
மகசூல்
பாரம்பர்ய உணவுப் பயிர்கள்தான் விவசாயிகளை நிம்மதியாக வாழ வைக்கும். இயற்கை இடர்ப்பாடுகள் ஏற்பாட் டாலும்கூடத் தாக்குப்பிடித்து வளரும். விளைச்சல் குறைந்தாலும், போட்ட முதலுக்கு மோசம் ஏற்படாது. சில சமயங்களில் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லையென்றாலும்கூட, விவசாயிகள் தங்களது வீட்டில் உணவுப் பொருளாகப் பயன் படுத்திக்கொள்ள முடியும். ஆனால், வீரிய ரகப் பணப்பயிர்கள் அப்படியல்ல... விவசாயிகளைப் பல வகைகளிலும் வேதனையில் ஆழ்த்தக்கூடியது’ என்கிறார்கள் வேளாண் வல்லுநர்கள்.
இது நிதர்சனமான உண்மை என்பதைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு, பருவம் தவறிப் பெய்த மழையால், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். அதேநேரம், இத்தனை சூழல் சிக்கலுக்கும் இடையில் வரகு சாகுபடி செய்து வெற்றிகரமாக விளைய வைத்திருக் கிறார் விவசாயி பாலசுப்ரமணியன்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, ஒதியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். அங்குள்ள அவரது நாலரை ஏக்கர் நிலத்தில் வரகு சாகுபடி செய்திருக்கிறார்.
ஒரு பகல் பொழுதில் அவரைச் சந்திக்கச் சென்றோம். வரகு பயிர்களுக்கு இடையே பராமரிப்புப் பணியிலிருந்த பாலசுப்ரமணியன், மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘பயிர் நல்லா செழிப்பா விளைஞ்சு, எல்லாத்துலயுமே நல்லா கதிர்கள் பிடிச்சு, தானியம் நிறைஞ்சிருக்கு. பொங்கல் சமயத்துல பெய்ஞ்ச தொடர் மழையில, 20-25 சதவிகிதப் பயிர்கள் கீழே சாய்ஞ்சிடுச்சு. ஆனாலும், கதிர்கள்ல எந்தவொரு பாதிப்பும் ஏற்படல. இதோ பாருங்க, தானியம் நல்லா தரமா இருக்கு. நிறமும் மாறல. இதுதான் வரகோட தனிச்சிறப்பு. பல நாள்கள் மண்ணுல கிடந்தும்கூட முளைச்சிடாம, அப்படியே இருக்கு. காரணம் பாதுகாப்புக் கவசம்போல, பல அடுக்குகளாகத் தோல் இருக்கு. பொதுவாகவே சிறுதானியப் பயிர்கள் வறட்சி, கனமழையைத் தாங்கி வளரும். அதுலயும் வரகுக்கு இந்தத் தன்மை இன்னும் அதிகம். இவ்வளவுக்கும் இது வளமில்லாத மண்... சுண்ணாம்புப் பாறையாக இருந்த நிலம். இயற்கை இடுபொருள்கள்கூட அதிகம் கொடுக்கல. ஆட்டுக்கிடை கட்டி, அடியுரமா ஆமணக்குப் பிண்ணாக்கு போட்டு, ஏக்கருக்கு 8 கிலோ வீதம் வரகை விதைச்சேன். அவ்வளவுதான்.

விதைப்புக்குப் பிறகு, எந்தவொரு இடுபொருளுமே கொடுக்கல. முதல் ரெண்டு மாசம் மழையே இல்ல. அந்தச் சமயத்துல பயிரோட வளர்ச்சி குறைவாக இருந்தாலும்கூட, பயிர் உயிர்ப்போடு இருந்துச்சு. பிறகு, மழை பெய்ய ஆரம்பிச்சதும், பயிர் நல்லா செழிப்பா வளர ஆரம்பிச்சது. வாளிப்பா கதிர்கள் உருவாகி, எல்லாக் கதிர்கள்லயும் தானியங்கள் நிறைஞ்சிடுச்சு. ஏக்கருக்கு 15 (100 கிலோ) மூட்டைக்குக் குறையாமல் மகசூல் கிடைக்கும்னு உறுதியா நம்புறேன். எல்லாச் செலவும் போக, ஏக்கருக்கு 30,000 ரூபாய் லாபம் கிடைக்கும். இந்த ஆண்டு பருவம் தவறிய மழையால எங்க பகுதியில பருத்தி, மக்காச்சோளத்துல கடுமையான பாதிப்பு. ஆனா, வரகு என்னைக் காப்பாத்தி விட்டுடுச்சு’’ என நெகிழ்ச்சியோடு பேசியவர், வரப்பில் நம்மை அமரச் சொன்னவர், அவரும் அமர்ந்துகொண்டு பேச்சைத் தொடர்ந்தார்.
‘‘நான் 10-ம் வகுப்புவரை படிச்சிருக்கேன். 15 வயசுல இருந்து விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். எனக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கு. இது வானம் பார்த்த பூமி... மழையை நம்பியிருக்கக்கூடிய மானாவாரி நிலம். 20-25 வருஷங்களுக்கு முன்ன, இந்தப் பகுதியில உள்ள ஒதியம், குன்னம், சிற்றளி, பேரளி, எழுமூர், வில்வாடி, மூங்கில்பாடி, பெருமாள்பாளையம், கொட்டரை உள்ளிட்ட பல கிராமங்கள்ல வரகு, கம்பு, இருங்குச் சோளம், வெண்சாமரச் சோளம் சாகுபடி செய்றதுதான் வழக்கமா இருந்துச்சு. என்னதான் வறட்சி, கனமழை ஏற்பட்டாலும் இந்த உணவு தானிய பயிர்கள் விவசாயிகளைக் கைவிடாது. அந்த மாதிரி தருணங்கள்ல, வழக்கமான விளைச்சல் இல்லைனாலும்கூட, இந்தப் பகுதி மக்களுக்குச் சாப்பாட்டுக்குப் பிரச்னை வராது. எல்லா வீடுகள்லயும் இந்தத் தானியங்கள் எப்பவும் இருப்புல இருக்கும். விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலியாக, தானியங்கள்தான் கொடுப்பாங்க. அதை அவங்க சேமிப்புல வெச்சிருப்பாங்க.
இந்தப் பகுதிகள்ல சிறுதானியங்கள் மட்டுமல்லாம, மிளகாயும் கொத்தமல்லியும் சாகுபடி செஞ்சாங்க. அப்பெல்லாம் அதைத்தான் பணப்பயிர்னு சொல்வாங்க. ஆனா காலப்போக்குல, வீரிய ஒட்டுரகப் பருத்தி, மக்காச்சோளம் வருகைக்குப் பிறகு, எல்லாமே மாறிப்போயிடுச்சு. இதைத்தான் பணப்பயிர்னு சொல்றாங்க. பேருதான் பணப்பயிர்... இதுல பெரும்பாலும் நஷ்டம்தான் அதிகம். விதை, உரம், பூச்சிக் கொல்லிக்கு அதிகமாகச் செலவு செய்ய வேண்டியதா இருக்குறதுனால, இதுல லாபம் பார்க்குறதுங்கிறது, குதிரைக்கொம்பா இருக்கு. விளைச்சல் நல்லா இருந்தால், நல்ல விலை கிடைக்குறதில்ல. நல்ல விலை கிடைக்குறப்ப, விளைச்சல் சரியா இருக்குறதில்ல’’ என்றவர், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்தார்.
‘‘பணப்பயிர் என்னைக் காலை வாரினாலும், உணவுப்பயிரான வரகு எனக்குக் கைகொடுத்திருக்கு.’’
‘‘போன வருஷம் 7 ஏக்கர்ல பருத்திச் சாகுபடி செஞ்சிருந்தேன். ஏக்கருக்கு 35,000 ரூபாய்க்கு மேல செலவு ஆகிடுச்சு. ஆனால், ஏக்கருக்கு 8.5 குவிண்டால்தான் மகசூல் கிடைச்சது. நான் விற்பனை செய்யும்போது, ஒரு குவிண்டாலுக்கு 3,600 ரூபாய்தான் விலை கிடைச்சது. ஒரு ஏக்கர் பருத்திச் சாகுபடி மூலம் 30,600 ரூபாய்தான் வருமானம். ஏக்கருக்கு 5,000 ரூபாய் வீதம் 7 ஏக்கர் பருத்திச் சாகுபடியில 35,000 ரூபாய்க்கு மேல நஷ்டம். விலை குறைவா இருக்குறங்கறதுனால, வீட்ல வெச்சிருந்து பொறுமையாவும் விக்க முடியல. உணவுப்பொருளாகவும் பயன்படுத்த முடியாது’’ என்றவர், வரகு சாகுபடி அனுபவம் குறித்துப் பேசினார்.

‘‘எனக்கு ஏற்கெனவே வரகு சாகுபடியில நல்ல அனுபவம் உண்டு. ஆனா, கடந்த பல வருஷமா பருத்தி, மக்காச்சோளத்துலயே அதிகமா கவனம் செலுத்திட்டோம். மறுபடியும் வரகு சாகுபடி செஞ்சி, இந்தப் பகுதி விவசாயிகள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்திப் பரவலாக்கணுங்கிற நோக்கத்துனால, போன வருஷம் அரை ஏக்கர்ல மட்டும் வரகு பயிர் பண்ணியிருந்தேன். 10 மூட்டை மகசூல் கிடைச்சது. 800 கிலோவை அப்படியே தானியமாக விற்பனை செஞ்சேன். கிலோவுக்கு 25 ரூபாய் வீதம் 20,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. மீதி 200 கிலோ வரகை அரிசியா அரைச்சதுல 100 கிலோ அரிசி கிடைச்சது. அதை எங்களோட வீட்டுத் தேவைக்கு வெச்சுகிட்டோம். அதோட விலை மதிப்பு கிலோ 75 ரூபாய் வீதம் 7,500 ரூபாய். 20 கட்டு வைக்கோல் கிடைச்சது. நஞ்சு இல்லாத சத்தான வைக்கோல். அது மூலமா 1,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. ஆக மொத்தம் அரை ஏக்கர் வரகு சாகுபடி மூலம் 28,500 ரூபாய் வருமானம். விதை, உழவு, ஆட்டுக்கிடை, களையெடுப்பு, அறுவடை, அரவைக்கூலி எல்லா செலவும் போக 19,630 ரூபாய் லாபம். இந்த வருஷம் ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 15 மூட்டை மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்.

உறவினர்கள், நண்பர்கள், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள்னு நிறைய பேர் அரிசி கேட்டிருக்காங்க. விதைக்கும் சொல்லி வெச்சிருக்காங்க. எனக்குக் கிடைக்கப்போகுற மொத்த மகசூல்ல பாதியை விதையாகவும், மீதியை அரிசியாகவும் மதிப்புக்கூட்டி விற்பனைச் செய்யப்போறேன். ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 30,000 ரூபாய் லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்’’ என்றவர் நிறைவாக,
‘‘போன வருஷம் எனக்குப் பருத்தியில பெரிய அளவுல நஷ்டம் ஏற்பட்டதால, இந்த வருஷம் பருத்தியை கைவிட்டுட்டேன். எங்கிட்ட இருக்கிற 10 ஏக்கர் நிலத்துல, நாலரை ஏக்கர்ல வரகும், மீதி அஞ்சரை ஏக்கர்ல வீரிய ரக மக்காச்சோளமும் பயிர் பண்ணியிருந்தேன். மக்காச்சோளம் பூப்பூத்து, மணி பிடிக்குற சமயத்துல மழையே இல்ல. அதனால முழுமையா கதிர் வரவே இல்ல. கதிர் புடிச்ச கொஞ்ச நஞ்ச பயிர்களும், பொங்கல் சமயத்துல பெய்ஞ்ச தொடர் கனமழையில கீழே சாஞ்சி முளைக்க ஆரம்பிச்சிடுச்சு. இந்த வருஷம் ஒரு ஏக்கருக்கு 7 மூட்டை மகசூல் கிடைச்சாலே பெரிய விஷயம். ஒரு மூட்டைக்கு 1,300 ரூபாய் வீதம் 9,100 ரூபாய்தான் வருமானம் கிடைக்கும். விதை, உழவு, ரசாயன உரங்கள், களைக் கொல்லி, பூச்சிக்கொல்லி, களையெடுப்புனு ஏக்கருக்கு 15,000 ரூபாய் செலவு பண்ணி யிருக்கேன். மக்காச்சோளம் சாகுபடியில எனக்கு ஏக்கருக்கு 6,000 ரூபாய் நஷ்டம்தான் மிச்சம். பணப்பயிர் என்னைக் காலை வாரினாலும், உணவுப்பயிரான வரகு எனக்குக் கைகொடுத்திருக்கு’’ என நெகிழ்ச்சியோடு பேசி முடித்தார்.
தொடர்புக்கு,
பாலசுப்ரமணியன்,
செல்போன்: 93442 88906

ஆமணக்கு
‘‘வரப்புல ஆமணக்கு பயிர் பண்ணியிருக்கேன். இதுக்கு எந்தச் செலவும் கிடையாது. போன வருஷம் 300 கிலோ ஆமணக்கு கிடைச்சது. அதை எண்ணெய்யாக ஆட்டினதுல, 100 லிட்டர் எண்ணெய் கிடைச்சது. ஒரு லிட்டருக்கு 200 ரூபாய் வீதம் 20,000 ரூபாய் வருமானம் கிடைச்சது. 200 கிலோ பிண்ணாக்கை வரகு சாகுபடிக்கு அடியுரமா பயன்படுத்தியிருக்கேன். பயிர்களுக்கு இது அருமையான சத்து’’ என்கிறார் பாலசுப்ரமணியன்.
வரகு வைக்கோலின் மகத்துவம்
‘‘20 வருஷத்துக்கு முன்ன இந்தப் பகுதியில வரகு சாகுபடி அதிகமா நடந்துகிட்டு இருந்தப்ப, மாடுகளுக்கு ரசாயன நச்சுத்தன்மை இல்லாத, சத்தான வைக்கோல் கிடைச்சிக்கிட்டு இருந்துச்சு. இதை மாடுகள் நல்லா விரும்பிச் சாப்பிடும். விவசாயிகள் மக்காச்சோளத்துக்கு மாறின பிறகு, மக்காச்சோள தோகையை மாடுகளுக்குப் போட ஆரம்பிச்சாங்க. இதனால மாடுகளுக்கு நிறைய உடல் உபாதைகள் உண்டாச்சு. குறிப்பா, செரிமானத் தன்மை பாதிக்கப்பட்டதோடு, குடல்லயும் பாதிப்பு ஏற்பட்டுச்சு. பால் சுரக்கும் தன்மையும் குறைஞ்சுபோச்சு. இதனால் கால்நடை வளர்ப்பே குறைஞ்சு போச்சு.
வரகு சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தப்ப, அதோட வைக்கோல் மாடுகளுக்குத் தீவனமா பயன்பட்டதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குக் கூரை வேயவும் பயன்படுத்தினாங்க. வெற்றிலைக் கட்டுகள் கட்டவும் வரகு வைக்கோலைப் பயன்படுத்தினாங்க’’ என்கிறார் பாலசுப்ரமணியன்.
குறைந்த பருத்தி விளைச்சல்
பருத்திச் சாகுபடி பற்றிப் பேசிய பாலசுப்ரமணியன், “இந்த வருஷம் எங்கப் பகுதி முழுக்க, பரவலா நிறைய விவசாயிங்க வீரிய ரகப் பருத்திச் சாகுபடி செஞ்சிருந்தாங்க. ஓரளவுக்கு நல்ல விலையும் கிடைக்குது. ஆனால், பருவம் தவறி பெய்ஞ்ச மழையினால ரொம்ப மோசமான மகசூல் இழப்பு. பூ, சப்பை எல்லாம் கொட்டிப் போயிடுச்சு. ஓரளவுக்குத் தப்பி வந்த காய்கள்லயும் பஞ்சு சரியா மலர்ந்து வெடிக்கல. ஓரளவுக்கு மலர்ந்த பஞ்சும்கூட மழை பாதிப்புனால நிறம் மங்கிப் போயி, தரம் இல்லாமல் இருக்கு. இதனால பருத்திச் சாகுபடி செஞ்ச விவசாயிகளுக்கு, உற்பத்தி செலவுக்குக்கூட வருமானம் தேறாது’’ என்றார்.
வரகு சாகுபடி
மானாவாரி நிலத்தில் அரை ஏக்கரில் வரகு சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பம் இங்கே இடம் பெறுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, செம்மறி ஆடுகளைக் கொண்டு கிடை அமைக்க வேண்டும். லேசான மழை பொழிந்ததும், நன்கு உழவு ஓட்டி, அடியுரமாக 25 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்குப் போட்டு, மண்ணைச் சமப்படுத்தி, 4 கிலோ வரகு தூவ வேண்டும். 20-30 நாள்களுக்கு ஒரு மழை பொழிந்தால், பயிர் நன்கு வேகமாக வளரும். தேவைக்கேற்ப களையெடுக்க வேண்டும். விதைப்பு செய்த 90-100 நாள்களுக்குப் பிறகு பூப்பூத்து கதிர்விடத் தொடங்கும். 170-180 நாள்களில் வரகு அறுவடைக்கு வரும். அறுவடை செய்த பயிரை நிலத்திலேயே போட்டு வைத்து நன்கு காய்ந்த பிறகு, சிறு சிறு கட்டுகளாகக் கட்டி அதன் பிறகு தானியத்தைத் தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும்.
மான் தொல்லை
‘‘இந்தப் பகுதியில ஒரு பெரிய காடு இருக்கு. அங்கேயிருந்து நிறைய மான்கள் ஊருக்குள்ள வந்து பயிர்களைச் சாப்பிட்டுடுது. குறிப்பா, ராத்திரி நேரத்துலதான் தொந்தரவு அதிகமா இருக்குது. இதனால, தோட்டத்துல படுத்துக்கிடக்க வேண்டியதாயிருக்கு. இது மானாவாரி விவசாயம். பயிர்கள் பாதிக்கப்பட்டால், வருஷம் முழுக்க விவசாயிகளோட வாழ்வாதாரம் பறி போயிடும். விவசாயிகளுக்குத் தொந்தரவு இல்லாமல், அதேசமயம் மான்களுக்கும் எந்தவொரு சின்ன பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கணும். மான் தொல்லை தானே என அலட்சியமாக இல்லாமல், தமிழக அரசும் இதுல உடனடியா கவனம் செலுத்தணும்" என்று வலியுறுத்துகிறார் பாலசுப்ரமணியன்.