நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

கோடிகளில் விற்பனையாகும் கொய் மீன்கள்...

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

கோடிகளில் விற்பனையாகும் கொய் மீன்கள்...
நம்மூர் காவிரியிலும் இருந்தது?!

கோடிகளில் விலைப் போகும் கொய் மீன்கள் குறித்து, கடந்த ஒரு மாதமாக தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட தெற்காசியா நாடுகளில் உள்ளவர்களிடம்  தகவல்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். அண்மையில் கூட இந்த மீனைத் தேடி, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கவின்கேர் சி.கே. ரங்கநாதன் பங்களாவுக்கு, அதிகாலையில் வண்டி கட்டிக் கொண்டு சென்று வந்தோம். அங்கு வண்ண வண்ண கொய் மீன்களை கண்டோம். உலக அளவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் ‘கொய் மீன்கள்’ இப்போது ஜப்பான் நாட்டிலும் தாய்லாந்து நாட்டிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. கெண்டை மீன் வகையைச் சேர்ந்த கொய் மீன்கள் சீனாவிலிருந்து ஜப்பான் சென்றதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
ஆனால், இந்த மீன் நம்மூர் ஆறுகளில் இருந்ததாகத் தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து ஆச்சர்யப்பட்டேன்; கொய் மீன் போல துள்ளிக் குதித்தேன்.

“கை அனைத்தும் கலந்து எழுகாவிரி
செய் அனைத்திலும் சென்றிடும், செம்புனல்
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா
ஐயனைத்தொழுவார்க்கு அல்லல் இல்லையே”

என்று ஐந்தாம் திருமுறையில் அப்பர் அடிகள் குறிப்பிட்டுள்ளார். காவிரி வெள்ள நீரில் கொய் மீன்கள் இருந்தன என்பதுதான் இந்தப் பாடலின் பொருள். இதை காவிரியில் எங்கு பார்த்தேன் என்றும் அப்பர் அடித்துச் சொல்கிறார். அதாவது, இன்றைய மயிலாடுதுறை மாவட்டம், பழவாற்றின் கரையிலுள்ள திருக்குரக்காவல் ஊர்ப் பக்கத்தில்தான் கொய் மீன் குறித்துப் பாடியுள்ளார்.
கொய் மீன் வகைத் தமிழ்நாட்டிலிருந்ததா என்று, நாகப்பட்டினத்தில் உள்ள மீன் வளப்பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மேற்கொண்டு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டால் தமிழ்நாட்டுக்குக் கூடுதல் பெருமைக் கிடைக்கும்; ஆய்வுப்பணியை விஞ்ஞானிகள் பார்த்துக் கொள்ளட்டும். இந்த மீனின் சிறப்புகள் பற்றி நாம் பார்க்கலாம், வாருங்கள்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


70 ஆண்டுகள் கூட வாழும்!


‘‘ கொய் மீன்களில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது?’’ என்றுதானே கேட்கிறீர்கள். நானும் உங்களைப் போலவே பலரிடம் கேட்டுள்ளேன். ஆனால், அந்த மீனைப் பற்றிய ஒவ்வொரு தகவலும் அட போடும் ரகமாகவே உள்ளது. பெரிய ஹோட்டல்களில், பெரிய பணக்காரர்களின் வீடுகளில்கூட இந்த மீனைப் பார்த்திருக்கலாம். ஓர் அங்குலம்(1 இன்ச்) அளவு கொண்ட மீனின் விலை ரூ.2,500 என்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும். அதிகபட்சம் 70 ஆண்டுகள் கூட வாழும்.

ஆன்லைனில் ஆர்டர்!


நாம் அரிதாகப் பார்க்கும் கொய் மீன்களை ஜப்பானில் திரும்பிய பக்கமெல்லாம் பார்க்க முடியும் என்கிறார்கள். புனிதத் தலங்கள், தோட்டங்கள், குளங்கள் என்று கொய் மீன்கள் நிரம்பி வழிகின்றன. இந்த மீன் இருக்கும் இடத்தில் செல்வமும் புகழும் சேரும் என்று ஜப்பான் ஜோசியகாரர்கள் ஓயாமல் சொல்லி வருகிறார்கள். அதன் விளைவால், உலகில் எங்கு கொய் மீன்கள் இருந்தாலும் அதை வாங்குவதற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள் ஜப்பான் மக்கள்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


பை நிறைய பணமும் ஆள் பலமும் அவசியம்!


கெண்டை மீன் வகையைச் சேர்ந்த கொய் மீன்கள் ஆறு, ஏரி, குளம் என்று நன்னீரில்தான் வாழும். பல வண்ணங்களிலிருந்தாலும் வெள்ளை சிவப்பு நிற மீன்களுக்குத்தான் மரியாதை அதிகம். நத்தை, நண்டு, பூச்சிகள்தான் இதன் பிரதான உணவு. செயற்கையாக இதைக் குளத்தில் வளர்க்க வேண்டும் என்றால், பை நிறைய பணமும் ஆள் பலமும் அவசியம்.
சிறிய அளவில் இந்த மீன்கள் வளர்க்க வேண்டும் என்றாலும் உங்களிடம் குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் முதலீடு தேவை. ‘‘கொய் மீன் வளர்ப்பு என்பது ஒரு விதமான கலை. அலங்கார மீன் வகைகளில் சிறந்த ரகம் இது. என் பண்ணையில் ஒரு மீன் 60 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளேன். ஜப்பான் நாட்டுக்காரர்கள்தான் இதை விரும்பி வாங்கி வருகிறார்கள்’’ என்கிறார் சென்னை-புழல் பகுதியில் கொய் மீன் பண்ணை நடத்தி வரும் அஷ்பக்.

போலி கொய் மீன்களும் உண்டு!


ஜப்பான் நாட்டில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் இந்த மீன் வகை 19-ம் நூற்றாண்டில்தான் அங்கு வந்துள்ளது. முதலில் உணவாகத்தான் சீனாவிலிருந்து அறிமுகமாகி உள்ளது. இதன் தோற்றம், அந்நாட்டின் ஆன்மிக நம்பிக்கை, சோதிடர்கள்... என்று பல காரணங்களால் செல்லப்பிராணியாக இந்த அலங்கார மீன் மாறியுள்ளது. ஜப்பான் கொய் மீன் லட்சங்களிலும் கோடிகளிலும் கூட  விற்பனை செய்யப்படுவதால், போலிகளின் நடமாட்டமும் உண்டு. ஜப்பான் கொய் என்று  பொய் சொல்லி தாய்லாந்து கொய் மீன்களை ஏமாந்தவர்கள் தலையில் கட்டுவதும் நடந்து வருகிறது.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


ஒரு மீனின் விலை ரூ.15 கோடி!


நம் ஊரில் நாய் வளர்ப்பு போட்டி நடத்துவது போல, ஜப்பானில் கொய் மீன் வளர்ப்புப் போட்டிகள் நடத்துகிறார்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மீனின் விலை 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இந்த மீனின் அம்மா, பாட்டி, அப்பா, தாத்தா எங்கு உள்ளன... என்று ஜாதகமே வைத்துள்ளார்கள். அதையும் தேடிப்பிடித்துப் பணத்தைக் கொட்டி வாங்குகிறார்கள் ஜப்பான் மக்கள். இப்படிக் கோடிகளில் விலைக் கொடுத்து வாங்கிக் கொண்டாடும் மீனைப்பற்றிக் கதை கட்டாமல் இருப்பார்களா என்ன? இந்த மீன் ஆற்றுக்கு எதிர்த் திசையில் நீந்தும், அருவியிலிருந்து அடித்து வந்தால், மீண்டும் அருவியைத் தாண்டிக் குதிக்கும். இந்த மீன்கள் உள்ள வீடுகளில் செல்வம் கொட்டிக் கொண்டே இருக்கும். நாடு முழுவதும் இந்த மீன்கள் இருந்தால், அந்நாடு பொருளாதாரத்தில் செழிக்கும் என்று இன்னும் என்ன என்னவோ எல்லாம் அடித்துவிடுகிறார்கள்.
ஆக, பல மிகைப்படுத்திய செய்திகள் சுற்றினாலும், இந்த மீன்களுக்குச் சில சிறப்புகள் உள்ளன. கெண்டை மீன் இனங்களில் வலிமையானவை. எவ்வளவு குளிராக இருந்தாலும் அதில் வேகமாக நீந்தும் தன்மை கொண்டவை. நீண்ட காலம் வாழும் தன்மை உள்ளவை.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


அதிக முதலீடு, அதிக லாபம், அதிக கவனம்!
பெரியோர்களே, தாய்மார்களே...!


கொய் மீன்கள் லட்சத்திலும் கோடியிலும் விற்பனை செய்யப்படுவதால் அதை நாமும் வளர்க்கலாம் என்று நினைப்பீர்கள். இந்த மீன்களின் வளர்ப்பு முறை குறித்து அறிந்த வல்லுநர்கள், நம் நாட்டு மீன் வளப் பல்கலைக்கழகங்களில் விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையில்தான் உள்ளார்கள். ஆகையால், தொழில்நுட்ப உதவிகள் தனியாரிடம்தான் கிடைக்கும். மீன்களை வளர்த்துவிட்டு, உள்ளூரிலும் உள்நாட்டிலும் விற்பனை செய்ய முடியாது. ஜப்பான், தாய்லாந்து... என்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துதான் விற்பனை செய்ய முடியும். மேலும், ‘அதிக முதலீடு, அதிக லாபம், அதிகக் கவனம்’ என்று இதை வளர்ப்பவர்கள் சொல்லி வருகிறார்கள். காரணம், தண்ணீர் தொடங்கி மீன்களுக்கு வழங்கப்படும் உணவு வரை அனைத்தையும் உன்னிப்பாகக் கண்காணித்து வர வேண்டும். காலை, மாலை இரண்டு நேரமும் தண்ணீரின் தரம் எப்படி உள்ளது? பரிசோதனை செய்ய வேண்டும். மீன்கள் ஆரோக்கியமாக உள்ளனவா என்று 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். இந்தப் பணிகளைச் செய்ய இப்போது கருவிகள் வந்துவிட்டன. ஆனாலும், அதிக கவனம் தேவை. ஏதேனும் தவறு நிகழ்ந்தால் மீன்களுக்குச் சிக்கல் உருவாகும். அது ஒட்டுமொத்த முதலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு கண்காணிக்கிறார்கள்.