரம் விற்பனை செய்றேன். செலவு போக, 800 ரூபாய் லாபம் கிடைக்குது.

விதை விற்பனை, மாடித்தோட்டம், சொட்டுநீர் பாசனம்
விருதுநகர்ல இருந்து நாட்டுவிதைகள் வாங்கிக்கிட்டு வந்து விற்பனை செய்றேன். அந்த வகையில், மாசத்துக்கு 1,000 ரூபாய் லாபம் வருது. மாடித்தோட்டம், புல் தரை, சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுக் கொடுக்குறது மூலமா மாசத்துக்குச் சுமார் 1,70,000 ரூபாய் லாபம் கிடைக்குது. இயற்கை இடுபொருள்கள், விதைகள் விற்பனை மூலமாவும், மாடித்தோட்டம், புல், சொட்டுநீர்ப் பாசனம் அமைக்குறது மூலமாவும் மாசத்துக்கு மொத்தம் 2,30,220 ரூபாய் லாபம் கிடைக்குது. கை நிறைய வருமானம் பார்த்துக்கிட்டு இருக்கேன். இது எனக்கு நிறைவான வாழ்க்கை’’ என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
தொடர்புக்கு, பாலாஜி,
செல்போன்: 90033 50323
மாடித்தோட்டம்
‘‘நான் நிறைய பேருக்கு மாடித்தோட்டம் அமைச்சு கொடுத்துருக்கேன். அவங்ககிட்ட இருந்து காய்கறிகளை வாங்கி விற்பனை செய்ய, இயற்கை அங்காடி ஆரம்பிக்கும் முயற்சியில இருக்கேன். குத்தகைக்கு 1 ஏக்கர் நிலம் வாங்கி, இயற்கை முறையில நாட்டுக் காய்கறிகள் சாகுபடி செய்யவும் திட்டமிட்டுருக்கேன்’’ எனத் தெரிவித்தார் பாலாஜி.