ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

சொட்டுநீர்ப் பாசனத்தில் நுண் தெளிப்பான் அசத்தும் கேரள விவசாயி!

நுண் தெளிப்பான்
பிரீமியம் ஸ்டோரி
News
நுண் தெளிப்பான்

கருவி

கேரள மாநிலம், மலபுரத்தைச் சேர்ந்தவர் அவரான் என்கிற விவசாயி. இவருடைய கண்டுபிடிப்பு என்னவென்றால் நுண் தெளிப்பான் (Micro Sprinkler) என்பதாகும். இது ஒரு வித்தியாசமான முயற்சி. நீர் சிக்கனத்துக்காக எல்லோரும் சொட்டுநீர்ப் பாசனத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், சொட்டுநீர் நிறுவனங்கள் அமைத்துக் கொடுக்கும் குழாயை அப்படியே பதித்து, அதன்மூலம் தண்ணீர் பாய்த்து வருகிறோம். அதில் சில மாற்றங்களைச் செய்து, நமக்கு ஏற்றவாறு செய்துகொண்டால் நீர்ப்பாசனத்தில் இன்னும் பெரிய பலன்களை அடையலாம்.

நுண் தெளிப்பான்
நுண் தெளிப்பான்

பிளாஸ்டிக்கால் ஆன 3 சென்டி மீட்டர் நீள நுண்குழாயை (மைக்ரோ டியூபை) எடுத்துக்கொண்டு, அதில் சின்னச் சின்னதாகத் துவாரங்களைப் போட்டு இந்த நுண்ணீர் தெளிப்பானைத் தயாரித்திருக்கிறார் அவரான். ஒரு நுண்குழாய் தயாரிக்க அதிகபட்சம் 10 ரூபாய் செலவாகும். எந்தப் பயிர்களுக்கு வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம். நிலத்தில் பதிக்கப்படும் குழாயில் அரை வட்டத்தில் இந்த டியூபிலிருந்து தண்ணீர் தெறிக்கிறது. இதனால், ஓரிடத்திலேயே தண்ணீர் சொட்டி பரவுவதைவிட தெளிக்கும் போது மொத்த நிலமும் ஈரமாகிறது.

அவரான்
அவரான்

இந்த டியூபை லேட்ரலில் (சொட்டுநீர்க் குழாயில்) எங்கு வேண்டுமோ அங்கே பொருத்திக் கொள்ளலாம். தண்ணீரும் லீக் ஆகாது. இந்த மாடலில் நிறைய இப்போது சந்தையில் கிடைக்கிறது. ஆனால், இவையெல்லாம் அறிமுகமாவதற்கு முன்பே இதைக் கண்டுபிடித்தார். இன்னொன்று சந்தையில் விற்கும் நுண் தெளிப்பான்கள் அதிக அழுத்தம் கொடுத்தால் மட்டுமே தண்ணீர் சிதறி விழும். இந்த டியூபை பொருத்தினால் குறைந்த அழுத்தத்தில்கூட தண்ணீரை சிதறி விழச் செய்ய முடியும். அதேபோன்று சீரான இடைவெளியில் தண்ணீரைத் தெளிக்கச் செய்யும். ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்சுகிறோம் என்றால் எவ்வளவு தண்ணீர் விழ வேண்டுமோ அந்த அளவில் சரியாக விழும். வழக்கமான முறையில் சொட்டுப் பாசனக் குழாய் மூலம் பாய்ச்சும்போது தண்ணீர் ஒரே இடத்தில் விழும். இது மழை போன்று சிதறி விழுவதால் நிலம் முழுவதும் ஈரம் பரவும்.

பாசனம்
பாசனம்

இது சொட்டுநீர்க் குழாய்க்கென்றே பிரத்யேகமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 16 எம்.எம் லேட்ரலில் இந்த டியூப் நுழையுமாறு ஓட்டை போட்டுக் கொள்ள வேண்டும். அதில் இந்த டியூபை செருகி விட வேண்டும். அவ்வளவுதான். அதிலேயே நன்கு பொருந்திக்கொள்ளும். அதற்குப் பிறகு பாசனம் செய்யலாம். வழக்கமான சொட்டுநீர்க் குழாயில் மண், உப்பு, சிறுகற்கள் போன்றவற்றால் அடைப்பு ஏற்படும். இதில் அந்தப் பிரச்னை இருக்காது. அப்படியே அடைப்பு ஏற்பட்டாலும், டியூபை பிடிங்கி சிறிய கம்பி கொண்டு சுத்தம் செய்யலாம். அல்லது வாயால் ஒருமுறை ஊதிவிட்டு மீண்டும் பொருத்திவிடலாம். இதுதான் இதற்கான எளிய பராமரிப்பு முறை.

பாசனம்
பாசனம்

இது சிறிய அளவில்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பாசனத்தைப் பொறுத்து மைக்ரோ டியூபின் அளவையும் பெரிதாக்கிக் கொள்ளலாம். இதில் இடு பொருள் கலந்து கொடுக்கும்போது முழுமை யாக பயிர்களை சென்றடைந்துவிடும். இப்படி பல அம்சங்களை கொண்ட இந்த நுண் தெளிப்பானுக்காகவே அவரானை கேரளாவில் ‘மைக்ரோ ஸ்பிரிங்களர் மேன்’ என்றழைக்கிறார்கள். நிறைய விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

நுண் தெளிப்பான்கள்
நுண் தெளிப்பான்கள்

இனி அவரான் சொல்வதைக் கேட்போம். “சின்ன வயசுல இருந்தே விவசாயம் செய்றேன். குழாய்கள் என்றால் எனக்கு மிகுந்த ஆர்வம். குழாய்களை வைத்து விவசாயத்தில் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வேன். மிளகுக் கொடிகளை வழக்கமாகக் கம்பம் நட்டு அதில் ஏற்றிவிடுவார்கள் அல்லது மரத்தில் ஏற்றிவிடுவார்கள். நான் பி.வி.சி குழாய்களை நட்டு அதில் மிளகுக் கொடிகளை ஏற்றி விட்டிருக்கிறேன். இது நீண்ட நாள்களுக்கு உழைக்கும். கொடி வகைப் பயிர்களுக்குப் பி.வி.சி குழாய்கள் நிறையவே பலன் கொடுக்கிறது. இது செலவை பெருமளவில் குறைக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது தெரியாமல்தான் இன்றும் கல் கம்பமும், மரக்கம்பத்தையும் பயன்படுத்து கிறார்கள்.

நுண் தெளிப்பான்
நுண் தெளிப்பான்

அந்த வகையில்தான் சொட்டுநீர் குழாயில் இந்த மைக்ரோ ஸ்பிரிங்களரைப் பொருத்தி பாசனம் செய்யும் முறையைக் கண்டுபிடித்தேன். கேரளாவில் வீட்டைச் சுற்றித் தோட்டங்கள் நிறைய போடுவார்கள். அந்த மாதிரி தோட்டங்களுக்கு இந்த மைக்ரோ ஸ்பிரிங்களர் முறை நிறையவே உதவுகிறது. நான் வாழை, மரப்பயிர்கள், வீட்டுத்தோட்டங்களுக்கும் பயன்படுத்தியிருக்கிறேன். தண்ணீர் வசதியைப் பொறுத்தும், பாயும் நிலத்தின் அளவைப் பொறுத்தும் லேட்ரலில் தகுந்த இடைவெளியில் இந்த மைக்ரோ ஸ்பிரிங்களர்களைப் பொறுத்திக் கொள்ளலாம்” என்கிறார்.

விருது
விருது

அவரானின் கண்டுபிடிப்புக் கேரளாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அங்குள்ள மல்லபுரம் கே.வி.கே, அவருக்குப் பெரிய அளவில் சிறப்புச் செய்தது. சிறந்த விவசாயி விருது கொடுத்திருக்கிறது. இன்றைக்கும் இவருடைய கண்டுபிடிப்பை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

எம்.ஜே.பிரபு
எம்.ஜே.பிரபு

சொட்டுநீர்ப் பாசனத்தைப் பொறுத்த அளவில் நீர் மேலாண்மை மற்றும் சொட்டு நீர்க் குழாய்கள் பராமரித்தல் குறித்து விவசாயிகளுக்கு ஆர்வமும் திறமையும் நிச்சயம் வேண்டும். அப்படி இருந்தால்தான் சொட்டுநீர்ப் பாசனம் கைகொடுக்கும். இல்லையென்றால் ஒருமுறை போட்டுவிட்டு, அதை யார் பராமரிப்பது என்று நினைத்தால், சொட்டுநீர்ப் பாசனத்துக்கென்று வாங்கிய குழாய்கள் காய்லான் கடைக்குத்தான் செல்லும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தொடர்புக்கு,

M.Avaran, Mannackkara House, Athavanad, Malappuram-676310,

Mobile: 09446840750.

- கண்டுபிடிப்பார்கள்