கிசான் கிரெடிட் கார்டு திட்டம்
விவசாய வேலைகள் நிதி பற்றாக்குறையால் தடைபடக் கூடாது என்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே கிசான் கிரெடிட் கார்டு திட்டம். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிரெடிட் கார்டுகள் மூலமாக தங்களுக்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், விவசாய இடுபொருட்கள் என அனைத்தையும் நடவு மற்றும் அறுவடை காலங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் கீழ் தொடங்கப்பட்ட இந்த திட்டம் விவசாயிகளின் கடன் தேவையை நிறைவு செய்கிறது. அதாவது 3 சதவிகித மானியத்தில் 3 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள், எவ்வித இடையூறும் இன்றி தங்கள் வேளாண் பணிகளை இதன் மூலம் சிறப்பாக செய்ய முடியும்.
விண்ணப்பிக்கும் முறை
குத்தகை விவசாயிகள், வாய்வழி குத்தகைதாரர்கள் மற்றும் பங்குதாரர்கள் என அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதி உடையவர்கள். இவர்கள் தங்கள் ஆதார், பான் கார்டு, முகவரி ஆதாரம், நிலத்தின் விவரங்கள் மற்றும் புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை, கூட்டுறவு வங்கி, பொதுத்துறை வங்கி அல்லது இந்தியாவின் எந்தவொரு பிராந்திய கிராமப்புற வங்கிகளிலும் சென்று விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், விவசாயிகளின் வருமானத்துக்கு ஏற்ப வங்கிகள் கடனை அனுமதிக்கும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் வரம்பு தொகையானது 25,000 லிருந்து தொடங்குகிறது. வருடத்திற்கு 7 சதவிகித வட்டி விகிதத்தில் 3 ஆண்டுகளுக்கு கடன் வழங்கப்படும். இந்த கடனை ஒரு வருடத்திற்குள்ளாகவே விவசாயிகள் திருப்பி செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு 3 சதவிகித வட்டியானது தள்ளுபடி செய்யப்படும். வெறும் 4 சதவிகித வட்டியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.